உயிர் தழுவும் விழியே – 14 (3)

கூத்தபிரானுடன் பூமிநாதன் ஊருக்குள் நுழையும் நேரம் அவனிடம் எங்கு வருகிறான் என கேட்டிருந்துவிட்டு தான் செல்வி வீட்டிற்கு சென்றுவிட்டாள் விழி.

காளிங்கராயனை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு செல்வியை கூத்தபிரானை பார்க்க அனுப்பி வைத்தாள்.

காளிங்கராயன் காலுக்கு அடிபட்டிருக்க அவரால் எழுந்து அமர மட்டுமே முடியும். மற்றபடி சிறு சிறு காயங்கள் மட்டுமே.

சந்தானலட்சுமியுடன் அங்கே இருந்து பேசிக்கொண்டிருந்தவள் செல்வி மீண்டும் வரும்வரை பொறுமையாக இருந்தாள்.

விழி இருந்த தைரியத்தில் செல்வியும் தன் வீட்டில் தகப்பனை பார்த்துக்கொண்டு  பேசி இருந்துவிட்டு நிதானமாக வர,

“மதினி இப்ப நிம்மதியாங்காட்டி இருப்ப தான?…” என்று அவளிடம் விழி கேட்கவும்,

“எங்கன்னுத்தா நிம்மதி? திரும்ப அய்யன என்ன கெதிக்காக்குவாகளோன்னு கெதுக்குங்குது…” என்றாள் கலங்கி போய்.

“ஒன்னு ஆவாதுங்கேன். கம்மின்னு இரு…”

“அதென்ன புள்ள? என்னன்னு சொல்லுத நீயி? போத்தா…” என்றாள் சலிப்புடன்.

“இங்கின கூட்டியாந்து சேத்து பாத்துக்கிடுதேன்னு சொன்னாலும் தம்பிக கேக்கமாட்டிக்கியானுங்க. இங்க இவுகள உட்டுட்டு என்னால போவ வரன்னு முடியலத்தா…”

“இந்தா மதினி, நாந்தேன் சொல்லுதேம்ல. செரி, கெளம்புதேன்…” என்று அத்தனை உறுதியாக சொல்லி கிளம்புவளை வித்தியாசமாக பார்த்தாள் செல்வி.

கிளம்பிய விழி தனது வீட்டிற்கு வந்தவள் எடுத்து வைத்திருந்த தனது பையை தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.

தாயிடம் முதல்நாளே பேசியிருந்தாள். சிந்தாவிற்கு அத்தனை நிம்மதி. அப்போது தான் நிறைவாகவும் இருந்தது. ராசப்பனின் படத்தின் முன் நின்று கும்பிட்டுவிட்டு,

என் பெண் இரங்கிவிட்டாள் போதும், அவள் வாழ்க்கையை யாராலும் தட்டிப்பறிக்கவும், கெடுக்கவும் முடியாது என்பது சிந்தாவிற்கு தெரியும்.

“ம்மோவ், ஒண்டியா இருந்துப்பியாத்தா நீ?…” என்றாள் கண்ணீருடன்.

“எனக்கென்னடித்தா? இப்பத்தேன் எனக்கு நிம்மதியாட்டம் இருக்குத்தா. மவராசியா கெளம்புத்தா…” என்று நிறைந்த மனதுடன் ஆசிர்வாதம் செய்தார் சிந்தா.

வேந்தனிடம் ஏற்கனவே பேசியிருக்க பேசும்பொழுதே பூமியிடம் சொல்ல கூடாதென்று சொல்லிவிட்டிருந்தாள்.

“நா ஒங்கூட வரவாத்தா?…” சிந்தா கேட்க,

“நா பாத்துகிடுதேம்மோவ். நீயி இங்கின இரு. நா சொல்லும்போது வாத்தா…” என்றவளை சற்றே திகைப்புடன் பார்க்க,

“போனதும் மாமியா சாமியாடும்ல. செத்த அத்தோட மண்ட கனத்த  எறக்கி வெக்கிதேம். நீயும் வந்தா பொறவு அத்தோட பேச்சு அசிங்கேந்தேன்…” என்றவள் முகம் அருவருத்தது மயிலு அன்றொருநாள் பேசிய பேச்சில்.

தன் தந்தையின் இறப்பின் பின் எந்த உறவே வேண்டாம் என்று மொத்தமாய் உதறி வந்தாலோ இன்று இன்னொரு தகப்பனையும் இழந்துவிட கூடாதென கிளம்பிவிட்டாள் விழி.

அவள் சென்றநேரம் அப்போதுதான் உணவை உண்டு முடித்திருந்த பூமி கையை கழுவிவிட்டு எழுந்து நின்றிருக்க வீட்டினுள் நுழைந்துகொண்டிருந்தாள் அவன் மனைவி.

அத்தனை நிமிர்வும், அதே தெளிவும் அவளிடம் தென்பட அவன் எடுத்து தந்திருந்த புடவையை கட்டிக்கொண்டு வந்தவளிடமிருந்து பூமியின் விழிகள் இங்குமங்கும் அசையவில்லை.

தான் காண்பது கனவா நனவா என நம்பமுடியாத பார்வையுடன் அப்படியே சமைந்துபோய் நின்றிருந்தான்.  

“என்னய்யா கம்மின்னு நிக்கித?…” என்று பேசிக்கொண்டே அவனருகே வந்தவள்,

“இந்த பைய கொண்டு போயி மேல வெய்யும்….” என அதிகாரமாய் நீட்டவும் உள்ளிருந்து வெளியே வந்துவிட்டார் மயில். உடன் யோகுவும்.

“யே ஆருடி ஒன்னிய உள்ள வுட்டா?…” என்று கேட்க மயிலை கண்டுகொள்ளவே இல்லை.

பூமியின் கையில் தான் கொண்டுவந்த பையை திணித்தவள் விறுவிறுவென்று மாமனார் இருக்கும் அறைக்கு செல்ல பூமிநாதனுக்கு உள்ளுக்குள் துள்ளி குதிக்காத குறைதான்.

அதிர்ச்சி விலகி நடப்பு பிடிபட அவனின் சந்தோஷத்திற்கு அளவில்லை. இனி எந்த கவலையும் இல்லை என்பதை போல நிம்மதியுடன் அவளின் பின்னே சென்றான்.

கொஞ்சமும் தன்னை கவனியாது மனைவியை தேடி செல்லும் மகனை இன்னுமே பீதியுடன் பார்த்து தானும் செல்ல அங்கே கூத்தபிரானிடம் பேசிக்கொண்டு நின்றாள் விழி.

“இனிமேங்காட்டி இங்கனதேம்ய்யா. நா பாத்துகிடுதேம் ஒன்னிய. என்னைய மீறி ஒனக்கு என்னாகுதுன்னு பாப்போமா?…” என்று சொல்ல கூத்தபிரானின் கண்கள் ஒளிர்ந்தது மருமகளின் பேச்சில்.

“எம்புருசென பாக்க நீயி ஆருடி? ஆக்கங்கெட்ட கூவக்கி எவ்வீடுல என்ன சோலிங்கேன் …” மயிலு ஆரம்பித்துவிட,

“அத்தே எம்புட்டு நாளைக்கி மிசின மிதிப்பா? அதேன் இங்கின சொவமா இருக்க வந்திட்டா…” என்று யோகு தூண்டிவிட பூமிநாதன் பேச வாயை திறந்தான்.

“இந்தா…” என்றவனை,

“இந்தா நீயி கம்மின்னு நில்லும்…” என்று அவனை பேசவேண்டாம் என்பதை போல மறுத்தாள் விழி.

“சரியா சொன்ன யோகு. சொத்துக்குத்தேன் என்னடா சாக்குன்னு ஒட்டிக்க வந்திருக்கா இவ…” என்ற மயிலு,

“வெளிய போடி…” என்றார் விழியை பார்த்து.

“என்னமோ நீயி சம்பாதிச்சு தட்டினதாட்டம் பேசுத? ஒனக்கு இது ஒம்புருசென் வீடுன்னா எனக்கும் இது எம்புருசென் வீடு. இங்கின நா இருக்கதுக்கு ஒஞ்சம்மதோ தேவயில்லங்கறேன்…” என்றாள் விழி.

“யாத்தே எம்புட்டு பேச்சு? இவ….” என்று யோகு ஆரம்பிக்க,

“இந்தா நீயெல்லா என்னிய பேசுதியா? ஒன்னிய பெத்த அய்யன பாக்க துப்பில்ல, இந்தம்மாவுக்கு புருசன கவனிக்க துப்பில்ல. வந்துட்டாக வாய தொறந்துட்டு…” என்று சரிக்கு சரி நின்றவளை என்ன சொல்லி அடக்குவது என்று தெரியவில்லை.

“என்னத்தே என்னத்த பேசன்னு ரோசனையா? நாந்தே ஒம்பேச்சில கொதிச்சு கூறுகெட்டதனமா கோமிச்சிக்கிட்டு போயிட்டே. இப்பத்தே தெரியுது ஒவ்வாயில நல்லது வந்தாத்தேன நா ஆத்தேன்னு பாக்கனு. நீ பேசினா யே அம்மை அந்தமாரியாகிடுமா?…”

சித்திரைவிழி தீயாய் உறுத்து விழித்து கேட்க மயிலு விதிர்த்து போய் தான் நின்றார்.

error: Content is protected !!