அதன்பின்னர் தான் இன்னும் பூதாகாரமாக ஒவ்வொன்றாய் கிளம்பியது விஷயங்கள்.
எங்கிருந்து ஆரம்பித்ததென்று ஒவ்வொன்றாய் கேட்க சிறுக சிறுக இருந்தது பெரிதாகியது விழியின் திருமணத்திலும், சடையப்பன் பணம் வாங்கியதிலும் என்றது புலப்பட சிந்தாவும் விழியும் விக்கித்து அமர்ந்திருந்தார்கள்.
தலைசுற்றியது அந்த தொகையில். என்ன செய்ய என்று மாறிமாறி யோசித்துக்கொண்டு இருக்க பூமிக்கு விழி அமர்ந்திருந்த நிலையை பார்க்கவே வருத்தமாக இருந்தது.
“வெசனப்படாதத்தா, நாங்கல்லா இருக்கோமில்ல. பாத்துக்கிடுவோம். மொத அவருக்கு தெகிரியத்த சொல்லும்….” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் கூத்தபிரான்.
விழியிடம் அங்கே இருந்து பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு பூமிநாதனும் கிளம்ப சிந்தாவும், விழியும் கேட்பதற்கு எதற்கும் பதில் சொல்லமுடியாமல் அழுதுகொண்டே தான் இருந்தார் ராசாப்பன்.
இங்கே பூமியின் வீட்டில் பெரும் கலவரமே நடந்தது. நடந்ததன் விவரங்கள் அறிந்தபொழுதே அத்தனை ஆடினார் நீங்கள் ஏன் பொறுப்பேற்று வந்தீர்கள் என்று.
வீரபாண்டி வந்து விவரங்களை இங்கே கேட்க முழு நிலமையும் தெரிய அவன் கிளம்பியதும் ஆட்டமாய் ஆடிவிட்டார் மயில்.
இனி விழி அங்கே வரவே கூடாதென்று அத்தனை ஆர்ப்பாட்டம். கொஞ்சமும் இரக்கமின்றி பேச்சுக்கள் எல்லையை கடக்க கூத்தபிரான் அடித்தும் பார்த்துவிட்டார்.
இரண்டுநாட்கள் கழித்து வீட்டின் நிலைமை சுமூகமாக விழி வருகிறேன் என்ற போதும் பூமிநாதன் வந்து தன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தான்.
“இவள என்னத்துக்கு இங்க கூட்டியாந்த மொத?…” என்று வீடே அதிரும்படி இரைந்த மயில்,
“வெளில போடி மொத. வெறும்பய மவன்னு தெரியாம வெளிவவுசுக்கு மயங்கிட்டேனே? நீயி காலடி வச்ச நேரம் வெளங்குமா?…” என்று விழியை அத்தனை பேச,
“இங்காருங்கத்தே, இந்த கடனையெல்லா எங்கய்யன் மொத்தமா அடப்பாரு. சும்மா வாய்க்கு வந்ததாட்டம் பேசாதீக அம்புட்டுத்தேன்…” என்று விழியும் பதிலுக்கு பொறுக்காமல் பேசிவிட வீடே கலவரமானது.
“விழி, நா பாத்துகிடுதேம்ன்னு சொன்னேம்ல. கம்மின்னு இரு…” என்று பூமி அவளை முதலில் அமைதிப்படுத்த முயன்றான்.
“என்ன, நீயி பாப்பியா? இங்காருங்க, இந்த வீட்டு காசு ஒத்த ரூவா கூட அங்கிட்டு போவக்கூடாது. ஆமா…” என்று சொல்ல,
“பூமி, ஐயா விடுய்யா. அவ கெடக்கா. நாம ஆவறத பாப்போம்…” கூத்தபிரான் சொல்ல மயிலுக்கு தலைக்கேறியது ஆத்திரம்.
“என்னிய அம்புட்டுக்கு எளசா நெனப்பீகளோ?…” என்று சொல்லியவர் விறுவிறுவென்று சென்று அடுப்பெரிக்க வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துவிட்டார்.
விழி ஸ்தம்பித்து நிற்க ஆண்கள் மூவரும் தண்ணீரை ஊற்றி நொடிப்பொழுதில் அணைத்துவிட இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“கிறுக்காடி ஒனக்கு? யேம்டி கொலையா கொல்லுத. அந்த புள்ள மொவத்த பாரு. எம்புட்டு வெம்பிக்கெடக்கு? எரக்கம் வேண்டாமா பொம்பளைக்கி?…” என்று சொல்ல மயில் இன்னும் அதே வறட்டு பிடிவாதத்துடன் தான் இருந்தார்.
“இங்காரும், எம்புள்ளைக்காவ இவள வேணா இங்கின விட்டுடுதேன். இருந்துட்டு போவட்டும். ஆனா அந்த வீட்டோட ஒட்டு உறவுன்னு இருக்க கூடாது. ஒத்த பைசா போவ கூடாது. அம்புட்டுதேன்…” என்றவர்,
“இன்னிக்கு நீக காப்பாத்துனீக. என்கண்ண மறச்சி அங்கன எதாச்சும் போச்சின்னு தெரிஞ்சாங்காட்டி இவ அப்பேன் வீட்டு முன்னாலையே கொளுத்திக்கிவேன். ஆமா…” என்று மிரட்ட அத்தனைபேரும் அரண்டு நிற்க விழிக்கு மொத்த சக்தியும் வடிந்துவிட்ட நிலை.
அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் மாடிக்கு சென்றுவிட்டாள். இனி எப்படி எங்கே என்று செய்வது என யோசனைகள் ஓட கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல மிரண்டுபோய் இருந்தாள்.
சற்றுநேரத்தில் பூமிநாதன் மேல வர துவண்டு போய் அமர்ந்திருந்தவளை பார்த்து அவளருகே அமர்ந்தான்.
“பயந்துட்டியா விழி?…” என்று கேட்க வேறென்ன ஆறுதல் அவளுக்கு இருக்கிறது.
அடக்கிவைத்த அழுகையை அவன் தோள்சாய்ந்து கொட்டி தீர்க்க ஆறுதலாய் அவளை வருடினான்.
“ஒண்ணுமில்லடி. நாந்தேன் இருக்கேமில்ல…”
“இல்ல, இல்ல. வேணா, வேற பாப்பம்…” என்றாள் கண்ணை துடைத்துக்கொண்டு.
“செவிலக்கட்டி விட்டேனா பாரு. நாந்தேன் சொல்லுதேம்ல. கம்மின்னு இருக்கனும்…” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
“என்ன செய்வீக மாமா?…” அவள் இன்னும் தெளியவே இல்லை.
“நாள மறுநா அக்காவ கூட்டிட்டு சென்னைக்கு போறேம்ல. அங்க ஒருத்தரா பாக்கனும்னு முடிவு பண்ணிருக்கே. பாப்பம். கெடச்சா சவுரியந்தேன். இல்லாங்காட்டி வேறதேன் பாக்கனும்…” மனைவியின் சஞ்சலத்தில்,
“இல்லாங்காட்டியும் வேற ஏற்பாட்ட பண்ணுவோம்டி. அம்மைக்கு அம்புடாம நா பாத்துக்கிடுதேம்…” தலையசைத்தவள்,
“அய்யன் வீட்டுக்கு….”
“இப்பதக்கி வேணாம்டி. இத்த முடிப்போம். அதுவரைக்கி இங்கின இரு. எல்லாஞ்சரியாவவும் போவத்தான. ஒரு ஒருவாரத்துக்காச்சும்…” என்றதும் இன்னும் அவனையே பார்த்திருக்க,
“என்னிய நம்புதேல. கேளுடி…” என்றவனின் கையை பிடித்துக்கொண்டு மடியில் சாய்ந்துவிட்டாள்.
“மாமா…”
“ம்ம்ம்ம்…”
“நேத்திக்கே ஒன்ன சொல்லனும்னு நெனச்செம்…”
“இப்ப சொல்லு, இங்கினதென் இருக்கேன்?…” என்றான் அவளின் தலையை வருடிக்கொண்டே.
“ஒங்கைய கொண்டா…” என்று தலையை வருடிக்கொண்டிருந்ததை எடுத்து வயிற்றில் வைத்தாள்.
“நோவா விழி?…” என்று கேட்க எழுந்தமர்ந்தவள் அவனையே அர்த்தமுடன் பார்க்க,
“விழி?…” என்றான் சந்தோஷமாய்.
“வா மொத அய்யன்ட்ட சொல்லுவோம்…” என்று அழைக்க அவனை எழவிடாமல் பிடித்து நிறுத்தினாள்.
“இன்னுங்காட்டி பத்துநா செல்லட்டும் மாமா. உறுதியாட்டம் தெரிஞ்சதும் சொல்லுவோம். இருக்கற நெலமையில இப்ப சொன்னா. வேணாம்ய்யா…”
“ஒனக்கு நெசமா தெரியுதா விழி?…” பூமியின் அணைப்பில் இருந்தவள் தலையசைத்து,
“சத்தியங்காட்டி…” என்று அவனின் அணைப்பை வயிற்றோடு பதித்து அவள் சொல்ல அவளின் முகமெங்கும் தன் மகிழ்ச்சியை அச்சாரமாக பதித்தான்.
“யோவ் போதுமய்யா சொக்கா…” என்று அவளின் இருந்து விலக,
“வாயேன், மொத ஆசுபத்திரிக்கி போவம்…”
“யோவ் இப்பத்தான சொன்னேம். இதெல்லாம் முடிஞ்சாகாட்டி சொல்லுவோம்ய்யா. அப்பத்தா அம்புட்டுபேத்துக்கும் நெறவா இருக்கும்…” என்று அவனையும் தடுத்துவிட பூமிக்கு மனதே கேட்கவில்லை.
இந்த நேரத்தில் எத்தனை சந்தோஷமாக இருக்க வேண்டும். இப்படி வதைக்கிறதே சூழ்நிலை என்று வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
விழிக்கோ இப்போதே இத்தனை பேசுகிறவர் தன் குழந்தை தரித்த நேரத்தையும் சொல்லி ஏதேனும் பேசினால் என்று பிரச்சனை சுமூகமாகட்டும் என மௌனமாகி போனாள் அந்த விஷயத்தில்.
அதுவும் தங்கள் குடும்பத்திற்கே முதல் வாரிசு. செல்விக்கும் கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் இருக்க குழந்தை உருவாவதில் பிரச்சனை என்றுவிட்டார்கள் மருத்துவர்கள்.
அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இரக்க துளசிக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. எதுவும் இல்லை.
இப்போது முதல் வாரிசு, எப்படியெல்லாம் அதனை கொண்டாடியிருக்க வேண்டும்.
முடியவில்லையே, எதற்கும் குடுப்பினை வேண்டுமோ என்று கலங்கிக்கொண்டு இருந்தான்.
அந்த கலக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில் தான் அதற்கடுத்த விபரீதத்தை சூழ்நிலை கையிலெடுத்துக்கொண்டது.
இரண்டு நாளில் சென்னைக்கு கிளம்ப விழியிடம் அத்தனை பத்திரங்கள் சொன்னான்.
இரவு சென்று மறுநாள் மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு அன்றிரவே கிளம்பி வந்துவிடுவதாக சொல்லியிருக்க மனமின்றி தான் அனுப்பி வைத்தாள்.
செல்லும் பொழுதே சொல்லியே தான் கிளம்பினான் தாயிடம். விழியிடம் எதுவும் வைத்துக்கொள்ள கூடாதென்று.
செல்வி, வீரபாண்டி, பூமிநாதன் மூவரும் கிளம்பி இருக்க அதன் மறுநாள் வரை எந்த பிரச்சனையும் இல்லை.
விழியை பேசாமல் ஒன்றும் மயில் இல்லவே இல்லை. பேசத்தான் செய்தார். உணவுண்ணும் பொழுது ஏக பேச்சுக்கள்.
குழந்தைக்கு என்று உணவையும் உண்டு அத்தனையும் தாங்கிக்கொண்டு கணவனுக்காக பொறுமையுடன் தான் இருந்தாள்.
என்னவோ குடும்பமாக தங்களை ஏமாற்றியதை போல மயில் யோகுவுடன் அங்கலாய்க்க முடிந்தளவிற்கு மாடியிலேயே தான் இருந்துகொண்டாள் விழி.
அன்று காலையே வந்திறங்கியிருக்க வேண்டியவர்கள் கிளம்பியதே அதிகாலையில் தான்.
அதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க அன்று ஒரு கேதம் என்று கூத்தபிரான் துளசியுடன் சென்றிருக்க வீட்டில் பெண்கள் மட்டுமே.
காலை வழக்கம் போல வேலைகளை முடித்துக்கொண்டு விழி மாடிக்கு செல்ல போக அதற்குள் தகவல் வந்துவிட்டது மயிலுக்கு.
ராசப்பன் நிலத்தை வேறிடத்தில் விற்க ஏற்பாடு செய்ததை அறிந்து கடனை கொடுத்த இருவர் வீட்டிற்கே வந்து நிற்க, பதறி போய் விழிக்கு அழைத்தார் சிந்தா.