விழியும் எதுவும் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. வீட்டிற்கு சென்றாலும் நிச்சயம் அவனுக்கு இந்த ஓய்வு கிடைக்காது என்று தூங்கட்டும் என்று சத்தமின்றி உள்ளே வந்துவிட்டாள்.
அடுத்த அரைமணிநேரத்தில் வேந்தன், சிந்தாவுடன், வீரபாண்டி, செல்வி, காளிங்கராயன் என அனைவரும் வந்துவிட்டார்கள்.
“என்னத்தா எல்லா ஆக்கிட்டியா?…” என்று நேராக வந்த செல்வி அங்கே பூமிநாதன் உறங்குவதை பார்த்துவிட்டு மெல்ல உள்ளே வந்தாள்.
அங்கே அவனை பார்த்தவர்கள் மனமும் கனிந்து போனது. சத்தம் காட்டாமல் அந்த வரவேற்பறையை விட்டு பின்னால் வந்துவிட்டனர்.
“யாத்தா சிட்டு, அவுகளுக்கு உண்க என்னதாச்சும் குடுத்தியா புள்ள?…” சிந்தா கேட்க,
“இல்லாத்தா…” என்றாள் விழி
“யத்தே, மொத அவென் ஒறங்கி எந்திக்கட்டும். பொறவு உண்குவான். விடேம்…” என்று செல்வி சொல்லவும் சிந்தா சத்தம் காட்டவில்லை.
வீரபாண்டி வந்து விழியிடம் பேசிக்கொண்டு நின்றான் என்ன செய்திருக்கிறாள் என்று பார்த்துவிட்டு பூமி எழுந்துகொள்ளட்டும் என்று அமர்ந்திருந்தான்.
சிறிதுநேரத்தில் பூமிநாதனுமே சட்டைப்பையில் வைத்திருந்த போன் அதிர்வில் விழித்துவிட்டான்.
எழுந்ததும் போனில் பேசிவிட்டு பார்க்க அவனின் முன்னால் அத்தனைபேரும் தள்ளி அமர்ந்திருந்தார்கள்.
“எப்ப வந்தீக?…” என்று நன்றாக சம்மணமிட்டு அவர்கள் எதிரே அமர்ந்தான்.
“அத்த நா கேக்கனும்லே. நீ எப்ப இங்கின கட்டய சாச்ச? இங்கதேன் வாரேம்ன்னு ஒத்த வார்த்த சொல்லல நீயி?…” என்று வீரபாண்டி பூமியை வம்பிழுத்தான்.
“அதான? யே ஒம்மாமேங்கிட்ட வாரப்ப இங்க இங்கதே போறேம்ன்னு சொன்னாத்தா என்ன கொறஞ்சாலே போவ நீயி?…” என்று செல்வியும் தம்பியை சாடிவிட்டு,
“அவென் என்னத்த செய்யிவியான். அவென் பொஞ்சாதிய பாக்க வர ஆர கேக்கனும்ங்கேன்? நீரு மட்டும் ஒம்ம தங்கச்சி வீட்டுக்கு கொட்டடிச்சிட்டா வந்தீரும். எந்தம்பிய கேக்குதீரு?…” என்று வீரபாண்டியையும் கேட்க தவறவில்லை.
“யாத்தே, நா பத்தாலும்பாத்தே ஒன்னியமாரி ஒருத்திய பாத்ததில்லத்தா. தொட்டியவும் ஆட்டுத, புள்ளையவு தூக்குத?…” என்று வீரபாண்டி வாயில் கை வைக்க சரியாக கூத்தபிரான் வந்துவிட்டார். வீடு நிறைந்து ஆட்கள்.
அங்கே தங்கள் வீட்டு பந்தியில் கூட்டம் குறைந்துவிட பொறுப்பை துளசியிடம் கொடுத்துவிட்டு கிளம்பி வந்துவிட்டார்.
“ஏத்தா ஒத்தவார்த்த என்னிய உண்க வர சொன்னியா நீயி? செல்வி சொல்லாங்காட்டி யேம்புத்திக்கி அம்புடாம ஆயிருக்கும்த்தா…” என்று வந்ததும் கேட்டுவிட்டார்.
அவர்களை எல்லாம் கண்டு நெஞ்சை முட்டும் சந்தோஷம். விழி பேசவே இல்லை.
முகத்தில் புன்னகை குறையாமல் அத்தனைபேருக்கும் வாழை இலையை விரித்து பரிமாறினாள்.
செல்வி சிந்தாவும் அவளுக்கு உதவ முதலில் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு பூமியும், வீரபாண்டியும் கிளம்பவும் செல்வி, விழி, சிந்தா உண்டனர்.
மாலை மஞ்சள் தண்ணீர், முளைப்பாரி ஊர்கோலம் இருப்பதால் கிளம்பிவிட்டார்கள் அனைவருமே.
வேந்தனை பூமிநாதன் தன்னோடு அழைத்துக்கொண்டான். எங்கேயும் அவனை தனித்து விடவில்லை.
இரவு சாமியை கண்மாயில் கரைத்து வரும் வரைக்கும் ஊரே ஆர்ப்பாட்டத்துடன் இருந்தது நள்ளிரவில் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
மறுநாள் விடியற்காலையே வேந்தன் ஊருக்கு கிளம்பிவிட்டான். இன்னும் நான்கு மாதங்களே படிப்பு முடிய.
செல்லும்முன் அத்தனைமுறை சொல்லியிருந்தான் தன் அக்காவை பார்த்துகொள்ளும்படி.
விழிக்கு தையல் வேலை எதுவும் இல்லை. அப்போதுதான் பொங்கல் முடிந்திருப்பதால் யாரும் தைக்க தந்திருக்கவில்லை.
வேலை எதுவும் இல்லாது வீட்டில் தங்களுக்கு தேவையானவற்றை தைக்க ஆரம்பித்திருந்தாள்.
மீண்டும் உடைகள் வரத்து ஆரம்பித்துவிட்டால் தங்கள் உடைகளுக்கு தைக்க நேரம் கிடைக்காது.
அந்த நேரங்களிலேயே வீட்டில் மாடி கதவை சரி செய்ய ஆளையும் வர சொல்லியிருக்க அந்த வேலை நடந்துகொண்டு இருந்தது.
வீட்டின் ஜன்னல்களுக்கு திரையை தைக்க என்று எடுத்து வந்ததை வெட்டிவைத்துக்கொண்டு இருந்தாள் விழி.
மதியஉணவு நேரம் முடிந்து மூணுமணி போல மாடியில் புது கதவை மாட்டிவிட்டு வந்தவர்கள் கூலி வாங்கிக்கொண்டு செல்ல வாசலில் திமுதிமுவென்று ஓட்டம்.
யாருக்கு என்னவாகிற்றோ என்று பதட்டத்துடன் வாசலுக்கு வந்துவிட கூச்சல் சத்தத்தில் சிந்தாவும் வெளியே வந்துவிட்டார்.
“என்னடி? என்னத்துக்கு இம்புட்டு ஓட்டம் ஓடுதாக?…” என கேட்க,
“அம்புடலயேம்மோவ், ஆரும் ஒன்னும் சொல்லாம போறாக…” என்று சொல்லிக்கொண்டு இருக்க வடிவு ஓடி வந்தார்.
“ஆத்தே சிட்டு, கனத்துக்கெடந்த பந்தலு சரிஞ்சு ஒம்மாமனாரு மேலயும், செல்வி மாமனாரு மேலயும் விழுந்துருச்சுடி. துள்ள துடிக்க தூக்கிட்டு போறாகளாம் ஆசுப்பத்திரிக்கி…” என்று வடிவு அவளிடம் சொல்லவும் நெஞ்சே நின்றுவிட்டது ஒருநொடி.
“ஏத்தா வடிவு என்ன சொல்லுத? எப்பத்தா? ஆரும் சொல்லல எங்கட்ட…” என சிந்தா பதட்டத்துடன் கேட்க,
“இப்பத்தேம் சிந்தா. செத்த மின்ன. ப்ரேசிட்டேன்டு தம்பி அங்கிட்டிருந்தாப்புல அங்க போயிட்டாராம். எம்புருசென்தேம் சொன்னாக. அவுக வீட்டுக்கும் தாக்கல் போயிருக்கு…” வடிவு சொல்லி முடிக்க விழிக்கு உயிரே இல்லை.
“எம்மோவ்…” என்று தொண்டையை அழுத்தி பிடித்துக்கொண்டவள்,
“நா போறேம்மோவ்…” என்று காலில் செருப்பும் இன்றி ஆஸ்பத்திரியை நோக்கி தலைதெறிக்க ஓடத்தான் செய்தாள் விழி.
முதல்நாள் பொங்கலன்று காலை வந்து நெஞ்சை பிடிக்கிறது என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது.
வேறு எதுவும் நினைவில்லை. எதையும் நினைக்க தோன்றவில்லை. வேகமாய் அவ்விடம் நோக்கி தான் ஓடினாள்.
அங்கே மருத்துவமனை வாசல் முழுவதும் ஊர்மக்கள் தான் நின்றுகொண்டு இருந்தார்கள்.
அத்தனைபேரும் விழி வரவும் திரும்பி பார்க்க அவளோ அங்கே கையை கட்டியபடி இறுகிப்போய் வேதனை நிறைந்த முகத்துடன் நின்றிருந்த பூமிநாதனை நோக்கி சென்றாள்.
“மாமா…” என்றவளின் அழைப்பில் திரும்பியவன் விழிகள் கலங்கிபோய் இருந்தது.
“என்னய்யா? என்னாச்சுய்யா? ஐயாக்கு?…” என்று கேட்க அவளின் கையை பிடித்து அழுத்தினான்.
இன்னும் மயிலும், யோகுவும் வந்திருக்கவில்லை. செல்வியும், சந்தானலட்சுமியும் ஆட்டோவில் வந்து அழுதுகொண்டே இறங்க செல்வி வந்ததும் அவளை கட்டிக்கொண்டு அழ யாரும் யாருக்கும் தேறுதல் சொல்லமுடியாத நிலை.
இப்படி ஒரு குடும்பத்தின் இரு ஆண்களுக்கும் நடந்துவிட்ட அசம்பாவிதம் யாருமே எதிர்பார்க்காது.
பந்தல் உறுதியாக மழைக்கு பிரிந்துகொண்டு போகாமல் இருக்க மூன்றுகட்ட அடியாய் போடவைத்திருக்க அதற்கேற்ற கம்புகளை வைத்து கனமாகவே போட்டிருந்தனர்.
அதனிடையே அலங்கார விளக்குகளுக்கு போட்டிருந்த சிறு சிறு கம்பிகளுடனான உருவ விளக்குகள் வேறு இருக்க பந்தல் விழுந்து அதை தொடர்ந்து அதுவும் விழ சேதாரம் பலமாகி தான் போனது.
காளிங்கராயனுக்கு காலில் பலத்த அடி விழுந்திருக்க கூத்தபிரானுக்கோ கையிலும் கழுத்து பகுதியிலும் அடி. கீழே விழுந்ததில் கல்லில் வேறு தலை மோதியிருந்தது.
அங்கே முதற்கட்ட சிகிச்சையை முடித்து அவர்களுக்கு அவசர உதவியை செய்துமுடித்த மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
“தம்பி, நீங்க டவுனுக்கு போறதுதேன் நல்லது. உசுருக்கு சேதாரமில்ல. ஆனாலும் டவுனுல பாருங்க…” என்றுவிட்டார்.
“போலாம்ய்யா, மாமா. மொத ஐயாவ காப்பாத்திக்குடுய்யா சாமி. குடும்ய்யா…” என்றவளை தேற்றவும் முடியவில்லை அவனுக்கு.
மென்று விழுங்கி சொன்னாலும் கூத்தபிரானின் நிலைமை கவலைக்கிடம் தான் அங்கே.
மயில் வந்துவிட்டார் மருமகளுடன். அழுதுகொண்டே வந்தவர் அங்கே பூமியின் கைப்பிடிக்குள் விழியின் கையிருக்க அவளை கோபமாய் பேச வர வீரபாண்டி வந்து நின்றுவிட்டான்.
“உசுருக்கு பங்கமில்லன்னு சொல்லிட்டாக. செத்த அழுகைய நிப்பாட்டுதீயளா? இங்கருந்து டவுனுக்கு போவனும்…” என்று அதட்டி சொல்லியவன்,
“ஆஸ்பத்திரி வண்டில ஏத்த சொல்லும்யா. போவம்…” என்று பூமியிடம் சொன்னான்.
“விழி இங்கினியே இருத்தா. போவாத…” என்று பூமி நடுங்கும் கையால் அவளின் கையை விலக்கி செல்வியிடம்,
“எக்கா பாத்துக்கிடு…” என்று சொல்லிவிட்டு ஆகவேண்டியதை பார்க்கலானான்.
மயிலும், யோகுவும் அவர்கள் அருகே கூட வராமல் அழுதுகொண்டே நிற்க துளசி உடன் நின்றுகொண்டு இருந்தான்.
சிறிதுநேரத்திலேயே ஆம்புலன்ஸ் வரவழைத்து திருநெல்வேலிக்கு அழைத்துசெல்லப்பட்டனர் கூத்தபிரானும், காளிங்கராயனும்.
உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு கூத்தபிரான் காப்பாற்றப்பட அப்போது தான் அனைவருக்கும் நிம்மதியானது.
விழி அங்குமிங்கும் செல்லவில்லை. கூத்தபிரான் மருத்துவமனையில் இருந்தவரைக்கும் அங்கேயே தான் இருந்தாள்.
மயில் இரண்டுநாட்கள் பார்த்துவிட்டு மூன்றாம்நாள் விழியை பேச ஆரம்பிக்க உங்கள் வேலையை பாருங்கள் என வீரபாண்டி எகிறிவிட்டான்.
மகனிடம் புலம்ப பூமியோ தாயை முதலில் வீட்டிற்கு செல்லுமாறு சொல்லிவிட அப்போதைக்கு அமைதியானார் மயில்.
பகலெல்லாம் விழியும், செல்வியும் தான் மருத்துவமனையில். இரவு இருவரையும் பூமியே கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டு காலையில் அவனே கூட்டிக்கொண்டு வந்துவிடுவான்.
இரவில் அவனும், வீரபாண்டியும், அவ்வப்போது துளசியும் என மாறி மாறி பார்த்துக்கொண்டார்கள்.
பத்துநாளில் கூத்தபிரான் வீட்டிற்கு அனுப்பப்பட வழக்கம் போல விழியும் தன்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டாள்.
இந்த பத்துநாளில் அவள் கூத்தபிரானை கவனித்ததும், பூமியுடனே இருந்ததையும் நினைத்து சிந்தா நிம்மதியாக இருந்தார்.
இப்போது மீண்டும் மகள் தன்னுடைய வீட்டிற்கே வந்துவிட சோர்ந்துதான் போனார் மனதளவில்.
“அவ தானா வரட்டும்த்தே, இல்லன்னா மாமன் திதி முடியட்டும். நானே இதுக்கு ஒரு முடிவ கெட்டுதேன்…” என்று பூமி சொல்லி சிந்தாவை தேற்றி இருக்க அதற்கெல்லாம் அவசியமே இல்லாது போனது.
மறுவாரமே அவனின் வீட்டில் விழியின் புகுந்த வீட்டில் அவள் மருமகளாய் சென்று நின்றாள்.
தன்னை அனுமதிக்க முடியாது என்ற மயிலை ஒருகை பார்க்கத்தான் செய்தாள் விழி.
“நா யே போவனுங்கேன்? இது எவ்வீடு. இங்கனதே இனி எம்பொழப்பு…” என்று அடித்து சொல்லிவிட்டவள்,
“இங்காரு ஒம்மேல அத்தென்ற மருவாதி எல்லா என்னைக்கோ போயிருச்சு. நா இங்கனதே குப்ப கொட்டுவே. முடிஞ்சாங்காட்டி அள்ளி போடும். இல்லாங்கட்டி நீயி வெளில போயிரும். எனக்கு ஒன்னுமில்ல…” என்றுவிட்டாள் தடாலடியாக.