“அதுக்கென்ன அரையாச்சும் முழுங்கு…” என ஒரு ரொட்டியை பாதியாக பிய்த்து தம்பியின் தட்டில் வைத்தவள் அவனுடன் பேசிக்கொண்டே அந்த மீதி ரொட்டியையும் சிறிது சிறிதாய் பிய்த்து அவனின் தட்டில் போட்டுவிட்டாள்.
“பாரும் ய்யா…” என துளசி தந்தையிடம் சிரிக்க,
“அவ மனசு தெரியாதாக்கும்? அவளுக்கு நீயும் அவனும் ஒன்னுதேன்…” என கூத்தபிரான் சொல்ல சாப்பிட்டு முடித்து எழுந்துவிட்டான் பூமிநாதன்.
“ம்க்கும், பெத்தவன்னு ஒருத்தி இருக்கேனே? ஒத்த வார்த்த இந்தாம்மா உண்குன்னு சொல்லுவியா நீ?…” என மகளிடம் குறைபட,
“ஏன் ஒன்னைய கவனிக்கத்தேன் ஒருத்திய கைக்குள்ளையே வச்சிருக்கியே? போதாதாக்கும். தொடுப்புக்கு நா வேறையாக்கும்…” என்ற செல்வி,
“இதுல இருக்குது. வச்சுக்க…” என சொல்லிவிட்டு பூமிநாதன் அருகே சென்று அமர்ந்தாள்.
“இங்காருங்க மதினி, அண்ணே பொண்டாட்டின்னு பாக்குதேன். இல்ல…”
“என்ன? என்ன பண்ணிப்புடுவ? நீ என்னன்னும் பாத்துக்க. நா என்தம்பி பொண்டாட்டின்னுலாம் பாக்கமாட்டேன். ஆஹ்…” என்ற வெடுக்கென்று பேசிவிட்டாள் செல்வி.
“நல்லா இருக்குடி நீ பெத்தவளுக்கு குடுக்கற மருவாத. அவ இப்ப என்னத்த கேட்டுட்டான்னு அவக்கிட்ட வரிஞ்சு கட்டிட்டு நிக்கித?…” என இன்னும் செல்வியிடமே வாயை கொடுக்க,
“வரிஞ்சு கட்டுதேனா? அது ஒன்னுதேன் ஒனக்கு கொறவோ?…” என உண்மைக்கும் சேலையை இழுத்து சொருகிக்கொண்டு வரிந்து கட்டி தான் நின்றாள் செல்வி.
“பொம்பளைங்க தான ரெண்டுபேரும். வாழவந்த புள்ளைட்ட வவுறெரிய தாலிய குடுன்னு கேக்குததுக்கு ஒனக்கு அவசியத்துக்கு மருவாத தரனுமா?…” என்று செல்வி சொல்லவும்,
“அதுக்குன்னு அந்த பிடாரிக்கு பின்னாடி எம்புள்ளைய திரிய சொல்லுதியோ? சிலுத்துக்கிட்டு போனவள அத்துவிடுததுதேன் செரி…” என மயில் கூறினார்.
“எடு வெளக்கமாத்த. ஒன்னிய சாத்துற சாத்துல புடிச்ச பீடை எல்லாம் ஒழிஞ்சு போவட்டும்…” என கூத்தபிரான் அடிக்க பாய்ந்துவிட்டார்.
“ஐயா, ஐயா. செத்த கம்மின்னு இருங்க…” என துளசி தந்தையை பிடித்து நிறுத்த,
“எதுக்கு ய்யா மூச்செரைக்க கத்துதீரும். நா என்னத்துக்கு இருக்கேன்? கம்மின்னு அந்தால ஒக்காரும்…” என ஒரு அதட்டு போட்டாள் செல்வி.
“என்ன பேச்சு பேசுதா பாரு தாயி…”
“அதேன் நா பாத்துகிடுதேன்னு சொன்னேமில்ல. பேச கூடாது சொல்லிப்புட்டேன்…” எனவும் அமைதியாக அமர்ந்துகொண்டாலும் ஒளிமயிலை முறைத்துக்கொண்டே தான் இருந்தார்.
“இங்காரும்மா இது அவன் பிரச்சன. அத்த அவன் பாத்துகிடுவான்…”
“என்னத்த பாத்தான்? ஏழு மாசமாச்சு, இன்னமும் அவ அங்க ஒக்காந்துக்கிட்டு ஆட்டி வைக்கிறா. அவ எவ எம்வீட்ட ஆட்ட? ஆவாத செருப்ப அறுத்து வீசத்தேன் செய்யனும்…”
“இத்த ஒம்மருமவன் எனக்கு செஞ்சா?…” என்று செல்வி கேட்டுவிட நெஞ்சில் கையை வைத்துவிட்டார் மயில்.
“ஆத்தே, நெறஞ்ச வீட்டுல என்ன வார்த்தடி பேசிட்ட? ஆத்தா மகமாயி…” என கண்ணீருடன் மயில் மகளை பார்க்க,
“சுருக்குன்னுதோ? போம்த்தா. ஒம்மவன்னா ஒனக்கு வெல்லம். ஊராம்ட்டு புள்ளன்னா வேப்பலையோ?…”
“இங்காரு அவளையும் ஒன்னியவும் சேத்து பேசாதடி…”
“யே பேசினா என்னவாம்? ஒச்சின்னமவன் புள்ளகுட்டிய பாக்கனும்னியாம். எம்மாமனாருக்கு, மாமியாளுக்கு இல்லையாக்கும் அந்த ஆச? என்னைய வச்சு எம்புருசேன் காலந்தள்ளாமவா இருக்காரு?…”என்ற செல்வி,
“எம்புட்டு ஆசையோட அந்த புள்ள இந்த வீட்டுக்கு வாழ வந்துச்சு. துள்ள துடிக்க அதுக்கிட்ட போய் அத்துவிட பேசியிருக்கியே? சரியா வாழ கூட இல்ல ரெண்டும். மனுஷியா நீ?…”
மகள் ஒவ்வொன்றாய் நறுக்கென்று கேட்க கேட்க கூத்தபிரானுக்கு மனநிம்மதி. தனக்கு பின் தன் மகன்களுக்கு அவள் இருக்கிறாள் என்ற நிறைவு.
“செல்வி, யாத்தா அவ சரிப்பட்டு வரமாட்டாடி. ஒந்தம்பி எம்புட்டு கெஞ்சிருப்பான்? எறங்குனாளா அவ? பெரிய சீமையில இல்லாதவளாட்டம் ஆட்டம் காமிக்குதா? அதுக்குன்னு எம்புள்ளை காத்துட்டு இருந்தே பட்டு போவனுமா?…”
“அதுக்கு நீ மொதவே ஓ வாய அடக்கி இருக்கனும். எம்புட்டு பேச்சு. உன் வாய் சவடாலு எனக்கு தெரியாதாக்கும்?…”
“ஏட்டி என்னவோ நா அவள வீட்ட விட்டு போவ சொன்னதாட்டம்ல. வீட்டுக்கு அடங்காம அவ…”
“எம்மோவ் போதும்…” என விருட்டென எழுந்துவிட்டான் பூமிநாதன்.
அவனின் சத்தத்தில் அத்தனைபேருக்கும் ஒரு நொடி திக்கென்று ஆனது. செல்வி தம்பியை கவலையுடன் பார்த்தாள்.
“இத்தோட ஓ வெளாட்ட நிப்பாட்டிக்க. அம்புட்டுத்தேன் சொல்லுவேன். திரும்ப எம்பொண்டாட்டிட்ட போயி சலம்பல குடுத்த…” பூமிநாதன் எச்சரிக்க,
“பாத்துகிடுங்கத்தே , பொண்டாட்டியாம். வேணாம்ன்னு போனவளுக்கு இவரு உருகல…” எள்ளலுடன் யோகலட்சுமி சொல்ல,
“என்ன கருமம்டா இது? அவதேன் ஒன்னைய இம்மிக்கும் மதிக்கமாட்டுறாளே? அவதேன் வேணும்னு நீ என்னத்துக்கு தேடி போயி தொன்னாந்துட்டு நிக்கித? கேலி கூத்தால இருக்குது. எனக்கு அவமானந்தேன்….” மயிலு மீண்டும் வாயை கொடுக்க,
“இப்ப என்ன நா தேடி போவுறதுதேன் ஒமக்கு அசிங்கமோ?…”
“ஆமாங்கறேன். அவ வேண்டாம்ன்னு சொன்னா கேளேன். தலைய முழுவிட்டு வேற ஒருத்திய பார்ப்பம்…”
“ஒமக்கு அசிங்கம்மான்னா அத்தோட நிப்பாட்டிக்க. இப்ப என்ன போக வர இருக்க கூடாதா?…”
“ஆமாங்கேன், யே எனக்கு என்ன அந்த உறுத்து இல்லையா? அவ வேணாம்ன்னா வேணாம்…”
“அப்ப திரும்ப நீ அவக்கிட்ட இத்த பேசுவ?…”
“ஆமா பேசுவேன். அவ வேணா…” என மயில் இன்னும் அடங்குவதாக இல்லை.
“அப்படி சொல்லுங்கத்தே…” என அருகில் நின்று யோகு மாமியாரை தீ மூட்டிவிட்டு கொண்டு இருந்தாள் யோகலட்சுமி.
“உனக்கு வேணாம்னா இருந்துக்க. ஆனா அவதேன் எனக்கு வேணும். திரும்ப இன்னொருவாட்டி இத்த பண்ணின மொத்தமா நா யே மாமியார் வீட்டோட போய் இருந்துக்குவேன்…” என்று பூமிநாதன் சொல்லவும்,
“யாத்தே…” என மயில் அதிர்ந்து பார்த்தார்.
“இதெல்லாம் ஒரு குடும்பத்து ஆம்பள பேசற பேச்சா?…” என யோகு சொல்லிவிட,
“துளசி. ஒ சம்சாரத்த வாய மூட சொல்லு. எவ்விஷயத்துல தலையிடறதா இருந்தா கூட்டிட்டு நீ தனியா போயிரு…” என சொல்லிவிட துளசி சரி என தலையசைக்க,
“நாங்க தனியா போயி? என்ன என்ன சொல்ல வாறீக? நா என்னத்துக்கு தனியா போவனும்? எவளோ ஒருத்திக்காவ….” என்றாள் யோகலட்சுமி கோபத்துடன்.
“என்னைய பேசினா, எம்பொண்டாட்டிய பேசினா சொல்லத்தேன் செய்யுவேன். அவ எவளோ ஒருத்தி இல்ல. இந்த வீட்டுக்கு நீங்க எப்படியோ அவளும் அத்தேன்…” என பூமிநாதன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
“பார்த்துக்கிடுங்கத்தே அவளையும் என்னையும் ஒத்த தட்டுல நிறுத்தறாக…” என மாமியாரிடம் தஞ்சம் புக,
“தப்புத்தேன்டி, ஒன்னையும் அந்த புள்ளையையும் ஒத்த தட்டுல நிப்பாட்டினா அது அந்த புள்ளைக்குத்தேன் அசிங்கம். இங்காரு, அவன் சொல்லுதானோ இல்லையோ? நானே ஒன்னைய கூட்டிட்டு தனியா போயிருவேன் பார்த்துக்க…” என துளசி மிரட்டலாய் சொல்ல,
“ஒங்க தம்பிய பாருங்க, விட்டுட்டு போன பொஞ்சாதிக்கு காவடி தூக்கறாரு. நீங்களும் இருக்கீங்களே?…” என சத்தமாய் அழ அதை கண்டுகொள்ளாத செல்வி,
“பூமி, நீ மேல போ. ஐயா, போய் உறங்குங்க. துளசி நீயும்ந்தேன். காலைக்கி காட்டுக்கு போவனும்ல. நாத்து நட்ட அன்னைக்கே அடிச்சு தொழிக்குது இந்த மழ…” என்றபடி செல்வி அவர்களை அனுப்பிவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல அனுப்பினாள்.
“ம்மை தூக்கு போனிய நாளைக்கு வாங்கிக்கறேன். உண்கிட்டு படுங்க. பேசின பேச்சுக்கு எதையாச்சும் வாயில போடுங்க. அப்பத்தேன் செத்த நேரம் அத்த மென்னுட்டு கெடப்பீங்க…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் செல்வி.
“பாத்தீங்களாத்தே…” யோகு பேசும் முன்,
“யோகு…” என உள்ளறையில் இருந்து அதட்டி மனைவியை அழைத்தான் துளசி.
“யாத்தே, இந்த மனுசென் கொரலே கொதவலையை சுண்டுது. வாரேம்த்தே…” என்று ஓடிவிட்டாள்.
மாடிக்கு சென்ற பூமிநாதன் சட்டையை கழற்றிவிட்டு மொட்டைமாடி பக்கத்திற்கான பின் கதவை திறந்து வைத்துவிட்டு படுத்துவிட்டான்.
மதியம் சித்திரைவிழி வந்து தந்துவிட்டு போன பொட்டலத்தின் ஞாபகம் வர வரும் பொழுது உடுத்தி இருந்த சட்டையை தேடி எடுத்து அதன் பையில் இருந்து வெளியே எடுத்தான்.
அது தாலிக்கொடி. ஆசை ஆசையாய் அவளுக்காக அவனின் சம்பாத்தியத்தில் அவன் வாங்கி அணிவித்தது.
அடகு கடையில் இருந்து அதனை மீட்டுவிட்டு நேராக தன்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்து சென்றவளின் தன்மானமும், சீற்றமும் நினைக்க அவன் மனதுக்கு கவலையாக இருந்தது.
அதேநேரம் அந்த தங்க சங்கிலியை முகத்தோடு அழுத்தியவனின் அதரங்கள் குளிர்ந்திருந்த நகையை சற்றி ரகசிய புன்னகையுடன் முத்தமிட்டு முத்தமிட்டு கொஞ்சியது.
அருகில் அவளில்லா வெறுமையை கூட அவன் அனுபவிக்கவில்லை. விழியும் இந்தநொடி தன்னை நினைத்தே விழித்திருப்பாள் என்பதில் திண்ணம்.
அந்த வீட்டின் உறங்கா இரவுகள் அவர்களுக்கொன்றும் புதிதில்லை. ஆனால் இருக்கும் இடமும், இப்போதைய சூழ்நிலையும் மட்டுமே வேறு.
ஒரு பெருமூச்சுடன் அதனை நெஞ்சில் வைத்தபடி சரிந்து உறங்க முயன்றான் பூமிநாதன்.