உயிர் தழுவும் விழியே – 16 (1)

உயிர் – 16

       கூத்தபிரானின் அந்த இயலாமையுடன் கூடிய ஆக்ரோஷம் மயிலை தன்னைப்போல அறையை விட்டு வெளியேற வைத்தது.

“என்னங்கய்யா? என்னத்துக்கு இம்புட்டுக்கு துளும்புதீக?…” என்று பூமி அவரை பிடித்துக்கொண்டு கேட்டான்.

பூமிநாதன் பயந்துவிட்டான், மீண்டும் கூத்தபிரானுக்கு என்னவோ ஆகிவிட்டதோ என்று நடுங்கி போனான்.

“ஒண்ணுமில்ல, அம்புட்டுத்தேன் அம்புட்டுத்தேன்…” என்று விழி அவரின் நெஞ்சை நீவிவிட இருவரையும் கண்கொண்டு பார்க்கமுடியாமல் அப்படியே கண்களை மூடிக்கொண்டார் அவர்.

மனதிற்குள் தீயாய் கொழுந்துவிட்டெரிந்து தாங்கவியலாவண்ணம் வெந்துகொண்டிருந்தது அவர் அனுமானித்த விஷயம்.

வெறும் பேச்சுக்கு மட்டுமா மருமகள் இத்தனை நாள் விலகி இருந்தாள் என்று நினைத்தவருக்கு இந்த உண்மை தொண்டையில் சிக்கிக்கொண்டு தவிக்க வைத்தது.

இப்போது தனக்கும் என்னவோ என்று இருவரும் பயந்ததை பார்த்து உடலை தளர்த்தி அப்படியே விட்டுவிட்டார் தானும் வதைக்க வேண்டாம் என்று.

அவரிடம் அமைதி தென்படவும் விழியும் பூமியும் கூத்தபிரானை விட்டு தள்ளி வந்து நின்றார்கள்.

“என்னதாச்சும் குடிக்கிதியாய்யா?…” என்றாள் விழியே.

வேண்டாம் என்று தலையசைத்தவன் ஜன்னல் பக்கம் திரும்பி நின்றுகொண்டான்.

“மாமா…” என்றவளை திரும்பி பார்க்காமல் அப்படியே கை கொடுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டவன் முகத்தில் மிதமிஞ்சிய வேதனை.

“இப்ப என்னத்த ஆகிப்போச்சின்னு மூஞ்சிய தூக்கி முடுக்குல வெக்கித?…” என்றாள் அவனின் அணைப்பில் நின்றுகொண்டே பூமிநாதனை இடித்தபடி.

அவளின் அதட்டலில் புன்னகைத்தவன் இன்னும் தன் கைகளுக்கு இறுக்கத்தை தர அதிலிருந்து விலக நினைத்தாள்.

“விடும்ய்யா, எலும்ப ஒடச்சிடுவ நீயி…” என்று சொன்னாலும் விலக முடியவில்லை.

இரும்பென உழைத்து உரமேறிய வலிமையான கரத்தின் முன்னால் அவளின் திணறல்கள் எங்கே எடுபட?

“வலிக்கட்டும்டி. தவிக்கவிட்டேல…” என்றான் இன்னுமே நெருக்கிக்கொண்டு.

“அத்த இங்கினதேன் காமிக்கனுங்காட்டி இருக்கோ?…” என்று அவனின் இடுப்பில் கிள்ள,

“செத்த நில்லேம்டி…” என்றவனின் கைகள் தளர்ந்தது.

“நா ஒன்னும் வெசனப்படலைய்யா. நீ வெம்பாத…” சொல்லிவிட்டாள் தான்.

ஆனாலும் குரல் ஒன்று இருக்கிறதே? அவன் கண்டுகொண்டான் அந்த குரலில் பொதிந்திருந்த உணர்ச்சிகளை.

“விழி…”

“அட போம்ய்யா, எப்ப பாத்தாலும் கண்ண கசக்கிக்கிட்டு. இத்த பாக்கத்தேன் வந்தேனாக்கும்?…” என அவனிடம் இருந்து தள்ளியவள்,

“செத்த ஒக்காரு, எனக்கு வெறுக்குன்னிருக்கு. குடிக்க என்னதாச்சும் எடுத்தாறேன்…” என்று அவள் சென்றதும் அங்கே நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

செல்வி பூமிநாதனுக்கு அழைத்துவிட போனை எடுத்தவன் பேசவும் மனதின்றி தான் பார்த்திருந்தான். பின் இன்னும் என்னவோ என பயந்துவிட்டால் என்று எடுக்க,

“யேலே பூமி, என்னய்யா? என்ன செய்யிதா சிட்டு? ஒன்னுஞ்சங்கட்டமில்லியே…” என்று கேட்க,

“ஒன்னுமில்லத்தா, அவ நல்லாத்தேன் இருக்கா. பேசுதியா?…” என்றான்.

“ஆமாய்யா, கொடேன்…” என்றதும் கூத்தபிரானை பார்த்துவிட்டு அங்கே அடுக்களைக்கு சென்றான்.

தூக்கி சொருகிய புடவையுடன் அடுப்பில் கொதித்துக்கொண்டு இருந்த டீயை துணியை பிடித்து இருகையாலும் தூக்கி லேசாய் அலசிவிட்டாள்.

ஓரங்களில் கொதித்து ஒதுங்கியிருந்த தூள்கள் மீண்டும் சூடான பாலுக்குள் சென்று சேர பூமியை பார்த்ததும்,

“என்ன மாமா?…” என்றாள் கைப்பிடி துணியை ஓரமாக வைத்துவிட்டு அடுப்பை குறைத்து.

“அக்கா பேசனுங்குதா. பேசு…”

“என்னவா? மசக்கக்காரி வந்த வீட்டு மவராசிக்கு செலாத்தலா இருக்கா என்ன?…” போனை வாங்கிக்கொண்டே விழி கிண்டல் பேச,

“யேம்டி பேசமாட்ட ஆத்தா. மசக்கக்காரிய கவெனிச்சா ஒன்னிய விடுவேனா? என்ன செய்யுத?…”

“ஒம்ம தம்பி கொதிச்சி கெடக்காக. அதேன் சில்லுன்னு டீயாத்துதேன்…”

“ஒங்கய்யால என்னத்த தந்தாலும் அவேனுக்கு அமிர்தம்ந்தேன்…”

“சரித்தேன், தம்பிக்கி காவடி எடுத்தாச்சாக்கும்? அவகட்ட பேசுங்க மதினி. நா இத்த வடிச்சு ஊத்தறேன்…” என்று எப்போதும் போலவே பேசி போனை பூமியிடம் நீட்டியவள் டீயை வடிகட்டி இருவருக்கும் எடுத்துக்கொண்டாள்.

இன்னுமே சித்திரைவிழி திருமணத்தின் பொழுது சீராக கொண்டு வந்திருந்த பண்டபாத்திரங்கள் அந்த வீட்டில் புழக்கத்தில் தான் இருந்தது.

“காசுன்னா காவாயில கூட கைய விடுவாக மனுசசெம்மங்க…” என்று முனங்கிவிட்டு டீயை எடுத்து கொண்டு பூமிநாதனை தேடி சென்றாள்.

கொண்டுவந்த தட்டில் மூன்று தம்ளர்கள் இருந்தது. ஒன்றில் பால் இருக்க டீயை எடுத்தவன்,

“இந்நேரத்துக்கு ஐயாவுக்கா?…” என்றான்.

“யே இந்நேரத்துக்கு என்னவா? மழ வரதாட்டம் மூடி நிக்கிது. வெதுவெதுன்னு தொண்டையில எதாச்சு எறங்கினா எதமா இருக்குமில்ல…”

“ஒறங்குதாக?…”

“அட என்னய்யா நொய்யிநொய்யின்னு. வாம். வந்து பிடிப்பியாம்….” என சொல்ல,

“மொத நீயி டீய குடிங்கேன். சூடு அமந்துபோச்சின்னா ஒனக்கு எறங்காது…” என்று அவளை பிடித்து நிறுத்தி டீயை அவள் கையில் தந்தான்.

இருவரும் அங்கே சுவற்றை ஒட்டி போடப்பட்டிருந்த பலகைக்கட்டிலில் அமர்ந்துகொண்டார்கள்.

பேசிக்கொண்டே குடித்து முடித்து பூமிநாதன் கூத்தபிரானை எழுப்பி லேசாய் சாயத்து பிடிக்க விழி பாலை புகட்டினாள்.

அவருக்குமே தொண்டை வறண்டுவிட்டதை போல இருந்தது. சூடாக தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்திருக்க அதற்குள் விழி பாலை இதமான சூட்டில் தரவும் மனதும், வயிறும் குளிர்ந்து போனது.

கணவன், மனைவி இருவரின் முகமும் இப்போது சஞ்சலமற்று தெளிந்திருக்க மகனிடம் அதை பற்றி கேட்க வேண்டாம் என முடிவெடுத்துக்கொண்டார்.

ஆனால் கேட்காமல் விடப்போவதில்லை என்றும் சூளுரைத்துக்கொண்ட மனிதரின் மனதில் மயில் மீதான ஆத்திரம் கூடியது.

மறுநாளில் இருந்து மருத்துவமனையில் பரிந்துரை செய்திருந்த நர்ஸ் வருவதாக போன் செய்து பூமியிடம் சொல்லியிருக்க பேசிவிட்டு விழியிடம் பகிர்ந்துகொண்டான்.

“ஒனக்கும் செத்த செலாத்தலாட்டம் இருக்கும்டி…” என்றான்.

“ஒன்னுத்துக்கும் வேணாங்கறேன், நீயி காதுல வாங்குதியா? போம்ய்யா…” என திட்டினாள் பூமியை.

“ஆமா ஒன்னிய ஆரு அந்த நேரத்துக்கு வர சொன்னா? ஒங்கக்கா பாத்த சோலியா?…”

“மாமாதேன் போன போட்டாரு. இன்னன்னு சங்கதி, வீட்டுக்கு போவுன்னு…”

“சரித்தேன், ஒருத்தவகளும் ஒன்னிய பொழப்ப பாக்க விடமாட்டாக…” என்றவள்,

“என்ன சோலியா இருந்தீராம். போன போடவும் கெளம்பி வர?…”

“சோல வளவுல ஒரு தண்ணி கொழா பதிக்கனும் அங்கன ஒரு கரச்சலு. அத்த பாத்திக்கிட்டு நின்னே. போன போடவும்…”

“நீரும் கெளம்பி இங்கின வந்து குதிச்சிட்டீரு. செரி, வந்த மவராசென் என்னத்த தூக்கி நட்டமா நிறுத்தீட்டீகளாம் இங்கின?…” என்றவளை முறைப்புடன் அவன் நோக்க,

“ம்க்கும், இதுக்காங்காட்டி கொறச்சலுதேன்…” என்று தோள்பட்டையில் அவள் இடித்துக்கொள்ள,

“என்னிய சொல்லன்னும்டி. நீயி எட்டூர சமாளிப்பன்னு தெரிஞ்சி வந்தேனில்ல. தேவதேன்…”

“ஆமாமா, தேவைக்கி தாராக ஒனக்கும். போம்ய்யா…” என்று சரிக்கு சரி அவனை வாயடைக்க செய்ய பூமிநாதனுக்கு வாழ்க்கை அழகாகிவிட்டதொரு நிம்மதி.

ஆனாலும் தான் உள்ளே வரும்பொழுது அவள் அமர்ந்திருந்த கோலம். இந்த ஜென்மம் முழுவதும் மறக்க கூடியதா?

அப்படி அவளை எத்தனை தோற்றத்தில் கண்டுவிட்டான் அவனும். எல்லாம் எல்லாமே தன்னை திருமணம் செய்ததினால் மட்டுமே வந்தது என்றொரு எண்ணம் எப்பொழுதும் போல அவனுக்கு மனதினோரம் சுருக்கென்று தைத்தது.

“என்னய்யா கம்மின்னாயிட்ட?…”

“ஒன்னுமில்லடி…” தன் கைகளை தட்டிக்கொண்டு.

“இனிமேங்காட்டி போவேண்டியில்லையா?…”  

“பொறவு பாத்துக்கிடுவோம். இங்கதேன. எங்க ஓடியா போவும்?…” என்று இன்னும் சாய்வாக அமர்ந்துகொண்டான்.

“மாமா…”

“ம்ம்ம்…”

“பெரியமாமா சடவுல கெளம்பிட்டாரு…” என்றதும் திடுக்கிட்டு அவன் பார்க்க,

“என்னடி சொல்லுத?…”

“ஆமாங்கேன். வந்த மனுசென் உண்க கூட இல்ல…”

“என்னடி ஆச்சு?…”

“என்னன்னாலு நீ அவகட்டையே கேட்டுக்க. இல்லாங்காட்டி மதினிட்ட சொல்லி கேட்டுக்க. எவ்வாயில இருந்து ஒத்த வார்த்த அம்புடாது ஒனக்கு…”

“என்னன்னு சொல்லேம்டி?…”

“இல்லய்யா, நா என்னத்தையாச்சும் சொல்லி, என்னத்துக்கு கூட கொறைய? வேணா. ஆனா அவகள உண்க வர சொல்லும்…”

“அப்பவே யேம்டி சொல்லல?…”

“சொல்லுத நெலமையில நா இல்லய்யா…” என்றாள் கம்மிவிட்ட குரலில்.

error: Content is protected !!