மனதில் சுருக்கென்று ஏதோ தைக்கும் உணர்வு. இதை எப்படி நினைக்காமல் போனோம் என்று அவனையே வலியுடன் பார்க்க ஒன்றுமில்லை என்பதை போல கண்ணை மூடி திறந்தவன் புன்னகையுடன் கிளம்பினான்.
கூத்தபிரான் உறங்கிக்கொண்டிருக்க மெல்ல எழுந்து மாடிக்கு தங்கள் அறைக்குள் சென்றுவிட்டாள் விழி.
கொஞ்சமும் யோசிக்கவில்லை. பூமிக்கு அழைத்துவிட்டாள். அவன் எடுக்க காத்திருக்க அப்போதுதான் பாதி வழியில் சென்றிருந்தவன் வண்டியை ஓரங்கட்டி போனை எடுத்தான்.
“ராவுக்கு நேரத்துக்கு வீடு வந்து சேரும்…”
“விழி…”
“வாயான்னா அம்பிட்டுத்தேம்…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
மூச்சை இழுத்துவிட்டவன் போனை சட்டை பையில் போட்டுவிட்டு வேலையை கவனிக்க சென்றாலும் அவனால் நிலையாய் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.
இத்தனை மாதங்கள் பிரிந்திருந்து இருவரும் ஒன்று சேர்ந்திருந்தாலும் இன்னும் உடலளவில் பிரிந்துதான் இருந்தார்கள்.
எந்தவித தேவைக்கென அவன் நெருங்கவில்லை விழியை. நெருங்கும் சூழலும் முதல் பத்து நாட்களுமே இல்லை.
அதன் தவிப்பை அவளிடம் காண்பித்து கொள்ளாமல் இருந்தாலும் துளசியின் இன்றைய கேள்வியில் விழி கண்டுகொண்டதை இவனுமே கவனித்துவிட்டான்.
முடிந்தளவு தன்னை கொண்டு எந்த கஷ்டத்தையும் அவன் தராமல் இருக்க நினைக்க இப்போது இதுவும் அவளுக்கு வருத்தத்தை தானே தரும் என நினைத்தவனுக்கு அங்கே மனதே செல்லவில்லை.
வேலைகளை முடித்துவிட்டு மாலையே வீடு வந்து சேர்ந்தான். விழியை தேட அவள் அடுக்களையில் இருந்தாள்.
“விழி…” என்ற அழைப்பில் அவனை பார்த்து முறைத்தவள்,
“என்னய்யா வீசுன கையும் வெறுங்கையுமா வந்துருக்க?…” என்றாள் நக்கலாக.
அவளின் முகத்தின் மலர்ச்சியும், பேச்சில் ஒளிந்திருந்த கேலியும் பூமியை இலகுவாக்கியது.
“என்னத்த வாங்க சொல்லுத?…” என்றான் சுவற்றில் சாய்ந்து நின்று.
“யே ஒமக்கு தெரியாதாக்கும்? அம்புட்டுக்காய்யா நீயி நல்லவேன்?…” என்றாள் கலகலப்பாய்.
“என்னடி மொவமே வெளிச்சமா இருக்கு?…” அதற்குமேல் தள்ளியிராமல் நெருங்கிவிட்டான் அவளின் இந்த பேச்சில்.
“யாத்தே இன்னிக்குத்தேன் ராசாங்கத்தாளுக்கு பொஞ்சாதிய பொஞ்சாதியா தெரியுதங்காட்டி அம்புடுது…” அவனை விடாமல் வம்பிழுக்க,
“விழி, என்னடி இது?…”
“பொறவு என்னங்கேன்? போயிரும்…” என்று அவனை தள்ளினாள்.
“சொல்லுதத கேளு விழி…”
“என்னத்த கேக்க? இன்னொருத்தவாக சொல்லுத அளவுக்கு நீயி திரிஞ்சிருக்க. அம்புட்டு வெசனத்தையும் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு. நா ஒரு ஆக்கங்கெட்ட கூவ. அத்த கூட வெளங்கிக்கல..”
“செரி, எத்தையும் மனசுல வெக்கல. என்ன செய்யனும்ங்குத?…”
“அத்த கூட நா சொல்லன்னுங்கீயலோ?…”
“மெல்லடி. ஒ அலும்புக்கு அம்புட்டுபேத்துக்கும் கேக்க போவுது…” என்று வாயை பொத்தினான்.
“கையை எடும், போயி அய்யன் பக்கத்துல இரும். காப்பி கொண்டாரேம்…” என்று சொல்ல பூமியும் மனம் சிரித்தபடி சென்றான்.
இரவு உணவு நேரம் சந்தானலட்சுமியும் செல்வியும் வந்திருந்தார்கள். அன்று கோவிலுக்கும் சென்றுவிட்டு இங்கே பார்த்துவிட்டு செல்ல வந்தருக்க மயில் அவரிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
இரவு உணவு அப்போது தான் முடிந்திருக்க சரியாய் அவர்களும் வர வந்தவர்களை கவனித்தாள் விழி.
சந்தானலட்சுமி கூத்தபிரானை பார்த்துவிட்டு வந்து உணவு மேஜையில் அமரவும் மயில் ஆரம்பித்துவிட்டார்.
அந்த வீட்டில் மதிக்கப்படுவதில்லை, கவனிக்கப்படுவதில்லை என்று மூக்கை சீந்திக்கொண்டு அழுதபடி ஒப்பாரி வைக்க சந்தானலட்சுமி தலையை ஆட்டியவண்ணம் தான் அமர்ந்திருந்தார்.
வேறு என்ன செய்ய முடியும்? கேட்டுக்கொண்டே இருக்க மயில் தன் பேச்சை கேட்கவும் ஒருவர் கிடைக்கவும் ஒப்பாரி வைக்க செல்வியும், சற்று தள்ளி பூமியும், விழியுமே கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
“மூத்தவேன் பொண்டாட்டியே வேணாங்கறான், எளையவேன் பொண்டாட்டிய தவுத்து ஒன்னுங்காட்டி வேணாங்கறான். ஊம ஊர கெடுக்குன்னுவாக. இவ எம்புள்ளைய கெடுத்து வெச்சிருக்கா…” என்று மயில் பேச்சுவாக்கில் விழியை காண்பித்து சொல்ல,
“யோவ் சொக்கா, என்னய்யா ஒ அம்மை மாத்தி சொல்லுது. நா ஒன்னிய…” என்றாள் விழி சிரிப்புடன்.
“ப்ச், கம்மின்னிருடி…” என்று அதட்டினான். அவள் சொல்வதை நிறுத்த பார்க்க விழி வாய் மூடவில்லை.
“பாத்தியா ஒ அம்மைக்கி வவுச, நா ஒன்னிய கெடுத்தேனாம்? அது பாத்துச்சாக்கும்? நீயி என்னிய கெடுத்தா ஆகமாட்டாம கெடக்கு?…” என்று நக்கலடித்தவள்,
“ஒருவேள இப்ப நீயி இருக்குதத சொல்லுதாகளோ?…”
“என்ன?…”
“இல்ல, இன்னிக்கு நாந்தேன ஒன்னிய வர சொன்னேம். அத்த சொல்லுதாகளோ எம்புள்ளைய கெடுக்குதான்னு. இன்னுங்காட்டி ஒன்னுமாவலியே சொக்கா…” என்று சொல்ல,
“ஆத்தீ, வாப்பெட்டிய சாத்துவே…” என்று அவளின் வாயை பொத்தியவன் எங்கே யாரும் கேட்டுவிடுவார்களோ என்று அவன் சத்தமாய் கத்திவிட்டான்.
இங்கே இவர்களின் சம்பாஷனையை கவனிக்காதவர்கள் பூமியின் சத்தத்தில் திரும்பி பார்த்ததும் பூமிநாதன் திருதிருவென்று விழிக்க, விழியின் விழிகள் குறும்பில் ஒளிர்ந்தது.
“என்னலே…” என செல்வி நமுட்டு சிரிப்புடன் தம்பியை பார்க்க,
“சொக்கா…” என்று முனங்கியவளின் கண்களும் சேர்ந்து சிரிக்க பூமியின் முகத்தில் வெட்க புன்னகை விகசித்தது.
“மேல வா, வெச்சிக்கிதேம்…” என்று தன் கையை எடுத்துவிட்டு சொல்லி அவன் மாடியேறி சென்றுவிட விழிக்கு அவனின் பதட்டமும், முறைப்பும் இன்னும் சிரிப்பை தந்தது.
வாய்விட்டே அவளும் சிரித்துவிட அங்கே அவர்களின் மகிழ்ச்சியில் தங்களின் இழந்த சந்தோஷத்தை கண்டார்கள் மற்றவர்கள்.
கூத்தபிரான் என்னவென்று கவனிக்காத போதும் மகன், மருமகளின் சிரிப்பில் முகம் கனிந்து பார்க்க, செல்வி விழியை அணைத்துக்கொண்டாள். சந்தானலட்சுமி எழுந்து சென்று விழியின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
இப்படி அங்கிருந்த மற்றவர்களின் அந்த பரிமாணங்களை மயில் வியந்து பார்த்தாலும் மனது மகனின் அந்த புன்னகையில் தான் மீண்டும் மீண்டும் இடறியது.
என் பிள்ளை இப்படி சிரித்து பார்த்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டது என்று பெற்றவராய் ஒருநொடி குளிர்ந்து தான் போனார் அந்த புன்னகையில்.
காலங்கடந்த கனிவு கரை சேராது.