“செரி விடு…” என்று இருந்து கொள்ள அந்த மௌனம் இங்கே துளசியை புரட்டியது.
என்ன பேசுகிறார்கள்? யார் பிள்ளை? அக்காவுக்கும் மாமாவுக்கும் தெரியும் என்றால்? இப்படி கேள்விகள் அவனின் மனதில் வட்டமிட இப்போதைக்கு கேட்டால் நிச்சயம் விழியோ பூமியோ சொல்ல போவதில்லை என தெரிந்து போனது.
பதட்டம் சுமந்த மனதை சற்றே அமைதிப்படுத்தி முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டான்.
“ஏத்தா சிட்டு…” என்ற வெளியில் நின்றபடியே அழைக்க விழி வந்து எட்டி பார்த்தாள்.
“வாங்க மாமா…” என்று கதவை நன்றாக திறந்து வைத்து உள்ளே அழைத்தாள்.
“இப்பிடி உண்காம வந்தா மனசு சங்கட்டமா இருக்குத்தா. என்னப்பா?…” என்றான் அவளிடம்.
அவள் திரும்பி பூமிநாதனை பார்க்க துளசி உள்ளே வந்துவிட்டான். பூமி விழியையும், துளசி உள்ளே வருவதையும் பார்த்தவன் துளசியின் கால் சாதாரணமா அந்த இடத்தில் பட்டதும் அவள் தன்னையறியாமல் உடல் அதிர கலங்க பூமியின் விழிகள் இறுக்கமாய் மூடி திறந்தது.
விழியினது உணர்வு தன்னிச்சையாக நடந்துவிட்ட செயலாக இருப்பினும் மனதின் ரணம் மாறாதல்லவா?
“என்னாலே தரையில ஒக்காந்திருக்க? இப்ப என்ன ஆகிபோச்சுன்னு சோத்துல கோமிக்கித? மருவாதியா உண்கிரு. அம்புட்டுத்தேம்…”
பூமிநாதனின் அருகே தானும் அமர்ந்துகொண்டான் துளசி. தட்டுக்களை எடுத்து வந்திருக்க தண்ணீர் அறையிலேயே இருந்தது.
“சிட்டு வந்து ஒக்காருய்யா…” என்றான்.
அவளும் வந்து அமர்ந்ததும் சகஜமாக பேசிக்கொண்டே சாப்பிட வைக்க பூமி எதுவும் பேசவில்லை.
அமைதியாக உண்டு முடிக்க விழியே தட்டை வாங்கிக்கொண்டாள். தான் கீழே வைத்துவிட்டு வருவதாய் சொல்லி.
அவள் செல்லும்பொழுது பூமி அவளைத்தான் பார்த்தான். அவனின் பார்வையின் பொருளை உணர முடியாமல் துளசியும் விழியின் பக்கம் திரும்ப அந்த வித்தியாசத்தை துளசி உணர்ந்தான்.
அவள் வாசலை கடந்து செல்லும் பொழுது கவனமாக செல்லும் விதத்தை மனதில் குறித்துக்கொண்டான்.
“பொறவுலே எங்கின வாசல வெக்கித? என்ன சொன்னாரு இஞ்சினியரு?…” என்றான் பேச்சை மாற்றி.
“இங்கினதேம் வெக்கிதோம். போன் போட்டாச்சு. நாள மறுநாத்து வேலைய ஆரம்பிக்கனுமின்னு சொன்னாக…”
“செரி, இந்த வாசல என்ன பண்ணுததா இருக்கீக?…”
“இங்கின பாதைய அடைச்சிட்டு ஒரு மாடத்த வெக்கலாமின்னு…” குரலே சரியில்லை பூமிநாதனுக்கு.
வெகுவாய் உணர்ச்சிவசப்பட்டிருந்தான் அன்று. பேச்சும் சரி, முகமும் சரி ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
“செரி செரி. வேலையே சுளுவா முடிக்க சொல்லுலே. இழுத்தடிக்காம….”
“செரி…”
“ஏனா மொதவே சொன்னாத்தேம் வெரசா பாப்பியானுங்க. கூட ரெண்டாள கூட கூட்டியார சொல்லு. வாச மட்டுந்தேன. வெரசா முடிஞ்சுரும்லே…” என்றான் பூமியின் தோளை தட்டி.
“செரி, போவுதேம். ஒறக்கம் வருது…” என்று சொல்லி துளசி கிளம்ப தலையசைத்தான் பூமி.
வாசலை கடக்கும் பொழுது விழியை போலவே அவன் ஒதுங்கி தாண்டி செல்ல பூமியின் மனது நின்று துடித்தது.
அதிர்வுடன் அவன் துளசியை பார்க்க வாசலை விட்டு வெளியில் வந்து நின்ற துளசி,
“மாடம் வெக்குதேமின்னு சொன்னியா? அதேம் சாமி வெக்கித எடத்துல கால வெக்க மனசு வரல…” என்று சொல்லி சிரித்துவிட்டு செல்ல பூமிநாதனுக்கு அப்போது தான் நிம்மதியானது.
ஆனால் துளசியின் நிம்மதி போனது. யாரிடம் கேட்க, யாரிடம் பேச என்று எதுவும் புரியவில்லை.
விழி கொண்டு வந்ததை கழுவி வைத்துவிட்டு செல்வதை பார்த்தான். தாயை தேட மயில் இன்னொரு அறையில் நல்ல உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
கொஞ்சமும் கவலையற்று எப்படி உறக்கம் வருகிறது இவருக்கு மட்டும் என்று ஒருநொடி நின்று பார்த்தவன் மீண்டும் வந்து கூத்தபிரான் அருகே அமர்ந்துகொண்டான்.
“ஐயா, ஒறங்கிட்டீகளா? மனசே ஆறல்லைய்யா. என்னவோ தொண்டக்குழி கெதுக்குங்குது. அந்த புள்ளைக ரெண்டும் மனசுக்குள்ளார ஒன்னத்த போட்டு மருவுதுங்க. என்னன்னு எம்புத்திக்கி முழுசா வெளங்கலையே?…”
“அக்காவுக்கும், மாமனுக்கும் விசயம் தெரியுமாட்டிருக்கு. ஒருத்தவகளும் சொல்லலியே. இந்த வீட்டுல நா ஆரு சாமி? எங்கூட பொறந்தவேன் கண்ணுல இன்னிக்கு தண்ணிய பாத்தேம்ய்யா. நெஞ்ச பொசுக்குது…”
“எம்புட்டு வேதன இருந்தா அவென் இம்பிட்டுக்கு நிப்பியான்? அந்த நெனப்பே யே உசுர சவட்டுதுய்யா…” என்று அவன் புலம்பிக்கொண்டே தான் இருந்தான்.
மகனின் முணுமுணுத்த பேச்சிலேயே கூத்தபிரான் விழித்துவிட எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தவர் கையை அசைத்தார்.
என்னவென்று பார்த்த துளசி குனிந்து அவர் சொல்ல வருவதை கேட்க இரவில், அவரின் மெல்லிய குரலும், அவர் சொல்லிய விஷயமும் தெளிவாய் புரிந்தது துளசிக்கு.
கேட்டதோ அத்தனை உவப்பாய் இல்லை. இத்தனைபேர் வீட்டில் இருந்தும் இப்படி நடந்திருக்கிறதே என்று.
நேரத்தை பார்க்காது உடனே வீரபாண்டிக்கு போனை போட்டுவிட்டான் துளசி. உடனே வீட்டுக்கு வரும்படி சொல்லிவிட அவனும் வந்து சேர்ந்தான்.
“பெத்த அப்பனுக்கடுத்து ஒன்னிய வெக்கிதேம்ய்யா மாமா, என்னன்னு சொல்லிப்பிடு….” என்று கூத்தபிரானையும் வைத்துக்கொண்டு கேட்க வீரபாண்டி திகைத்து போனான்.
“துளசி…”
“சொல்லுமய்யா. நெஞ்சறுக்குது. ஒன்னத்தையும் மறைக்காதீரும்…” என்று அவன் கேட்ட விதத்தில் வீரபாண்டி விஷயத்தை சொல்ல நிலைகுலைந்தனர் துளசியும், கூத்தபிரானும்.
“ஆத்தே இப்பிடி ஒரு பெறவியா? இந்த பாவத்த எந்த செம்மத்துலையும் கழுவ முடியுமாய்யா?…” என்று துளசி வீரபண்டியனிடம் கேட்டான்.
“அதுக ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னு மருவிட்டு அம்புட்டு ரணப்படுதுக மாமா. அந்த புள்ளைய அம்மை மறுக்கா மறுக்கா அறுத்து குமிக்காக. என்ன செம்மங்க…” என்றான்.
“பொருலே, மாமேன் செரியாவட்டும். பாத்துக்கிடுவோம். பொறு…” என்று அவனை ஆறுதல் படுத்தினான்.
“எனக்கு, ஐயனுக்கு தெரியுமின்னு பூமிக்கு சொல்லிடாதய்யா. தாங்கமாட்டியான்…”
“செரிய்யா செரி…” என்றான் வீரபாண்டி.
அன்று வெகுநேரம் அங்கே தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான் அவன். யாருக்கும் வீரபாண்டி வந்ததும் தெரியாது. சென்றதும் தெரியாது.
மறுநாள் வழக்கம் போல துளசி வேலைகளை பார்க்க விஷயம் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனாலும் அவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுது மனதில் எழும் வலியை மறைக்க முடியவில்லை.
சாதாரணமாக அதனை கடக்க துளசி படாதபாடுபட்டு போக எப்படி இத்தனை மாதங்கள் இவர்கள் இதனை தாங்கிக்கொண்டு இருந்தார்கள் என்று தோன்றாமலில்லை.
கூடவே இப்போது தானும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக போகும் இந்த தருணம், பூமி அந்த நேரத்தில் எத்தனை ஆசைகளை கொண்டிருந்திருப்பான் என்ற எண்ணங்கள் அவனை கூறு போட்டது.
விளைவு மயில், யோகு இருவரிடமும் முகம் கொடுத்து பேசுவதை அறவே தவிர்த்தான். யோகுவிடம் சுத்தமாக பேச்சில்லை அவனுக்கு.
அவளாக அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகள் தான் பேசவே முடிந்தது. இருக்கும் ஆத்திரத்தில் அவளிடம் நேரடியாக கேட்டுவிடுவோம் என்று தன்னை அடக்கிக்கொண்டான்.
கண்ணை மூடினால் விழி வாசலை கடந்ததும், பூமி அதனை வேதனை மிஞ்ச பார்த்ததும் தான் படமாய் தோன்றி வதைத்தது.
லட்சம் முறை நினைத்துவிட்டான் உள்ளே நுழையும் பொழுது மிதிக்காமல் ஓரமாய் சென்றிருக்கலாமோ என.
அந்த உணர்வே அவனின் உள்ளங்கால்களில் எதையோ செய்ய அவனாகவே இல்லை.
பத்துநாட்கள் ஆகிவிட்டது. எல்லாம் வேலைகளும் முடிந்து மாடம் ஏற்றப்பட்டு என எல்லாம் முடிந்தது.
அன்று செல்வியும், வீரபாண்டியும் வந்திருக்க அவர்களுடன் தானும் பூமியின் அறைக்கு பேச்சுவாக்கில் செல்வதை போல சென்றான்.
முதலில் இருந்த வாசலை அடைத்து அதில் மாடம் போல அமைத்து அதற்கொரு திரையை போட்டிருந்தார்கள்.
பார்த்ததும் துளசிக்கு கைகள் லேசாய் நடுங்கியது. தன்னை வெளிப்படுத்திவிட கூடாதென்று முயன்று நிற்க வீரபாண்டி ஒரு கையால் அவனின் கையை பிடித்துக்கொண்டான்.
வீரபாண்டியின் மறு கையில் பூமிநாதனின் இன்னொரு கை. இருவரையும் ஆதரவாய் தாங்கியவன் நடுவே அமர்ந்திருக்க செல்வி விழியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.