உயிர் தழுவும் விழியே – 22 (1)

உயிர் – 22

          இரண்டு நாட்களில் அறையில் இன்னொரு வாசலை கட்ட வந்து ஆரம்பித்துவிட்டார்கள்.

முதலில் வாசலை வைத்துவிட்டு அடுத்து முன்பிருந்த வாசலை மூடிவிடலாம் என்று வேலையை ஆரம்பிக்க விழி கீழேயே ஒரு அறையில் இருந்துகொண்டாள்.

மாடிக்கு செல்லவே இல்லை. அவளுக்கான உடைகளையும் கீழிருக்கும் ஒரு அறைக்கு கொண்டு வந்து வைத்துவிட அங்கே தான் கட்டி முடிக்கும்வரை இருந்தார்கள் விழியும் பூமியும்.

பத்துநாட்கள் ஆனது இரண்டிற்கும். மளமளவென்று வேலைகள் நடந்து திருப்தியாய் செய்து முடிக்க பூமிக்கு அப்போதுதான் நிம்மதியே.

மயில் எத்தனையோ முறை கேட்டுவிட்டார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை பூமிநாதன்.

இஞ்சினியர் வந்து அளந்துவிட்டு சென்ற அன்று இரவு துளசியிடம் மயில் பேசி என்னவென்று கேட்க வைத்தார்.

“ஏம்ய்யா இன்னிக்கு வந்தவக ஆருன்னு தெரியுமா?…”

“ஆரம்மோவ் கேக்குதீக?…” என்றான் துளசி சாப்பிடும் பொழுது.

“ஒங்கக்காவும், மாமாவும் வந்தாக. கூட நெடுநெடுன்னு ஒருத்தன கூட்டிட்டு வந்தவக நேரா பூமி ரூமுக்கு போனவக ரொம்ப நேரஞ்செண்டுதேன் வெளிய வந்தாக. எனக்கு என்னன்னு அம்புடல…”

“அக்காட்ட கேட்டியா நீயி?…”

“இல்லைங்கறேன். அவதேன் என்னிய பாத்தும் மூஞ்சிய திருப்பிட்டு போயிட்டாளே? நின்னு ஒத்த வார்த்த என்னன்னு கேட்டாளா?…”

“யே ஒம்மவதான, நீயி நிப்பாட்டுதது?…” சாப்பிட்டுக்கொண்டே துளசி கேக்க,

“என்னத்த நிப்பாட்ட? ஒம்மாமனுக்கு என்னிய கண்டாத்தேன் வேப்பங்காயிதேன். வாரப்பவும், போறப்பவும் வெட்டுகுத்தாட்டம் பாக்குதியான்…”

“மாமன பாத்து நீயி அச்சப்பட்டுட்ட? நா அத்த நம்பனுமாக்கும்? ம்மோவ், போவியா…” என்று சொல்லிவிட,

“இப்ப இது ரொம்ப அவசியந்தேனாக்கும்?  என்னத்துக்கு வந்தாகன்னு ஒனக்கு தெரியுமான்னா?…”

“இல்லேங்கேம்ல. தெரிஞ்சா சொல்லமாட்டேனாக்கும்?…” என்று கையை கழுவிவிட்டு எழுந்துகொள்ள பூமிநாதன் அப்போது தான் உள்ளே நுழைந்தான்.

“என்னாலே இம்புட்டு நேரம்?…” துளசி கேட்க,

“டவுனுக்கு சாயங்காலம் ஒரு சோலியா போயிட்டேம், அதேம் வர நேரமாச்சு…” என்றவன்,

“விழி…” என அழைத்தான்.

சாப்பாடு போடுமாறு சைகை காண்பித்துவிட்டு கையை கழுவ சென்றான் பூமிநாதன்.

“யே என்னிய பாத்தா சோறு போடமாட்டேனாக்கும்? என்னாலே நெனச்சிக்கிட்டு இருக்குதிய? இம்புட்டு வருசம் ஒங்கள இந்த கையாலதேம் வளத்தேம். ஒதுக்குதீயலோ? நா ஒதுக்கி வெக்கவா?…”

“எம்மோவ் என்னத்துக்கு கரைச்சலு? கம்மின்னிருக்கமாட்டியா?…” துளசி தாயை அதட்டினான்.

பூமிநாதனும், விழியும் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை. அமைதியாக இருக்க துளசிக்குத்தான் தாயின் பேச்சில் எரிச்சல் கிளம்பியது.

“பொறவென்னாலே இந்த வீட்டுக்குள்ள இருக்க எனக்கு என்ன நடக்குதுன்னே அம்புடல? எவனோ வாரியான் போறியான், இவகளும் மதிச்சு என்னன்னு சொல்லல. நா இங்கன சவமா கெடக்கனுமோ?…”

“என்னம்மோவ் ஒனக்கு வம்பு?…” என்ற துளசி,

“ஆருலே வந்தா? சொல்லத்தான?…” என்று அதட்டினான் தம்பியை.

“விழி…” என்று தனது தட்டில் உணவை வைக்குமாறு சொல்ல இட்லிகளை எடுத்து வைத்தாள்.

“வேறொன்னுமில்ல, மேல ரூமுல வேற வாசல வெக்க கேக்க இஞ்சினியர கூட்டியாந்தேம். அதுக்கு இம்புட்டு வாப்பாடு…” என்றான் பூமி.

“வேற வாசலா? என்னத்துக்குலே?…” என்றதற்கு பூமி பதில் சொல்லவில்லை.

சாப்பிடும் வேகம் மட்டும் மிதமாக்கி போக அதை கவனித்த துளசி அந்த பேச்சை நிறுத்தினான்.

“யத்தா சிட்டு, உண்கிட்டியா?…”

“இன்னுமில்ல மாமோவ்…”

“ஒக்காருத்தா…” என்றான் அவளிடம்.

“என்னன்னு நீயு கேட்டுக்குடுக்க மாட்ட. அம்புட்டுதான?…” என்று மயில் கத்த,

“எம்மோவ் பேசாம இரு. அவக உண்கட்டும்…”

“பெத்த ஆத்தா என்னிய ஒத்த வார்த்த கேட்டியா உண்கினியான்னு? எல்லாத்துக்கு மொவ ராசிதேம்? என்ன ராசியில பொறந்தாலோ?…” என்று சொல்ல,

“எந்திடி…” என்றான் பூமி விழியை.

“மாமா…” விழி அதிர்ந்து பார்க்க,

“எந்திங்கேம்ல…” என்றதும் அவளும் எழுந்து நின்றுவிட்டாள்.

“ஒ ராசிக்கி என்னத்துக்கு இத்த உண்கிட்டு. இங்கனவே கைய கழுவிட்டு இரு. நா போயி கடையில வாங்கியாறேன். அய்யன் பக்கத்துல உக்காரு போ…” என்று சொல்லிவிட்டான்.

மயிலும், துளசியும் திகைத்து போனார்கள். இப்படி திடீரென்று பேசி எழுந்துவிடுவான் என எதிர்பார்க்கவில்லை மயில்.

“ஏலே என்ன இது? அம்மை பேசறதேம் அம்புட்டும் தெரியுமே? நீயி என்னத்துக்கு எந்திச்சிட்டு. ஒக்காருலே…” என அதட்டினான் துளசி.

“பொறவு என்ன? எப்ப பாத்தாலு இதே கரச்சலு. அவ என்னத்த பண்ணிப்பிட்டா? இவக சோத்துல என்னத்தையாச்சும் வெச்சாளா என்ன?   இல்ல இவளகளவுக்கு என்னத்தையாச்சும் சுருக்கா பேசிட்டாளா? என்னத்த பண்ணிட்டா?…”

“செஞ்சதெல்லா இவகதேம்….” என்று சொல்லும் பொழுதே மயில் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட முயல துளசி பிடித்து நிறுத்திவிட்டான்.

“பெத்தவன்னா என்ன? கொஞ்சமாட்டுக்கு அந்தமாரியா பேசுது? நடக்குது? ஒண்ணுமில்ல. எல்லா அம்மாவும் பெத்த பிள்ளைய நல்லாருந்தா போதுமாட்டிருக்குன்னு நெனப்பாக….”

“இவக என்னன்னா நா வேவாரிக்கி போனாலும் சங்கட்டமில்ல, அவுக நெனச்சது நடக்கனும். அப்படி செஞ்சி செஞ்சி எழந்துட்டு நிக்கிதது நானும், இவளுந்தேம். ஆருக்கும் அது வெளங்காது….” என்று உயிர் துடிக்க சொல்ல கண்ணீர் திரண்டு நின்றுவிட்டது பூமி சொல்லும் பொழுது.

“மாமா…” என பூமிநாதன் கையை பிடித்துவிட்டாள் விழி.

அதில் சுதாரித்துக்கொண்டவன் சற்றே மூச்சை இழுத்துவிட்டவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“நா இருக்கப்பவே இவள ஒருவா உண்க விடமாட்டேங்காக. ஒண்ணுமில்லாம ஆக்கிபோடனுமின்னு கங்கணங்கட்டிக்கிட்டுத்தேன் நிக்கிதாக. இல்லாதப்ப என்ன ஏசு ஏசிருப்பாக?…”

“எதுத்து ஒன்னுங்காட்டி பேசாததுக்கே இவள இம்புட்டு காண்கவிடமாட்டிக்காக. அப்ப விழிய பேசுனதுக்கு அவ என்னன்னு இருக்கனும் இவகட்ட?…” என்றவன் மயிலை பார்த்து,

“என்னம்மோவ், பேசும். ஒனக்கு ஆவலங்குதியா? பேசாம நாங்க எங்கினையாச்சும் பொழப்ப தேடி போவறம். சரித்தான?…” என்றதும் துளசியும், மயிலும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“அதான வேணுமாட்டிருக்கு ஒமக்கு? பொறு, யே அய்யன் எம்பட்டும், அந்த மனுஷனையும் கூட்டிக்கிட்டு போவறோம். அதுவரைக்கு என்னத்தையாச்சும் பேசின. மனுசனா இருக்கமாட்டேம்…”  என்றான் பூமிநாதன்.

அத்தனை ஆத்திரம் அவனுக்கு. எவ்வளவு நாள் தான் அடக்கி வைக்க என்று பேசிவிட்டான்.

இத்தனை பேசுவான் என அவர்கள் யாருமே, ஏன் விழியுமே நினைக்கவில்லை. மௌனமாய் நின்றுவிட்டாள்.

“இன்னும என்னடி இங்கின? உள்ள வா…” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

“பாத்தியா?…” என்று மயில் மூத்த மகனிடம் சொல்ல,

“அவென் போவறேம்ன்னு சொல்லிட்டியான். என்னியால சொல்ல முடியல. அம்புட்டுதேம். ஒருத்திய கெட்டி வெச்சிருக்கியே யே கழுத்த சீவன்னு. நீயி ஒன்னுங்காட்டி வெசனப்படாத. வெரசா யே சோலிய முடிச்சு சவமாக்கிருவா. பொறவு மாமியாளும், மருமவளுமா ராசாங்கம் பண்ணுங்க…”

வெறுப்பாய் பேசிவிட்டு தம்பிக்கும், அவன் மனவிக்குமான உணவை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான் துளசி.

“சுத்த கூறுகெட்டத்தனமால பேசுதய்யா. கோவத்துல என்னவேணா பேசுவீகளா? செத்த விட்டிருந்தாலு அம்புட்டும் ஒப்பிச்சிருப்பீய…”

“விடுடி…” சலிப்பாய் பூமிநாதன்.

“என்னத்த விட? இந்த மாட்டும் மாமாவுக்கு தெரிஞ்சிச்சு அம்புட்டுதேம். அவுகளுக்குன்னு இல்ல. ஆருக்கும் வேணாங்கறேம். நம்ம வேதன நம்மோட போவட்டும்ய்யா. இனிமேங்காட்டி இப்படி பேசாதீரும். எனக்கு பொறுக்கல…”

“விழி…”

“என்னத்த அழுது எம்புட்டு பேசி என்னய்யா ஆவ போவுது. போன புள்ள போனதுதேம். சொன்னியே சாமியா நெனபோமின்னு. அத்த பண்ணுவோம். ஒ அக்கா, மாமனோட இத்த அமித்திரு. அவகள தவித்து ஒருத்தவகளுக்கும் போவ வேணா. இதுக்காய்யா இம்புட்டு நா பல்ல கடிச்சுட்டு இருந்தேம்…”

“செரிடி, கலங்காத புள்ள…”

“என்னத்த கலங்காம? உசுரே ஆடிருச்சு. கண்ணுல தண்ணிய நெப்பிட்டு நின்னியே? யே ஆவி அடங்கற வரைக்கி மறக்குமாய்யா?…” என்றதும் அவளை அணைத்துக்கொண்டான்.

“செரித்தா, செரித்தா…” என்று தேற்றினான்.

எத்தனை தான் அவனும் அடக்கி வைத்து பொறுமையாய் போவது? அதிலும் அன்று அவள் அமர்ந்திருந்த கோலம்.

நிச்சயம் எந்த காலத்திலும் இந்த கனல் மனதிலிருந்து குறைய போவதில்லை. என்பது உண்மை.

“உண்க வாங்கியாரட்டா விழி?…”

“வேணாம்ய்யா. வாங்கினா கூட எறங்குமான்னு தெரியலைய்யா…” என்றாள்.

error: Content is protected !!