உயிர் தழுவும் விழியே – 14 (2)

அப்படி என்ன கவனிப்பின்றி ஒரு தாய் இருப்பார் என்றுதான் தோன்றியது. சாக கொடுக்க இருந்தவரை படாதபாடுபட்டு மீட்டிருக்க எவ்வளவு கவனித்திருக்க வேண்டும்?

இந்தளவிற்கு அலட்சியம் எங்கிருந்து வந்தது? முடியவில்லை என்றால் செவிலிப்பெண் வைத்து பார்த்திருக்கலாமே?

அத்தனை ஆற்றாமை அவனுக்குள். தானும் கூட தயை மீறிய ஒரு கவனிப்பா இருந்துவிடும் என்று விட்டுவிட்டோமே என்று குற்றணர்வில் தவித்துக்கொண்டு இருந்தான்.

தோளில் சேர்த்து அடிபட்டிருக்க கழுத்தை ஒட்டி வேறு கட்டு போட்டிருந்தார்கள். தினமும் காலை உடலை துடைத்து அவருக்கு படுக்கையை மாற்றி என எல்லாம் செய்வது பூமியும், துளசியுமே.

அப்படி இருக்க அன்று காலை படுக்கை விரிப்பு முதற்கொண்டு மாற்றி இருக்க இரவு அவருக்கு முடியவில்லை என்று தூக்கும் பொழுது அவர் படுக்கையில் அவ்வளவு எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தது.  

அதனை கண்டதும் தான் எவ்வளவு வேதனையில் தந்தை இருந்திருப்பார் என்றே அவனுக்கு விளங்கியது.

காய்ச்சல் அனலாய் கொதிக்க கண்ணீர் கோடிறங்கியிருந்தது கூத்தபிரானின் முகத்தில்.

இரவு பண்ணை வேலைகளையும் சேர்த்து முடித்து வர தாமதமாக வந்ததும் தந்தை உறங்குவதை பார்த்துவிட்டு கீழே விரித்து படுத்தவன் நள்ளிரவில் முணங்கலில் தான் விழிக்கவே செய்தான்.

மருத்துவமனையில் அத்தனை திட்டுக்கள். இதுதான் நீங்கள் பார்க்கும் லட்சணமா என்று கேட்டு பேசிவிட குறுகி போனான். மயிலிடம் பார்வை செல்லவே இல்லை.

இப்போது உள்ளே நுழைந்து கூத்தபிரான் கண்விழித்து தங்களை பார்த்ததும் தான் நிம்மதியே வந்தது.

விழியோடு சேர்த்து மகனை பார்த்ததும் இருவரின் கையையும் பிடித்துக்கொண்டார்.

இன்னும் அவரால் சரிவர பேசமுடியவில்லை. ஏதாவது வேண்டும் என்றால் மெல்லிய குரலில் தான் சொல்லமுடியும்.

இப்போது பேச்சும் வராமல் அவர்களை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட வார்த்தைகள் வராமல் அழுதுகொண்டே இருந்தார்.

“என்னத்துக்கு அழுவுதீகய்யா? ஒமக்கு ஆயுசு கெட்டிங்கேன். கண்ண தொடையும். அழுதீக அம்புட்டுத்தேன்…” என்று விழி மிரட்ட அவளின் கையை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

வயதான நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் தான் படுக்கையில் விழுந்துவிட கூடாது என இருந்தவர்.

தன்னுயிரை யாருக்கும் சிரமமின்றி எடுத்துக்கொள் என்பதை போன்ற வேண்டுதல்கள் தான் இறைவனிடம் எப்போதும் இருக்கும்.

அதுவும் இந்த விபத்தின் பின் இன்னுமே மனதளவில் துவண்டு போனார். தன்னால் இனி நடமாட முடியாதோ என்று.

பேசவும் முடியாமல், நினைப்பதை சொல்லவும் முடியாமல் தவித்த தவிப்பும், அதுவும் அன்று மருந்து கொடுக்கும் நேரம் அது படுக்கையில், கீழே தரையில், போட்டிருந்த கட்டில் எல்லாம் சிந்திவிட மயிலிடம் அழைத்து கூறினார்.

அவருக்குத்தான் புரியவே இல்லை. வெறுமனே அந்த மருந்தை துணி கொண்டு துடைத்துவிட சத்து மருந்தின் இனிப்பிற்கு எறும்புகள் படையெடுதிருக்க எத்தனை அழைத்தும் மயிலுக்கு விளங்கவில்லை.

“பேசாம கண்ண மூடி படும். ஒறங்கும் மொத…” என்று சொல்லிவிட்டார்.

யாரை சொல்லி நோவது? அந்த நேரத்தில் மகன்களும் இல்லாமல் கேட்பாரற்று உயிர் துடித்துக்கிடந்தார்.

நிச்சயம் பிழைப்போம் என்ற நம்பிக்கை இழந்து இந்த வலியோடு என்னை எடுத்துக்கொள் இறைவா என்பது தான் அவரின் பிராத்தனையாக இருந்தது.

இப்போது பிழைத்து தன் மகனும் மருமகளும் சந்தோஷ கண்ணீரோடு தன் முன்னே.

“மேலுக்கு சொவப்படுதாய்யா? எங்கினையாச்சும் வலிக்குதாய்யா? மன்னிச்சிக்கிடும்ய்யா…” என்று அவரின் காலை பிடித்துக்கொண்டு கேட்கும் பொழுதே பூமியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்துவிட்டது.

“யாத்தே, மாமா அழாதீக. யோவ்…” என்று அவனின் கையை பிடித்து தனக்கருகே நிறுத்தினாள் விழி.

“தப்புத்தேன் கொஞ்சமாட்டு ஒன்னிய பக்கத்துல இருந்து பாக்காம போன பாவிய்யா நானு. யே சாமி என்னம்மா வலியில சுருண்டுருப்பீக?…” என்று அடக்கி வைத்த அழுகையை எல்லாம் அவன் கேட்டு பேசி சொல்லி சொல்லி அழ மயில் இறுகி போனார்.

என்ன பேச முடியும் மயிலால்? ஏற்கனவே ராசப்பன் இறப்போடு பேச்சை நிறுத்தி இருந்தவன் பின் அவ்வப்போது கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.

இப்போது மீண்டும் அப்படி இருந்துவிட பயந்து போனார். தன்னை கேட்டு திட்டியிருந்தாலாவது தேவலை என்று தோன்றியது.

ஆனால் மகன் பார்க்கவே மாட்டேன் என்பதை போல இருக்க அதுவும் விழியின் முன்பு அப்படி இருக்க மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தார்.

தன் மீதும் தவறு தானே? ஏதாவது ஒன்று ஆகி இருந்தால்? நினைக்கவே அச்சமாக இருந்தது. உள்ளுக்குள் கலங்கி நின்றாலும் வெளியே காட்ட முடியவில்லை.

உள்ளே விழி பூமிநாதனை தேற்ற அத்தனை பேச வேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டிருந்தான் அவன்.

மீண்டும் மருத்துவர்கள் வர அன்றைக்கு மறுநாள் ஒருநாள் இருந்துவிட்டு அதற்கு மறுநாள் காலை வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டார்.

அன்று இரவு பூமியுடன் விழியுமே வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கிக்கொண்டாள்.

துளசி வரவும் அவனிடம் சொல்லி மயிலை அழைத்து போக சொல்லிவிட்டான் பூமிநாதன்.

பூமிநாதனிடம் பேச பயந்து துளசியிடம் இங்கே இருக்கிறேன் என்று மயில் சொல்ல துளசியின் முறைப்பில் கிளம்பிவிட்டார்.

இடையில் வீரபாண்டி வந்து பார்த்துவிட்டு சென்றான். செல்விக்கு வந்து பார்க்கவேண்டும் என்று அத்தனை துடிப்பாய் இருந்தது.

யோகுவிடம் கூட சொல்லிப்பார்த்தாள் செல்வி. இங்கே வந்து மாலை வரை இருந்தால் தான் சென்று தகப்பனை பார்த்துவிட்டு வருகிறேன் என்று.

“என்னாலாவாது மதினி. எனக்கே எந்திச்சதுல இருந்து நோவுதுன்னு பயந்து கெடக்கேன். தலையெல்லா கிறுகிறுக்குது. வேணுமின்னா வெறுமனே ஒக்காருதேன். எல்லாத்தியு செஞ்சி வெச்சிட்டு கெளம்புக…” என்று சொல்ல செல்விக்கு அவளிடம் மாமனாரை, மாமியாரை விட்டு செல்ல மனமில்லை.

வேலைகளை செய்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால் யோகு அங்கே அவர்கள் கேட்ட நேரத்தில் எதையும் சிரத்தையாக எடுத்து தருவாளா?

படுக்கையில் இருக்கும் மாமனாருக்கு அவசரத்திற்கு உதவுவாளா என்றிருந்தது. மனதை கல்லாக்கிக்கொண்டு இருந்துகொண்டாள் செல்வி.

வீரபாண்டியன் கூட தான் இருந்து பார்த்துகொள்கிறேன், நீ பார்த்துவிட்டு வா என்று சொல்ல செல்விக்கு மனதில்லை. விழி தான் தேற்றினாள்.

“நாந்தேன் இருக்கேமில்ல. அய்யன நா பாத்துக்கிடுதேம். அங்கன கம்மின்னு நிம்மதியாங்காட்டி இரு மதினி…” என்றுவிட்டாள் செல்வியிடம்.

அதன் பின்புதான் கொஞ்சமாவது செல்வி அமைதியானாள். ஆனாலும் மனது தீயாய் எரிந்துகொண்டு இருந்தது யோகுவின் சுயநலத்தில்.

வீரபாண்டிக்கும் தெரிந்தாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. இதற்கு எல்லாம் காலம் வராமலா போய்விடும் என்று நினைத்தான்.

“இந்தா நம்மள விட ஆரு நல்லா பாத்துப்புடுவாக சொல்லு? அங்கன போனாலு ஒம்மனசு இங்கனதேன் கெடக்கும். விடுத்தா. ஆரு பாத்தாலும் நீ நிக்கித மாறி வருமா யே அம்மைக்கும், அய்யனுக்கும்?…” என்றுவிட்டான் யோகு இருக்கும் பொழுதே.

யோகுவிற்கு முகத்திலடித்ததை போல் இருக்க மீண்டும் கிளம்பி தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அவள் வந்தநேரம் மயிலும் வந்துவிட இரண்டுநாள் முடிந்து மறுநாள் அவர்கள் எதிர்பாராததாக இருந்தது.

மறுநாள் காலையிலேயே கூத்தபிரானிடம் சொல்லிவிட்டு விரைவிலேயே கிளம்பிவிட்டாள் விழி.

பூமிநாதன் எதுவும் சொல்லவில்லை. கிளம்புவளிடம் தலையை மட்டும் அசைத்தான்.

அங்கேயே மருத்துவமனையில் சொல்லி தந்தையை பார்த்துக்கொள்ள ஒரு செவிலிப்பெண்ணை ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

error: Content is protected !!