உயிர் தழுவும் விழியே – 14 (1)

உயிர் – 14

         கூத்தபிரானும், காளிங்கராயனும் வீடு வந்து சேர்ந்து நான்குநாட்கள் ஆகிவிட்டிருந்தது.

மருத்துவமனையில் இருந்து வந்தபின்னர் விழி அவளின் வீட்டில் இருந்தபடி பூமியிடமும், செல்வியிடமும் விவரங்களை கேட்டுக்கொள்வாள்.

இந்த நான்குநாட்களில் தினமும் காளிங்கராயனையும் சென்று பார்த்துவிட்டு வந்தவளுக்கு கூத்தபிரானை பார்க்க முடியவில்லையே என்னும் ஆதங்கம் மிதமிஞ்சி இருந்தது.

பூமியை தான் அதற்கும் பந்தாடினாள். அவளின் கேள்விகளில் அவனே திணறித்தான் போனான்.

“அம்புட்டுக்கு அவசியந்தேன்னா இங்கின வந்துதேன் பாரேன்டி…”  என்று கூட கத்திவிட்டான் பூமிநாதன்.

எதற்கும் அசரவில்லை. அப்படித்தான் கேட்பேன், பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்னும் பிடிவாதத்தின் முன் பூமியின் கடுப்புகள் எதுவும் எடுபடவில்லை.

செல்வியிடம் நேராகவே சென்று கேட்டுக்கொள்வாள். செல்வியாலும் மாமனாரை பார்க்கவேண்டுமே என தன் வீட்டிற்கும் செல்லமுடியவில்லை.

சந்தானலட்சுமிக்கு இந்த களேபரத்தில் வயோதிகத்தால் உடல் நலிந்து மனதளவில் உடைந்து போயிருந்தார்.

அவரையும் பார்த்து, மாமனாரையும் பார்த்து கவனிக்க வேண்டிய கட்டாயம் செல்விக்கு.

அதனால் தனது வீட்டிற்கு செல்லவில்லை. போனில் மட்டும் விசாரித்துக்கொள்வாள்.

அதைவிட நம்பிக்கை தன் வீட்டில் தாயும், தம்பி மனைவியும் என ஒருவருக்கு இரண்டுபேர் இருக்க அவர்கள் பேணிகொள்வார்கள் என்கிற அதீத நம்பிக்கை வேறு.

அவ்விடத்தில் தான் சறுக்கிவிட்டார்கள் குடும்பத்தினர். வந்த இருநாட்கள் கூத்தபிரானுக்கு பரவாயில்லை.

அதன்பின்னர் உடலில் ஏதோ அசெளகரியம் தோன்ற ஆண்களுக்கு என்னவென்று புரியவில்லை.

மயில் யோகுவிற்கும் கூட பிடிபடவில்லை. என்னவோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.

அதன் விளைவு ஐந்தாம் நாள் நள்ளிரவில் உடல்நிலை மோசமடைய மீண்டும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கூத்தபிரான்.

கேள்விப்பட்ட சித்திரைவிழியும் தாயுடன் டவுனுக்கு வந்துவிட்டவள் நேராக பூமியிடம் தான் நின்றாள்.

கூத்தபிரான் மருந்தின் விளைவால் உறக்கத்தில் இருக்க வெளியே பூமிநாதன் அமர்ந்திருந்தான்.

யோகு இன்றி மயில் மட்டும் அங்கே தள்ளி அமர்ந்திருந்தார் முகமெல்லாம் பீதியை சுமந்து.

“யேங்கிட்ட சொல்லனுமின்னு கூட ராசாங்கத்தளுக்கு ஆவலையோ?…” என்று வந்ததும் அவனிடம் சண்டைக்கு நிற்க தளர்ந்த முகத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் பூமிநாதன்.

“இந்தாபிள்ள என்ன கத்துத? சத்துன்னு வாயில வெக்க போறேம் பாரு…” என சிந்தா அதட்டினார் மகளை.

“பொறவு என்னத்தா, வீட்ட தாண்டித்தான போனாக. ஒத்த வார்த்த போன போடுததுக்கு என்னவா? இல்ல சத்தங்குடுக்கலாமில்ல….”

“சிட்டு, என்னத்துக்கு தொண்டைய கனக்கித? மொல்லத்தேன் பேசேன்…” சிந்தாவிற்கு எங்கே அங்கே சண்டை வந்துவிடுமோ என்று பயம் பிடித்துக்கொண்டது.

மயில் வேறு பார்த்துக்கொண்டு இருக்க மகள் அதற்கு ஏற்றார் போல மருமகனை அதட்ட நிச்சயம் பெரிதாய் ஆகும் முன் மகளை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தார்.

“செத்த ஒக்காருடி. வந்தவொடனே எஞ்சங்க புடிக்கனுமோ?…” என்று அவளின் கையை பற்றி அருகில் அமர்த்தினான்.

“அத்தே…” மாமியாரை பார்க்க,

“நா இங்கின இருக்கேம்ய்யா…” என்று அவர்களில் இருந்து தள்ளி அமர்ந்துகொண்டார்.

எந்த நேரமும் மயில் எழுந்து வரலாம் என்பதை போல தங்களை தீயாய் முறைத்தவரை காணவே அச்சமாக இருந்தது சிந்தாவுக்கு.

முகத்தை கோபமாய் வைத்திருந்தாலும் என்னவோ என்னும் பரிதவிப்பு விழியிடம் அப்பட்டமாய் தென்பட பூமிநாதனுக்கு தைரியம் வந்ததை போலிருந்தது.

ஆனாலும் சலிப்பு, எப்படியும் வீடு திரும்பினால் விழியின் அண்மை இல்லை என்னும் நிதர்சனம் முகத்திலறைய மீண்டும் இறுக்கமானான்.

அதுவே அவன் கோபத்தை உள்ளுக்குள் தூண்டியது. வார்த்தைகளின்றி அவள் தரும் இந்த நம்பிக்கை அவள் சென்றால் சேர்ந்தே சென்றுவிடுமோ என்ற எண்ணம் மனதை அறுக்க மௌனமாய் இருந்தான்.

“நா கேட்டுக்கிட்டே கெடக்கேன்? நீயி சாத்தின வாப்பெட்டிய தெறப்பேனான்னு சாதிக்கிற?…” என்றாள் அதட்டி.

“என்னத்தடி சொல்ல? ஒனக்கு ஆரு சொன்னா?…”

“மதினிக்கி காலேலே போன போட்டே. அவுகதேன் சொன்னாக…”

“ம்ம்ம்…” என்று மீண்டும் அமைதியானான்.

அவனுக்குமே விழி அழைத்திருந்தாள் தான். ஆனால் எடுக்கவில்லையே. அதனால் உடனே செல்விக்கு அழைத்தது.

“மேலுக்கு முடியலன்னுதேன் சொன்னாக. என்னன்னு கேக்குதேம்ல? சொல்லும்…” என்றாள் அவனை தன் பக்கமாய் முகத்தை பிடித்து திருப்பி.

“என்னத்தடி சொல்ல சொல்லுத? கட்டு போட்ட எடத்துல தண்ணி கோத்துருக்கு. அதுல வந்த தொத்தால காச்சலு ராவுக்கு ஒசந்து தல தொங்கிருச்சு…” மனதொடிந்துபோய் அவன் சொல்ல,

“அம்புட்டுக்கு கெவனிப்பில்லாமவா போச்சு? ஒவ்வீட்டுல அம்புட்டுபேரும் என்னத்த செஞ்சிக? ஒத்த மனுசென கண்ணுங்கருத்துமா பாக்க துப்பில்ல. ஒக்காந்து ஊளு ஊளுன்னு அழுவ மட்டும் படிச்சீகளோ?….” என்றாள் இன்னும் சத்தமாய்.

மயிலுக்கு கோபம் அத்தனை வந்தது தான். ஆனால் காண்பிக்க முடியவில்லை அவரால்.

ஏற்கனவே சின்ன மகன், பெரியமகன், மகள் என்று அத்தனைபேரும் அவரை பந்தாடிவிட்டார்கள் வார்த்தைகளால்.

வயதான காலத்தில் அதற்குமேலும் தான் என்ன செய்ய முடியும்? மசக்கையை காரணம் காட்டி யோகு வளையாமல் திரிய ஒற்றையாய் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கணவரை கவனித்தவருக்கு முடியவில்லை.

சரியாகி தான் வந்துவிட்டாரே. இனி ஒன்றுமாகாது என்னும் சிறு அலட்சியம் இருந்ததோ என்னவோ.

ஆனால் உண்மை காரணம் தாய் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பிள்ளைகள் சற்று அசமந்தமாக இருக்க, மருந்து மாத்திரைகள், நேரத்திற்கு உணவு என்று கொடுக்கிறோமே, ஒன்றுமாகாது. தேறிவிடுவார் என்று மயில் இருந்துவிட்டார்.

அதற்குமேல் அவரின் உடலும் ஒத்துழைக்கவில்லை. இரவெல்லாம் துளசியும், பூமிநாதனும் மாறி மாறி பார்த்துக்கொள்ள பகலிலும் அவர்கள் தான் அதிகம் கவனித்தது.

விளைவு இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்க மீண்டும் ஒரு அலைப்புறுதல் அக்குடும்பத்தில்.

இப்போது விஷயத்தை மெல்லிய குரலில் பூமிநாதன் விழிக்கு சொல்லவும் கண்ணீர் தான் வந்தது அவளுக்கு.

“என்னத்தையோ கொட்டிட்டாகடி. மருந்துன்னுதேன் நெனக்கேன். இனிப்புக்கு எறும்பு சுத்திக்கிச்சு. அது கையில இருந்த மருந்துல ஏறி மொச்சு இந்த மனுசென் என்ன பாடுபட்டாரோ?…” என்று சொல்லும்பொழுதே பூமியும் நொறுங்கிவிட அவனை தோளில் தாங்கிக்கொண்டாள் விழி.

அவள் பார்வை மாமியாரை எரித்தது. கோபத்தை எல்லாம் இன்னும் கொட்டமுடியாமல் விழி வார்த்தைகளை தனக்குள் அடக்கியபடி கணவனின் கையை தட்டிக்கொடுத்து அமர்ந்திருந்தாள்.

சற்றுநேரத்தில் கூத்தபிரான் கண்விழித்துவிட்டதாக சொல்லி மருத்துவர்கள் அழைக்கவும் இருவரும் எழுந்து செல்ல மயிலும் வேகமாய் வந்தார்.

அப்போதைக்கு விழியை எதுவும் பேசவேண்டாம் என்று தானும் உள்ளே நுழைய பூமிநாதனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை.

error: Content is protected !!