உயிர் தழுவும் விழியே – 2 (1)

உயிர் – 2

         மழையுடனே நடைந்துகொண்டே தனது வண்டியை கிளப்பிக்கொண்டு அவன் சென்றதை அக்கம்பக்கத்தின் வீடுகள் எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்.

மின்சாரம் வேறு வந்துவிட்டபடியால் எந்த மெனக்கெடலும் இன்றிய ஒரு பார்வை.

பூமிநாதன் இதனை கவனித்தாலும் பெரிதாய் அவன் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.

மனைவி மீது எத்தனை தான் கோபம் இருந்தாலும் அவளை இந்த இடத்திற்கு தள்ளியவர்கள் மீது தான் இன்னும் அதிகபட்ச ஆத்திரம்.

அந்த கோபத்தை தனது கைகளில் காண்பிக்க சாலையின் மழைநீரில் வழுக்கிகொண்டு சென்றது அவன் வாகனம்.

கொஞ்சம் பிசகினாலும் விபத்து உறுதி என்னும் அளவிற்கு தனது ஒட்டுமொத்த ஆவேசத்தையும் அதில் தான் காண்பித்து சென்றான்.

பெரிய வீட்டின் கம்பி கேட்டை பைக்காலேயே உதைத்து உள்ளே சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க தாழ்வாரத்தின் முன்னிலையில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் அச்சத்துடன் எழுந்து நின்றார்கள்.

“பூமி…” கூத்தபிரானின் அழைப்பில் நனைந்த உடையுடன் நின்றவன்,

“ஐயா, போய் துணி மாத்திட்டு வாரேன்…” என இறுக்கமாய் மொழிந்துவிட்டு சென்றுவிட்டான்.

“அந்த கெரகம்புடிச்சவள என்னைக்கு கெட்டி வச்சேனோ அன்னையிலருந்து எம்மவன் எம்மூஞ்சி பாத்து கூட பதில் பேச மாட்டேங்கிறான்…” என மூக்கை சீந்தினார் ஒளிமயில்.

“யே இந்தாடி வந்தேன் தாவாங்கட்டையிலையே மிதிச்சு தள்ளிருவேன். வாய மூடிரு பார்த்துக்கிடு….” என எகிறிக்கொண்டு கூத்தபிரான் செல்ல,

“ஐயா…” என பிடித்துவிட்டான் துளசி.

“அம்மைய கூட்டிட்டு உள்ள போயேன்டி…” என தன் மனைவி யோகலட்சுமியை பார்த்து கடுமையாக சொல்ல,

“ம்க்கும், அம்புட்டு எகிறலும் எங்கட்டத்தேன். அங்க ஒன்னுத்துக்குமில்ல…” துளசியின் காதில் விழுந்துவிடாதவாறு தன் மாமியாரிடம் முணங்கியவள்,

“வாங்கத்தே. இந்த வீட்டுல நல்லது சொன்னாலும் பொல்லாப்பு…” என சொல்லி உள்ளே போக,

“ஏய்…” என்று முறைத்தான் துளசி.

“நாங்க ஏதோ ஆத்தமாட்டாம…” என்றுவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

“பேசாம போறியா…” என இன்னும் கூத்தபிரான் சத்தம் போட கப்பென்று பேச்சை நிறுத்தி உள்ளே சென்றார்கள் இருவரும்.

“இதுங்களை திருத்தவே முடியாதாடா?…” என பொருமி போனார் கூத்தபிரான்.

“கெடக்கட்டும் விடுங்க ய்யா. மேயிற மாட்ட நக்குற மாடு கெடுக்கற மாதிரித்தேன். எல்லாம் இந்த அம்மை சோலி. அத்த அடக்கினா இவளும் கம்மின்னு கெடப்பா…”   

தந்தையும் மகனுமாக பேசிக்கொண்டே உள்ளே சென்றார்கள். மழை இன்னும் விட்டபாடில்லை.

பூமிநாதனுக்காக குடும்பமே காத்திருக்க அவன் வந்துவிட்டான் என துளசி அனுப்பிய செய்தியில் செல்வியும் குடையை பிடித்துகொண்டு வந்து சேர்ந்தாள் அங்கே.

மேலே மொட்டை மாடியை ஒட்டிய தனதறையில் ஒரு குளியலையும் போட்டுவிட்டு உடை மாற்றி கீழே வந்தான்.

அவன் வரவும் செல்வி உள்ளே வரவும் மகளை அப்படி முறைத்து பார்த்தார் ஒளிமயில்.

“ஏம்லே இந்த அடமழையில வண்டில ஆத்து வெள்ளமாட்டம் சீறிக்கிட்டு போனியாம். மாமா சொல்லிவிட்டாரு ஒந்தம்பிய சூதானமா போய் வர சொல்லுன்னு…” என செல்வி முறைப்புடன் சொல்ல,

“செரிக்கா பாத்துக்கிடுதேன்…” என்றான் அவளிடம்.

“எதாச்சும் வவுத்துல போட்டியா?…” என அவள் கேட்க,

“இன்னுமில்ல. இப்பத்தேன் வீடு நொழைஞ்சேன்…” என்றவனை கையை பிடித்து உட்கார வைத்தவள்,

“நல்லதா போச்சு. ரவைக்கு கேவராகு(கேழ்வரகு) ரொட்டியும், கார தொகையலும் செஞ்சேன். சுட சுட இருக்கு. போடட்டா…”  என்று செல்வி கேட்க கீழே பூமியின் அருகே வந்து அமர்ந்தான் துளசி.

“எல்லா ஒ சின்ன தம்பிக்குத்தானாக்கும்? எனக்கில்லையோ?…” என்றதும் அவனின் தலையில் கொட்டியவள்,

“செரியான ஆகாமட்டைடா நீ. கொண்டு வந்தவ ஒருத்தனுக்கா கொண்டாருவேன்? போய் தட்டை எடுத்தாரேன்….” என்றவள் வெளியே திண்ணையில் வைத்துவிட்டு வந்த கூடையை உள்ளே கொண்டுவர போக,

“நீ போய் தட்டு கொண்டா. நான் போய் தூக்கிட்டு வாரேன்…” என துளசி எழுந்து சென்றான்.

“இந்தா செல்வி, நில்லு…” என ஒளிமயில் நிறுத்த,

“ஒனக்குந்தேன் கொண்டாந்தேன்…” என்று சொல்லி செல்ல,

“இந்தா நில்லு, இது என்ன வீடா? இல்ல வேறென்னமுமா?…” என பல்லை  கடித்துகொண்டு மகளின் கையை பிடித்தார்.

“யே ஒனக்கு தெரியாதாக்கும்?…” என சொல்லி கையை உதறிவிட்டு அலட்சியமாக உள்ளே செல்ல,

“பாத்தீகளாத்தே ஒங்க மவ வவுசை. ஒங்க வீட்டுல இருந்துட்டே நாட்டமத்தனம் பன்றத…” என யோகலட்சுமி சொல்ல,

“காதுல விழுவத்தேன் செய்யுது. எங்க எங்கம்மாவ எங்கிட்ட ஒத்தவார்த்த எவ்வீடுன்னு சொல்ல சொல்லு…” என வந்து நின்றாள் செல்வி.

“இப்ப என்னத்துக்கு என்னைய முறைக்குதவ? அத்தே மனசு எம்புட்டு வெசனப்படுது…”

“அப்ப ஓரமா நின்னு அவுகளுக்கு தொட்டி கட்டி ஆட்டி ஒம்பாட்ட அங்க பாடு…” என சொல்லிவிட்டு தனது தம்பிகளுக்கும், தந்தைக்கும் பரிமாற சென்றாள் செல்வி.

“ஏன்டி இம்சைய கூட்டுதவ? இங்க ஆக்கி வச்ச அம்புட்டையும் அள்ளி குளுதாடில ஊத்தவா?…” ஒளிமயில் கோபமாய் மகளை கேட்க,

“அது ஒம்ம சவுரியம். வீடான வீட்டுல கஞ்சி காச்சினா மட்டும் போதுமாக்கும்? மனுச மக்கள ஒத்த வாயி நிம்மதியா உங்க விடனும். மாமியாரும், மருமவளும் செய்யித சோலிக்கு தொண்டைல பச்சத்தண்ணி எறங்குமா?…”

செல்வியின் பேச்சில் அத்தனை காரம். மேலும் பேசினால் செல்வியின் வாயும் நிற்காது.

பூமிநாதனின் கோபமும் இன்னும் கூடும் என மருமகளின் கையை பிடித்து தட்டிவிட்டவர் வாயை மூடிக்கொண்டார்.

ஆனாலும் மகளின் இந்த பாராபட்சமான பாசத்தில் மனதிற்குள் ஏக்கமும், கோபமும் சரிபங்கு இருந்தது.

இவர்களை பற்றி எல்லாம் கவலையே இன்றி செல்வி தம்பிகளை பார்த்து பார்த்து கவனித்தாள்.

கூத்தபிரானின் கண்களுக்கு தன் மகளே தன்னை பெறாத தாயாக தோன்றினாள். எப்போதும் தோன்றும் எண்ணம் தான், இன்று மகன்களுக்குமே அவள் தானே தாயாய் பார்த்துக்கொள்கிறாள்.

நெக்குருகி போய் கண்கள் பாசத்தில் கலங்க அதனை காட்டிக்கொள்ளாமல் பிள்ளைகளை ஏறிட்டார் அவர்.

“ஐயா, இன்னொரு ரொட்டி வைக்கட்டா?…” என செல்வி கேட்க,

“போதும்த்தா. எம்மாடி வவுறும் மனசும் நெம்பிருச்சு…” என்று சொல்லி தட்டில் கையை கழுவிவிட்டு மகன்கள் சாப்பிடட்டும் கூடவே என அமர்ந்திருந்தார் அவர்களுடனே.

கூத்தபிரானும், துளசியும் சாப்பிட்டாலும் பூமிநாதன் ஒழுங்காய் உண்ணுகிறானா என்று பார்த்துக்கொண்டே இருக்க செல்வியின் கவனிப்பில் ஒழுங்காகவே உண்டுவிட்டான்.

மூவருக்கும் மனது கலங்கி போய் இருந்தது பூமிநாதனை எண்ணி. எத்தனை துடித்திருப்பான்.

நிச்சயம் இன்று அவனின் மனம் ஒரு நிலையில் இருந்திருக்காது என்று தெரியும்.

“இன்னொரு ரொட்டியை வச்சுக்கடா…” என செல்வி அடுத்ததை வைக்க,

“போதும்க்கா, முழுசா சாப்ட முடியாது. வீணாயிரும்…”

error: Content is protected !!