உயிர் தழுவும் விழியே – 23 (2)

மனது வெகுவாய் பலவீனப்பட்டு உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படவும் ஆரம்பித்தது.

எப்போதும் தின்னென்று இரும்பாய் இருப்பவரின் சோர்வு முகத்தில் பெரிதாய் தெரிய அதை பாராமல் பார்த்த பிள்ளைகளுக்கு அது அடுத்த நாடகம் என்று எண்ண வைத்தது தான் மயில் அத்தனை வருட வாழ்க்கையில் சாதித்த ஒன்றாக இருந்தது.

இந்த ஒருமாதத்தில் கூத்தபிரான் நன்றாகவே தேறி இருந்தார். எழுந்து அமர முடிந்தது.

கழுத்தை சுற்றி கையில் போடப்பட்டிருந்த கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு இரண்டு கையும் செயல்பட முடிந்தது. சத்தமாய் பேச முடிந்தது.

ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கத்த நினைக்கும் பொழுது தொண்டைக்குழி சிக்கிக்கொண்டு சத்தம் வருவதில் சிரமமிருக்க இந்தளவிற்கு அவர் தேறியதே பெரிய விஷயம் என்றுவிட்டார்கள் மருத்துவர்கள்.

போக போக இதுவும் குணமாகலாம் என்று சொல்லியிருக்க அந்த நம்பிக்கையில் தான் மற்றவர்கள் நிம்மதியாகினர்.

எழுந்து நன்றாக நடக்க எப்படியும் மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிடும் என்று சொல்லியிருக்க இந்தளவுக்கு தேறினாரே என கடவுளை கும்பிட்டார்கள்.

அந்தளவிற்கு எழுந்து அமரவும் நன்றாக பேசவும் என்று இருந்தார் கூத்தபிரான். சந்தானலட்சுமிக்கும் உடல்நிலை சரியாக இங்கும் அங்கும் என்று செல்விக்கு இன்னும் இலகுவாக்கியது.

காளிங்கராயனுக்கு கால்களில் மட்டும் என்பதால் அதற்கான சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தது.

இருவரும் எப்படியும் நான்குமாதத்தில் நன்றாக நடந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையுடன் அறிக்கை தந்திருந்தார்கள் மருத்துவமனையில்.

அன்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு நுழைந்துகொண்டு இருந்தார் கூத்தபிரான்.

சர்க்கர நாற்காலியை துளசி தூக்கி வர பூமிநாதன் அவரை கையில் தூக்கிகொண்டான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் நாற்காலியில் அமர வைக்க கொண்டு வந்த மருந்துகளை எல்லாம் அவரின் அறையில் வைத்துவிட்டு வந்தாள் விழி.

“தண்ணி தா த்தா…” என விழியை அவர் கேட்க வேகமாய் மயில் தண்ணீரை ஊற்றி நீட்டிவிட்டார்.

கொஞ்சமும் யோசிக்காது நீட்டிய கையை கூத்தபிரான் வெடுக்கென்று தட்டிவிட அவர் தட்டிய வேகத்தில் சுவற்றில் கொட்டி தம்ளர் கீழே விழுந்தது.

“பூமி நா சொல்லிருக்கேனா இல்லையாலே? இங்கின இவ என்னத்துக்கு நிக்கிதா?…” என்று வீடே அதிர அலறினார்.

“ஐயா…” என பூமிநாதன் பேசும்முன்,

“நா என்ன பண்ணிப்பிட்டேமின்னு என்னிய கண்ணால கூட காங்கமாட்டிக்கீக? என்னன்னுதேம் சொல்லும். தெரிஞ்சிக்கிட்டாச்சும் ஒதுங்கி நிக்கிதேம்…” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

தொண்டை வரைக்கும் வந்துவிட்ட வார்த்தைகளை வெளிகொட்டாமல் மூத்தமகனின் எச்சரிக்கையில் கடுகடுத்தபடி பல்லை கடித்தார் கூத்தபிரான்.  

பூமிக்கும், விழிக்குமே என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது ஏன் இத்தனை ஒதுக்கம் என புரியாமல் தான் இருந்தார்கள்.

ஆனாலும் தலையிடவில்லை இருவருமே. இதில் தங்கள் என்ன சொல்ல முடியும் என்று இருந்தார்கள்.

விழி துளசியிடம் பேசுமாறு பூமியிடம் சொல்ல அவன் ஒரே முடிவாய் மறுத்துவிட்டான்.

“என்னன்னு தெரியாங்காட்டி நாமளா ஒன்னத்த நெனச்சு பேச வேணாம் விழி. இப்ப நாம யே இப்பிடி இருக்கோமின்னு ஆருக்கும் தெரியுமா? இல்லேல? அத்தேங்காட்டி அவகளுக்கு என்னனோ. காரணமிருக்கும்டி…” என்று சொல்லிவிட்டான்.

அதுவும் சரிதான் என விழி பேசவில்லை எதுவும். துளசியிடம் தானும் கேட்கவில்லை.

“சக்கரத்த தள்ளுலே. உள்ள போறேம். இவ மொவத்த முழிச்சாலும்?…” என்று கூத்தபிரான் கொதிக்க,

“என்னத்த, என்னத்த யே மொவத்துல என்னத்த பாத்தீய? இன்னிக்கு என்னன்னு அம்புடாம ஒம்ம விடபோறதில்ல ஆமா…” என்று மயில் முன்னால் வந்து நின்றுவிட,

“துளசி, பூமி…” என்று அவர் கத்தியதில் தொண்டை சிக்கிக்கொள்ள பலமாய் இரும ஆரம்பித்துவிட்டார்.

அவர் இருமியத்தில் ரத்தமெல்லாம் கண்களில் வந்து நிற்க மூக்கில் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது.

பதறிப்போய் அவரை அமைதிப்படுத்த முயல மயில் அரண்டுவிட்டார் திடீரென்று இப்படியானதும்.

“அவள போவ சொல்லு. எம்முன்னாடி அவ வந்தா யே உசுரு ஒடம்புல நிக்காது. கடசியா சொல்லுதேம்…” என்று அந்த நிலையிலும் எச்சரித்தார் கூத்தபிரான்.

மயில் ஸ்தம்பித்து நிற்க அத்தனைபேருமே இந்த ரௌவுத்திரத்தில் ஆணியடித்ததை போலாகிவிட்டார்கள்.

“எம்பொணத்த கூட இவ தொடப்பிடாது…” என்று உறுதியாய் சொல்ல அந்தளவிற்கு என்ன செய்துவிட்டோம் என இப்போது இன்னுமே  சிதறிபோனார் மயில்.

ஏன் எதற்கு என்று மேலும் அவரிடம் கேட்க கூட அச்சமாக இருந்தது. பின்னால் நின்றவரை கவனிப்பார் யாருமில்லை. அதில் இன்னுமே மனது நொறுங்கியது மயிலுக்கு.

“விடுமய்யா, பாத்துக்கிடுவோம்….” என்றுதான் துளசி சொன்னானே தவிர அவனும் எதற்கு இத்தனை பேச்சு என்று கேட்கவில்லை.

இருவரின் முகத்தையும் பார்த்தபடி பூமி திகைத்து நின்றான். என்னவோ பெரிதாய் இருக்கிறதோ என்று பார்த்து நிற்க,

“மொத உள்ள போவம்…” என்றாள்  விழி அந்த நிலைமையை சமாளிக்க.

“இந்த சண்டாளியால இன்னு எத்தனைபேருக்கு அவச்சொல்லோ?…” என்று பொங்கிக்கொண்டு தான் உள்ளே சென்றார் கூத்தபிரான்.

விழி வந்து இத்தனை நாளில் ஒருமுறை கூட சிந்தா வீட்டிற்கு வரவில்லை. விழி வர அனுமதிக்கவில்லை.

சில பிடிவாதங்களில் இருந்து அவள் இறங்குவதாய் இல்லை. பூமிநாதன் என்ற மனிதன் ஒருவனோடு தன் வாழ்க்கை பிணைக்கப்படிருக்க அதனை கொண்டு தான் இங்கே இருக்கிறது.

அதை வைத்து தன் குடும்பத்தினரை மீண்டும் இங்கே அழைத்து மயில் ஏதேனும் பேசி நிச்சயம் இன்னொருமுறை எதையும் கேட்க அவள் தயாராக இல்லை.

அன்று மருத்துவவமனையில் வைத்து கூத்தபிரானை பார்க்க வந்திருந்தார்கள் விழியின் தம்பி வேந்தனும், தாய் சிந்தாவும்.

கூத்தபிரான் அத்தனைமுறை வீட்டிற்கு அழைத்துவிட்டார். மீண்டும் மீண்டும் மன்னிப்பையும் கேட்டுவிட்டார் மயில் பேசியதற்காக.

சிந்தாவும், வேந்தனும் விழியின் சம்மதத்தை வேண்டி நிற்க அவள் அசையவே இல்லை.

அவளை மீறி இதில் பூமியும் எதுவும் பேச போவதில்லை. அதிலேயே இன்னுமே கோபத்தில் இறுகிவிட்டார்கள் துளசியும், கூத்தபிரானும்.

மனதில் வைத்துக்கொண்டே வந்திருக்க மயில் வந்ததும் எதுவுமே நடக்காததை போல தண்ணீரை தரவும் வெகுண்டுவிட்டார் கூத்தபிரான்.

அறைக்குள் அழைத்து செல்லவும் அவரை படுக்க வைக்க இன்னுமே முகத்தில் கோபமும், ஆற்றாமையும் மிதமிஞ்சி இருந்தது.

மனது கேட்காமல் பூமிநாதன் துளசியை அழைத்து கேட்கவும் செய்துவிட்டான். என்னவென்று தெரிகிறதோ இல்லையோ கேட்காமல் இருக்க முடியாதே?

“என்னதாம்லே இங்க சடவு? அய்யன் இம்பிட்டுக்கு கொதிக்கிறாரு…”  என்றான் துளசியிடம்.

“எத கேக்குத?…”

“என்னன்னு வெளங்கலலையாக்கும்? நீயும் ஐய்யனும் அம்மைட்ட இம்பிட்டுக்கு ஒதுங்குதது என்னனுறேம்?…” என்றதற்கு துளசி சொல்லவில்லை.

“என்னமோலே, ஆனா மனசே செரியில்ல…” என்று பூமி சொல்ல,

“அதெல்லாம் செரியாத்தேம் இருக்கும். இன்னு என்னன்னு இருக்கியாம நீயி? ஒம்மொவமே அந்த புள்ள வந்தும் தெளியக்காணும்? நல்லாத்தான இருக்கீய?…” என்று கேட்டுவிட விழியுமே இதனை கவனித்தாள்.

“என்ன? நல்லாத்தேம் இருக்கேம்? என்ன?…” என்றான் பூமிநாதன்.

“நல்லாருந்தா செரித்தேம். காட்டுக்கு கெளம்புதேம்…” என்று சொல்லி துளசி சென்றுவிட விழி அவனை பார்த்தபடியே இருந்தாள்.

error: Content is protected !!