“அத்த இம்புட்டு சாவகாசமாவா சொல்லுவ?…” என்று மயில் யோகுவுடன் கிளம்பி சென்றார் வேகமாய்.
மகன் அங்கே வரும்பொழுது தானும் முதலிலேயே இருப்போம் என்று நினைத்து சென்றுவிட ஒருவரும் அவரை என்னவென்று கேட்கவில்லை.
அத்தனை வெறுப்புடன் தான் பார்த்தார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சட்டமாய் சென்று அமர்ந்துகொண்டார்.
இங்கே விழியை அடைத்து வைத்திருந்த கதவை வெளி தாழ்பாளை நீக்கி பார்த்த பூமிக்கு உலகமே சுழன்றது.
மயங்கி கிடந்தவளை சுற்றி படர்ந்திருந்த உதிரத்தை பார்த்ததும் இருட்டிக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு.
“ஏலே பூமி…” செல்வி கதறிவிட்டாள் விழியின் அந்த நிலையை கண்டு.
“ஒத்த வார்த்த சொல்லிருந்தா கூட்டிட்டு போயிருப்போம்லவே. யே இப்படி செஞ்சலே. ஐயோ புள்ள…” என்று விழியை மடியில் தூக்கி வைத்து அழ விழியின் கை இன்னும் வயிற்றை இறுக்கி பிடித்திருந்தது.
“செல்வி, புள்ள மொத இத்த மாத்திவிடு. நாம ஆசுபத்திரிக்கி போவோம்…” என்று வீரபாண்டி சொல்ல உடனடியாக விழிக்கு அந்த புடவையை மாற்றி ஒரு போர்வையை சுற்றிக்கொண்டு பூமியை தூக்க செய்தவள் அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
உடனடியாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு பூமி அங்கேயே செல்வியுடன் இருக்க வீரபாண்டி சிந்தாவின் வீட்டிற்கு வந்துவிட்டான் அனைத்தையும் கவனிக்க.
வேந்தனும் வந்துவிட, விழியின் வரவிற்காக ராசப்பனின் உடலை பெட்டியில் வைத்திருந்தார்கள்.
அதிர்ச்சியிலும், உடல் நிலையிலும் அதிகாலை வரை விழிக்கவில்லை விழி. கேட்பவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியில் மயக்கம் என்று சொல்லியிருந்தார்கள்.
விஷயம் யாருக்கும் தெரியாமலேயே போகட்டும் என்று சொல்லிவிட்டான் பூமிநாதன்.
தெரிந்து இன்னும் அது வேதனை தான். இனி சொல்லி என்னாக போகிறதென வெறுத்துவிட்டான்.
முடிந்தது எல்லாம் முடிந்தது. காலை அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வர சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு எல்லாமே முடிந்தது.
இதோ பதினாறாம் நாள் விசேஷமும் முடிய மீண்டும் கடனை கேட்பதற்குள் அத்தனையும் முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் விழி.
மீண்டும் புதிதாய் பிறப்பெடுத்திருந்தாள். மனது இறுகி போனது. எல்லாம் தொலைத்தது போல அழுகை கூட வறண்டுவிட்டது.
தாயையும் தம்பியையும் தேற்றவேண்டிய கட்டாயம். இனி யாரின் தயவும் தேவையில்லை என்று வீறுகொண்டு எழுந்திருந்தாள்.
விசேஷம் முடிந்த மறுநாள் தானாய் பூமியின் வீட்டிற்கு கிளம்ப அங்கே மயில் அவளை பார்த்ததும் ஒரு இளக்காரத்துடன் பேசினார்.
யாரிடமும் எதுவும் பேசவில்லை. பூமிநாதனிடம் தனது நகைகள் எல்லாம் வேண்டும் என்று கேட்டாள்.
“பணத்த ஏற்பாடு செஞ்சிட்டேன்டி. நக என்னத்துக்கு?…” என்றவனை சட்டை செய்யவே இல்லை.
வேகமாய் மேலே சென்றவள் தன்னுடமைகளை சிலவும், நகைகளையும் எல்லாம் எடுத்துக்கொண்டு கீழே வர,
“இந்தாடி நீயி போனேம்ன்னா எம்புள்ள கட்டின தாலிய கழட்டி தாடி. பொறவு இந்த வீட்டுப்பக்கமே நீயி வரக்கூடாது ஆமா…” என்று மிரட்ட,
“முடியாதுங்கேன். என்ன செய்யிவ?…” என்றாள் நேராய் திரும்பி.
“என்ன? என்ன செய்யிவையா?…” என்று அருகே நெருங்கிய மயிலை தன் மேல் கை வைக்கும் முன் பிடித்து ஒரே தள்ளாக கீழே தள்ளினாள்.
“ஏட்டி…” என மயில் எழுந்து வரும்முன்,
“ஏத்தா, சாமி நில்லுமய்யா. ஐயா சொல்லுதேம்ல. பணத்த நாங்க கெட்டுதொம்ய்யா. என்னத்துக்கு இம்புட்டு அவரசங்கேன்…” என்று கூத்தபிரான் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருக்க,
“வேணாம்ய்யா. நாங்க பாத்துகிடுதோம்…”
“எம்புள்ள சாமி நீயி. ஒனக்கு செய்யமாட்டேனாத்தா?…” என்று கூத்தபிரான் பேச,
“அதான பாத்தேம். என்னய்யா எம்புருசெம் துள்ளுதேகன்னு. இவ எம்புள்ளைய வளச்சா. இப்ப இவ அப்பெனும் இல்ல. இவ ஆத்தா ஒம்ம…” என மயில் சொல்லி விழியின் தோளை பற்ற ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டாள்.
“யே அம்மைய பேசின ஒ நாக்க வெட்டிருவேன் பாத்துகிடு. நீயெல்லா ஒரு பொம்பள. த்தூ…” என்று முகத்திலேயே காறி உமிழ்ந்துவிட்டு,
“ஒங்க சங்காத்தமே வேணாங்கறேன்…” என சொல்லி வெளியேறிவிட்டாள்.
கூத்தபிரான் அப்படியே உணர்வற்று அமர்ந்துவிட்டார் மயிலின் பேச்சில். தாழ்வாரத்தில் வைத்து இத்தனையும் நடந்திருக்க அத்தனைபேரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அன்றிலிருந்து பிள்ளைகள், கூத்தபிரான் என்று தனியே ஒதுங்கிக்கொள்ள மயிலும், யோகுவும் தனித்து விடப்பட்டனர்.
மயில் பேச்சிற்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. ஏற்கனவே ராசப்பன் இறந்த மறுநாள் செல்வியும், கூத்தபிரானும் அத்தனை பேச கூத்தபிரான் அடி வெழுத்திருக்க மீண்டும் தற்கொலை நாடகத்தை கையிலெடுத்தார் மயில்.
“இந்தா சீமெண்ணைய இவ மேலையும் ஊத்தி சேந்து போவத்தான…” என்று யோகுவை பிடித்து துளசி தள்ளிவிட்டான் மயிலோடு.
குடும்பத்தினரின் ஒட்டுமொட்டாத்த வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு மயிலும், யோகுவும் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருந்தார்கள்.
நகைகளை வீரபாண்டியின் துணை இருந்தாலும் தானும் சேர்ந்தே சென்று பார்த்து விற்று பணத்தை வாங்கிக்கொண்டாள்.
இருந்த கடனிற்கு வீட்டை தவிர அத்தனையும் மூழ்கி போயிருந்தது. கடைசியாக பூமிநாதன் அவளுக்கென வாங்கி போட்டிருந்த தாலிக்கொடியை மட்டும் அடகுக்கு வைத்தாள்.
மீட்டு அவனிடமே திருப்பி தந்துவிட வேண்டும் என்ற நோக்கில் அடுத்த வாழ்வாதாரமாக முழுநேர தொழிலாக தைப்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.
ஊரினர் யாரிடமும் நெருங்கவில்லை அதன்பின்னர். வேடிக்கை பார்த்ததோடில்லாமல், அவர்களும் சேர்ந்து கழுத்தை பிடிக்கத்தானே செய்தார்கள் என்ற ஆதங்கம் மனதை விட்டு அகலவே இல்லை.
வாழும் ஆசை அற்றது. எல்லாம் முடிந்துவிட மனதில் மிச்சமிருந்தது கொண்டவனின் நேசம் மட்டுமே.
அத்தனையும் அற்று எரிந்தவளால் அவனை விட்டு மட்டும் இருக்கமுடியாது போக அவனிடமுமே பாராமுகத்தையும், வெறுப்பையும் காட்ட ஆரம்பித்தாள்.
எதையும் ஏற்றான். அவளின் பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாங்கி அவளுக்கென்று நிற்கத்தான் செய்தான்.
இபோதுவரை நின்றுகொண்டு தான் இருக்கிறான். நினைக்க நினைக்க ஆறாத ரணம் தான்.
அத்தனையும் மீறி அவள் வந்திருப்பது அவனுக்காக மட்டுமன்று கூத்தபிரானுக்காகவும் தான்.
இதோ இப்போதும் அந்நிகழ்வுகளை மறக்க முடியாமல் இதோ இன்று தன் மடியில் சுருண்டு படுத்திருக்கும் மனைவியை தேற்ற முடியாமல் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான் பூமிநாதன்.
நள்ளிரவு வரை இருவரும் அப்படியே தான் இருந்தார்கள். கடக்க நினைத்த நினைவுகள் எல்லாம் பாரமாய் நெஞ்சை அழுத்த கண்ணை மூடியபடி அதனை ஜீரணிக்க முயன்றனர்.