உயிர் தழுவும் விழியே – 12 (3)

இப்படி ஒரு நிலையில் தானே தந்தையை பறி கொடுத்தாள். நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்த மனிதர் அதன்பின் உயிரற்ற உடலாக தானே கிடந்தார்.

கூத்தபிரானும் நெஞ்சை பிடித்துக்கொண்டு பேச விழியிடம் உயிரே இல்லை. தகப்பனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருக்கும் இன்னொரு தகப்பன் அவர்.

“ஒன்னுமில்லத்தா, கலங்காத…” என்று சொல்லிக்கொண்டே அவர் இருக்க இன்னுமே அவரின் கையை விடவில்லை விழி.

“மாமோவ், ஊர்வோலம் போவனும்ய்யா. கெளம்பி வாரும்…” என்று வீரபாண்டி அவரை அழைத்தவன்,

“ஏத்தா சிட்டு, கறி வெட்டிக்கிட்டு இருக்கியானுங்க. ஒனக்கு வரும். வேற எங்கினையாச்சும் வாங்குனன்னு தெரிஞ்சிச்சு. அடுப்புல சட்டி இருக்காது. பாத்துக்கிடு. வெளங்குச்சா?…” சத்தமாய் கண்ணை உருட்டி ஒரு அதட்டல் தான் அவளிடத்தில்.

செல்விக்கு வீரபாண்டியின் குரல் தழுதழுத்திருப்பது புரிந்துபோக அவன் விறைப்பாய் பேசுவதில் சிரித்துவிட, விழியும் அவனை கண்ணீருடன் முறைப்பாய் பார்த்தாள்.

“என்ன மொறைக்கித? தம்பி வாரானாட்டிருக்கு. சொவரொட்டி அனுப்பி வெக்கிதேன். சேத்து வறுத்து வெய்யி. மத்தியானத்துக்கு உண்க இங்கதேன் வருவேன். என்ன?…” என்று சொல்லியவன்,

“இந்தா நம்ம வீட்டு மாவெளக்கு, புடித்தா….” என்று நீட்டவும் வாங்கிக்கொண்டாள்.

விலகி விலகி சென்றாலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத உறவுகள் கிடைக்கப்பெற்றவள் இவள் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே.

ஆனால் அதனை ஒப்புக்கொள்ள மனம் இடம்கொடுப்பதில்லை. உண்மையில் இதனை அனுபவிக்க கொடுத்து வைக்காதவள் என்று தான் நினைத்துக்கொள்வாள்.

கொள்ளையாய் பிரியம் கொண்ட கணவன், கோவிலை போல நிம்மதியையும், சந்தோஷத்தையும் மட்டுமே தரும் நாத்தனாரின் குடும்பம், வேண்டாம் என்று உதறிய பின்னும் தன்னை சுற்றி அன்பெனும் வாசம் கொண்டு வளைக்கும் உறவு கரங்கள்.

அத்தனையும் இருந்தும் எதையும் முழுதாய் ஏற்கவும் அனுபவிக்கவும் மனதில்லை.

செல்வி அவளுடனே சிறிதுநேரம் இருந்துவிட்டு அவளுடன் பேசிவிட்டு தான் கிளம்பினாள்.

வேந்தனும் வந்துவிட்டான் சற்று நேரத்திற்கெல்லாம். வந்தவனை பேச விடாமல் சிந்தா அவனுடனே சுற்றிக்கொண்டு இருக்க விழிக்கு அத்தனை சிரிப்பு.

காலை சமையலுக்கு தயார் செய்யும் பொழுதே காளிங்கராயன் வந்துவிட்டார் கறியை எடுத்துக்கொண்டு.

வேறு யாரும் வந்தாலும் நிச்சயம் விழி வாங்காமல் அனுப்பிவிட கூடும் என்று தகப்பனிடம் கொடுத்தனுப்பி இருந்தான் அவன்.

“உள்ளாற வாங்கய்யா…” என அவரை வேந்தன் அழைத்து வர அடுக்களையில் இருந்த விழி வேகமாய் வந்தாள்.

“எக்கா, சின்னய்யா வந்திருக்காரு பாரு…” என்ற சத்தம் முடிவதற்குள் வந்திருந்தாள்.

கையில் இருந்த தூக்குவாளியை அவர் அவளிடம் சிரித்துக்கொண்டே நீட்ட அத்தனை பெரியதை வாங்கி எதற்கு என்று சத்தமாய் கேட்டாள்.

‘உன் அண்ணன் தான் குடுக்க சொன்னான்’ என்பதை போல சிரிப்புடன் அவர் சைகை செய்ய அவரை பார்த்து புன்னகைத்தவள்,

“காபி குடிக்கீகளா?…” என்றாள்.

சரி என்று தலையாட்டினார் காளிங்கராயன். உடனே அவருக்கு போட்டுக்கொண்டு வர வேந்தனும், சிந்தாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

வேந்தனிடம் எப்போது படிப்பு முடிகிறது என்றும், அடுத்து என்ன செய்வதாக இருப்பதாகவும் கேட்டார்.

அங்கே பேசிக்கொண்டிருக்க இங்கே தூக்குவாளியை திறந்து பார்த்தவளுக்கு தலை சுற்றியது. உடனே செல்விக்கு அழைத்துவிட்டாள்.

“நீ இந்த சோலியத்தேன் செய்யிவன்னு நெனச்சேன். என்னத்துக்கு இப்ப போன போடுதவ?…” என்று எடுத்து பேசியதோ வீரபாண்டி தான்.

“இம்புட்டு கறியையும் வெச்சி நா என்னத்தண்ணே செய்ய?..”

“கறிக்கஞ்சிதேன்…”

“அத்த தெரியாமயா இருக்கே நானு? கொஞ்சமாட்டும் கூறு இருக்கறவேன் செய்யித வேலையா?…”

“அச்சமே இல்ல எங்கிட்ட ஒனக்கு. என்ன?…” என்று சிரித்த வீரபாண்டி,

“எனக்கும் சேத்து ஆக்குத்தா. இந்த கொட ஒவ்வீட்டுலதேன். நெசமா வருவேன். ஒன்னும் ஆக்காம விட்ட பாத்துக்கிடு…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான் வீரபாண்டி.

சிறிதுநேரம் அப்படியே நின்றுவிட்டாள் விழி. வேந்தன் காளிங்கராயன் கிளம்புவதாக சொல்லவும் வெளியே வந்தாள்.

விழியை பார்த்ததும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடும்படி சொல்லியவர் மதியத்திற்கு வீரபாண்டி வருவான் என்றும், அங்கே தான் மதிய உணவு என்றும் சொல்லிவிட்டு கிளம்பினார்.

“என்னத்தா? நெசமாவே வாராகளா?…” என சிந்தா கேட்க,

“ஆமா ம்மோவ்…” என்றாள்.

“என்னக்கா செய்யனு? ஒத்தையில பண்ணாத. நானுங்கூட செய்யுதேன்…” என்று வேந்தன் அடுக்களையில் வந்து அமர்ந்துகொள்ள மூவருமாய் வேலையை பார்த்தார்கள்.

பதினோருமணி போல வேந்தனும், சிந்தாவும் மட்டும் கோவிலுக்கு சென்று சாமியை மட்டும் கும்பிட்டுவிட்டு வருகிறோம் என்று கிளம்ப, அவர்கள் இருவரையும் கோவிலில் பார்த்த பூமிநாதன் விழி வரவில்லை என்பதை கவனித்துவிட்டான்.

வேந்தனிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாமி கும்பிட அழைத்து செல்லும்படி துளசியோடு அனுப்பிவிட்டு இங்கே விழியை தேடி வந்துவிட்டான்.

தான் அத்தனை சொல்லியும் வீம்புக்கென்றே புடவையை கட்டாமல் இருந்திருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.

ஆனால் அப்படித்தான் இருந்தாள். பூமிநாதன் எடுத்து தந்திருந்த புடவையை அன்று அவள் அணிந்துகொள்ளவே இல்லை.

ஆனால் அதனை உடுத்தித்தான் அவனே அழைக்காது, யாரின் அனுமதிக்கும் காத்திராமல் தன் புகுந்தவீட்டை தேடி சென்று சேர்ந்தாள் விழி.

மயிலின் எதிர்ப்புகளை, தடைகளை சுக்குநூறாய் தகர்த்தெறிந்தவளின் முன்னால் மயிலால் எதுவும் செய்யமுடியவில்லை.

காற்றாற்று வெள்ளமென தன் போக்கில் சென்றிருந்தவள் கடலை சேரும் பொழுது ஆழிப்பேரலையை தான் உருவாக்கி இருந்தாள்.

error: Content is protected !!