உயிர் தழுவும் விழியே – 12 (2)

“ஒம்ம வீட்டு கறி எனக்கென்னத்துக்கு? எனக்கு வாங்க தெரியாதாக்கும்? போம்…” வெடுக்கென்று பேச,

“அந்த கெடா இல்லடி. செல்வியக்காதேன் சொல்ல சொல்லுச்சு. அவக கெடா வெட்டுதாகல்ல…”

“அதுக்குங்காட்டி என்னிய வாங்க சொல்லுதியா? அவக என்ன வேறயா?…”  அதற்கும் முட்டுக்கட்டை போட்டாள்.

“நாளைக்கி கறி வரும். அம்பிட்டுத்தேன். நீ என்னானாலும் அதுக்கிட்ட பேசிக்கத்தா. என்னிய விடு…” என்று சொல்லியவன் படியிறங்க சென்று மீண்டும் அவளருகே வந்தான்.

“ஒழுங்கா நாளைக்கி சீலைய கெட்டாம மறந்துபோயிருடி…” என்று சிரிப்புடன் சொல்லி அவளின் கன்னத்தை வலிக்க நிமிண்டிவிட்டு இறங்கிவிட்டான்.

நொடிநேரத்தில் அவன் செய்துவிட்டதை வேறு வாசலில் சென்ற ஓரிருவர் கண்டு செல்ல பல்லை கடித்தாள் விழி.  

“இந்த மனுசெனுக்கு கூறுங்கறதே இல்லயாட்டுமிருக்கு…” என்று பூமியை திட்டிக்கொண்டே வாசலை பெருக்கிவிட்டு நீர் தெளித்து சரசரவென்று பெரிதாய் கோலத்தை தீட்டினாள்.

இன்னும் ராசப்பன் இறந்து ஒருவருடம் திரும்பாததால் பூஜைக்கு எதுவும் கொடுக்க முடியாது.

ஆனாலும் சாமி வாசல் முன்னால் வரும்பொழுது வெறும் வாசலாக எப்படி விட  என்று கோலத்தை போட்டுவிட்டாள்.

விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு வெளிவாசலிலேயே பாயை விரித்து படுத்துக்கொண்டாள்.

லேசாய் கண்ணயர்ந்தநேரம் கொட்டுச்சத்தம் அருகே கேட்க ஆரம்பிக்க அடித்துபிடித்து எழுந்து கம்பிகேட்டில் நின்றவள் வெளியே செல்லவில்லை.

அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்க்க அவர்கள் வீட்டை தாண்டி சென்றது ஊர்கோலம்.

எதிர்வீட்டில் சிறிதுநேரம் நின்று பூஜைக்கு தந்ததை வாங்கி சாமிக்கு சாற்றிவிட்டு கடக்க பார்வை எல்லாம் கொலுவீற்றிருந்த அம்மனின் மீது தான்.  

போன வருடம் எப்படியெல்லாம் இந்த திருவிழாவை கொண்டாடினாள். திருமணமாகி வந்த முதல் வருடத்தில் வந்த கொடை.

சீர்களை வாரி இறைத்திருந்தார் ராசப்பன். கோவிலில் வரி கொடுத்து செய்யும் செலவுகள் போக மற்ற செலவுகளை வேண்டுதல் என தானே ஏற்று நடத்தி கொடுத்தார் தன் மகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று.

அப்படி இருந்த ஒரு நல்ல ஆத்மாவின் உயிர் இன்று இந்த அம்மனை தான் சரணடைந்திருக்கும் என பார்த்தபடி இருந்தாள் விழி.

“இங்கினதேன் இருக்கியாய்யா? எம்புள்ள ஒங்கூடத்தான இருக்கு? இந்த சாமி பாக்குதது ஒன்னியாட்டமே தெரிதுய்யா…” என அவள் இதழ்கள் அசைந்தது.

கேட்டை திறந்து மெல்ல நகர்ந்து வெளி திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டாள் சித்திரைவிழி.

ஊர்கோல வெளிச்சத்தில் அந்த வீட்டில் நிழலாக அவளின் உருவம். தனியாக அமர்ந்திருந்தவளை பார்த்த பூமிநாதனுக்கு அவளிடம் செல்ல கால்கள் பரபரத்தது.

ஆனாலும் முடியாமல் ஊர்கோலத்தை தலைமை தாங்கி முன்னே நின்று நடத்தி சென்றான்.

பார்வை அவளை கடந்து செல்ல அத்தனைபேரும் அவளைத்தான் பார்த்துவிட்டு சென்றார்கள்.

சுவற்றில் அப்படியே சாய்ந்துகொண்டாள் விழி. உறக்கமும் அண்டாது வானத்தை வெறித்துக்கொண்டு இருக்க விறுவிறுவென யாரோ கேட்டை திறந்துகொண்டு வரும் சத்தம்.

அப்போது தான் கோலத்தை போட்டு முடித்திருக்க ஆட்கள் எந்த நேரமும் நடமாட பயமின்றி திறந்தே வைத்திருந்தாள்.

இப்போது யார் என்று நிமிர்ந்து பார்க்க வேகமாய் தோளில் கிடந்த துண்டை கையில் எடுத்துபிடித்துக்கொண்டு வந்தார் கூத்தபிரான்.

“ஐயா…” என்று அவரை பார்த்ததுமே திண்ணையில் இருந்து அவள் எழுந்துகொள்ள,

“ஏத்தா ஒக்காரு. ஒக்காரு…” என்று அமர வைத்தவர்,

“இந்தா சாமிக்கி சாத்தின பூவும், பிடிமாவெளக்கும். இது வீட்டு மாவில்லத்தா கோவிலு வீட்டுல படச்சது…” என்று மஞ்சள் பையில் வைத்திருந்ததை நீட்ட வாங்காமல் அவரை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“ஒ அய்யனாட்டம் நெனச்சு தாரேம்த்தா. வாங்கிக்க…” என்று கெஞ்சலுடன் நீட்டினார்.

“நீயி இங்கன வெறுக்குன்னு ஒத்தையில ஒக்காந்தத பாத்துப்பிட்டு மனசே ஆறலத்தா. அதேன் ஒம்புருசென்ட்ட சொல்லிட்டு இங்கிட்டு வந்திட்டேன்…” என்றதும் அந்த பையை அவள் பார்க்க,

“இதுவா, ஊர்கோல பூச முடியாங்காட்டி ஒனக்குன்னு எடுத்து வச்சி கையில அமித்திக்கிட்டேன். அதேன். வாங்கிக்கத்தா…” என்றார் வாஞ்சையுடன்.

அவரிடம் பேசவே முடியவில்லை விழியால். தலையை சாய்த்து அவரின் நிழலை பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.

என்ன பேச முடியும்? எத்தனை பேசிவிட்டாள் அவரை. உதவுகிறேன் என்று வந்தவரிடம் அதனை உரிமையுடன் பெறமுடியாத தன்னிலையில், அவரை தவிர்க்க வேறு வழியும் இருக்கவில்லை.

தன்னுடைய மனதின் தணலை தணிக்க வார்த்தைகளை கொட்டாமல் இருக்கவும் முடியவில்லை.

“ஏம்த்தா கலங்குத? ஒனக்கு தகப்பனுக்கு தகப்பனா நா இருக்கேம்ய்யா. கண்ண கசக்காத தாயி..” என்று அவர் அன்று தன்னிடம் கெஞ்சியதை உள்ளுக்குள் இப்போதும் நினைத்து மருகிக்கொண்டு தான் இருக்கிறாள்.

இதோ சிறுபிள்ளை போல மாவிளக்கையும், கோவில் பிரசாதத்தையும் எடுத்துக்கொண்டு அவர் வந்து அமர்ந்து தன்னை பிள்ளையாய் பாவித்து கெஞ்சுபவரிடம் பேசவும் முடியாது குற்றவுணர்வு கொன்றது அவளை.

“ஏம்த்தா இன்னுமாத்தா ஒ மனசு எறங்கல? எடுத்துக்க, எடுத்துக்க சாமி. ஒருவாயி முழுங்கு. மாமேன் போவுறேன்…” என்று கெஞ்சலுடன் அந்த மாவை பிட்டு அவளின் கையில் கொடுக்க வர அப்படியே தந்தையே உயிர்கொண்டு வந்ததாக தோன்றியது.

அவர் நீட்டியது மறுக்காமல் கையில் வாங்காமல் தலைசாய்த்து வாயில் வாங்கிக்கொண்டாள்.

“சிட்டு, ஏஞ்சாமி…” என்று அவளின் தலையை லேசாய் அவர் தொட்டதுமே உடைந்து போனவள் அப்படியே மடியில் சாய்ந்துவிட்டாள் விழி.

எதற்கென்றே தெரியாத ஒரு அழுகை. தந்தையின் மேல் விழுந்து அழுதது தான் கடைசி.

இன்று அதை போன்றொரு வீறிட்ட அழுகை. அவளின் கதறல் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.

சாமி பாடல்கள் அனைத்தும் ரேடியோ குழாய்களிலும் ஒலிக்க விழியின் கேவல் எங்கும் போகவில்லை.

“சரிய்யா, யே அம்மைல. சரித்தா, சாமி. தாயி…” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் கலங்கி தான் போனார் கூத்தபிரான்.

“ஏத்தா போதும்த்தா. அழாதப்பா…” என்று எவ்வளவு சொல்லியும் நிற்கவில்லை விழியின் அழுகை.

“யே குலசாமி, எதுக்காத்தா எம்பிள்ளைய இம்பிட்டுக்கு சோதிக்கித?…” என்று கோவில் இருக்கும் திசையை கண்டு கையெடுத்து கும்பிட்டவராக வார்த்தைகளில் மருக ஓரமாய் நின்றுகொண்டு இதை பார்த்துக்கொண்டு இருந்தார் சிந்தா.

வீட்டின் அருகே ஊர்வலம் வரவுமே உள்ளிருந்து வந்துவிட்டார். மகள் திண்ணையில் சென்று அமர்ந்திருக்க அவளை எதுவும் கேட்காமல் தானுமே பழைய நினைவுகளில் இருக்க கூத்தபிரான் வரவும் என்னவென்று பார்த்தார்.

உள்ளே நின்ற சிந்தாவை அவருமே கவனிக்கவில்லை. நேராக மருமகளிடம் தான் வந்தார்.

இப்போது கோவிலை நோக்கி கும்பிட்டவராக கூத்தபிரான் சிந்தாவை பார்க்க அவரும் மடங்கி அங்கேயே அமர்ந்துவிட்டார்.

“சிட்டு, எந்தித்தா, நல்ல நா அவுதுவுமா இம்புட்டு கண்ணீரு…” என்று சொல்லிக்கொண்டிருக்க செல்வியும் வீரபாண்டியுடன் வந்துவிட்டாள்.

“ஐயா…” என்றதுமே அவளை திரும்பி பார்த்தவர்,

“ஆத்தா, இந்த புள்ளைய தேத்துத்தா. எனக்கு நெஞ்சு வெடிக்கிறது இவ அழுவுதது…” என நெஞ்சை நீவவுமே பதறி போன விழிக்கு தூக்கிவாரி போட்டது.

“யாத்தே, இந்தா வாரேன். யே சாமி…” என்று எழுந்து உள்ளே ஓடினாள். தண்ணீரை மொண்டு கொண்டுவந்து நீட்டியவள்,

“அழுவலைய்யா, இனிமேங்காட்டி அழுவமாட்டே. சத்தியங்காட்டி. நூறு வயசுக்கு இருக்கனும்ய்யா நீரு…” என்று அவரின் காலை பிடித்துக்கொள்ள அந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் கனக்க செய்தது.

error: Content is protected !!