உயிர் தழுவும் விழியே – 16 (2)

“அப்ப ஒனக்கு வருத்தந்தேன். இல்ல விழி…”

“ரொம்ப அவசியந்தேன். நா என்னத்த சொல்லுதேன். நீயி என்னத்த கவனிக்கித?…”

“செரி, நானே கேக்குதேம். இல்லாங்காட்டி அக்காட்ட சொல்லுவோம். எம்புட்டத்தேன் அதுவும் இழுத்துபோட்டு பாக்கும்? இந்த மாசம் ஆசுபத்திரிக்கி கூட வரல அது…”

“சரிய்யா, அடுத்தமாசம் நானே கூட்டிபோறேன். அம்புட்டுத்தான?…” என்று சொல்ல,

“என்னன்னுடி வந்தமாட்டுல சேந்துக்கிட்ட?…” என்றான் வியந்த குரலில்.

“என்னிக்கி தள்ளி நின்னே, இன்னைக்கி சேந்துக்க? போன போடும்ய்யா. ஒத்த போன போடுததுக்கு எம்புட்டு அக்கப்போரு ஒன்னியோட…” என்று சலித்துக்கொண்டாள்.

விழியின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டே துளசிக்கு அழைக்க எடுத்துவிட்டான் அவன் உடனேயே.

“எங்கலே இருக்க?…”

“எங்கன இருப்பேன்? காட்டுலதேன்…” என்று சொல்லியவன்,

“என்ன?…” என்றான்.

“என்னவே கத்துத? வெறும் வவுத்தோட இருந்தா கத்தத்தேன் சொல்லும். கெளம்பி வீட்டுக்கு வா…”

“நீயி அங்கனயா இருக்க?…”

“ஆமா…”

“இந்நேரத்துக்கு அங்க என்னாலே?…”

“மொத வாங்கம்ல…”

“சிட்டு சொல்லுச்சாக்கும் நா உண்கலன்னு…”

“இப்ப வாரியா? இல்ல நா அங்க சோற கொண்டாறவா? ஒஞ்சவுரியம் என்னாலே?…”  

“கெளம்பி வாரேன் சாமி. ஒன்னியோட…” என்று அலுத்துக்கொண்டு துளசி போனை வைத்தான்.

“வாராகளா?…”

“ம்ம்ம்…” என்ற பூமி,

“உண்க என்ன இருக்கு?…”

“மத்தியானோம் வெச்சதுதேம்…”

“வேற என்னத்தையாச்சும் செய்யுதியா விழி…” என்று ஆசையுடன் கேட்க,

“செய்யின்னா செய்ய போறே. என்னத்துக்குய்யா கெஞ்சுத?…” என்று எழுந்து அடுக்களைக்குள் செல்ல பூமிநாதன் வீட்டில் இருந்தே வெளியே வேலைகள் நடக்கிறதா என கேட்டுக்கொண்டிருந்தான் போனில்.

விழி என்ன சமைக்க என்று பார்த்துக்கொண்டு அங்கிருப்பவற்றை ஆராய அதற்குள் மயில் உள்ளே வந்துவிட்டார்.

அவளிடம் எதுவும் பேசாமல் அடுப்பில் இருந்த பாத்திரத்தை திறந்து பார்க்க டீ போடப்பட்டு அதில் கொஞ்சம் இருந்தது.

“அம்புட்டுக்கா ஒனக்கு அவம்பாவம் தலையில நிக்கிது?…” என்றார் விழியிடம்.

“தலையில என்ன நிக்கிதுன்னு கண்டீகளாக்கும்?…” என்று விழியும் அவரை பாராமல் பதில் சொல்லிக்கொண்டே பச்சை பாசிப்பருப்பை வறுக்க ஆரம்பித்தாள்.

மயிலால் சத்தமாகவும் பேச முடியவில்லை. இளையமகன் வீட்டிற்கு வரும்பொழுதே தன்னை கவனிக்காமல் விறுவிறுவென உள்ளே வந்துவிட்டதும் பின் அவர்கள் இருவருமாக அடுக்களையில் பேசிக்கொண்டு சென்றதும் என கண்காணித்துகொண்டே தான் இருந்தார்.

பற்றிக்கொண்டு வந்தது அவருக்கு சித்திரைவிழியின் உரிமையான நிமிர்வான நடவடிக்கைகள் எல்லாம்.

முன்பே அப்படி பேசுபவள் தான் விழி. இப்போது இன்னும் கொஞ்சமும் மரியாதை அற்ற பார்வையும், பேச்சும் மயிலை தூண்டிக்கொண்டே இருந்தது.

இவள் எல்லாம் எனக்கு சமமா? நான் பார்த்து இந்த வீட்டிற்கு கொண்டு வந்தவள். என்னையே எதிர்த்து நிற்பதா? அதுவும் ஒன்றுமில்லாத நேரத்திலும் கூட என்று அவிந்துதான் போயிருந்தார்.

“டீய போட்டா கொண்டுவந்து குடுக்க கூடவா ஒருத்தவாக ஒனக்கு பாடம்படிக்கனு?…”

“நா என்னத்துக்கு குடுக்கனுங்கேன்? யே ஒங்களுக்கு இங்கின இருக்கது தெரியாதாக்கும்? இல்ல நா டீய போட்டு போனதா பாக்கலையாக்கும்? இம்பிட்டு நா எங்கையில வாங்கி குடிச்சதாட்டம்…”

“ஒங்கையில வாங்கி குடிக்க இத்தென்ன ஒஞ்சம்பாத்தியமாடி?…”

“ஒம்ம சம்பாத்தியங்கூடத்தேன் இல்ல. நீக என்ன இங்கின உண்காம ஒறங்காமலா இருக்கீக?…”

இப்போதும் தன் வீட்டில் வைத்தே சட்டமாக அவள் பதிலுக்கு பதில் பேச வெகுண்டுகொண்டு இருந்தார் மயில்.

பிள்ளை இல்லை என்றால் இந்த நேரம் கையை நீட்டியிருப்பார். அந்தளவிற்கு ஆவேசம் மயிலுக்கு.

மூத்த மருமகளும், தன் மகள் போன்ற செல்ல மருமகளுமான யோகு இங்கிருந்து செல்வதற்கும் விழியையே குற்றமான நினைத்தார்.

யோகு பேசியது தவறாகவே இருந்தாலும் என் மருமகள், அவளும் இவளும் ஒன்றா என்று ரத்தபந்தம் அவரை தலைகுப்புற தான் வீழ்ந்தி இருந்தது.

அதுவும் சிறுவயதில் இருந்தே கைக்குள் வைத்து வளர்த்திருந்தவள். கூத்தபிரானுக்கும், காளிங்கராயனுக்கும் பக்குவம் பார்க்காமல் அவள் சுற்ற துளசி அதற்கும் சத்தம் போட்டிருந்தான்.

அதற்கே யோகுவை பேசவிடாதவர் மயில். பிள்ளைதாச்சி அவள் என்ன செய்வாள் என்று அவளுக்கு தான் ஏந்துகொண்டு நின்றார்.

இப்போதும் தனக்கு உறுதுணையாக இருந்த மருமகளை வீரபாண்டி அழைத்து சென்றுவிட கை ஒடிந்ததை போல இருந்தது மயிலுக்கு.

எல்லாவற்றிற்கும் காரணம் விழி என்று அவர் பேச பேசிக்கொள் என்பதை போல விழி நடந்துகொள்ள இன்னுமே விழியை வன்மத்துடன் தான் பார்த்தார்.

“என்ன பண்ணுத விழி?…” என்று பூமிநாதன் தேடி வந்துவிட்டான்.

மயில் அடுக்களைக்கு செல்லவும் சிறிதுநேரம் பொருத்து இருந்தவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை. வந்துவிட்டான்.

மகனை அங்கே காணவும் தானாகவே வேறு பாத்திரம் வைத்து தனக்கு தேவையானதை தயாரித்துக்கொண்டார் மயில்.

தன் கோபத்தை எல்லாம் அந்த பாத்திரங்களை நகர்த்துவதிலும், பொருட்களை எடுப்பதிலுமே காண்பிக்க பூமிநாதன் பார்த்திருந்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் இருந்த சேரை இழுத்து போட்டு அறையின் எதிரே அமர்ந்துகொண்டான்.

அங்கிருந்தே போனில் பேச ஆரம்பிக்க இன்னும் மயிலை அது வெறுப்பேற்றியது.

“அப்படி என்னத்த கண்டியானோ இவக்கிட்ட? கொஞ்சங்கூட தல நிமித்தாம  இவ பின்னாடியே திரியுதானே? அஞ்சுமாசம் குடுத்தனம் நடத்துனவ வவுத்துல ஒத்த பூச்சி பொட்டு அண்டல. இவளுக்கு இம்பிட்டு தாங்கலு…”

மயில் விழிக்கு மட்டும் கேட்கும் விதமாய் முணுமுணுத்துக்கொண்டே அவளை வார்த்தைகளால் குத்தி குதற அவரின் பேச்சில் ஒருநொடி தான் கைகள் அப்படியே நின்றது.

பின் மீண்டும் மனதை இறுக்கிக்கொண்டு பரபரவென்று வேலை செய்துகொண்டு இருந்தாள்.

ஏற்கனவே தன் முகம் பார்த்து அமர்ந்திருக்கிறான் கணவன். இப்போது இதுவும் என்றால் நிச்சயம் அவன் தாங்கமாட்டான் என்று மனதை சமாதானம் செய்தாள்.

துளசியும் வந்துவிட அவனுக்கு உணவை பரிமாறியவள் மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்துகொண்டாள்.

மயில் முன்னறைக்கு சென்று தாழ்வாரத்தில் அமர்ந்தவர் தான். மூத்தமகன் வந்த போதும் உள்ளே வரவில்லை.

சுமந்து பெற்ற என்னையே கண்டுகொள்ளவில்லையே இவர்கள் என்று வீராப்புடன் இருந்துகொண்டார் அவர்.  

அதை துளசியும் கண்டுகொள்ளவில்லை. பூமியிடம் விஷயத்தை சொல்ல அவன் அமைதிப்படுத்தினான் துளசியை.

சட்டென வெட்டிவிடும் உறவா அது? யோகு தான் வேண்டுமென்றே செய்கிறாள் என்றால் அதற்கு இணையாக தாங்களும் இறங்கவேண்டுமா என்று துளசியை தேற்றினான்.

ஒருவாறாக இரவு உணவும் முடிந்துவிட்டது. சிந்தாவிற்கு துணையாக வடிவு வந்து இரவு படுத்துக்கொள்வதாக சொல்லிவிட விழிக்கு அது பெரும் நிம்மதியை தந்தது.

இரவு கூத்தபிரானுக்கு தர வேண்டிய மருந்துக்களை தந்து அவரின் அவசரத்திற்கு ஏதுவாக செய்து சுத்தப்படுத்தி மருந்து போட்டுவிட்டு அவர் உறங்கும் வரை அங்கேயே இருந்தார்கள் துளசி, விழி, பூமி என்று.

“செரி, பூமி, நீயி போயி ஒறங்கு. நா பாத்துக்கிடுதேன்…” என்று அவர்களை அனுப்பிவைக்க முயல,

“அதெல்லா வேணா மாமோவ், நா இங்கினவே…”

“இந்தா சொல்லுதேமில்ல. நா பாத்துக்கிடுதேம்த்தா. ராவுக்கு ஒருக்கா அந்த கோப்பைய வெக்கிதேன். அம்புட்டுத்தான. போப்பா…” என்று விழியை அனுப்பி வைத்தான்.

பூமி எதுவும் சொல்லவில்லை. வா என்று சொல்ல வார்த்தைகள் வரவில்லை. ஆனால் மனது தடதடத்துக்கொண்டு இருந்தது.

அவர்கள் அறை. அந்த அறையில் அவள் எப்படி இருப்பாள் என நினைக்கும் பொழுதே நெஞ்சுக்கூடு காலியானதை போல இருந்தது.

அதுவரை அங்கே தைரியமாக வலம் வந்த விழியின் கால்கள் அங்கேயே வேரோடி போய்விட்டதை போல அசைக்க முடியவில்லை.

“சிட்டு போத்தா. இன்னு இங்கினவே நிக்கித?…” என துளசி கட்டாயப்படுத்த அதற்குமேலும் நிற்க முடியாமல் விழியின் கையை பிடித்து அழைத்து மாடிக்கு ஏறினான் பூமிநாதன்.

மேலே அந்த அறை கதவை திறந்த நொடி விழியின் பார்வை அங்கே தரையில் தான் பதிந்தது.

கதவருகே அன்று அவள் கதறி அழுத பொழுது கண்ணீரோடு கரைந்து தரையில் கொட்டிய குருதி இன்றும் அவள் கண்ணின் முன் படலமாக விரிந்தது.

அவளால் நிதானமாக இருக்க முடியாததை கவனித்தவன் அவளை கைகளில் தூக்கிக்கொண்டு உள்ளறைக்கு சென்று கட்டிலில் விடும் நொடி அடக்கப்பட்ட உணர்வுகள் எல்லாம் தலைக்கேறி மூர்ச்சையாகி சரிந்தாள் சித்திரைவிழி.

error: Content is protected !!