உயிர் தழுவும் விழியே – 15 (2)

“அந்த புள்ளய பழி தீக்கேன்னு என்னியத்தேன் கூறு போடுதீக. ஒனக்கு ஒவப்பா இருக்கோம்மோவ்?…” என்ற மகனை சமாதானம் செய்ய முடியாமல் பார்த்தார் மயில்.

“பூமி அங்கிட்டு போவவுமே நா வந்துட்டேன். எல்லாத்தையும் கேக்கத்தேன் செஞ்சிக்கிட்டு இருந்தேன். என்கிட்டையே எம்பிட்டு பொரட்டு? ஒங்க வவுத்துல பொறந்துட்டேன், இவள கெட்டிட்டேன்னுதேன் சகிச்சிட்டு போவுறேன். இல்ல…” என்று விரலை நீட்டி எச்சரித்தவன்,

“வாம்மா சிட்டு, எப்ப வந்த?…” என்றான் மகிழ்ச்சியாக அவர்களை தாண்டி அவளிடம் சென்று நின்று.

“செத்த மின்னதேன்…” என்றவளுக்கும் அத்தனை சங்கடம்.

என்னவோ என்று உள்ளேயும் சென்றுவிட முடியாது. அதே நேரம் என்னை எப்படி சொல்லலாம் என கேட்கும் சூழலும் அங்கே இல்லை.

துளசியே நிலவரத்தை பார்த்துக்கொள்ள தான் பேசவேண்டியதையும் துளசியே  பேசினாலும் அவனின் வருத்தம் தொனித்த பேச்சில் மௌனமானாள்.

“செரித்தா, நீயி ஐயாவ பாரு. ஒன்னுத்துக்கும் வெசனப்படாத. செரியா?…” என்று அவன் சொல்லிவிட்டு செல்ல யோகுவும், மயிலும் அங்கேயே நின்றனர்.

“எல்லா இவளாலதேன்…” என்று யோகு விழியை முறைக்க,

“அத்தத்தேன் சொல்ல முடியுமாட்டும் ஒனக்கு. பேசிக்கத்தா…” என்று சொல்லி விழி உள்ளே சென்றுவிட்டாள்.

“யத்தே…” என மயிலை அழைக்க,

“போயி எம்புள்ளைய பாரு…” என சொல்லி மயிலு வெளியே வந்து அமர்ந்துவிட்டார்.

அவர் வந்த அடுத்தநிமிடம் துளசியும் வேகமாய் வெளியே வந்தவன் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டான்.

இதை கவனித்தாலும் அமைதியாகி உள்ளே இன்னும் உறக்கத்தில் இருந்த கூத்தபிரானை பார்த்தபடி அருகே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துவிட்டாள் விழி.

முதுகை ஒட்டிய பக்கவாட்டு தோற்றத்தில் எல்லாம் எறும்பு கடித்து அவ்விடம் எல்லாம் சிவப்பாய் தடித்திருந்தது.

பார்த்தவளுக்கு கண்ணில் நீர் ததும்பிவிட்டது. உறங்கிக்கொண்டிருந்தவருக்கு ஆழ்ந்த உறக்கம் கூட இல்லை.

அவர் அனுபவிக்கும் உடல் வலி அவரின் முகத்தில் அவ்வப்போது புருவ சுருக்கத்தின் மூலம் தெரிந்துகொண்டே இருந்தது.

மருந்து பூசப்பட்டிருந்தும் வெளியே நன்றாகவே தெரிந்திருக்க சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

சற்றுநேரத்தில் செல்வி அழைத்துவிட எடுத்து பேசியவளை பேசவே விடவில்லை செல்வி.

“நெஞ்சு நெறஞ்சு போச்சுத்தா. போதும்த்தா, போதும்த்தா…” என்று தனது மகிழ்ச்சியை வார்த்தைகளில் அவள் சொல்ல,

“யே மதினி என்னத்துக்கு இம்புட்டுக்கு மூச்சு வாங்குதாம்? கம்மின்னு சோலிய பாப்பியளா…” என்று அதட்டி அமைதிப்படுத்தும் வரை ஓயவில்லை செல்வி.

சந்தானலட்சுமி, காளிங்கராயன், வீரபாண்டி என்று மாற்றி மாற்றி பேச அவர்களின் சந்தோஷம் விழியை திணற செய்தது.

கூத்தபிரானும் சிறிதுநேரத்தில் விழித்துவிட அவருக்கு தேவையானதை தானே கவனித்தாள்.

வெந்நீரை போட்டுக்கொண்டு அதனை ஆற்றியபடி விழி கூத்தபிரான் அறைக்குள் உள்ளே நுழையும் முன்னர் எதிர்பட்ட யோகு,

“டீய வெச்சியா?…” என்றாள் அதிகாரமாக.

“என்னத்துக்கு?…”

“எனக்குத்தேன், இந்நேரத்துக்கு ஒரு டீய குடிப்பேமில்ல. வெச்சியா? இல்லாங்காட்டி போயி வெய்யி…” என்று கத்த மயில் எட்டி பார்த்தார்.

“தேவங்காட்டி நீயே போயி வெய்யி. என்னிய ஏம் கேக்குத? நா என்ன நீயி வெச்ச ஆளா?…” என்று விழி சென்றுவிட விட்டேனா பார் என பின்னோடே தொத்திக்கிகொண்டு வந்தாள் யோகு.

“எம்பிட்டு ஏத்தம் ஒனக்கு? இருக்கறது ஒட்டிகிட்ட ஒறவு. இதுல பம்மாத்தா?…” என்ற யோகுவை கண்டுகொள்ளாமல் கூத்தபிரானுக்கு நீரை புகட்டியவள் அவர் குடித்து முடிக்கவும்,

“வேல ஆகிபோச்சுத்தா. போயி டீய வெய்யி…” என்றாள் மீண்டும்.

கூத்தபிரான் என்னவோ பேச வர யோகு அவரை கண்டுகொள்ளாமல் விழியையே முறைத்துக்கொண்டு இருந்தாள்.

“ஐயா, ஒறங்கும், இல்ல இங்கின திரும்பும். என்னவாச்சும் சொல்லும், கேப்பம்…” என்றாள் அவரிடம்.

“ஏய்…”என்று அவளின் கையில் இருந்த தம்ளரை தட்டி விட்ட யோகு,

“என்னடி, இடும்பா பண்ணுத?…” என இரைந்தாள் அறையே அதிரும்படி.

“இங்காரு இதேன் மொதலும், கடேசியும். ஒனக்கு புளுக்க வேல பக்க ஒன்னும் இங்கின நா வந்து எறங்கல. இம்புட்டுநாத்து எங்கையாலதேன் டீய வெச்சி மொண்டுனியோ? இன்னிக்கி நாட்டாமத்தனமா பண்ணுத?…”

“யேம்டி நா சொன்னா கேக்க மாட்டியோவ்?…”

“என்னத்துக்குங்கேன்? நல்லாத்தான இருக்க? போயி ஒஞ்சோலிய பாரு…” என்று சொல்ல விழியை வேலைக்கும் வளைக்க முடியாமல் யோகுவிற்கு தலைகால் புரியாத கோபம் கூடியது.

கணவன் கோபமாய் பேசாமல் கிளம்பி சென்றதெல்லாம் அவளுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதை போல துளியும் கவலையின்றி இருந்தாள்.

இப்போது விழி வந்து வெகு இயல்பாக கூத்தபிரானை பார்த்துக்கொண்டதோடு, தங்களை துளியும் மதிக்காமல் அச்சமின்றி எதிர்கொண்டு இருப்பது உள்ளுக்குள் எரிந்தது.

“ம்க்கும், இங்கினவே ஒட்டிக்கிட்டே கெடந்து இந்தமனுசென் சோலிய முடிச்சு சொத்த அமுக்கலாமினா பாக்குத. ஒண்ணுமில்லாதவ பார்வ அம்புட்டும் சொத்துமேலதேன். இதுக்கொரு சாக்கு…” வேண்டுமென்றே காயப்படுத்த பேச,

“ஒண்ணுமில்லாதவ எவ்வாயில இருந்தாங்காட்டி அந்த வார்த்த ஒத்தமொற கூட வரல. அம்புட்டும் இருக்கப்பட்ட மவராசிக்கி யே அவியிது?…” என்றாள் நக்கலாக.

“இங்காரு, ஒங்கிட்ட மல்லுக்கெட்ட ஒன்னுத்துக்கும் நா இங்கின வரல. புள்ளத்தாச்சின்னு பாக்குதேன். கம்மின்னு போயிரு…” என்று விழி எச்சரிக்க,

“அதான சங்கதி, ஒங்கண்ணெல்லா எம்வவுத்து புள்ளமேலதேன் இருக்காக்கும்?…” நக்கலுடன் கேட்க விழிக்கு சுருக்கென்றது.

“யேலே வாப்பெட்டிய சாத்துங்கேன்…” என்று இறைந்தவனின் குரலில் யோகு பதறிப்போய்  திரும்பி பார்க்க அங்கே வீரபாண்டி கோபத்துடன் நின்றிருந்தான்.

“கெளம்பு போவலா…” என்று அவன் தங்கையை அழைக்க அவளோ வெலவெலத்து போனாள் அவனின் பார்வையிலும் அடக்கப்பட்ட கோபத்துடன் நின்ற விதத்திலும்.

“எண்ணே…”

“மறுக்கா ஒத்த வார்த்த எங்காதுல அம்புடுச்சு, தரதரன்னு இழுத்துட்டு போயிருவேன். அசிங்கப்பட்டு வராம கெளம்பு…” என்றவன்,

“சிட்டு மன்னிச்சிக்கிடுத்தா…” என்றான் அவளின் கலங்கிய விழிகளை பார்த்து.

விழியின் இழப்பை அறிந்தவன், அதை கண்கூடாக பார்த்தவனும் கூட. தங்கையின் பேச்சை தாங்கவியலாது அங்கிருந்து அவளை அழைத்து செல்வது தான் அப்போதைக்கு சரி என்று கிளம்ப சொல்லிவிட்டான்.

தன்னால் தான் உடனே சென்று விழியை பார்க்கமுடியவில்லை என்று கணவனை அனுப்பியிருந்தாள் செல்வி.

வந்தநேரத்தில் யோகுவின் அதிகார பேச்சில் வெகுண்டு போனவன் மயிலை முறைத்துக்கொண்டு நின்றான்.

மயிலுமே யோகு பேசியதை கேட்டுகொண்டு தான் உள்ளே வந்துவிட்டார். ஆனாலும் ஒரு அலட்சியம்.

இவள் யோகுவின் பேச்சை கேட்கமாட்டாளோ? அப்படியென்ன இவள் பெரிய மகாராணியா? இவள் இருப்பிற்கு இந்த வீட்டின் மருமகள் என்னும் பெயரே அதிகம் என்று நினைத்துக்கொண்டு தான் கேட்டபடி இருந்தார்.

வீரபாண்டி வந்தது அவரே எதிர்பாராதது. ஏற்கனவே யோகு பேசியதை கேட்ட மகன் கோவித்து சென்றது வேறு, இப்போது வீரபாண்டியா என்று பயந்து பார்த்தார்.

“கெளம்புங்கேன்ல?…” மீண்டும் யோகுவை அதட்ட,

“மசக்கக்கி வாயிக்கி என்னன்னொன்னு வருதுன்னுதேன் இவக்கிட்ட டீய வெச்சி தர சொன்னே? இது ஒரு குத்தமாக்கும்? என்னிய இந்த வெரட்டு வெரட்டுத?…” என்று உடனே யோகு கண்ணை கசக்க,

“அம்புட்டுத்தேன? ஒம்மதினி ஒனக்கு வெப்பா. நீயி வா அங்கின…” என்றான் பிடிவாதமாய்.

“எம்புருசென்கிட்ட சொல்லாம?…” என்றவளை தீயாய் முறைக்க,

“வீரா…” என்று யோகுவிற்கு பரிந்து வர பார்த்தார் மயிலு.

“எத்தே கம்மின்னு இருக்கனும். நாந்தேன் பேசுதேமில்ல…” என்றவன்,

“இப்ப நீயி வரலாங்காட்டி பொறவு பொறந்த வீடுன்னு ஒன்ன நெஞ்சுகூட்டுக்குள்ளையே அமித்திக்க வேண்டிதேன். நாங்க ஒருத்தரும் ஒன்னுத்துக்கும் வரமாட்டோம். ஆமா…” என்றதும் சத்தமின்றி கிளம்பி சென்றாள் யோகு.

“பாதகத்தி எந்த நேரத்துல கால வெச்சாளோ? எங்குடும்போம் சில்லு சில்லா செதறுதெ. எங்கிட்டு போயி சொல்லி அழ? வயசான காலத்துல யே ஆவிய துடிக்க வெக்கிதாளே?…” என்று நடுவீட்டில் அமர்ந்துகொண்டு மயிலு ஒப்பாரியை வைக்க வெறுமையுடன் அமர்ந்திருந்தாள் விழி.

சற்றுநேரத்திற்கு எல்லாம் பூமி வந்துவிட்டான் செல்வியின் மூலமாக நடந்ததை கேள்விப்பட்டு.

அவன் உள்ளே வரும்நேரம் கூத்தபிரான் வேதனையுடன் விழியின் கைகளை தட்டிக்கொடுத்து தலையை அசைத்துக்கொண்டிருக்க நாற்காலியில்  அமர்ந்திருந்தாள் சித்திரைவிழி.

“விழி…” என்றவனின் அழைப்பில் வேகமாய் அவனை திரும்பி பார்த்தவள் கண்ணில் இருந்து சட்டென்று நீர் இறங்கிவிட்டது.

“ஒண்ணுமில்லடி, ஒண்ணுமில்ல….” என்றவனின் நெஞ்சில் மேல் அப்படியே சாய்ந்துகொள்ள பூமியின் முகமும் வலியை காட்டியது.

கூத்தபிரானுக்கு புரியவில்லை இருவரின் இந்த அதிகபட்ச பரிதவிப்பு ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் பிள்ளைகள் கலங்கி இருக்க மனது தவித்தது.

யோகுவிற்கு பதிலுக்கு பதில் பேசிய விழி குழந்தை பற்றிய பேச்சில் அப்படியே திகைத்து நின்றதும், வீரபாண்டியின் கோபமும், இப்போது பூமியின் கேள்வியற்ற ஆறுதலும் அவருக்கு எதையோ உணர்த்த விளைந்தது.

மனது ஒன்றை ஒன்று எங்கெங்கோ தானாக சென்று முடிச்சிட்டுக்கொள்ள விடையோ அதிர்ச்சி தர கூத்தபிரானின் நெஞ்சில் மின்னல் வெட்டியதை போன்ற உணர்வு.

“யே சாமி…” என்றவரின் தொண்டைக்குழி சிக்கிக்கொள்ள பேசவும் முடியாமல் பிள்ளைகளை பார்த்தார்.

அவரின் அசைவை இருவருமே உணர்ந்து தங்களின் உணர்வை விடுத்து கூத்தபிரானை கவனிக்க வார்த்தைகள் வராமல் கண்ணீர் மட்டும் இருபக்கமும் வழிந்தது.

“ஐயா, ஐயா…” என்ற பூமியின் சத்தத்தில் மயிலு உள்ளே வந்து பார்க்க அவரை பார்த்ததும் இன்னும் உணர்ச்சிவசப்பட்டார் கூத்தபிரான்.

கண்கள் சிவக்க மயிலை வெளியே போக சொல்லும்படி உடலை அசாதாரணமாக அசைத்து நெளிய அதுவே இன்னும் வலியை தந்தது மனிதருக்கு.

என்னவென்றே புரியாமல் இத்தனை கோபத்துடன் தன்னை வெறுப்பாய் பார்த்தவரின் இந்த செயலில் திடுக்கிட்டு பார்த்தார் மயில்.

error: Content is protected !!