உயிர் தழுவும் விழியே – 17 (1)

உயிர் – 17

           விழி மயங்கியதும் பூமிநாதன் அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி அமர வைத்தான்.

இருவருக்குள்ளும் பேச்செதுவும் இல்லை. விழி அவ்விடத்தை பார்க்க பூமியோ விழியை தான் பார்த்தான்.

இத்தனை துயரங்களிலும் அவள் ஒருபொழுதேனும் இப்படி உடைந்துவிழுந்து அவன் பார்த்ததில்லை.

இன்றோ வேறோடிந்த மரம்போல் சரிந்ததை நினைக்கையில் உயிர்வரை ரணமாய் எரிந்தது.

“விழி…” என்றழைப்பில் தன்னெதிரே இருந்தவனை கை நீட்டி அருகே அழைத்து மார்பில் சாய்ந்துகொண்டாள்.

“என்னடி? ஒன்னிய பாக்கையில யே ஆவி அடங்கலடி. என்னன்னு ஒத்தவார்த்த பேசிடுத்தா…” என அவளை லேசாய் அசைக்க இன்னுமே அவனில் முகம் புதைத்தாள்.

“விழி…”

“சத்தங்காட்டாத மாமா. செத்த கம்மின்னு இரு…” என்றதோடு அவனின் பேச்சை நிறுத்தியவள் கண்ணை மூடிக்கொண்டாள்.

அதற்கு மேல் பேச்சை கூட்டாமல் அவளை அணைத்து பிடித்தபடி பூமியுமே அசையாது இருந்துகொண்டான்.

இருவரின் மனதும் சமன்பட மறுத்து எரிமலையென சீற்றம் குறையாமல் வெடித்துக்கொண்டு தான் இருந்தது.

மற்றவருக்காக இருவரும் ஆனால் முகத்தில் அமைதியை காண்பித்தபடி இருந்தார்கள்.

அவர்களின் நினைவுகள் பின்னோக்கி திருமண பேச்சுவார்த்தையில் சென்று நின்றது.

கூத்தபிரான் முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் பெண் கொடுத்து பெண் எடுத்ததை  போல தங்களின் ரத்த சொந்தத்திலேயே முடித்துக்கொள்ள பூமிக்கு தான் வெளியில் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பிள்ளைகளுக்கு பெண் முடிக்கும் பட்சத்தில் வரப்போகும் சம்பந்த உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மயில் மிக தெளிவாக இருந்தார்.

வெளியூரில் பெண் எடுப்பதில் துளியும் விருப்பமில்லை அவருக்கு. தெரிந்த இடமாகவும் இருக்க வேண்டும், அதேநேரம் தங்களின் வசதிக்கு ஏற்றவிதமாகவும் இருப்பது அந்த ஊரில் அவர்களுக்கடுத்து ராசப்பன் குடும்பம் தான்.

இரண்டு குடும்பத்திற்குள் நல்ல பழக்கவழக்கமும் இருந்தது. தூரத்தில் இருக்கையில் இருந்த பசுமைகள் எல்லாம் உறவாய் நெருங்கிய பின்னர் உண்மை நிலவரத்தில் சருகாகிவிட்டது.

அன்று செல்வியும், வீரபாண்டியுமே வீட்டிற்கு வந்திருக்க அப்போதே கூத்தபிரான் பேச்சை ஆரம்பித்திருந்தார்.

“மூத்தவனுக்கு முடிச்சு ஒரு வருசமாவப்போவுது மயிலு, சின்னவனுக்கும் பொண்ணுக வந்துக்கிட்டுத்தா இருக்காக. நீ என்னத்தா சொல்லுத?…” என்று மனைவியிடம் கேட்க,

“நா என்னத்த சொல்ல போறே? ஆனா எனக்கு ஒரு ரோசன இருக்காங்காட்டி சொல்லலாமில்ல…”

“என்னன்னு சொல்லும்மோவ், என்னத்துக்கு மூக்க தொட்டு வானத்துக்கு ஏறுததாட்டம் நிக்கித?…” என்றாள் செல்வி கிண்டலாக.

யோகுவிற்கு முதலிலேயே தெரியும் யாரை பேச போகிறார்கள் என்று. பெரிதாய் அவளுக்கு அதில் ஒன்றும் விருப்போ, வெறுப்போ இல்லை.

யார் வந்தாலும் தனக்கு கீழே தான் என்ற எண்ணம் ஆழ பதிந்திருந்தது. அதற்கு மயிலும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

‘எனக்கடுத்து இங்கே நீ தான் நீதான்’ என்று சொல்லி சொல்லியே அவளை தவிர வேறு யாரும் அவளுக்கு சமமில்லை என்பதை போல பதித்துவிட்டிருந்தார்.

அதனால் அசட்டையுடன் தான் இருந்தாள் யோகுவும். விழி தையல்காரி என்னும் ஒரு மட்டமான எண்ணமும் கூட.

பொழுதுபோக்கிற்கு, ஆசைக்கு என அவள் தைத்துக்கொடுத்துக்கொண்டு இருக்க யோகுவிற்கு அந்த திறமையிலும் இளக்காரமும், எரிச்சலும் கூட.

“வேற ஆர சொல்ல போறேனாம். இங்கன நமக்கு சரிக்கி சரி இல்லாங்காட்டிலும் செத்த முன்னபின்ன இருக்கது ராசப்பண்ணேந்தேன். அந்த புள்ளையும் சமஞ்சு வருஷமாச்சில…”

“சிட்டுவையாம்மோவ் சொல்லுத?…” செல்வி ஆச்சர்யமாக கேட்டாள்.

தாயின் கணக்குகள் எல்லாம் அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்தஸ்து பார்ப்பார் என்பதளவிற்கு தான் தெரிந்து வைத்திருந்தாள் அவரின் பேச்சுக்களில்.

மயிலின் கணக்குகளோ வேறு. அவரின் எண்ணப்படி இந்த திருமணம் நடந்துவிட்டால் அசைக்கமுடியாத குடும்பம் தங்களுடையது என்பதில் அத்தனை திண்ணம்.

“என்னவா ரோசன பலமாகட்டு இருக்கு?…”  கூத்தபிரானின் அமைதியில் மயில் கேட்க,

“செத்த இரேம்டி…” என்று சத்தம் போட்டார்.

“நீயி என்னய்யா சொல்லுத?…” மருமகனிடம் கேட்க,

“செய்யத்தேன் மாமோவ், நல்ல புள்ளதேன். பேச்சு எல்லா வெல்லந்தேன்…” என்று வீரபாண்டியும் சம்மதத்தை சொல்லிவிட செல்வியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

முன்பிருந்தே சித்திரைவிழியை அவளுக்கு பிடிக்கும். எப்போதும் சிரித்த முகமும், களையான தோற்றமும் என கவர்ந்திருந்தாள் செல்வியை.

“என்னத்தா?…” மகளை கேட்க,

“எனக்கு சந்தோசந்தேன், தம்பிக்கிட்ட கேளும்…” என்று சொல்லிவிட,

“அவென் என்னிக்கி வேணாங்கபோறியான்? ஆர காட்டுனாலும் கட்டுவியான் எம்மவேன்…” என்று இறுமாப்பாய் மயில் சொல்ல அதுவே உண்மையும் கூட.

பூமிநாதன் இதில் எதிலும் தலையிடுவதில்லை. உங்கள் விருப்பம் என்றிருந்தான் முன்பே.

“அப்ப செரி, மொத ஆளுவிட்டு பேசிட்டு செரின்னாகன்னதும் பொறவு போவம்…” என கூத்தபிரான் சொல்ல,

“வேணாங்க கசக்குதாமா? அதெல்லா ஒடனேங்காட்டி சரின்னுவாக…” அத்தனை நம்பிக்கை மயிலுக்கு.

பிரசிடெண்டு மகன், ஊர்த்தலைவர் வீட்டு சம்பந்தம், மறுக்க என்ன இருக்கிறது என்று தான் அகம்பாவமாக நினைத்தார் மயில்.

“அத்த நீயி சொல்லாதத்தா, அவக சொல்லட்டும்…” என்று சொல்லி முடித்துக்கொண்டார் கூத்தபிரான்.

வீரபாண்டியும், செல்வியுமே சென்று பேசுவதாக முடிவானது. இரண்டுநாள் கழித்து ஒரு நல்லநேரத்தில் செல்வதாக பேசப்பட்டது.

“என்னத்தே, ஒத்துக்குவாகளா?…” யோகு கேட்க,

“அதெல்லா சவுரியந்தேன் அவகளுக்கு. உள்ளூருல ஒசத்தி சம்பந்தத்த வேணாங்குவாகளா?…”

“எல்லாஞ்செரித்தேன், ஆனா அந்த பைய படிச்சு போட்டு இங்கனவே பண்ணையம் பாக்குதேன்மின்னா என்னத்தே செய்யுவீக?…”

“நா என்னத்துக்கு இருக்கேன்? பேசி மனச மாத்திபோடமாட்டேனாக்கும்? படிச்ச புள்ள அத்த சோலிய பாக்க சொல்லிட்டா மாட்டேன்னா சொல்லுவியான்? அத்தோட இந்த கண்ணாலம் முடியுங்காட்டி நாம வெச்சதுதேன் அங்க சட்டம்ங்கேன்…”

“சரித்தேன், அம்புட்டுக்கு அவதியாக்கும்? பரிசத்த போட்டுட்டு பொறவு பேசும்…”

“யேம் பேசாம? பேசத்தான…” என்று சொல்லிக்கொண்டு இளைய மகனின் வருகைக்கு காத்திருந்தார்.

ராசப்பன் காடு, தோப்பு, துரவு, வீடு, என சொத்துக்களுடன் ஏலச்சீட்டு தொழிலும், வட்டிக்கு பணம் கொடுப்பதும் பார்த்துக்கொண்டிருக்க பணம் புழங்கும் இடம் என்றே நினைத்திருந்தார் மயில்.

வெளிப்பார்வைக்கு அத்தனையும் பொன்னாய் தெரிய உள்ளே இருந்த நிலவரமோ ராசப்பனின் குடும்பத்தாரே அறியாதது.

அவரின் வெள்ளந்தி குணத்திற்கு ஆங்காங்கே சில ஏமாற்றங்களையும் சந்தித்திருக்க பணத்தோடு சேர்ந்து கடனுமே அவருக்கு இருந்து வந்தது.

மயிலுக்கு விழியின் தம்பி வேந்தனை படித்த படிப்பிற்கு வேலைக்கு அனுப்பிவைத்துவிட்டால் சொத்துக்களை எங்கே அவன் கவனிக்க போகிறான்?

பிறகு அத்தனையும் தன் மகனையும், தனது குடும்பத்தையுமே சேரும் என்ற மனக்கணக்கில் திருமண கணக்கை அரங்கேற்றி இருந்தார்.

மாலை பூமிநாதன் வீட்டிற்குள் வந்ததுமே இனிப்பை அவனிடம் நீட்ட ஒன்றும் புரியாமல் பார்த்தவன் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

“செல்வி சொல்லுத்தா…” என்று மகளிடம் ஜாடை காண்பிக்க வீட்டில் எல்லோருமே இருப்பது அப்போது தான் அவனின் கவனத்தில் பதிந்தது.

“என்னத்தா…” என்று செல்வியின் முகத்தை ஆர்வமாக பார்த்தான்.

அவனின் மனது நல்ல விஷயமாக இருக்குமோ என்று தன் அக்காவை தான் நினைத்தது.

செல்விக்கு திருமணம் ஆனதில் இருந்து பிள்ளைக்கென காத்திருப்பது அவன் அறிந்ததே.

இப்போதும் சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துகொண்டு தான் இருக்கிறான்.

ஒவ்வொருமுறையும் ஏதேனும் நல்ல விஷயமாக சொல்லிவிடமாட்டாளா என்று தவித்தபடிதான் இருப்பான்.

“ஒனக்குத்தேன் பொண்ண பாத்துருக்கோம்ய்யா…” என்று சொல்லவும் மனதில் ஏமாற்றம் பிறந்தாலும் செல்வியின் புன்னகை முகத்தில் தானுமே தலையசைத்தான்.

“ஆருன்னு கேட்டியாலே? நாந்தேன் சொல்லுதேம்ல…” என அதட்ட,

“அத்தையும் நீ சொல்லத்தானத்தா போற? பொறவு என்னத்துக்காங்கட்டி சடவாம்?…” என்றான் பூமிநாதன்.

“சரித்தேன், ஒங்கிட்ட பேசி செவிக்கவா?..” என்றவள்,

“நம்ம சிட்டு தெரியுமில்ல?…”

“ஆமா, அந்த சட்ட தெக்கித புள்ள…” என்றவன் கூடவே,

“யே பாத்திருக்க பொண்ணு அவகளுக்கு சொந்தமா?…” என்றான் மிக சாதாரணமாக.

“சொந்தமா? யேலே அவதேன்  ஒனக்கு பாத்துருக்க பொண்ணு…” என்றதும் புருவம் சுருக்கி சித்திரைவிழியின் முகத்தை மனதில் கொண்டு வந்தான்.

கடைசியாக அவளை எப்போது பார்த்தோம் என ஞாபகத்தில் தேட டவுனில் இருந்து வந்த பேருந்தில் இறங்கி நடந்து சென்ற போது பார்த்தது.

error: Content is protected !!