உயிர் – 13
தெருமுனையில் மாட்டப்பட்டிருந்த குழாயில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க வருவோர் போவோர் சத்தம் கூட தெரியவில்லை. யாரும் வாசலில் நின்று அழைத்தாலும் கேட்கவில்லை.
அடுக்களையில் போனை கொண்டுவந்து வைத்துவிட்டு மும்முரமாக சமையலில் இருந்தாள் சித்திரைவிழி.
தாயும், தம்பியும் கோவிலுக்கு சென்றிருக்க வரும்முன் முடிந்தளவு செய்துவிடுவோம் என்று பரபரப்பாக இருந்தது.
நிச்சயம் இந்த கொடை இப்படி இருக்கும் என அவள் சுத்தமாக நினைக்கவே இல்லை.
மந்தமான ஒரு சூழல், தம்பி மட்டுமே வருகை, சமைத்தோம் சாப்பிட்டோம் என்று சென்றுவிடும் என தான் நினைத்துக்கொண்டு இருந்தாள்.
மனதின் அலைகழிப்புகள் ஒருபக்கமும், அவற்றை யோசிக்கவிடாத உறவுகளின் அரவணைப்பு ஒருபக்கமும் என அவளை அன்றைய நாள் சற்றே புரட்டி இருந்தது.
இப்படி இவ்வளவு கறியை அனுப்பிவிட்டு உணவும் அங்கே தான் என்று வீரபாண்டி சொல்லிவிட அவன் மட்டுமே வரபோவதில்லை என்று தெரிந்துவிட்டது.
கோவில் ஆட்களுக்கும், ஊரில் பலருக்கும், பண்ணையில் வேலை செய்பவர்களுக்கும் சேர்த்து பூமியின் வீட்டில் தான் உணவு தயாராகி கொண்டிருந்தது.
வீரபாண்டி வருகிறான் என்றால் செல்வி வராமல் இருக்கமாட்டாள். காளிங்கராயன் தானும் வருவதாக சொல்லியிருக்க மனது பூமியை எதிர்பார்த்தது என்னவோ உண்மை.
அவள் பூமிநாதனை நினைத்துக்கொண்டே சமையலில் கவனமாக இருக்க தோளை தொட்டு யாரோ பிடித்து திருப்ப அங்கே கோபமுடன் நின்றவனோ அவனே தான்.
“எங்கடி சீல?…” என்றான் தோளில் கையை வைத்து அழுத்தியபடி.
அவனை கண்முன் பார்த்த அந்த ஒருநிமிடம் மலைத்தே போனாள் தன் நினைவின் வலிமையை எண்ணி.
முகமெல்லாம் பூவாய் மலர்ந்துவிட்டது அவனை கண்டதுமே. அந்த சந்தோஷம் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,
“என்னடி விழி, விழி மின்னுது?…” என்றான் பூமிநாதன் அவளின் சந்தோஷத்தை அவதானித்து.
“என்னிய தேடுனியாடி?…” என்றும் கேட்க உடனே தலையை ஆட்டியவள் பின் சுதாரித்து,
“கைய எடும், இப்ப என்னத்துக்கு இங்கின வந்தியாம்?…” அவள் அதட்ட,
“யே ஒன்னிய பாக்கத்தேன். தெரியாதாட்டுமிருக்கு?…”
அவள் புடவை கட்டாமல் வீம்புபிடித்து நின்றதில் இருந்த கோபம் மறைந்து தன்னை தேடியதிலும், பார்த்ததும் சந்தோஷத்தில் விரிந்துகொண்ட கண்களிலும் தணிந்தே போனான்.
“என்னிய நித்தந்தே பாக்குத? இன்னிக்கு கோவில்ல சோலி இருக்கும்ய்யா. கெளம்பு…” என்றாள் அவனின் வேலைகளை நினைவில் வைத்து.
“செத்த இருடி, ஆமா யே கோவிலுக்கு வரல நீயி?…” என்றான் முறைப்பாய்.
“கோவிலுக்கு வந்தா இங்க ஒல வச்சு ஆரு வடிக்க?…”
“ஒலைய பொறவு வெச்சா ஆவாதாக்கும்? ஒன்னிய வர சொன்னேமில்ல?…”
“வரல, விடும்…” என்று திரும்பியவள் வேலையை பார்க்க மீண்டும் தன் பக்கம் திருப்பினான்.
“அம்புட்டுக்கு என்னடி வைராக்கியம் ஒனக்கு? இடும்பு புடிச்சுட்டு மனுசன உசுரெடுக்குத…” என்று அவளின் முகத்தை தன்னை நோக்கி பிடிக்க கண்ணெல்லாம் கசிந்திருந்தது.
“என்ன கேட்டேமின்னு இந்த கண்ணீரு?…” என்று கண்ணை துடைத்துவிட்டான்.
“யோவ் ஒன்னோட…” என்று லேசாய் சிரித்துவிட்டாள்.
அப்போது தான் வெங்காயம் பச்சை மிளகாயை அரிந்து முடித்திருக்க அது கண்ணில் பட்டு எரிந்து நீரை சுரந்துவிட்டது.
“அழுவுத தான? எங்கண்ணுக்கு அம்புடுதே? பொறவு யே கண்ணுல தண்ணி…” என்றதும் மீண்டும் கையால் அதனை அவளே துடைக்க,
“ஐயோ…” என்று கண்ணை மூடி விழித்தாள்.
“என்னடி? என்னாவுது?…”
“மெளகாய கிள்ளி போட்டே. கைய்யோட நீ பண்ணுன அலும்புல கண்ணுல வச்சிப்பிட்டேன். போயா…” என்று கண்ணை ஓடி சென்று கழுவ இன்னும் அவள் கையில் இருந்த காரத்தில் இரண்டு கண்களும் எரிய ஆரம்பித்தது.
“யே நில்லுடி. நா பாக்குதேன்…” என்று மண்பானையில் ஊற்றி இருந்த குளிர்ந்த நீரை ஒரு குவளையில் எடுத்து தனது வேஷ்டியின் நுனியில் நனைத்து அவள் கண்ணை துடைத்துவிட்டான் பூமி.
“என்னய்யா பண்ணுத? எரிச்சம் அமுந்துருச்சு. நவுருய்யா…” என்று அவள் சொல்ல அவன் காதில் விழுந்தாலும் ஏனென்று கேட்பானா?
இழைந்துகொண்டு நின்றவன் அவள் கண்களை கைகளால் விடுத்து இதழ்களால் துடைக்க ஆரம்பித்தான்.
“காப்பு கெட்டிருக்கய்யா…” என்று விழி கேலி சிரிப்புடன் சொல்ல,
“தெரியும்டி, காப்ப காலேலயே கழட்டியாச்சு. செத்த எசவாத்தேன் நில்லேம்டி…” என்றவனின் கைகளுக்குள் வாகாய் பொருந்திக்கொண்டாள்.
“சீலைய கெட்டலன்னா என்ன செய்யுவேன்னு சொன்னேமில்ல? ஏம்டி கெட்டல?…”
“கெட்டா முடியாதுய்யா…” அவனை போலவே அவனின் காதுகளில் இசையாய் சேர்த்தாள் அவளின் வார்த்தைகளை.
“அம்புட்டுக்கும் ஏத்தம்டி. வா நானே கெட்டிவிடுதேன். கோயிலுக்கு போவம்…” என்று சொல்லவும் அவனின் ஆட்டங்களுக்கெல்லாம் சேர்ந்தாடிக்கொண்டு இருந்தவள் வெடுக்கென்று அவனிடமிருந்து தன்னை பிய்த்துக்கொண்டு பின் வாங்கினாள்.
“யே விழி…” என ஒருநொடி என்ன நடந்ததென்று பூமி மலங்க மலங்க விழிக்க,
“என்னய்யா வாய பொளக்க? மருவாதியா சோலிய பாக்க போய் சேரும்…” என்றாள் மிரட்டலாக.
“ஒங்கிட்டே பேசி ஆவாதுடி. ஒன்னிய…” என வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அவள் அருகே வர,
“யோவ், நா கோயிலுக்கு வரக்கூடாதுய்யா. போதுமாட்டிருக்கா? காதுல அம்பிட்டுச்சா? கெளம்பும்…” என்றாள் உடனே.
“நெசமாவா?…” என்று சந்தேகமாய் கேட்க,
“வாயில நல்லா வருது. பொறவு என்னமாட்டுக்கு சொல்லிற போறேன். இத்தோட புது உடுப்ப கெட்டவான்னுதேன் கெட்டல…” என்று அவனை திட்டிவிட்டு கலைந்து வைத்திருந்த அரிசியை கொதிக்கும் உலையில் போட்டு உப்பு பார்த்து சேர்த்தாள்.
“இன்னும் நம்பலையாக்கும்? ரவிக்க எல்லா தெச்சிட்டேம்ய்யா. இன்னுங்காட்டி என்னங்கறேன்?…” என்றதும் பூமி முகத்தில் ரசனையாய் ஒரு புன்னகை.
“பாக்குதாத பாரு? மொளகாய ஒங்கண்ணுல வெக்க போறேம்பாரு…” என மிரட்டினாள்.
பூமியும் வேறெதுவும் பேசாமல் அவள் வேலை செய்வதை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தான்.
அங்கே சமையல் மேடையில் ஒரு வெண்கல பாத்திரத்தில் நிறைய பொங்கல்கள் மூடிவைக்கப்பட்டு இருந்தது.
“அதேம்டி பொங்க அம்புட்டும் பானையில போட்டு வெச்சிருக்கவ? உண்கலையா?…”
“எம்புட்ட உண்க? அம்புட்டுபேரும் பொங்க வெச்சி கொண்டாந்து குடுத்தா? அதேன் வெங்கல உருளில தட்டி வெச்சிட்டே. போறப்ப கொண்டுபோம். ஒவ்வீட்டு மாட்டுக்காவும்…”
“ஏய்…” என்று பூமி அதட்ட,
“யோவ் நா தொழுவுல கெட்டி கெடக்குதத சொன்னேம்ய்யா…” என்றவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
எப்போதோ மயிலை கோபத்தில் உவமானத்துக்கு அவள் பேசியது இன்றும் பூமிக்கு ஞாபகம் இருக்க சாதாரணமாக சொல்லியது கூட அவனுக்கு அதை தான் ஞாபகப்படுத்தியது.
பூமிநாதன் முறைப்புடன் நிற்க அவனின் முகத்தை பார்த்து வாய்விட்டே சிரித்துவிட்டாள் சித்திரைவிழி.
“யோவ் நெசமாவே நா மாட்டத்தாம்ய்யா சொன்னேம். நீயா நெனச்சா நானா என்ன பண்ணுததாம்?…” என்னும்பொழுது இன்னுமே சிரித்தாள்.
“ஒங்கிட்ட மனுசென் பேசுவானா?…”
“நீ என்னத்துக்கு வந்தியாம்?…” என்று இன்னுமே அவனை கிண்டல் பேசினாள்.
“நேரம்டி…”
“நெசமாவே நா…”
“யே நிப்பாட்டுங்கேம்ல? மறுக்கா மறுக்கா சொல்லுத?…”
“இந்தா இங்க என்ன மாடா? கன்னா? அதேம் ஒம்வீட்டுக்கு செலுத்துவோமின்னு பாத்தேன். வேணாமின்னா போ. நா வேற எங்கியாச்சும் ஊத்திக்கறேன்…” என்றாள்.
“ம்க்கும், ராசாங்கத்தாளுக்கு ஒத்த வார்த்த பொறுக்கல. இங்கின நா அம்புட்டு வசவ வாங்கிட்டு கல்லாட்டம் கெடக்கேன்? நா மாத்தரம் அம்புட்டையும் உதுத்துட்டு வரனுமாக்கும்?…”
மெல்லிய குரலில் முணுமுணுப்பு தான். பூமி காதில் விழவே செய்தது. பூமி எதுவும் பேசவில்லை.
போன் அடிக்க எடுத்து பார்த்தவன் துளசியிடம் இங்கே இருப்பதாக சொல்லிவிட்டு வேலைகளை அவனை பார்த்துக்கொள்ள சொன்னான்.
“விழி செத்த சாஞ்சிக்கறேன்டி…” என்று சோர்வுடன் பூமி சொல்லவும் குழம்பை பதம் பார்த்துக்கொண்டிருந்தவள் அவனை பார்த்துவிட்டு,
“செரி வாம்…” அவனுக்கு அறையில் இருந்த கட்டிலில் விரிப்பை போட்டு தயார் செய்ய போக,
“இங்கினயே விரி. உள்ள வேணா…” என்றுவிட்டான் பூமிநாதன்.
“இல்ல உள்ளுக்கா…”
“கேளுடி…” என்று சொல்ல ஒன்றும் சொல்லாமல் பாய் தலையணையை எடுத்துக்கொண்டு வந்தவள் வரவேற்பறையிலேயே ஒருபக்கத்தில் விரித்துவிடவும் படுத்துக்கொண்டான்.