உயிர் தழுவும் விழியே – 18 (1)

உயிர் – 18

          காலை உணவு அப்போதுதான் வீட்டினர் உண்டுகொண்டிருக்க மயிலும், விழியும் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள்.

கூத்தபிரான் பேசிக்கொண்டிருக்க பூமிநாதனும், துளசியும் சத்தமின்றி என்னவோ பதிலை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பெண்களின் காதில் எதுவும் விழவில்லை. மயில் கூட இரண்டு மூன்று நாட்களாகவே வீட்டு ஆண்கள் தனியே ரகசியம் பேச என்ன முயன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை.

“என்னத்தத்தேன் பேசுவாகளோ? ஒத்த வார்த்த அம்புட்டுதா எங்காதுக்கு. செவிடாக்கி போடுவாக…” என்று முணுமுணுக்க,

“எல்லா நேரந்தேம் த்தே. நம்மக்கிட்டலா சொல்லுவாகளா? சொல்லுதவகட்டதேன் ஒப்படப்பாவ. புதுமாறு நல்லாத்தேன் கூட்டும்….” என யோகு ஒத்துப்பாட, விழிக்குமே தெரிந்திருக்கவில்லை.

ஆனால் யோகு பேச்சில் விழிக்கு தெரிந்திருக்கும் என்பதை போலத்தான் மயிலுக்கு உணர்த்தப்பட்டது.

மயில் விழியை கேள்வியாய் பார்க்க அவளுக்கு யோகுவின் பேச்சின் அர்த்தம் புரியாமலா இருக்கும்?

தானாக சென்று, ‘என்னை சொன்னாயா?’ என கேட்கவேண்டுமா என அமைதியாக இருந்துகொண்டாள்.

வந்த புதிதில் இருந்தே யோகுவிற்கு தன்னை பிடிக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.

நேரடியாக கேட்கும் கேள்விகளுக்கு விழியின் பதில் ஓரளவு பொறுமையுடன் தான் இருக்கும்.

மயிலுமே நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் விழியை. சிலநேரங்களில் வெடுக்கேன்றும் பேசிவிடுவார்.

“யே ஒனக்கு ஓரகத்தி தான? இந்த வீட்டுக்கு மொத வாக்கப்பட்டு வந்தவ. ஒத்த சொல்லு பொறுக்காதோ?…” என்று சொல்லிவிடுவார் உடனே.

இத்தனைக்கும் விழி சண்டையிட்டிருக்காமலே. எதற்கு என்று அவள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்துவிடுவாள்.

இப்போதும் மாமியாரின் துளைக்கும் பார்வையில் உள்ளூற எரிச்சலானவள் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை முகத்தில்.

கடந்த நான்குநாட்களாகவே சடையப்பனின் தலைமறைவில் இருந்தே அவரின் பார்வையும், பேச்சும் சரியில்லாததை போலவே இருந்தது.

இப்படியா ஒரு மனிதர் ஏமாளியாக இருப்பார் என்று ராசப்பனையும், தங்களையும் சாடைமாடையாக கீழாக பேசிக்கொண்டு தான் இருந்தார்.

ஏற்கனவே அந்த தவிப்பில் பயத்தில் இருந்தாள். பெரிய தொகை. எங்கே என்று சமாளிப்பது.

பணத்தை வாங்கிக்கொண்டு ஓடியவனை எங்கென்று பிடிக்க என கவலையில் இருக்க இங்கே நடப்பவை இன்னுமே வேதனை அளித்தது.

பூமிநாதன் என்னும் மனிதனுக்காக சகித்துக்கொண்டு பொறுமையை கடைபிடித்தாள் விழி. இப்போதும் கல்லை விழுங்கியதை போல அவள் நின்றிருந்தாள்.

ஆனால் அவளை படிக்காதவனா பூமிநாதன்? பேச்சில் கவனமாக இருந்தாலும் விழியை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

யோகுவின் பேச்சும், உடனே தாய் விழியை முறைத்ததையும் பார்த்தவனுக்கு அத்தனை ஆதங்கம்.

“என்னத்த கேக்குததா இருந்தாலும் யேங்கிட்ட கேக்கத்தான? என்ன தெரியாங்காட்டி இருக்காம்?…” என்றான் யோகுவையும், தாயையும் பார்த்து.

“ம்க்கும், ஒத்த சொல்லு பொறுக்காதே.யே வாப்பெட்டிய சாத்தத்தே ஆளுக்கொரு தொறவாவோட சுத்துவாக…” என்று யோகு சொல்ல,

“யேலே இப்ப அவ என்னத்த சொல்லிட்டான்னு நீ எகுறுதியாம்? என்ன பேசுதீகளோன்னு நாந்தேன் பொலம்பிட்டிருந்தேன். அதுவுமா இந்த வீட்டுல ஆவாது. எல்லாம் புதுசாத்தேன் இருக்கு…” என்று விடைத்துக்கொண்டு பேசினார் மயில்.

“ம்மோவ், ஒம்பேச்சு போக்கே செரியில்லாதங்காட்டி தெரிது. வெவகாரம் சொல்லுததா இருந்தாங்காட்டி சொல்லமாட்டோமா? கம்மின்னுரும்…” என பூமிநாதன் அதட்ட அவனை முறைத்தார் மயில்.

“பொறவு பொஞ்சாதிய சொன்னா கம்மின்னு இருப்பாவலா த்தே. பாத்துக்கிடுங்க. இந்த சாமத்தியோ நமக்குத்தேன் வாய்க்கல த்தே…” என்று அதற்கும் இடக்காய் பதில் சொல்ல,

“யோகு…” என்ற துளசியின் அதட்டலில் ஒரு அலட்சியத்துடன் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் யோகு.

“அவள விடு பூமி. ஆக்கங்கெட்டவ. கெட்டுன நாள்ல இருந்தாங்காட்டி இதேன?…” என்று துளசி தம்பியை சமாதானம் செய்ய பூமிக்கு போன் வந்துவிட்டது.

அதேநேரம் கூத்தபிரானுக்கும், விழிக்கும் கூட அழைப்பு வர பூமிநாதன் விழியை அனுப்பினான்.

“ஆருன்னு பாரு விழி…” என்றபடி தனது போனை எடுக்க விழியும் நகர்ந்து சென்றாள்.

விழிக்கு அழைத்திருந்ததோ வடிவு தான். அவர் அவசியமின்றி கூப்பிடமாட்டார் என்பதால் யோசனையுடன் எடுக்க,

“யாத்தா சிட்டு, இங்கின ஒவ்வீட்டு முன்னாடி அம்புட்டுபேரும் சண்டைக்கி நிக்கிதாய்ங்கடி…” என்று எடுத்த எடுப்பில் சொல்ல,

“என்னத்தா சொல்லுத? வெவரமா சொல்லம்…” வடிவின் குரலில் அத்தனை பதட்டமும் விழியை தொற்றியது.

“ஒ அய்யனை புடிச்சு காச குடுத்தாலே ஆச்சுன்னு நிக்கிதாய்ங்க. இங்க ஒரே சலம்பலா இருக்குறதா. செத்த வா…” என்று சொல்ல பதட்டமாகி போனது.

என்ன பணம்? யார் கேட்பது என்று எதுவும் தெரியவில்லை. பதட்டத்துடன் கீழே வர பூமிநாதனும் கூத்தபிரானுமே அவசரமாக கிளம்ப,

“மாமா…” என்ற அழைப்பில் விழியை பார்த்தான்.

பார்த்ததும் அவளுக்கும் அதை பற்றிய விஷயம் தான் என்று புரிந்து போக கை நீட்டி தன்னருகே அழைத்தான்.

“அங்கதேம் போறோம். வா…” என்று கூட்டி செல்ல,

“என்னவாருக்கும்? எனக்கு வெடவெடங்குது…”

“ஒன்னுமில்லடி, நாந்தேன் இருக்கேமில்ல…” என சமாதானம் செய்துகொண்டே செல்ல,

“ஊருல இல்லாத கூத்தால இருக்கு. நல்லா பளபளன்னு பகட்டா மூடிவெச்ச வெண்கலப்பானக்குள்ள தெறந்து பாத்தா அம்புட்டும் குப்ப தேங்கினதாட்டம் என்ன எழவோ?…” என மயில் சொல்ல விக்கித்து நின்றாள் விழி.

“யே இந்தாடி வாப்பெட்டிய சாத்தல சங்கட மிதிச்சிப்புடுவேன் பாத்துகிடு…” என்று கூத்தபிரான் கோபமாய் சொல்லவும் தான் அங்கே அனைவருக்கும் ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது என்றே விளங்கியது.

கலக்கத்துடன் எதுவும் புரியாமல் கணவனுடன் விழி தன் வீட்டிற்கு செல்ல அங்கே சிந்தா புடவை தலைப்பை வாயில் வைத்து மூடிக்கொண்டு அழுது தேம்பியபடி நிற்க ராசப்பன் தலை குனிந்து நின்றார்.

“ஐயா…” என்று மகள் வரவுமே சிந்தா ஓடிசென்று அவளை அணைத்துக்கொண்டார்.

ஊரில் சீட்டு போட்டிருந்த அத்தனைபேரும் சேர்ந்து நின்றிருந்தார்கள். அவ்வளவு விறைப்பும், முறைப்பும்.  

“ம்மோவ், என்னத்துக்கு அம்புட்டுபேரும் சண்டைக்கி நிக்கிதாக?…” என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வார் ராசப்பன்?

“இப்ப என்னத்துக்குலே மல்லுன்னு நிக்கிதீக? இந்த ஊருக்குள்ள தான இருக்காரு. அம்புட்டுக்கு என்ன அவசரோங்கேன்?…” என்று கூத்தபிரான் சத்தம் போட,

“இங்காருங்க ஐயா,  நாங்க இனிமேங்காட்டி ஆர நம்புதது? இம்புட்டு வருசம் இங்கின பொழச்சவனே காச களவாண்டு ஓடிட்டியான். எங்க காசுக்கு என்னத்த உத்தரவாதங்கேன்? அதனாங்காட்டி நாங்க இந்நா வரைக்கி கெட்டின காச குடுக்க சொல்லுங்க. அம்புட்டுதேன்…”

அங்கிருந்த அத்தனைபேருக்கும் பிரதிநிதி போல ஒருவன் பேச கூனி குறுகி நின்றார் ராசப்பன்.

எத்தனைமுறை வட்டி வீதம் என்று பாராமல் காசை தந்திருப்பார். கொஞ்சமும் இளக்கமின்றி பேசும் மனிதர்களை ஆம், இப்படிபட்ட மனிதர்களை அப்போது தான் கண்டுகொண்டார் ராசப்பன்.

அனைவரையும் தன்னை போல் நினை என்னும் மனதுள்ள மனிதர். வெகுளியாய் இருந்தவரை ஏமாளியாய் நிற்க வைத்திருன்தது சூழ்நிலை.

தான் தான் என்று தான் மட்டும் தான் தன் குடும்பத்தை பார்க்க முடியும் என்று யாரின் தொழிலும் தன் சுமையை ஏற்றாது தன்னால் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கையில் சற்றே முட்டாள்த்தனமும் சேர இன்று இவர் நின்றதோ அவலநிலையில்.

எப்படியும் சமாளித்து இதிலிருந்து மீண்டுவிடலாம் என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.

எடுத்த ஏலசீட்டை மொத்தமாய் முடித்துவிட்டு கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்.

இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. சடையப்பன் வந்து கேட்டபோது அத்தனை யோசனை தான.

ஆனால் முன்னேறவேண்டும், சுயசம்பாத்தியம் என்று தொழிலுக்கு உதவும்படி காலை கட்டியவனை என்னவென்று மறுக்க என தோன்றாமல் பணத்தை புரட்டி தந்திருந்தார். சில மாதங்களில் எப்படியும் அதுவும் வரவு தானே?

அந்த நேரத்தில் நிலத்தையும் விற்று மீண்டுவிடலாம் என இருந்திருந்தார். மகளை கரையேற்றியாகிற்று.

மகன் மட்டுமே. படிப்பிருக்கிறது. படிப்பிற்கான நல்ல வேலையில் அமர்ந்துவிட்டால் போதும் என்று ஆயிரம் கனவுகள்.

இப்படி ஊருக்கு முன் தலைகுனிந்து நிற்கவேண்டியதாகும் என நினைக்கவே இல்லை.

அதிலும் சம்பந்தகாரர்கள் முன்னிலையில். குறுகி போனார். அவர் நின்றிருந்தவிதம் விழியை வருத்த,

“ஐயா…” என்று அருகே செல்ல நிமிரவே இல்லை அவர்.

எப்படி ஒரு சூழ்நிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டேன் நான் என்று குமைந்துகொண்டு இருந்தார்.

“இன்னும் ஒருவாரத்துல நாங்க கெட்டுன காசு எங்க கையிக்கி வந்து சேரனும். அம்புட்டுத்தேன்…” என்று சொல்லி எச்சரித்துவிட்டு அனைவரும் செல்ல,

“மாமோவ், உள்ளாற போம்…” என்றான் பூமிநாதன்.

யாரின் முகத்தையும் ஏறிட்டு பார்க்க முடியவில்லை. அமைதியாக உள்ளே சென்றவர் கீழே அமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டார்.

error: Content is protected !!