உயிர் – 21
பூமிநாதனும் துளசியும் கிளம்பியதும் அந்த செவிலி பெண்ணுடன் பேச அமர்ந்துவிட்டாள் விழி.
மயில் வந்து பார்த்துவிட்டு உள்ளே நுழைய அந்த பெண்களிடம் என்னவோ மெதுவாய் பேசிக்கொண்டிருந்த கூத்தபிரான் மயிலை பார்க்கவும் கையை கையை அசைத்து கோபமாய் என்னவோ கத்த முயன்றார்.
முயலத்தான் முடிந்தது, அவரின் சத்தம் கேட்கவே இல்லை. ஆனால் முகத்தில் அத்தனை ஆத்திரம், கொலைவெறி என்று விழிகள் சிவந்துவிட்டது.
“ஆத்தீ, என்னான்னு தெரியலையே?…” என்று விழி அவரை அமைதிப்படுத்த மயிலுக்கு புரிந்துவிட்டது தன்னை கண்டதும் தான் இத்தனை ஆத்திரம் என்று.
என்னவென்றே புரியாமல் விக்கித்து போய் பார்த்தார் கணவரை. என்ன செய்தோம் என இத்தனை கோபம்? இல்லை விழியை வீட்டினுள் சேர்க்க முடியாதென்றதா? எதுவும் புரியவில்லை.
பின் அவராகவே அறையை விட்டு வெளியேறி ஐந்துநிமிடம் கழித்து எட்டி பார்க்க கூத்தபிரான் இயல்பாக இருந்தாலும் விழியிடம் என்னவோ சொல்ல முயன்றார்.
“என்னன்னு வெளங்கலையே ஐயா?…” என்று விழி அவரின் அருகே காதை வைத்து கேட்க கண்ணீர் தான் வந்தது கூத்தபிரானுக்கு.
“செரி செரி, அழுவாதீரும், ஒண்ணுமில்ல. எல்லாஞ்செரியாவட்டும். பேசிக்கிடுவோம்…” என்றாள்.
கண்ணீரை துடைத்து விட விட இன்னுமே பொங்கியது அவருக்கு. தனது வேதனையை பகிரவும் முடியாமல், மருமகளின் கரிசனையை ஏற்கவும் முடியாமல் அந்த முதியவரின் மனது தவியாய் தவித்தது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மயிலுக்கு விழியை பற்றிய எண்ணம் பின்னே சென்று ஏன் எதற்கு இத்தனை விரோதம், ஆம், கூத்தபிரான் கண்களின் மயில் கண்டது தன் மீதான விரோதத்தை தான்.
என்னவோ மனதை போட்டு பிசைந்தது அவருக்கு. உள்ளூர இவருக்கு என்னவாகிற்று என்ற பயம் பெரும் பிராவகமாய் பொங்கியது.
விழி சமாதானம் சொல்லியபடி அவரின் கையை பிடித்துக்கொண்டு வேறு என்னவோ பேச ஆரம்பித்துவிட சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அதற்குமேல் நிற்க முடியாமல் தாழ்வாரத்திற்கு வந்து அமர்ந்துகொண்டார்.
யோசனைகள் எங்கெங்கோ ஓடியது. இதுவரைக்கும் எத்தனையோ முறை சண்டை வந்திருக்கிறது.
அத்தனைக்கும் உச்சமாக சிந்தாவை பேசி அப்போதும் கூட நீயெல்லாம் என்ன மனுஷி என்று பார்த்த மனிதரின் கண்களில் வெறுப்பும், ஆற்றாமையும் தான் இருந்ததே தவிர இப்படி ஒரு உணர்வை கண்டதிலையே.
நினைக்க நினைக்க பெரிதாய் என்ன செய்திருப்போம் என்று யோசித்தபடி தான் அமர்ந்திருந்தார்.
இரண்டுமணிநேரம் அங்கேயே அமர்ந்துவிட்டார். மீண்டும் உள்ளே செல்லவே இல்லை.
இறுமாப்பும், பிடிவாதமுமாய் இருந்தவருக்கு இப்போது என்னவோ உள்ளுக்குள் உடைவதை போல தோன்றியது.
பிள்ளைகள், கணவர் என தன்னை ஒதுக்கி வைத்து, சண்டையிட்டு பேசாமல் இருந்ததை கூட தாங்கி கல் போல இருந்தவருக்கு இந்த பார்வை வாட்டியது.
பேசி சண்டை போட்டிருந்தால் இத்தனை தூரம் வலித்திருக்காது. இது தூக்கி சுமக்க முடியாததாக இருந்தது மயிலுக்கு.
எவ்வளவு நேரம் தனிமையிலே இருக்க என யோகுவிற்கு அழைத்துவிட போனை எடுத்தவள்,
“இன்னுங்காட்டி என்னத்தே? என்னிய இப்பன்னே அத்துவிடலாமின்னு நெனைக்கிதீகளா?…” என்றாள் எடுத்த உடனேயே.
“இவ எவடி கோட்டிக்கழுத, நானே வெம்பிப்போய் போன போட்டா பேசுதா பாரு, கூவ கூவ…” என்று யோகுவை கடுப்பில் பிடித்து திட்டிவிட்டார்.
எப்போதும் இப்படி பேசாத மாமியார் இன்று திட்டவும் செய்ய திகைத்து போனவள்,
“எத்தே…” என்றாள் அழுகையுடன்.
“பொறவென்ன, என்னத்துக்கு போட்டேன்னு கூட கேக்கமாட்டாம என்னன்னு ஒனக்கு அம்புட்டு எகத்தாளம்ங்கேன்?…”
“ஒம்மவனும் என்னிய ஏசுதாரு. இப்ப…”
“என்னத்த இப்ப? வாய அடக்கி பேச வேணாமா பொம்பள நீயி? எம்முன்னாடியே எம்புள்ளைய ஒண்ணுக்கும் ஆவாதவேன்னு பேசுவ. பொறவு அவென் அத்த சொன்னியான், இத்த சொன்னியான்னு மூலையில ஒக்காந்து மூக்க சீந்தவேண்டியதேன்…”
யோகுவிற்கு நம்பிக்கையே மொத்தமாய் அறுந்துவிட்டதை போலானது மயிலின் பேச்சில்.
ஏற்கனவே சற்றுமுன்னர் தான் பூமியுடன் வீட்டிற்கு வந்திருந்தவன் தனியே அழைத்து பேசியிருந்தான்.
“இங்காரு, கம்மின்னு நானா ஒன்னிய கூப்பிடுத வரைக்கி இங்கின இருந்தா இரு. இல்லையாங்காட்டி அத்துவிட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கிடு. என்னிய எவனும் கேக்க முடியாது….” என்று சொல்ல,
“என்ன மனுசென் நீக? ஒரு நாயமா பேச வேணாமா? அத்துவிடுதேமின்னு எம்புட்டு பெரிய வார்த்த பேசுதீக?…” என்று அழுகையை கூட்ட,
“யே ஒனக்கு இன்னிக்குத்தேன் பெரிய வார்த்தைன்னு அம்புட்டுச்சோ? சிட்டுக்கு சொல்லும்போது இனிச்சதோ? பல்ல காட்டிட்டு நின்ன? எம்புட்டு பொக போட்ட அம்மைக்கி. அதேம்டி ஒன்னிய இங்கின கொண்டாந்து நிப்பாட்டிருக்கு…”
“வாயும் வவுருமா நிக்கிதேனே? என்னிய கண்ணீரும் கம்பலையுமா நிக்க வெக்கிதேக? எங்கண்ணனுக்கு தெரிஞ்சாங்காட்டி?…”
“ஒங்கண்ணனே எனக்கு ஒரு நல்ல புள்ளயா பாத்து கெட்டி வெச்சிருவியான். கேப்பமா?…” என்றதும் அதிர்ந்துதான் போனாள் யோகு.
அங்கே வந்ததில் இருந்து அத்தனை பேச்சு பேசியிருந்தான் வீரபாண்டி. இனி துளசியாக வந்து அழைத்தாலே தவிர அவளை அனுப்ப போவதில்லை என்று சொல்லியிருந்தான்.
இல்லை என்றால் பிரசவம் முடியும் வரை இங்கேயே இரு. ஒன்னும் பிரச்சனை இல்லை என்றுவேறு அவள் வயிற்றில் புளியை கரைத்திருந்தான்.
செல்வியும் ஒன்றும் அவளை அதை செய் இதை செய் என்று எதற்கும் வேலை வாங்குவதில்லை.
ஆனாலும் யோகுவின் ராஜாங்கம் எல்லாம் துளசியின் வீட்டில் தான். அங்கு அவளே அந்த வீட்டின் மகாராணி என்று உணர்வாள்.
அங்கே தான் சுதந்திரமாக தான் நினைத்ததை போல இருக்க முடிகிறது என்பது அவளின் எண்ணமாக இருந்தது.
இப்போது அண்ணனும் அனுப்ப முடியாதென்றிருக்க, கணவனும் அழைக்கமாட்டேன் என்று சொல்ல, அதிலும் வேறு திருமணம் செய்துவிடுவேன் என்று மிரட்டவும் வழியின்றி அமைதியாக இருந்தாள்.
தன் வீட்டினர் மீது துளியும் நம்பிக்கை இல்லை யோகுவிற்கு. அத்தனைபேரும் விழிக்கு ஆதரவாக இருக்க நிச்சயம் துளசியின் பக்கம் தான் நிற்பார்கள்.
விட்டால் பொண்ணை பார்த்து துளசிக்கு அவர்களே செய்து வைத்துவிடவும் தயார் தான் என்று நினைத்தாள்.
அவளுக்கிருக்கும் ஒரே ஆறுதல், ஆதரவு, எல்லாம் மயில் மட்டுமே. இப்போது அவரும் அப்படி பேசிவிட ஓவென்று பெருங்குரலெடுத்து அழ துவங்கிவிட்டாள்.
அதை சமாதானம் செய்யும் மனநிலையில் மயிலும் இல்லை. யோகுவின் அழுகை எரிச்சலை கூட்ட,
“அழுவறதுக்குத்தேன் போன போட்டியோ? வையிடி…” என்றார் கடுப்புடன்.
“எனக்கு அம்புட்டுக்கிடுச்சு, இந்த மனுசென் என்னன்னா கம்மின்னிரு இல்லாங்காட்டி வேற ஒருத்திய கெட்டிகிடுவேன்னு யேங்கிட்டையே சொல்லுதாரு. நீக என்னன்னா பேசக்கூட ஆவாததாட்டம் வெரட்டுதீக…”
“அவென் எப்ப சொன்னியான்?…”
“செத்தமின்ன இங்கின வந்தப்பதேன்…”
“அங்கையா? என்னத்துக்கு?…” என்றார் மயில்.
“அவரும் ஒங்க ரெண்டாவது மவனும்ந்தேன் வந்தாக…”
“என்னவாம்?…”
“ஆருக்கு தெரியும்? வந்தாக, அவகளா ரகசியமா பேசிக்கிட்டாக. கெளம்பிட்டாக…”
“ஓஹோ, செல்வி ஒன்னு சொல்லலியா?…”
“ஒம்ம மவ வாய தொறந்துட்டாலும்?…” என்று அங்கலாய்த்தாள் யோகு.
“இந்தாடி, அங்கன போயாச்சும் செத்த அடக்கசடக்கமா இரு. இல்லாங்காட்டி எம்புள்ள ஒன்னிய கூப்புட்டாலும் ஒங்கண்ணே விடமாட்டியான். வெளங்குச்சா?…” என்றார்.
“ம்க்கும், நான்னாதேன் இங்க ஒருத்தருக்கும் ஆவாதே? ஒன்னுத்தயும் பேசல, அம்புட்டுதா?…” என்று சொல்லி வைத்துவிட்டாள் கடுப்பாய்.
அதை எதையும் யோசிக்கும் நிலையில் மயில் இல்லை. என்னவாக இருக்கும் என்ற அடுத்த யோசனைக்கு சென்றுவிட்டார் அவர்.
இப்படி இரண்டுபேரும் விசேசம் அன்றி ஒன்றுபோல அங்கே சென்றதில்லையே. ஏனோ? எதற்கோ என்று மூளை சூடாகியது.
மதிய உணவிற்கு வந்தவர்கள் கூட எதுவும் பேசாமல் இருக்க துளசி கிளம்பியும் பூமி அங்கேயே தான் இருந்தான். மெல்ல அங்கே சென்றவர்,
“சாமி…” என்று இளைய மகனை அழைக்க என்னவென்று நிமிர்ந்து பார்த்தான் அவன்.
விழி அங்கில்லாமல் கூத்தபிரான் அறையில் இருக்க பூமி வரவேற்பறையில் தனியே அமர்ந்திருந்தான்.
அவன் இருப்பதே யாருக்கோ காத்திருப்பதை போல தெரிந்தது. யாரென்றும் தெரியவில்லை.
எங்கே? தனக்கு தெரிந்து இந்த வீட்டில் நடப்பதெல்லாம் எப்போதோ முடிந்துபோகிற்று என்ற பெருமூச்சும் கிளம்ப பூமிநாதன் தாயை பார்த்தான்.
எதுவும் பேசவில்லை. அமைதியாக பார்த்தவனின் முகமே சொல்லுங்கள் என்பதை போல கேள்வியாக நோக்க,
“செல்வி வீட்டுக்கு போனியாம்? என்னன்னு இருக்காக? அங்கன எல்லாரும் சவுக்கியந்தான?…” என்று மெதுவாய் ஆரம்பித்தார்.
“யே, இங்கின சும்மாத்தான இருக்கீக? போயித்தான் பாக்குதது. அதேன் அய்யன பாத்துக்கிட விழி இருக்காளே?…” என்றான் அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல்.
“அப்ப நா ஒ அய்யன பாக்கலன்னு சொல்லுதியோ?…” என்றார் கோபத்துடன்.
“ம்மோவ், வீட்டுல நாம மட்டுமில்ல. புதுசா நர்சு இருக்காக. கொரல கனக்காம மெல்ல சொல்லுதேகளா?…” என கூறியவன் குரலில் கண்டனம் மிகுந்திருந்தது.