உயிர் தழுவும் விழியே – 21 (2)

“என்னத்தடா பேசி போட்டேன் நானு? அந்த மனுசென் என்னன்னா என்னிய  காண்கவிடமாட்டிக்காரு. நீயி எவ்வீட்டுலையே எஞ்சத்தத்த கொறங்கிற?…” என்னும் பொழுதே அழுகை தான் வந்தது.

இயலாமை வேறு அவரை இன்னும் பேச வைக்க அந்த வீட்டில் தான் யார் என்ற கேள்வியே வந்துவிட்டது இப்போது.

மகன் பதில் சொல்வான் என்று நினைத்து பார்க்க அவனோ இது எதற்கு இந்த புது நாடகம் என்பதை போல தான் பார்த்தான்.

தாயின் மீதான அன்பும், அவனின் நம்பிக்கை என்றோ காணாமல் போய்விட்டிருந்தது.

இப்போது கடமை என்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க அனைத்திற்கும் பொறுமையுடன் இருப்பது அதை கொண்டுமட்டுமே.

இப்போதும் அவரின் கண்ணீர் அவனை கரைக்கவில்லை. கொஞ்சமும் அசைக்கவில்லை. வெறுமனே பார்த்துவிட்டு போன் வரவும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

மயில் அடுத்ததாக அன்று பலவீனப்பட்டு போனார். முன்பு பாசாங்கு கண்ணீருக்கு மகன்கள் பதறி பின் தெளிந்ததை எல்லாம் ஞாபகப்படுத்தியவருக்கு இன்று நிஜமாகவே கலங்கி அழுதும் பிள்ளையின் மனது இறுகிக்கிடப்பதை உணர்ந்துகொண்டார்.

பூமிநாதன் மீண்டும் வீட்டிற்குள் வர வீரபாண்டியும், செல்வியும் கூடவே வந்தார்கள்.

யாரோ ஒருவரை அழைத்துக்கொண்டு மூவரும் நேராக மாடிக்கு செல்ல எதுவும் தெரியவில்லை மயிலுக்கு.

மேலே சென்றவன் அங்கிருந்தே போன் செய்தான் விழிக்கு. வெளியில் தான் அமர்ந்திருக்கிறான் என்று போனுடன் அவள் எட்டி பார்த்தபடி,

“இம்புட்டு நேரத்துக்கு கீழ தான இருந்தீக மாமா?…” என கேட்க,

“மாடிக்கு நம்ம ரூமுக்கு வா விழி…” என சொல்லி போனை வைத்துவிட்டான்.

நர்ஸிடம் கூத்தபிரானை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு விழி மாடிக்கு சென்றாள். அதையும் பார்த்தபடி சாப்பாட்டு மேஜையில் தான் அமர்ந்திருந்தார் மயில்.

காலை எழுந்ததில் இருந்தே ஒரு வார்த்தை அவள் பேசவில்லை. ஒரு டீ கொடுப்பதோ, இல்லை உண்ண அழைப்பதோ, பரிமாறுவது என எதுவும் இல்லை.

அந்த  கோபத்துடன் இருந்தவருக்கு மதிய உணவின் நேரம் வேணுமென்றே அவளை வம்பிழுத்தார்.

“சோறா பொங்கிருக்க வெறவுக்கட்டயாட்டம் வெரப்பா இருக்கு. தொண்டக்குழில எறங்குதா?…” என்று அவள் முன்னால் தட்டை தூக்கி கழுவிமிடத்தில் விட்டெறிந்தார்.

“உண்குற வட்டியல தூக்கி வீசுதீகளே? கொஞ்சமாட்டு மண்டையில என்னமாச்சு இருக்கா?…” என்றும் கேட்டுவிட மயில் அதிர்ந்து பார்த்தார்.

“என்ன பாக்குதீக? நா வடிக்கித கஞ்சி அம்புட்டுக்கு சவுரியமில்லாங்காட்டி நீகளே பொங்கி உண்கத்தான? ஆரு கைய புடிச்சா?…”  என்று சொல்லிவிட்டாள்.

“நா பொங்கவா? பொறவு என்னத்துக்குடி நீயி இங்கின இருக்குதா? ஒ அப்பேன் வீட்டுக்கு போவத்தான?…”

“யே அப்பேன் வீட்டுக்கு போவ எனக்கு தெரியும். அத்த நீக சொல்ல வேணாங்கறேன்…”

“ஒருவா சோறு வடிக்க துப்பில்ல. வாய் மட்டும் கிழியுது…”

“ஆமா, துப்பில்ல. அம்புடுக்கு ஆவலாதின்னா நீகளே வடிக்கிறது?…”

“நா வடிச்சு கொட்டி ஒங்கிட்ட ஏசும் வாங்கத்தான?…” மயிலுக்கு தாளமுடியவில்லை இப்படி பேசுகிறாளே என்று.

“ஆங் அத்த சொல்லல. ஒமக்கு என்ன சவுரியமோ அத்த நீக செய்யுங்க. எனக்காவறத நா செஞ்சுக்குவேன். அம்புட்டுக்குத்தேன்…” என்றதும் மயிலுக்கு தலை சுற்றியது.

“ரெண்டு ஒலயா?…” கத்தியே கேட்டுவிட்டார்.

“ஆவாத சோலிய என்னத்துக்கு அடிச்சு புடிச்சு வாங்கனும்?  அதேம், ஒமக்கு ஒலய நீக வெய்யுங்க. நா ஆக்குதத உண்கனுமின்னு இங்க ஆரும் தவங்கெடக்கல…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட அங்கேயே சமைந்துவிட்டார் மயில்.

அவளிடம் அதற்குமேல் பேசினால் இதுதான் பதில் என்று தெரிந்துபோக பொறுக்கமாட்டாமல் பேசிவிட்டு வார்த்தைகளை வாங்கியும் கட்டிக்கொண்டு தான் பிள்ளைகள் வரட்டும் என்று காத்திருந்தார்.

இப்போது தன்னிடம் எதுவும் பேசாமல் மகன், மகள், மருமகன் என்று மேலே செல்ல, வந்தவளும் இப்படி சென்றதில் தனியாய் நின்றார்.

கூத்தபிரானின் அறையை எட்டி பார்க்கவே பயமாக இருந்தது. எங்கே சென்று தன்னை அப்படி பார்த்துவிட்டால் தன்னால் முடியுமென்று தோன்றவில்லை.

மீண்டும் தாழ்வாரத்திற்கே வந்து அமர்ந்துகொண்டார். இனி தன் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று நினைத்தபடி சாய்ந்துகொண்டார்.

மாடிற்கு சென்ற விழி அங்கே கதவருகே நின்றபடி உள்ளே என்ன செய்கிறார்கள் என்று பார்க்க அவளை கண்டதும்,

“இங்கின வா…” என்று அழைத்தான் பூமிநாதன்.

அவளும் பாதத்தை ஓரமாய் பதித்து ஒதுங்கி நடந்துவருவதை வீரபாண்டியும் செல்வியும் கவனித்தார்கள்.

“என்ன மாமா? என்ன செய்யுதீக?…” என்றவள்,

“எப்ப வந்தீக மதினி? நா காண்கவே இல்ல?…” என்றாள் செல்வியிடம்.

“இங்கனதேன் நானும் இருக்கேம்த்தா சிட்டு…” என வீரபாண்டி தொண்டையை செருமிக்கொண்டு சொல்ல,

“இம்புட்டு தொலைவு வந்தவக என்னிய கீழ பாக்கவா செஞ்சீங்க? எல்லா பாத்தோம் பாத்தோம்…” என்றாள் விழி மிதப்பாக.

இருவரிடமும் இயல்புடன் பேசுவதை போல புன்னகையுடன் தான் இருந்தாள் அவள்.

முகத்தில் எந்த சஞ்சலமும் இல்லாததை போல காட்டிக்கொண்டாலும் அந்த இடத்தை கடந்து வந்த அந்த ஒருநொடி தொண்டைக்குழி ஏறி இறங்கியதை பார்க்கத்தானே செய்தனர் மற்றவர்கள்.

அந்த தரையை ஏக்கமாய் பார்த்து, உதட்டை மடித்து, கை விரல்களை கூட்டிப்பிடித்து தாண்டிக்கொண்டு முகத்தை நிமிர்த்தும்பொழுது அத்தனை உணர்வுகளையும் துடைத்தெறிந்து பளிச்சென்று சிரித்தாளே?

உயிரிருக்கும் வரை அவளின் இந்த உணர்வுகள் மனதை விட்டு அகலாது என்பதை போல பதிந்துவிட்ட அந்த நிகழ்வினால் எழுந்த தவிப்பை உள்ளடக்கிக்கொண்டு அவளிடம் சகஜமாக பேசினார்கள் இருவரும்.

“ஆருன்னு கேட்டா என்னத்தையோ பேசுதீக. இங்கின என்ன செய்யிதாக?…” என்றாள் புதிதாய் வந்தவர் எதையோ கவனித்தபடி இருப்பதை பார்த்து.

அதுவும் நேராக அத்தனைபேரும் தங்களின் அறைக்கு வந்திருக்க ஒன்றும் புரியவில்லை.

“இவுக டவுனுல பெரிய இஞ்சினியரு. வீடு கட்டி குடுக்குதவரு…” செல்வி சொல்ல,

“செரி அவகளுக்கு இங்க என்ன சோலிங்கேன்?…” என்றாள் மீண்டும்.

“வாஸ்த்து கூட நல்லா பாப்பாக சிட்டு…” என்றான் வீரபாண்டி.

“செரித்தேம், மாமா நீக சொல்லுங்க…” என்றாள் பூமிநாதனிடம்.

“பாத்துகிடு செல்வி, இங்கின வரவும் புருசெம் பேருல மருவாதிய?…” என கிண்டல் பேசினான் வீரபாண்டி.

“மாமோவ், அவகட்ட பேசும்…” என பூமிநாதன் செல்வியையும் கண்ணை காட்ட இருவரும் நகர்ந்தனர்.

அந்த அறையின் ஓரத்தில் அவளுடன் நடந்தவன் மற்றவர்களை பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன்,

“நெலவாசல மாத்தலாமான்னு கேக்கத்தேம் வரச்சொன்னோம் விழி…” என்றான் அவளிடம்.

“என்னத்துக்கு? எந்த வாசல?…”

“இங்கதேம், நம்ம ரூமு வாசலத்தேம்…” என்றதும் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“மாமா…”

“இருடி அவக பாத்துட்டு போவட்டும். பொறவு பேசுவம். நீயி இங்கின செத்த ஒக்காரு…” என்று சொல்ல விழி அப்படியே நின்றுவிட்டாள்.

அதன்பின்னர் அங்கே என்ன செய்தார்கள் என்ன பேசினார்கள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

தனியொரு உலகத்தில் இருப்பதை போல பூமியை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டாள்.

வாசலை மாற்றிவிடலாம் என்றும், வாஸ்துபடி தள்ளி கட்டி பழைய வாசலை அடைத்துவிடலாம் என்று அங்கே என்ன வேண்டும் என கலந்துவிட்டு சொல்லும்படி சொல்லி கிளம்பிவிட்டார் இஞ்சினியர்.

செல்வியும் வீரபாண்டியும் கூட பூமியிடம் சொல்லிவிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள்.

“விழி…” என்று பூமிநாதன் அருகே வந்து தோளை தொட கட்டிலில் அமர்ந்திருந்தவள் உணர்வுபெற்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏம்ய்யா, ஏம்ய்யா என்னிய கொல்லுத? எனக்குன்னே பாப்பியா நீயி? என்ன செம்மம்ய்யா எடுத்தேன் நானு? இம்புட்டுக்கு நா ஒசத்தியா?…” என்று உதடு துடிக்க அவனின் வயிற்றை கட்டிக்கொண்டு கண்ணீருடன் அவள் கேட்க,

“நீயி ஒசத்தி இல்லாங்காட்டி இங்கன ஆருடி ஒசத்தி? என்னிக்கும் நீயி எனக்கு பெருசுதேம். அதுக்கு இம்புட்டு வார்த்த பேசுவியா?…” என்றான்.

“இந்த ரூம விட்டு நீயி வரமாட்ட நெசந்தேன். அதுக்காண்டு ஒத்த ஒத்த எட்டா நீ பாதத்த பாத்து பாத்து அங்கன வெக்கிதப்ப நெஞ்ச அறுக்குதுடி. சாமியா நீயி அத்த நெனச்சிட்ட. சாமியாவே வெச்சிக்கிடுவோம். அம்புட்டுத்தான?…”

எத்தனை இலகுவாய் சொல்லிவிட்டான் பூமிநாதன். இவனின் அத்தனை அன்பையும் தாங்கும் வல்லமை தான் அவளின் நெஞ்சத்திற்கு இல்லை.

“இங்காரு, அழுவாத. எல்லா செரியாகிடுச்சு. இங்கின ஒரு மாடத்த வெக்கிதோம். பாத்துக்கிடுவோம். குலங்காக்க மொத வாரிசா வந்திருக்க வேண்டிய புள்ள, சாமிகிட்ட போயிருச்சு. இப்ப அது நம்ம குலசாமி….”

“மாமா…”

“அத்த சாமியா நெனச்சிக்க, அத்த விட்டு வெளில வா. மனசார கும்புடுவோம். திரும்ப நம்ம புள்ளையா வர வரங்கேப்போம். நம்ம புள்ள நம்மள விட்டு எங்கடி போவும்? அதுவும் நம்மக்கிட்ட வரத்தேன் காத்துட்டு இருக்குமாயிருக்கும் விழி…” என்றவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்.

error: Content is protected !!