உயிர் தழுவும் விழியே – 12 (1)

உயிர் – 12

          அன்று பூமிநாதனுடன் பேசியவள் தான், அதன்பின்னர் அவன் அழைத்த பொழுதுமே எடுக்கவில்லை.

இருவருக்குமே உண்டான காயங்கள் பெரிது. ஆனால் பேசி பேசி இன்னும் அதனை வலிக்க வைக்க அவள் விரும்பவில்லை.

மறுநாள் பொங்கல். ஒவ்வொரு வீடுகளிலும் சொந்தபந்தங்கள் எல்லாம் வெளியூரில் இருந்து வந்துவிட்டார்கள்.

எப்போதுமே தெருவில் நடமாட்டம் இருக்கும். இப்போது முதல்நாளில் இருந்தே கண்ணுக்கு குளிர்ச்சியாக புத்துடைகள் சகிதம் அத்தனைபேரும் நடமாடிக்கொண்டு தான் இருந்தார்கள்.

வெளியில் எத்தனை உல்லாசமாக ஆட்கள் சுற்றிக்கொண்டு இருந்தார்களோ அதற்கு பலமடங்கு சித்திரைவிழிக்கு இங்கே தையல் வேலை நகன்றது.

இன்னும் இரண்டே ரவிக்கைகள் மட்டுமே பாக்கி இருக்க வெட்டி வைத்ததை தைக்க ஆரம்பித்திருந்தாள்.

இரவு உணவும் உண்ணவில்லை இன்னுமே. கொடுத்தவர்கள் கேட்க வந்துவிடுவார்களே என்று பரபரப்பாக தைத்துக்கொண்டு இருந்தாள்.

செல்வி கூட இடையில் வந்து ஏதேனும் உதவ வேண்டுமா என்று கேட்டும் மறுத்துவிட்டாள்.

செல்விக்கு மனது பரிதவித்தது. பூமிக்கும், விழிக்கும் அடுத்து அதனை அறிந்திருந்தது செல்வியும், வீரபாண்டியும் மட்டுமே.

யோகு உண்டாகி இருந்த விஷயம் கேள்விப்பட்டு அவளின் வீட்டிற்கு சென்று பார்த்து சமைத்து கொடுத்து என்று கணவனின் தங்கையை சீராட்டினாள்.

மதிய உணவு நேரம் கூட இளைய தம்பி வராதிருக்க அவனை அழைத்து கேட்க அவன் சொல்லிய விஷயத்தில் அப்படியே கிளம்பி விழியின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

குழந்தை இல்லாததன் பரிதவிப்பு அவளன்றி யாருக்கு தெரியுமாம்? பூமி போன் செய்து சொல்லவுமே வந்துவிட்டாள் பார்ப்பதற்கு.

விழியிடம் இதை கேட்காமல் வெறுமனே சாந்தாவிடம் வந்து நின்று பேசி, விழியிடம் பொதுவாக பேச அவளின் ஜீவனற்ற குரலில் மனதிற்குள் வெம்பி தான் போனாள்.

சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பியவள் தன் தம்பியிடம் இப்போதைக்கு விடு என்று சொல்லியிருந்தாள்.

அவ்வப்போது பூமியும் அழைப்பான் தான். ஆனால் பேச அவளுக்கு நேரமும் இல்லை. மனதும் இல்லை.

நள்ளிரவு நிகழ்ச்சிகள் முடியும் வரை இருந்துவிட்டு அவன் கிளம்பும் நேரமும் தையல் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருக்கும்.

மும்மரமாக வேலை செய்துகொண்டிருப்பவள் அவன் கடந்துசெல்வதை பார்ப்பதை மட்டும் தவிர்க்கவில்லை.

அவளின் கஷ்டங்களை எல்லாம் கண்கூடாக கண்டும் கையறு நிலைதான் பூமிநாதனுக்கு.

எதற்கும் ஒத்துவரமாட்டேன் என்று இருப்பவளை எப்படிதான் சேர்வது என்று தெரியவில்லை அவனுக்குமே.

இதோ இன்றுவரை தன் விழிக்கு குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டே தான் இருக்கிறான்.

எல்லாமே பார்க்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. எதற்கும் பதிலில்லை அவளிடம் இருந்து.

அதை அவனும் எதிர்பார்க்கவில்லை. தன்னை கவனிக்கிறாள், தன்னுடைய செய்திகளை கண்கொள்கிறாள் என்பதே போதுமானதாக இருந்தது பூமிநாதனுக்கு.

அன்றும் இரண்டுமுறை வீட்டிற்கும் கோவிலுக்கும் அவள் வீட்டை கடந்து சென்றுவந்திருக்க இப்போது கடைசி நாள் நிகழ்ச்சியுமே முடிந்துவிட்டது.

ஊரே கலைந்து சென்றிருக்க விடியற்காலை சாமி ஊர்கோலம். இப்போது கோவில் வீட்டில் தனியாக சாமி சிலைக்கு பூஜைகள் நடந்துகொண்டிருந்தது.

இரவு உறக்கம் என்பது இல்லை அவர்களுக்கு. அங்கே மேளச்சத்தம் காதை பிளந்துகொண்டிருக்க இப்போது உறங்கிவிட்டாளா என கவனிக்கவே பூமி வண்டியில் வந்தான்.

விழியின் வாசலில் ஊர்க்கார பெண் ஒருவர் நின்றுகொண்டிருக்க அவளிடம் பேசிக்கொண்டே பையை நீட்டினாள் விழி.

தைத்து முடித்த கடைசி ரவிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் வாங்கியவள் பணம் தான் தரவில்லை.

“கொட முடியாங்காட்டி தாரேன் சிட்டு. நாளைக்கி கறி எடுக்கனும், செலவிருக்குதுத்தா…” என்றாள்.

“யேம்க்கா, நேத்தே அம்புட்டு ஏசு ஏசின? கடேசில உடுப்ப கொண்டாந்து குடுத்துட்டு நேரத்துக்கு தெச்சி தரமாட்டியோன்னு எம்பிட்டு பேச்சு? இப்ப காசில்லன்னு கைய விரிக்கித?…”

“நீயி பொழுது சாயமின்ன ரவிக்கைய குடுத்தீன்னா காச குடுப்போமின்னிருந்தேன் இப்பத்தான தார. இந்நேரத்துக்கு லச்சுமிய ஒங்கிட்ட என்னன்னு குடுக்க? அதேன் ரெண்டுநா செண்டு தாரேங்கேன்ல….” என்று வம்பு பேசிக்கொண்டிருக்க கோபமாய் பேச வாய் திறக்கும் முன் பூமிநாதன் வந்துவிட்டான்.

“என்ன இங்கின சலம்பலு?…” என்று வந்தவனை பார்த்த அந்த பெண்,

“சிட்டு நா வாரேன் பொறவு…” என்று ஓடிவிட அவனை முறைத்தாள் விழி.

“ராசாங்கத்தாளுக்கு இங்க என்ன சோலி?…” என கேக்க,

“என்னத்த செயிதது? சொக்கனுக்கு மீனாச்சிதேன் போக்கெடம். அதேன் ஒன்னிய பாக்க வந்தேன்…” என்றான் கைகளை தலைக்கு பின்னால் கோர்த்து நெறித்துக்கொண்டே.

“யோவ் கெளம்புய்யா மொத. இன்னும் செத்தநேரத்துல ஊர்வோலத்துக்கு பூச ஆரம்பிச்சிருவாக. இங்கன ஒலாத்திட்டிருக்க?…” என்று சத்தம் போட அவளின் படபட பேச்சில் அவனின் புன்னகை மீண்டிருந்தது.

ஓரளவு அந்த எண்ணங்களின் இருந்து தன்னை தேற்றியுள்ளாள் என்பது விளங்கியது அவனுக்கு.

“செரி, நா எடுத்தாந்த சீலைக்கி ரவிக்க தெச்சிட்டியா?…” வாசலில் சாய்ந்து நின்றவாறே கேட்க போவோர் வருவோர் எல்லாம் இங்கே பார்த்துவிட்டே சென்றார்கள்.

“அத்த தெச்சி நா என்னத்த பண்ண போறேனாம்? ஒன்னும் தெக்கல…”

“சரி தெக்காம கெட்டிக்க…” என்றதும் அவனை திரும்பி பார்த்தவள் அவனின் முகத்தில் தெரிந்த விஷமத்தில்,

“கண்ணு முழிய நோண்ட போறேம் பாரும்ய்யா. நெனப்புத்தேன் ஒமக்கு…” என்றதற்கும் இன்னுமே சிரிப்பு தான்.

“கோவிலுக்கு போவமின்ன என்னய்யா பேச்சும், பார்வையும். ஒன்நெனப்பே வெவகாரமா இருக்கு. ஒன்னுத்துக்கும் செரி கெடையாது நீயி…” என்று திட்ட,

“அத்த விடு. வேந்தன் கெளம்பிட்டியானா? போனு போட்டுருக்கான். சத்தத்துல ஒன்னும் கேக்கல. அதேன்…”

“இத்த கேக்கத்தேன் வந்தியா?…” என்றவள்,

“இன்னும் செத்தநேரத்துல வந்திருவியான். மூணு மணிக்கி பஸு வருமின்னு போன் போட்டியான்….” என்றதும் நேரத்தை பார்க்க மணி ஒன்றரை காட்டியது.

பேசிக்கொண்டே சிந்தாவை பார்வையால் தேட அவர் அவனின் கண்ணுக்கு தென்படவே இல்லை.

“நாந்தேன் ஒறங்க சொன்னேன். நாளைக்கி முழுக்க மவேன் புராணந்தேன். பேச தெம்பு வேணா? அதேன் வசு அனுப்புனே…”

“ஒனக்கு தெம்பிருக்காடி?…” என்றவன் குரலின் கரிசனையில் லேசாய் முகம் மாறினாள்.

“யே எனக்கென்ன?…”

“என்னவா? மெலிஞ்சி கெடக்கியே?…” உள்ளுக்குள் வெதும்பியது பூமிக்கு.

கண்ணெல்லாம் வற்றியதை போல இருந்தாள். உடல் மெலிந்து ஒருவாரம் உறக்கமற்ற வேலைப்பளு அவளை உண்டுவிட்டிருந்தது.

அந்த வித்தியாசம் அப்பட்டமாய் தெரிந்தது அவனுக்கு. அதனை கொண்டு கேட்க பேச்சை மாற்றினாள்.

“செரி, நா கறிக்கி சொல்லிட்டேன். நாளைக்கி வந்தோனே கோவில்ல வந்து பாக்க சொல்லு…”

error: Content is protected !!