உயிர் – 23
ஒரு மாதம் ஆகியிருந்தது விழி அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்து. முதல் சில நாட்கள் முணுமுணுப்பு, சாடை பேச்சுமாக இருந்த மயில் கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சை குறைக்கவேண்டிய சூழல்.
கூத்தபிரானை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது மயிலுக்கு. முகத்தை பார்க்க கூட அனுமதிப்பேனா என்பதை போல இருக்கிறார்.
இந்த கோபத்தின் காரணம் என்னெவென்று தெரியாமல், தெரிந்துகொள்ளவும் முடியாமல் மயிலின் நிலையோ பரிதாபம்.
ஏன் என்று கேட்கவும் நாதியற்ற என்னும் பொருளாய் அவர் உணர ஆரம்பித்திருந்தார் அந்த வீட்டில்.
இப்படி ஒரு நிலை தனக்கு வருமென்பதை அவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
துளசிக்கு என்றைக்கு விஷயம் தெரிந்ததோ அன்றிலிருந்து மயிலின் முகம் பார்த்து பேசுவதில்லை.
கேள்விகளுக்கும் கூட ஒரு வார்த்தை, இல்லை என்றால் தலையசைப்பு மட்டுமே பதிலாக இருந்தது.
“என்னன்னுலே என்னைய பாடா படுத்துதீக? என்னத்த பண்ணிப்பிட்டேமின்னு அப்பனும், மவனும் சாவடிக்கீக என்னிய?…” என்று கேட்டேவிட்டார் ஒருநாள் துளசியிடம்.
“எளயவந்தேம் பொஞ்சாதி வவுசுல திரியிதியாம்ன்னா ஒனக்கென்ன கொள்ளங்கேன்?…” என பேச துளசி எதுவும் கூடவில்லை.
“சொல்லி தொலைங்களேன், இல்லாங்காட்டி என்னைய எங்கியாச்சு தொலச்சு தல முழுகத்தான?….” என்று கேட்க எதற்கும் பிரதிபலிப்பில்லை.
உடைந்தே போனார் அவர். எப்படி இந்தளவுக்கு கல்லாய் இறுகி போயினர் தம்மக்கள் என்று மனதளவில் வறண்டு தான் போனார்.
அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கும் பொழுதோ, கெஞ்சும் பொழுதோ, கண்டிக்கும் பொழுதோ கூட இத்தனை துவண்டுவிடவில்லை.
சொல்ல போனால் இதை தானே உங்களால் செய்யமுடியும்? என்னை விலக்கி வைக்கவோ, இல்லை என்னை மீறி நடக்கவோ முடியுமா? என்பதை போல இருந்த இறுமாப்பு இந்த ஒருமாதத்தில் சுக்கல் சுக்கலாய் உடைந்துதான் போனது.
எங்கே என்ன நடந்ததென்று இப்படி மனதளவில் வருத்துகின்றனர் என்று புரியாமல் மண்டை காய்ந்து போனார்.
எப்போதும் சண்டைக்கு நிற்கும் செல்வி கூட பேச்சை நிறையவே குறைத்துக்கொண்டாள்.
“பெத்த தாயின்னு பாக்குதாகளா? என்னன்னு நினைக்கிதீக?…” என்று பூமியிடம் மன்றாடல் போல கேட்க,
“எங்கிட்ட கேட்டு என்னத்த?…” என்று முடித்துக்கொண்டான்.
அவனிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? அவனின் கோபமாவது ஏன் எதற்கென்று வெளிப்படையாய் தெரியும் என நினைத்தவர் இவர்களுக்கு என்னவாகிற்று என்று குழம்பினார்.
அது மயிலுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை உண்டு செய்து கொண்டிருந்தது என்று தெரியாமல் போனது மயிலோடு சேர்த்து மற்றவர்களுக்குமே.
அத்தனை நாள் தன் ராஜாங்கம் என்றிருந்தவர் கோட்டை தகர்ந்திருக்க அதை கண்கொண்டு பார்க்க முடியாமலும், நிலைகொண்டிருக்க முடியாமலும் உள்ளுக்குள் தடுமாறியபடி இருந்தார்.
இவையெல்லாம் ஏன் என்ற இந்த கேள்விகளுக்கு முன் விழியின் மீதான துவேசமெல்லாம் நினைக்கவே நேரமில்லாது போய்விட்டது.
அந்தளவிற்கு கணவர் மற்றும் பிள்ளைகளின் காரணமின்றிய இந்த ஒதுக்கம் அவரை ஆக்கிரமித்திருந்தது.
அவ்வப்போது கூத்தபிரான் உறங்கும் நேரம் சென்று எட்டி பார்த்துவிட்டு வருவதோடு சரி. விழித்திருக்கும் நேரம் வாசலில் கூட நிற்க முடியாது.
ஜென்ம விரோதியை விரட்டுவதை பல அவரின் அரற்றல்களும், அசைவுகளும் பயமுறுத்தும் மயிலை.
இதில் யோகுவின் நச்சரிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாக கத்தியேவிட்டார் அவளிடத்தில்.
“ஒன்னிய கெட்டி வெச்சதுக்கு எம்புள்ள என்னிய ஏசுனவரைக்கு போதும்டி. அவென் கூப்புட்டா வா. இல்ல அங்கனவே இரு. என்னிய விடும்த்தா…” என்று சொல்லிவிட்டார்.
யோகுவிற்கு அதில் ஏக அதிர்ச்சி. இப்படி பேசுபவரிடம் அங்கே என்னாகிற்று என்று நல்லவிதத்தில் என்னெவென்று கேட்க?
அந்த பொறுமை அவளிடத்தில் என்றுமே இல்லையே? மாமியாரை அதிகாரம் செய்தே பேசி வளர்ந்துவிட்டவளுக்கு அவரின் இந்த விட்டேற்றியான பேச்சும், நடத்தையும் அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
“என்ன நெனக்கிதீக? ஒம்மவன மாதிரி நீயும் என்னிய வெட்டிவிடலாமின்னு நெனக்கிதீயோ? ஒருத்தவகளையும் நிம்மதியா இருக்கவிடமாட்டே ஆமா. சந்தி சிரிக்க வெச்சிருவெம். பாத்திக்கிடும்…” என்று சொல்லிவிட்டாள் அவள்.
மயிலுக்கு அடுத்த அடி இங்கிருந்து. எத்தனை பாசம் வைத்திருப்பார் அவள் மீது. இப்படி கொஞ்சமும் அந்த அன்பும், பற்றும் இன்றி சுயநலாமாக பேசுபவளை நினைத்து மனது வெம்பி போனார்.
அவளாவது தன்னிடம் என்னவாகிற்று என்று பொறுமையாய் கேட்டிருந்தால் மனம் விட்டு பேசியிருந்தால் ஆறுதலாக இருந்திருப்பார்.
“யோகு, இப்ப நா என்னத்தடி சொல்லிப்பிட்டேன்?…” என்று அழுவதை போல் கேட்க,
“என்னத்த சொல்லல? இல்ல என்னத்த சொன்னீங்க? ஒம்மவேன் என்னன்னா என்னிய காங்கவிடாம என்னன்னு எதுன்னு கேக்காம கொள்ளாம திரியிறாரு. ஒமக்கு யேன்கிட்ட பேச அம்புட்டுக்கு ரோசன. அம்புட்டுக்கு கோட்டிக்காரியா நானு?…”
“இந்தாடி…”
“இந்தா நிறுத்தும் த்தே. என்னிய இத்த சொல்லியே அமித்திடலாமின்னு நெனச்ச பொறவு ஆருக்காவன்னு பாக்கமாட்டேம் சொல்லிப்பிட்டேன். போயி போலீசுல பெட்டிசன குடுத்தேம், அம்புட்டு பேத்தையும் அள்ளிட்டு போயிருவானுக…”
“யேட்டி…”
“என்னிய பேசுதத நிப்பாட்டிட்டு ஒம்மவனுக்கு புத்திய சொல்லி கூட்டியார சொல்லு. இல்லாங்கட்டி மனுசியா இருக்கமாட்டே ஆமா…” என்று போனில் ஆடி தீர்த்துவிட்டாள் யோகு.
எத்தனை தான் மாமியாரை பேசிவிட்டாலும் அவளால் அந்த வீட்டை விட்டு எங்கேயும் கிளம்ப முடியவில்லை.
சரியாக சாப்பிடாமல் இருந்து மிரட்டி பார்க்க நினைத்தவளுக்கு அதை நிறைவேற்ற முடியவில்லை.
உணவு உண்ணாமல் இருக்க முடியவில்லை. அப்படியே இருக்க நினைத்தாலும் வீரபாண்டி என்னவும் செய்துகொள், ஆனால் இங்கேயே இரு என்றுவிட்டான்.
பேச்சுக்கள் எத்தனை இருந்தாலும் அவனை மீறி அவளால் நடந்துகொள்ள முடியவில்லை. அத்தனை பயம் இருந்தது.
தாயிடமும், தந்தையிடமும் தான் ஆங்காரமெடுத்து கத்தி தீர்க்க முடிந்தது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?
அத்தனை கோபமும் மாமியாரிடம் தான் திரும்பியது. இவர் நினைத்தால் முடியாததா என்று.
இங்கே மயில் இருக்கும் நிலை எங்கே அவளுக்கு புரிய? யோகுவிற்கு தன்னை சிறை பிடித்ததை போல வைத்திருப்பது ஒரு ஆத்திரம் என்றால், அங்கே தன் புகுந்த வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
விழி வந்த நேரம் துளசியும் தன்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்க, மயிலின் கண்டிக்கும் பேச்சும், இப்போது தன்னை அழைக்க முடியாதென்பதை போல பேசியதும் தன்னிலை இழக்க செய்தது.
என்ன நடக்கிறதோ? என்ன நடக்கிறதோ என்று மனதை சுற்றிலும் இதையே தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
அவளால் அங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. மயிலுமே ஒருவேளை மாறிவிட்டாரோ என்றுதான் நினைத்தாள்.
முன்பே சீர் செனத்தியுடன் வந்தபொழுது விழியை தாங்கியவர் தானே? மாறாமல் இருப்பாரா என்ன? என்று தன்னை அதிருப்தியுடன் மயில் பேசியதை வைத்து என்னென்னவோ நினைத்தாள்.
தன்னடைய அதிகாரமும், தன்னிடமும் பறிபோவதை போல ஆத்திரம் பொங்கி வெடித்தது.
யோகு அப்படி இருக்க இப்போது மயிலுக்கு எல்லா பக்கத்தில் இருந்தும் அழுத்தங்கள்.