உயிர் – 20
நடுசாமம் இரண்டுமணி ஆகிவிட்டிருக்க தன் மீதே உறங்கி இருந்தவளை லேசாய் நகர்த்தி படுக்க வைத்தான் பூமி.
அவன் எழுந்து நகர்ந்து விழியை படுக்க வைத்த அசைவிலேயே விழித்துவிட்டாள் அவள்.
“மாமா…” என்று சட்டையை பிடித்துக்கொள்ள,
“இங்கினதேன்டி இருக்கேம்…” என தலை கோதினான்.
“ம்ம்ம்…” என்றவள் இப்போது எழுந்தே அமர்ந்துவிட்டாள்.
“ஒறங்குடி, யேம் எந்திச்ச?…”
“ம்ம்ம், அய்யன பாத்துட்டு வாரேம்…” என சொல்ல,
“இல்ல, நீ இங்கின இரு. நா பாத்துட்டு வாரேன்…” என்றவன் கையை பிடித்துக்கொண்டவள் தானும் கட்டிலை விட்டு இறங்கினாள்.
“வா போவம்…” என்றதும் அவளின் முகத்தை ஆழந்து பார்த்தான்.
அத்தனை சஞ்சலம் முகமெல்லாம் விரவி இருக்க அதை மறைக்க முயலும் முயற்சி பெரிதாய் தெரிந்தது.
ஒன்றும் சொல்லாமல் அவளுடன் சேர்ந்தே நடந்தான். இதற்கு என்ன செய்ய முடியும்? இல்லை எதுவும் செய்வதற்கு இல்லையே?
அந்த அறையின் வாசலை தாண்டும் நேரமெல்லாம் அந்த இடத்தில் கால் பட்டுவிடாமல் ஓரமாகவே ஒதுங்கி, தாண்டி வருபவளை காண காண நெஞ்சை பிழிந்தது.
இத்தனை கவனமாக நடக்கிறாள் என்றால் இன்றும் அவ்விடத்தில் இருந்தது மறக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
எப்படி மறக்க முடியும்? நித்தமும் இனி இந்த அறை தான். அவன் யோசனைகளுடன் படியில் இறங்க கால் இடறியது.
“யோவ் மாமா…” என்று பிடித்துக்கொண்டான் உடனே.
“ஒன்னுமில்லடி….” என்று அவளின் பதட்டத்தில் தன்னையே நிந்தித்துக்கொண்டான்.
“பாத்து வரமாட்ட? அம்புட்டு கெறக்கமின்னா மேல போவேம். நா பாத்துட்டு வாரேன்….” என நடந்தாள்.
“நில்லுடி…” என கூடவே சென்றவன் மெதுவாய் பேசினான்.
“மெல்லத்தேம் நடையேன்…” என்று அவளின் கை பிடித்து நிறுத்தினான்.
கூத்தபிரான் இருந்த அறையில் துளசி அந்த பலகைகட்டிலில் படுத்திருக்க அருகிருக்கும் சிறிய அறையில் மயில் உறங்கிக்கொண்டிருந்தார்.
இங்கே இவர்கள் சத்தத்தில் துளசியே உறக்கம் கலைந்து எழுந்து வந்துவிட்டான் அறை வாசலுக்கு.
“இந்நேரத்துக்கு என்ன பண்ணுதீக இங்கின?…” என இருவரிடமும் கேட்க,
“நீயி ஒறங்கலையா?…” என்றான் பூமி.
“இப்பத்தேன் அவசரத்துக்கு மாத்திவிட்டேம். படுத்தேம் செரியா ஒங்க கனப்பு கேக்கவும் எந்திச்சி வந்தேம்…” என்றான்.
“நல்லா ஒறங்குதாரா?…” என பூமிநாதன் எட்டி பார்க்க கூத்தபிரான் நல்ல உறக்கத்தில் இருந்தார்.
“நல்லாத்தேன் ஒறங்குதாருடா. நீயி மொத மேல போ…” துளசி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே விழி உள்ளே சென்றுவிட்டாள்.
மெல்லிய விளக்காக இருந்தாலும் கூத்தபிரான் படுத்திருந்த கட்டிலை சுற்றி சுற்று உத்து உத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்னத்த தேடுதா சிட்டு?…” துளசி பூமியிடம் கேட்க,
“மறுக்கா எறும்பு என்னதும் மொச்சிருக்கான்னுதேன்…” என்றதும் துளசிக்கு வருத்தமாகிவிட்டது.
அவருக்கும் அத்தனை வேதனை தானே. அதுவும் விழி இத்தனை கவனிக்க முகம் மென்மை பூசியது அண்ணன் தம்பி இருவருக்கும்.
“பாத்துகிடு பூமி. பாவம்ய்யா சிட்டு…” என்றான்.
அவனுக்கு தலையை அசைத்தவன் விழி வர காத்திருந்தான். நன்றாக பார்த்துவிட்டு ஒரு திருப்தியுடன் வர,
“போதுமாத்தா…” என துளசி சிரிப்புடன் கேட்க தலையசைத்தவள்,
“இப்ப போவியாம் நீயி…” என்று பூமி சொன்னதும்,
“பொறவு நீங்க என்ன செய்யுவீகளாம்? வாரும்….” என்றாள் அதட்டலாக.
“நீயி போ, வாரேன்…” என்ற பூமியின் முகத்தில் என்னவோ யோசனை இருக்க விழி அசையவில்லை.
“பூமி, காலேலே பேசிக்கிடுவோம். கெளம்பு மொத…” என்றான் விழி நிற்பதை கண்டு.
“வா…” என மாடிக்கு அவன் செல்லவும் விழியும் சேர்ந்து போக துளசி சென்று படுத்துகொண்டான்.
“நாந்தேன் பேசிட்டு வாரேன்னேமில்ல. யேம்டி…” என்று அலுத்துக்கொண்டான்.
அவளிடம் பதிலில்லை. கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டவள் அவனுடன் நடக்க பூமியும் எதுவும் சொல்லாமல் செல்ல வரும்போது போலவே அப்போதும் ஓரமாய் அவள் செல்ல சுருக்கென்றது அவள் இப்படி செல்லும் பொழுதெல்லாம்.
ஒன்றும் பேசாமல் சுவற்றை ஒட்டி திரும்பி படுத்துவிட்டாள். ஆனால் நிச்சயம் உறங்கபோவதில்லை என தெரிந்துவிட்டது பூமிக்கு.
“விழி…” என்றான் விளக்கை அணைத்துவிட்டு அருகே அமர்ந்து.
“படும்ய்யா, சும்மா ராக்கோழியாட்டம் முழிச்சுட்டு…” என்று அதட்டினாள்.
“செத்த கேளேம்டி…” என்றதும் அவன் பக்கம் திரும்பியவள்,
“இங்க வா…” என்று இழுக்கவும் அவள் மேலே விழுந்தான்.
“மெல்லடி…” என சொல்ல,
“கம்மின்னு படுத்து ஒறங்கு. இல்லாங்கட்டி நா கீழே போறேம்…”
“விழி…”
“என்னய்யா?…”
“ஒண்ணுமில்லத்தா, மொத நீயி ஒறங்கு…” என்று சரிந்து நன்றாக படுத்துக்கொள்ள அவனின் தோளில் தலையை வைத்துகொண்டாள்.
தன் முகம் பார்த்து அவன் சுணங்குவதை விழி விரும்பவில்லை. தனது கோபத்தில் கூட அவன் எந்த வருத்தத்தையும் காண்பித்திருக்கவில்லை.
இப்படி வேதனையில் அவனும் வருத்திக்கொள்ள முடிந்தளவு தன்னை மீட்க தான் முயன்றாள்.
விடியல் வரை விழித்தே தான் இருந்தாள். அவளுக்கு பூமியின் மடியில் உறங்கிய அந்த சிறிதுநேரமே போதுமானதாக இருந்தது.
ஆனால் அது கூட அவனுக்கு கிடைக்கவில்லையே. தோளில் சாய்ந்திருந்தவள் அவன் மார்பை வருடிக்கொண்டே இருக்க முதலில் மறுத்தான்.
“கம்மின்னு இரேம்டி. சொக்குது…” என்று சொல்ல,
“சொக்கந்தேன? சொக்கட்டும்ய்யா…” என்றாள் சிரிப்புடன்.
அது தனக்காக என்று தெரியாமலா இருக்கும்? ஆதரவாய் அணைத்துக்கொண்டான் பூமிநாதன்.
தள்ளி இருக்கும் பொழுது நெருங்கி வந்தவன் அண்மையில் தள்ளி இருப்பதில் அவனின் மனதை கண்டுகொண்டாள்.
இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து நடக்க அன்றைய பொழுதும் கழிந்து விடிந்துவிட்டது.
பூமி கண் விழிக்கையில் விழி அங்கே இல்லை. கீழே கிளம்பி வர கூத்தபிரானிடம் என்னவோ பேசியபடி அமர்ந்திருந்தாள்.
“காப்பி தரவா?…” தன்னை பார்த்துக்கொண்டே வந்தவனிடம் விழி கேட்க, தலையசைத்தவன்,
“ஐயா மேலுக்கு சொவங்களா?…” என்றான் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு.
கூத்தபிரானும் மெல்லிய குரலில் பேச காதை அவரருகே கொண்டுசென்று கூர்மையாக கேட்டு பதில் சொல்லிக்கொண்டு இருந்தான் பூமி.
“நீயி குடிச்சியா விழி?…” என்றான் தனக்கு கொண்டுவந்தவளிடம்.
“இம்புட்டு நேரத்துக்கு தொண்டையில எறங்காமலா? அதேல்லா அப்பக்கே குடிச்சாச்சி. செரி இருக்கீகளா போய் ஒலைய வெக்கிதேன்…”
“இந்நேரத்துக்கா?…” என்றான் மணியை பார்த்து.
“ஆக்கி வெச்சிட்டா இங்கின இருப்பேமில. அதேம்…” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டாள்.
அங்கிருந்தே துளசிக்கு அழைத்து எங்கே இருக்கிறான் என்று கேட்டுக்கொண்டவன் சாப்பிட்டு கிளம்பும் வரை அங்கே தான் இருந்தான்.
ஒன்பது மணி போல மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்த செவிலி பெண் வந்துவிட்டாள்.
வழக்கமாக மருத்துவமனையில் பார்க்கும் அதே நேரத்தில் தான் இங்கேயும் வேலை என்றிருக்க அங்கே வந்து சேர்ந்தாள் அந்த பெண்.
வந்ததுமே என்னென்ன அந்த பெண் செய்ய என கேட்டுவிட்டு வேறு என்ன தாங்கள் செய்வோம் என்றும் சொல்லி பூமிநாதனே சொல்லியிருந்தான்.
விழியை விட்டால் தான் பார்த்துக்கொள்கிறேன் உடன் இரு என்று மட்டும் சொல்லியிருப்பாள்.
அதனால் தானே இருந்து கேட்டு எல்லாம் சொல்லியவன் விழியிடமும் கண்டித்து சொல்லிவிட்டான்.
“இங்காரு, அது பாக்குத வேலைய பாக்க விடு. நீயி ஊடால நானு நானுன்னு போயி நின்ன பாத்துக்கிடு….” என்று எச்சரிக்க,
“பொறவு நா இங்கின எதுக்கான்டி வந்தேனாம்?…” என்று விழி முறைக்க,
“எனக்காவதேன். இல்லைம்பியா நீயி?…” என்று சிரிக்க,
“ஆசதேம். போயா…” என்று சிலிர்த்துக்கொண்டாள்.
இவர்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்த மயிலுக்கு பற்றிக்கொண்டு வந்தது. பார்வையிலேயே விழியை பஸ்பமாக்கத்தான் பார்த்தார்.
துளசி உணவுக்கு வர இதுதான் நேரம் என்று அவனிடம் யோகுவை அழைத்துவர சொல்ல,
“ம்மோவ், அவ அங்கன இருக்கட்டும். இங்கின இருந்தா ரொம்பத்தேன் பேசுவா. என்னிய கேக்காம இங்க வர வெச்ச நா இந்த வீட்டுப்பக்கமே வரமாட்டேன். பாத்துக்கிடு…” என எச்சரிக்க,
“ஏலே கோட்டியாம்லே? அவளே புள்ளத்தாச்சி. அத்தோட ஒங்கக்கா எத்தினிய பாப்பாலாம்? இங்கினதேம் நர்சு புள்ள வந்துருச்சுல. இங்கின வச்சு பாத்துகிடுவோம்…” என்று சொல்ல,
“இம்புட்டுத்தானா? அங்கன அக்கா வீட்டுக்கு ஒத்த நர்ச சொல்லிட்டா போவுது. நா மொதங்காட்டியே பேசிட்டேம். இன்னொருத்தர பாத்து சொல்லட்டும்னு இருந்தேம்…” என்றான் பூமிநாதன்.
மயிலுக்கு அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியவில்லை. விழி எதையும் கண்டுகொள்ளவில்லை.
அவள் வேலையை அவள் செய்துகொண்டு இருந்தாள். மயிலை சட்டை செய்யவே இல்லை. அப்படி ஒருத்தர் இருப்பதாகவும் நினைத்துக்கொள்ளவில்லை.
மயிலு யோகுவிடம் போனில் துளசி பேசிய விவரத்தை சொல்லவும் யோகுவே இதை எதிர்பார்க்கவில்லை.
இத்தனை முறை சண்டையில் ஒருமுறை கூட அவள் வீட்டிற்கு அவளை போ என்றும், தான் வரமுடியாதென்றும் சொல்லியதே இல்லை.
இப்போது இப்படி சொல்லியிருக்க அதற்கும் விழி தான் காரணம் என மாமியாரும், மருமக்களுமாக நினைத்தார்கள்.