அதிருக்கும் சில மாதங்கள். சரியாக கவனித்திராதவனுக்கு இப்போது அவள் தான் பெண் என்றதும் ஒன்றும் புரியவில்லை.
“என்னலே?…” என்றாள் செல்வி.
யோகுவும், மயிலும் பூமிநாதனையே கண்ணெடுக்காமல் பார்த்தார்கள் என்ன சொல்ல போகிறானோ என்று.
“என்னலே? என்னத்துக்கு திக்குன்னு இருக்குறவேன்? வாய தொறந்து சொல்லேம்?…” என்றாள் செல்வி.
“என்னத்தத்தா சொல்ல சொல்லுத? ஒங்க ரோசன செரித்தேன்னா எனக்கு சம்மதந்தேன்…” என்றவன்,
“ஆமா அவக வீட்டுல பேசியாகிடுச்சா?…”
“இன்னுமில்லய்யா…” என்று வேகமாய் மயிலு முன்னால் வந்தார்.
“இனிமேங்காட்டித்தேன் நல்லநா பாத்து போவனும். அவக சரின்னா அன்னிக்கே தலையில் பூவ வெக்கத்தேன்…”
“ஆராரு போறீக?…”
“மொத ஒ அக்காளையும், மாமனையுந்தேன் அனுப்பனும். ரெண்டுநா செண்டுதேன்…”
“ம்ம்ம்ம்…” என்று சொல்லி மாடிக்கு சென்றுவிட்டான்.
திருமணத்தில் அவன் பிரதிபலிப்பு அவ்வளவே. அந்த இருநாட்களும் கூட விழியின் வீட்டை கடந்து செல்லும் பொழுது எந்தவித யோசனைகளும் அவனை ஆட்கொள்ளவில்லை.
முதலில் பேசட்டும், பின் பார்த்துக்கொள்ளலாம் என இருந்துகொண்டான் பூமிநாதன்.
மயிலு எதிர்பார்த்ததை போல ராசப்பன் குடும்பத்திற்கு ஏக மகிழ்ச்சி. சிந்தாவும் வேந்தனும் கூட விழியை கொண்டாடிவிட்டார்கள்.
“ஒன்னிய வெளில கெட்டி குடுத்து ஒன்னோன்னுத்துக்கும் ஒ இருப்ப நெனச்சிக்கிட்டே கெடக்கனுமேன்னு தவிச்சி கெடந்தேம்த்தா. இப்பத்தே எனக்கு நிம்மதி…” என்றார் சிந்தா மகளிடம்.
“ஆமாப்பா, எங்கண்ணு முன்னாடி எம்புள்ள ஒசத்தியா வாழ போறா…” என்று ராசப்பன் மகளின் கல்யாணத்தை தடபுடலாக நடத்த நினைத்தார்.
அவர் திருமண செலவிற்கு என்ன செய்கிறார் என்று கூட சிந்தா கேட்கவில்லை. தங்களிடம் சொத்துக்கள் உள்ளனவே, கையேந்தி கடன் பெறவேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் நினைத்திருந்தார்.
சொத்துக்கள் இருந்தது. அத்தனையும் அடமானத்தில் என்பது வீட்டில் ஒருவருக்கும் தெரியவில்லை.
தெரிய ராசப்பன் விடவில்லை. அவர்களை எந்த துன்பமும் அண்டாமல் பாதுகாக்கிறேன் என்று நினைத்து அத்தனையும் மறைத்துவிட்டார்.
ஓரிடத்தில் கடன் வாங்கி அதனை அடைக்க இன்னோரிடத்தில் கடனை வாங்கினார்.
சின்ன சின்னதாய் இதனை செய்துகொண்டிருந்தவர் மகளின் திருமணத்தில் பெரிதாய் செய்துவிட்டார்.
காடுகள், தோப்புகள் என்று இருந்தும் அந்த வருமானம் வீட்டை மட்டும் பார்க்கவும், காட்டிற்கு போடவும் என சரியாக இருந்தது.
ஏலச்சீட்டில் சிறிது வந்துகொண்டு இருந்தது. கையை கடிக்காமல் சென்றுகொண்டிருக்க சமாளித்து வந்தார்.
தந்தையின் நிழலில் அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நிம்மதியுடன் சந்தோஷத்துடன் தான் பிள்ளைகளும் வளர்ந்தார்கள்.
பெரிய இடத்து சம்மந்தம், ஊர் சிறக்க மகளை கரையேற்ற வேண்டும் என்று ராசப்பன் எடுத்து வைத்ததோ அகலக்கால்.
பூமியின் வீட்டில் செய்வதை செய்தால் போதுமானது என்று சொல்லியிருக்க, ஊரின் முன் பெருமையாக இருக்கவேண்டும் என்று மயில் தனியே கண்டிப்புடன் அறிவுறுத்தி சென்றார் ராசப்பனிடம்.
அவர்கள் எதிர்பார்த்ததை விடவே தான் செய்யவேண்டுமே என்று சிறப்பாகவே செய்துவிட்டார் ராசப்பனும்.
யோகுவிற்கே அத்தனை பொறாமை. இவர்கள் தங்களை விட உசத்தியா என்ன என்று மயில் பெருமையாக விழியை பற்றி பேசும் பொழுதெல்லாம் எரிந்து போவாள்.
“சின்ன மருமவதேன் வவுசுன்னு யே அத்தேக்கு வெளங்குதங்காட்டி அம்புடுது….” என்று அவ்வப்போதும் மயிலின் மயக்கத்தை மலையிறக்குவாள்.
“வாரவள தலக்கி ஏத்திராதத்தே. பொறவு அவ எறங்கமாட்டாம ஒன்னிய ஆட்டி வெப்பா…” என்று வேறு சொல்லிக்கொண்டே இருந்தாள்.
“எவடி இவ, ஒன்னிய மிஞ்சித்தேன் எவளும் புள்ள…” என்று மயிலும் யோகுவை தாங்குவார்.
இப்படி பல கணக்குகளுக்கிடையில் திருமணமும் ஊர் மெச்ச நல்லபடியாகவே நடந்து முடிந்தது.
விழி அந்த வீட்டின் மருமகளாக அன்று அடியெடுத்து வைத்திருக்க சீர்வரிசைகள் வீடு நிறைக்க வந்திறங்கியது.
வருவோர், போவோர், சொந்தங்கள் எல்லாம் பெருமையாக பேச ராசப்பனுக்கு அத்தனை நிறைவு.
என் பெண்ணை சீரும் சிறப்புமாக சேர்ப்பித்துவிட்டேன் என்னும் நிம்மதியை உணர்ந்தவருக்கு அதன்பின் அது கிடைக்கவே இல்லை.
திருமணம் நடக்கும் வரையிலும் பூமியும் விழியும் தனியாகவும், எத்தேர்ச்சையாகவோ கூட பார்த்துக்கொள்ளவில்லை.
பேசிக்கொள்ளவும் இல்லை. ஒரு ஊரில் தான் இருப்பு. இருவரை பற்றியும் மற்றவர்கள் அறிந்து வைத்திருக்க பேச்சுக்கள் என்பது பெரிதாய் என்ன அரிதாய் கூட இருந்ததில்லை.
அன்றைய நாள் முதன்முதலாக இருவரின் தனிமை. விழி அவனறையில் செல்வியின் துணையோடு உள்ளே நுழைய பூமிநாதன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தான்.
“கொண்டிய மாட்டிட்டு வா விழி…” என்றான் அவன்.
கதவை தாழிட்டு வந்தவளுக்கு அவனிடம் என்ன பேச, எங்கே ஆரம்பிக்க என்றிருக்க புன்னகையுடன் அவளை பார்த்தான்.
“ஒக்காருத்தா, என்ன கம்மின்னு இருக்கவ?…” என அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி ஓரமாய் வைத்துவிட்டு அமர சொல்லி,
“பேசு விழி. நெம்ப பேசுவன்னு அக்கா சொல்லுச்சு. வாப்பெட்டிய தொறப்பேனாங்குத?…” என்று சிரித்தான்.
“பேசுவேந்தேன். ஆனா என்னத்த பேச? ரோசனதேன்…”
“செரி, மொத என்னிய பாப்பியாம், பொறவு பேசுவியாம்…” என்று அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்ததும் விழியும் தயக்கம் குறைந்து நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்ததும் ஒரு சிரிப்பு. கூடவே வாய்பொத்தி சிரித்துக்கொண்டே குனிந்துகொள்ள,
“என்னடி சிரிக்கிதவ?…” என்றான் அவள் கன்னத்தை நிமிண்டி.
“ஒண்ணுமில்ல, இப்பவு அந்த வண்டிய ஓட்டுதமாரியே ஒக்காந்துருந்தீகளா, அதேன்…” என்று சொல்லவும் யோசித்தான்.
“எந்த வண்டிய?…” என யோசித்தவள் அவன் செல்லும் மோட்டார் சைக்கிளை சொல்கிறாள் என்று புரிய,
“ஏத்தம்தேன் ஒனக்கு…” என்றவன்,
“ஆமா, என்னிய பாப்பியா நீ?…” கேட்கும் போதே மனதிற்குள் குறுகுறுப்பு.
இவள் என்னை கவனித்திருக்கிறாளா என்று ஒரு சிலிர்ப்புடன் இப்போது ஆசையும் மின்ன அவளிடம் கேட்டான்.
“அங்கனதேன ஒக்காந்து தெப்பேன். அந்நேரத்துக்கு பாக்குததுதேன்…” என்றதில் அனைவரையும் போல தன்னையும் கவனித்திருகிறாள் அவ்வளவே என்று புரிந்தது.
“ம்ம்ம், செரி இப்ப பாக்குதேல. ஒனக்கு என்ன தோணுது?…” என்றான் அவளின் கையை பற்றி அவளின் வளையல்களை அங்குமிங்கும் நகர்த்தியபடி.
வளையல்களுடன் அவனின் விரல்களும் விழியின் மேனியில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஊர்ந்துவர ஆரம்பிக்க பேசிக்கொண்டிருந்தவளின் சரளமான பேச்சு தடைபட்டது.
“பேசு விழி…” என்றான் இன்னும் அருகே நெருங்கி அமர்ந்து.
“அம்புட்டுத்தேன். என்னத்த பேச?…”
“செரி நா பேசுதேன். கேக்குதியா?…”
“ம்ம்ம்…” என்றவனின் வார்த்தைகள் அவளை எட்டவில்லை.
தன்னிலிருந்து அவனை தள்ளிவிட சிரித்தபடி விலகியவனை முறைத்தாள் சித்திரைவிழி.
“பேச விடுடி. தள்ளுத?…” என்றான் சரசமாய்.
“இதுதேன் ஒம்ம பேச்சாக்கும்?…”
“நெறைய இருக்குத்தா. கொஞ்ச கொஞ்சமா சொல்லுதேன். இப்பத்திக்கு கம்மின்னு கேப்பியாம்…” என்று அவனின் மொழியற்ற பேச்சுக்கள் தொடர விழியின் கண்களுக்குள் விழுந்து உயிரென தழுவிக்கொண்டான் பூமிநாதன்.
திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ஆழ்ந்து அனுபவித்து தான் வாழ்ந்து வந்தார்கள்.
விழியின் சொக்கா என்னும் ஒற்றை வார்த்தை போதும் பூமிநாதனை சுற்ற வைக்க என்னும் அளவிற்கு அவளுடன் கலந்திருந்தான் மனதளவிலும்.
எப்படி இத்தனை வருடங்களை ஒற்றை ஊரில் ஒருவரை ஒருவர் காணமல் கடந்திருந்தோம் என ஏங்காத நாளில்லாத அளவிற்கு இருந்தது இருவரின் பிணைப்பும்.
ஊரிலும், வீட்டில் மற்றவர்களிடத்திலும் வேறு விதமாய் இருக்கும் பூமிநாதனின் திருவிளையாடல்கள் மொத்தமும் விழியிடம் மட்டுமே.
சில நேரங்களில் அவர்களின் ஒற்றுமை கூட யோகுவை எரிச்சலை பொங்க செய்யும்.
தங்கள் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது தான். ஆனால் சிறு வயதிலிருந்தே இவனுக்கு இவள் என்று காட்டப்படிருந்தாலும் துளசி அன்பாய் இருந்தானே தவிர வேறு அவனிடம் ஒன்றும் தெரிந்ததில்லை.
பூமிநாதனும் ஒன்றும் எந்த நேரமும் விழியை தொடர்ந்துகொண்டோ, இல்லை பார்த்துக்கொண்டோ இருந்ததில்லை.
ஆனால் இருவரின் முகத்தில் ஒருவர் மீதான நேசம் கொட்டிக்கிடந்தது அப்பட்டமாய் தெரியும்.
எப்போதும் ஒரு மலர்ச்சி, சிறு கவனிப்பும் கூட அவர்களின் அந்நியோன்யத்தை காண்பித்து கொடுக்கும்.
யாரின் கவனத்தையும் கவரும்படி அவர்களில்லை என்றாலும் யோகுவின் கண்காணிப்பில் இருந்தார்கள்.
யோகுவின் பார்வை கூட்டத்திலோ, வீட்டில் அனைவரின் மத்தியிலுமோ தன்னை போல விழியை என்ன பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதில் தான் இருக்கும்.
இப்படி ஆரம்பித்த கவனம் அவர்களின் சந்தோஷத்தை கண்டு பொங்கும் அளவிற்கு கூட ஆரம்பித்தது.
போதாததிற்கு அடுத்தடுத்து குறைவில்லாத சீர்வரிசைகள் என ராசப்பன் மகளுக்கு கொட்டி கொடுக்க தனக்கு செய்ததையும் அதனையும் ஒப்பிட ஆரம்பித்தாள்.
மயில் வாயை திறந்து கேட்காமலேயே செய்து வரும் சம்பந்தியை வாயெல்லாம் பல்லாகத்தான் வரவேற்பார்.
எல்லாம் நன்றாகவே நடந்தது. போலி பத்திரத்தை கொடுத்து சடையப்பன் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிய தகவல் தெரியும் வரை.