உயிர் தழுவும் விழியே – 15 (1)

உயிர் – 15

           மயிலும், யோகுவும் விழியின் பேச்சிற்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டு நிற்க அதை ஓரவிழியால் பார்த்தவள்,

“மாமா…” என அழைத்தாள் பூமியை.

“சொல்லு விழி…” என்றவனின் விழிகளில் நேசம் வழிந்தது.

“ஆத்தே, கூறுகெட்ட மனுசென், வெறிக்க வெறிக்க பாக்குதத பாரு. இந்தாள வெச்சிக்கிட்டு?…” என்று லேசாய் முணுமுணுக்க பூமிக்கு வாயெல்லாம் பல்.

“சொல்லுடி…” என்றான் அருகே வந்து லேசாய் தலையை சாய்த்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

குரலிலே அத்தனை குழைவு. முகத்தில் மத்தாப்புக்கள் மின்ன அந்த சந்தோஷத்தை கண்ணுற்ற யோகுவிற்கு வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது.

“என்னய்யா பல்ல காட்டுத. மொத என்னென்ன மருந்த குடுக்கனும்மினு இன்னொருக்கா சொல்லு…” என்று கேட்டு விழி உள்ளே செல்ல அவளின் பின்னே மயக்கத்துடனே தான் சென்றான் பூமிநாதன்.

பூமிநாதனுக்கு அவனின் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தவென்று தெரியவில்லை. அப்படி ஒரு நிலையில் திக்குமுக்காடி போயிருந்தான்.

கூத்தபிரான் மருமகளை கண்டதும் சிரிக்க அவரை பார்த்துவிட்டு என்னென்ன மருந்துகள் என்று கவனமாக புத்தியில் குறித்துக்கொண்டாள்.

அதனுடன் இப்போது என்னென்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டுக்கொண்டாள்.

“நர்ஸுக்கு சொல்லிருக்கேன் விழி…”

“ஏம்ய்யா அதேம் நா வந்திட்டேம்மில்ல. வேணாமின்னு சொல்லிடு…”  

“இல்லடி, ஆசுபத்திரியில அவகளுமே வெச்சிக்கிடத்தேன் சொன்னாக. வேணுமின்னா வார நேரத்த கொறச்சிக்கத்தேன்…” என்றதும் தலையாட்டினாள்.

“பொறவென்ன கெளம்பும். சோலிக்கு…” என அவனிடம் அடுத்ததாக சொல்ல,

“என்னத்துக்கு வெரட்டுதவ? இங்கின இருந்தா ஒனக்கென்னங்கேன்?…” என இழைந்தபடி அவன்.

“தள்ளும்ய்யா. அய்யன்…”

“ஐயா ஒறங்கியாச்சு…” என்று கண்ணை காண்பிக்க கூத்தபிரான் நிம்மதியாக தூக்கத்தில் இருந்தார்.

“அதுக்காங்காட்டி?…” விழிக்கு பூமியின் முகபாவனையிலும், அவனின் சிரிப்பிலும் புன்னகை பிறந்தது.

மனதிற்குள் இன்னும் குறையாமல் ஆயிரம் குமுறல்கள் இருந்தாலும் அதனை காட்டிக்கொள்ளவில்லை அவள்.

உண்மையில் தன்னையே தான் நிந்தித்துக்கொண்டாள். கோபத்தில் எத்தனை பெரிய முடிவெடுத்து தன் நிம்மதி மட்டுமே முக்கியமென்று கிளம்பிவிட்டவள்.

இப்போது தனக்கென உருகும் சொந்தங்களின் அருமையை புரிந்துகொண்டு வந்து சேர்ந்துவிட கணவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் விழியின் கண்கள் பனித்தது.

“அம்புட்டுக்கு கொண்டாட்டமா இருக்கோ ராசாங்கத்தாளுக்கு?…” என்றாள் வேண்டுமென்றே வம்பிற்கு.

“ராணி வந்தா பொறவு ராசாவுக்கு கொட தான்டி. பொறவென்ன பல்லத்தேன் காட்டுவேன்…” என்று சிரித்தவனின் புன்னகையில் பார்த்தவளுக்கு உள்ளம் குளிர்ந்து.

ஆனாலும் வீம்பிற்கு அவனிடம் வம்பு வளர்க்கத்தான் ஆசைகொண்டது அவன் மீது பித்தாகியிருந்த விழியின் மனது.

“ரொம்ப மவுந்துக்காத. நா ஒன்னும் ஒன்னிய பாத்துக்க வரல…” என்று தோளில் இடித்தாள்.

“ஒன்னிய ஆரு என்னிய பாக்க சொன்னாவ? நீ அய்யன பாருடி. நா ஒன்னிய பாக்குதேம்…” என்றான் இன்னும் சரசமாய்.

“யோவ், போம்ய்யா. அங்கன பத்திக்கிட்டு எரியுது. நீ என்னைய ஒரசுத…” என்று சொல்லியவள்,

“ஒ அக்காவுக்கு போன போட்டு ஒத்த வார்த்த சொல்லிடு. நெனப்பெல்லா இங்கினதேன் கெடக்கும்…” என்று ஞாபகப்படுத்தவும்,

“கெளம்பவாடி? ஒன்னியால இங்கின…” தாயை நினைத்து தயங்கி நின்றான் பூமி.

“யே என்னிய என்னத்த பண்ணிப்பிடுவாக? போம்ய்யா. நா ஆஞ்சா பத்தாம கெடக்காக்கும்? சோலி முடியாங்காட்டி இங்கன வாரப்ப தெடமா வா. ஒ அம்மைட்ட கத கேக்கனுமில்ல…”  என்று சொல்ல பூமிநாதன் முகத்தில் மென்மை படர்ந்தது.

“நெசமா முழுமனசாதேன் வந்தியா விழி?…”

“ஏம்ய்யா என்னிய பாத்தா என்னன்னு அம்புடுது ஒமக்கு?…” என்று அவனின் கன்னத்தில் இடித்தவள்,

“முன்னாங்காட்டியே யேங்குடும்பத்துக்கு உசுரா இருந்த மனுசன அந்த எமசாமிக்கி தூக்கி குடுத்தேம். இன்னொருவாட்டி அத்த பண்ண யே மனசுல தெம்பில்லய்யா…” என்று கலங்கிவிட்ட குரலில் கூத்தபிரானை பார்த்தபடி சொல்ல அவளை தோளில் சாய்த்துக்கொண்டான் பூமிநாதன்.

“செரி செரி…” என்று அவளின் தலையை கோத,

“யோவ் நீயி கெளம்புய்யா, இனிமேங்காட்டி நிம்மதியா இரும். நா இருக்கேமில்ல…” என்றவளின் மலர்ந்த முகத்தில் தானும் மலர்ந்தவன்,

“செரி…” என்று அவளின் கன்னத்தை தட்டிவிட்டு புறப்பட்டான்.

அறையை விட்டு வெளியே வந்தவன் அங்கே நின்றுகொண்டிருந்த தாயையும், யோகுவையும் பார்த்துவிட்டு,

“விழி, போயிட்டு போன போடுதேன். பாத்துக்க…” என்று சத்தமாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவனின் பின்னே வந்து வெளிவாசல் வரை நின்று அவன் செல்லவும் மீண்டும் உள்ளே வந்துவிட்டாள்.

ஊரெல்லாம் இதே பேச்சு தான் நடந்துகொண்டிருக்க இப்போது அந்த வீட்டில் வேலை செய்பவர்களும் அதிசயமாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள்.

உள்ளே வந்த விழி அங்கே உணவு மேஜையின் மேல் இருந்த தண்ணீரை எடுத்து குடிக்க,

“இம்பிட்டுத்தேன் ஒ வையிராக்கியமாக்கும்?…” என்று மயில் இடித்துரைக்க,

“யே யே வையிராக்கியம் இன்னுந்தேம் யேங்கிட்ட இருக்கு. பாக்கத்தான போறீக எம்புட்டுக்கு எவ்வையிராக்கியத்துக்கு வவுசுன்னு…” பதிலுக்கு பேசினாள் விழி.

“இந்தா என்ன கொரலு ஒசருது? மாமியாங்கற மருவாதி இல்லாம…” என்று யோகு பேச,

“நா என்னத்த பேசனும்ன்னு நீயி பாடம் படிக்காத…. என்ற விழி,

“இந்தம்மாவுக்கு தார இந்த மருவாதியே கூடம்பிட்டுத்தேன்…” என்றாள் மயிலை பார்த்து.

“ஆத்தே…” என்று வாயில் அடித்துக்கொண்ட மயிலு,

“இங்கின நீயி சோத்துக்குத்தென வந்த? ஒனக்கு எம்பிட்டு வாயி?…” என சொல்லும் பொழுதே துளசி வந்திருந்தான்.

“ஆமான்னா என்னங்கறீக?…” விழி அசைந்து கொடுத்தாள் இல்லை. ஒவ்வொன்றிற்கும் பதில் தான்.

“பாத்தீகளாத்தே, இப்ப வெளங்குச்சா?…” யோகு இளக்காரமாக பேச,

“எம்புருசென் சம்பாத்தியம் பண்ணுதாரு. நா அதுல ஒக்காந்தும் உண்குவே. நின்னுக்கிட்டும் உண்குவே. ஒங்களுக்கு யே எரியுதுங்கேன்? எம்புருசென் கவர்மண்டு உத்தியோகம். அத்துல நா உண்குதேன். என்னம்மோ இவ சம்பாதனையில ஒக்காந்தமாரி…”

“அடியே பொறவு நாங்க…” என்ற மயிலை நோக்கி விழி கையை நீட்டி,

“இந்தா சும்மா சலம்பல கூட்டிக்கிட்டு. ஒம்மக்கிட்ட மாரடிக்கவா வந்தேம்? போவீகளா…” என்று முந்தானையை உதறி சொருகிக்கொண்டு நடக்க துளசி உள்ளே வந்தான்.

“பாத்தீயளா மாமா, இந்த வாயாடி வந்ததும் ஒங்கள எளக்காரமா பேசுதத?…”  என்றதும் விழி நின்று திரும்பி பார்த்தாள்.

“என்ன? என்னத்த ஆரு பேசுனா?…” என்று வந்தான் துளசி.

“அவ புருசென் கவர்மெண்டு சம்பாதனையாம். நாமலாம் வெறும்பயன்னு சொல்லுதா…” என்று யோகு அப்படியே மாற்றி பேச மயில் மறுக்கவே இல்லை.

விழி நீ இதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம் என்பதை போல கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்தாள்.  

“ஆரு சொன்னா?…”

“வேற ஆரு இம்பிட்டு எளக்காரமா பேசுவா? எல்லா ஒம்ம தம்பிக்கி கெட்டி வெச்ச வெளங்காதவதேன்…” என்று கூசாமல் சொல்ல துளசி யோகுவை கூர்ந்து பார்த்தான்.

“இந்த நெனப்பு ஒங்கிட்ட இருந்தில்ல வாரதாட்டம் அம்புடுது…” என்றவனின் குரல் பேதத்தில் யோகு துணுக்குற்று பார்க்க,

“சரித்தேன் சிட்டு சொல்லுதது. அவ புருசென் இன்னொரு சம்பாதன தான பண்ணுதியான். நெசந்தான? அதுல என்னத்த குத்தத்த கண்டியாம்?…”

“என்ன பேசுதீக மாமா? ஒங்கள ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவேன், ஆக்கங்கெட்ட மனுசென்னு பேசி போட்டா. அவ சும்மாவா உட?…” என்றாள்.

துளசியை பற்றி தெரிந்தும் யோகு பேசி வைக்க ஏற்கனவே ஒரு பிடிப்பில்லாமல் இருந்தவன் பிள்ளை உண்டான பிறகு சற்றே நெகிழ்ந்து இருந்தான்.

இப்போது மீண்டும் யோகு தன் சுயரூபத்தை காண்பிக்க வெறுத்து போனான்.

“பாத்துக்கிடும்மோவ், இதென் நீயி எனக்கு வாங்கியாந்து தந்த வாழ்க்க. சீரழிச்சிட்டியேம்மோவ்…” என்றான் மயிலை பார்த்து.

“ய்யா துளசி…” என்று மயிலு மகனின் வேதனையான முகத்தை கண்டு நெருங்க பார்க்க,

“அங்கனவே நில்லும்மோவ்….” என்றவன்,

“அப்புடி என்னத்த பண்ணிப்பிடிச்சு அந்த புள்ளன்னு இம்புட்டு வெசத்த கக்குதீக?…” என்று எரிந்துவிழ,

“மாமோவ், நா…” என்று யோகு பேச வர,

“இந்தா வாப்பெட்டிய சாத்துங்கேன். இல்ல தல ஒ முதுவ பாத்துப்பிடும்…” என்றான் கையை ஓங்கிக்கொண்டு.

“நீயெல்லா என்ன மனுசி? இதுல நீ பிள்ளைய சொமக்கியேன்னுதேன் ஒன்னிய சாத்தாம விடுதேன். இப்பிடி மனசெல்லா வெசத்த வெச்சிக்கிட்டு பெத்தியன்னா பொறவு புள்ளையும் ஒன்னியங்காட்டில பொறந்துக்கும்?…”

“சாமி, துளசி…” மயில் மகனின் கையை பிடித்துக்கொள்ள,

“அவதேன் பேசுதான்னா ஒனக்கு சுருக்குங்கல, இல்லம்மோவ்? சத்தியங்காட்டி சிட்டு இத்த பேசிருக்காது. அது நெசம். பொறவு அம்புட்டும் இவ மனசுக்குள்ள தான இம்பிட்டும் இருந்துருக்கு. என்னிய என்னன்னு நெனச்சு இவ குடும்பம் பண்ணா?…” துளசி சொல்லவும் யோகுவும், மயிலும் திகைத்துவிட்டார்கள்.

error: Content is protected !!