உயிர் தழுவும் விழியே – 11 (2)

காலையில் சுத்தமாக உண்ணவில்லை. கிளம்பி வரும்பொழுதே செல்வியும் வந்திருக்க தாயின் கோபத்தில் இருந்து தன்னை விரட்டி அனுப்பிவிட்டாள் தன் அக்கா. 

இதில் எங்கே அவன் உண்ண? இப்போது வீட்டிற்கு செல்லலாம் என சாப்பிட கிளம்பினான்.

வீட்டில் யாருமில்லாது இருக்க தானே உணவை எடுத்துவைத்து உண்டு முடித்துவிட்டு வெளியே வர பின்னால் தொழுவத்தில் இருந்த பணியாள்,

“அம்மாவும், யோகுவும் ஆசுபத்திரிக்கி போயிருக்காக தம்பி…” என்றார்.

“ஓஹ் செரிண்ணே, நா கேட்டுக்கிடுதேன்…” என்றவன் துளசிக்கு அழைத்தான் உடனே.

அன்று உரமூட்டைகளை எடுப்பதெற்கென்று டவுனிற்கு சென்றிருந்தவனிடம் தான் தனது போனையும் தந்து அனுப்பியிருந்தான்.

“என்ன பூமி?…” என்று துளசி கேட்க,

“கிளம்பிட்டியா நீயி? இன்னும் எம்புட்டு நேரமாவும்?…”

“ஒன்னோட போன கடையில குடுத்துட்டேன். அவென், ராத்திரி ஊருக்கு வாரப்ப அவேனே கொண்டாரேன்னு சொல்லிட்டியான். ஒரமூட்டய ஏத்திக்கிட்டு இருக்கானுங்க. இப்ப முடியவும் கெளம்பவேண்டிதேன்…”

தம்பியின் கேள்விக்கு பதில்களை வரிசையாக அடுக்க வீட்டில் அவனுக்கு எதுவும் சொல்லவில்லை என்பது தெரிந்தது.

“மதினிக்கி மேலுக்கு முடியலையா என்ன?…” என்றான் பூமி.

“எங்கிட்ட கேக்குத? நா கெளம்பதப்ப அவ ஒறங்கிட்டு இருந்தா. எனக்கென்னலே தெரியும்?…” என்றவனுக்கு,

“யே பூமி, என்ன நெசத்துக்கு முடியலியா?…” என்றான் துளசி.   

“காலேயில உண்காம கெளம்பிட்டேன். அதே இப்ப வீட்டுக்கு வந்தா அம்மையுமில்ல, மதியினியுமில்ல. கருப்பண்ணேந்தேன் ஆசுப்பத்திரிக்கி போனதாட்டம் சொன்னாரு…”

“ம்க்கும், என்னத்தையாச்சும் வவுறுமுட்ட மேஞ்சிருப்பா. அதேன் நோவுதுன்னு அம்மையோட போயிருப்பா. அவதேன் முணுக்குன்னா வீட்டையே ஆட்டி வெப்பாளே? நீ ஒஞ்சோலிய பாருவே…” என்று போனை வைத்துவிட்டான் துளசி.

“சுத்தந்தேன், இவேன் அதுக்கு மேலயில்ல இருக்கியான்…” என்றவன் யோசித்துக்கொண்டே கிளம்பினான்.

வீட்டில் இருக்க முடியாது அவனால். கொடை முடியும் வரை வேலைகள் அடுத்து என்ன என்று தான் இருக்கும் என்பதால் உடனே கோவில் பக்கம் கிளம்பிவிட்டான்.

அன்றைக்கு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் இருக்க அதற்குள் பந்தலை எல்லாம் போட்டு முடித்தாகவேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தங்குவதற்கு என்று எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.

பிரசிட்டேன்டாக அவன் வேலை இது இல்லை என்றாலும் ஊர் தலைவரின் மகன் என்னும் முறையில் இதனை அவன் தான் செய்ய வேண்டும்.

பந்தல் வேயும் இடத்தில் வீரபாண்டி நின்று மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என்னாலே இங்கிட்டு ஒலாத்தலு? சோலியில்லியாக்கும்?…” என கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு அவனிடம் கேட்க,

“யே இல்லாம, அது கெடக்குது…” என்று அங்கு நடப்பவற்றை பற்றி பேசி விட்டு கிளம்ப  திரும்ப எதிரே ஆட்டோவில் தாய் வருவது தெரிந்தது.

கோவிலை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால் அங்கேயே ஆட்டோவை நிறுத்தி இறங்கிக்கொண்டார் மயில்.

அவருடனே யோகுவும் வர இருவரின் முகத்திலும் அளவற்ற மகிழ்ச்சி தாண்டவமாடியது.

“எங்க போனாகளாம்? ஆட்டோவுல வாராக?…” என வீரா பூமியிடம் கேட்க,

“ஆசுப்பத்திரிக்குத்தேன்…” என்றான்.

“யே அத்தக்கி எதுவும் நோவா? ஆனா பாத்தா தெரில. இருக்கறவக மென்னியல நெறிக்கும்?…” என்று சிரித்தான் வீரபாண்டி.

“நானே கேக்கனுமின்னுதேன் நிக்கிதேன். எனக்கும் அம்புடல மாமோவ்…” என்றான்.

இருவரையும் பார்த்ததும் இன்னும் மகிழ்ச்சியுடன் வேகமாய் நடந்து வந்தவர் வாயெல்லாம் பல் தான்.

“யோகு முழுகாம இருக்காளாம். இப்பத்தேன் டாக்டரு பாத்துட்டு சொன்னாக…” என்று சத்தமாய் அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் பார்க்கும்படி சொல்ல வீரபாண்டியும், பூமிநாதனும் மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.

“சந்தோஷம் ம்மை…” என்றான் பூமிநாதன் தாயிடம்.

வீரபாண்டி சிரிப்புடன் தங்கையை பார்த்துவிட்டு தலையை மட்டும் அசைத்துவிட்டு போனை எடுத்து வீட்டிற்கு சொல்ல நகர்ந்தான்.

“போயி சூடம் பொருத்தி சாமிய கும்புட்டு வாரேன்…” என்ற மயில் யோகுவின் கையை பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் அழைத்து சென்றார்.

“என்ன சொல்லுதாக?…” என வீராவின் அருகே பூமி வரவும் அவனின் கண்ணில் சிறு நீர் துளி.

“யோவ் மாமோய், என்ன கலங்குதீராம்?…” என்றான்.

நெஞ்சை முட்டும் சந்தோஷம். வீராவிற்கு காட்ட தெரியவில்லை. சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

தனக்கு குழந்தை இல்லை என்று எத்தனை வருடம் காத்திருந்து, எத்தனை மருத்துவம் பார்த்து இன்றும் அதை எதிர்பார்த்து காத்திருக்க தன் தங்கையின் தாய்மை அவனை நெகிழ செய்திருந்தது.

“நெஞ்செல்லா விம்மிக்கெடக்குலே சந்தோசத்துல. அம்புட்டும் கண்ணீரா வருது. வேறோன்னுமில்லய்யா…” என்றான் மச்சானிடம்.

“செரி செரி. இரு மொத துளசிக்கு சொல்லுவோம்…” என்று அவனுக்கு அழைக்க,

“யேலே என்ன நைய்யி நைய்யின்னு? என்னிக்கிமில்லாம ஆவிய கூட்டுதடே…” என்று கடுப்பானான்.

“கெளம்பிட்டியா?…” என்று பூமிநாதன் சாதாரணமாக கேட்க,

“வேற சோலியில்லையாலே ஒமக்கு? இப்பத்தேன் கெளம்பிருக்கேன். என்னத்துக்கு எம்மொவத்த பாக்க தவிக்கிதியோ? வெய்யுலே…” என்று கடுகடுக்க,

“டவுன தாண்டலன்னா வாரப்ப மதினிக்கி புடிச்சதா எதாச்சும் வாங்கிட்டு வா. அத்த சொல்லத்தேன் கூப்புட்டேன்…”

“என்னத்துக்கு அத்தயும் அவ தின்னுட்டு நோவுதுன்னு வீடெல்லா உருளவா. போலே சோலிக்கழுதய பாத்துக்கிட்டு…” என்று சொல்லி வைத்துவிட வீரபாண்டியும் பூமியும் விழுந்து விழுந்து சிரிக்க அடுத்த ஐந்துநிமிடத்தில் போனை போட்டுவிட்டான் துளசி.

“யேலே நெசமாவா?…” என்று ஆவலுடன் கேட்க,

“என்னத்த நெசமாவா? இப்ப ஒனக்கு சோலிக்கழுத இல்லியோ?…” என்று வம்பிழுத்தான்.

“இவேன் ஒருத்தேன் கோட்டிக்காரப்பய. வெவரத்த சொல்லுடே…” என்றான் படபடப்பாக.

“என்னன்னுலே கண்டுக்கிட்ட? ஒந்தவுட்டு புத்திக்கி அம்புட்டுக்கிடுச்சா?…” வீரபாண்டியும் சேர்த்து கிண்டல் பேச,

“மாமோவ்…” என்று வெட்கப்பட்டதை போல ஒரு குரல்.

“அவ என்னிக்கும் எங்கிட்ட டவுனுல இருந்து ஒன்னும் வாங்கியார சொன்னதில்ல. இருந்திருந்து பூமி சொன்னானா, மொத வெளங்கல. பொறவுதேன்…”

“லைட்டு எரிஞ்சிச்சாக்கும்?…” என்று இன்னுமே கேலியாய் பேச,

“என்னலே கெளம்புதியா?…” என மீண்டும் பூமி கேட்க,

“இவேன் ஒருத்தேன். வர நேரமாவும். கடைக்கி போயி வாங்கியார வேணா?…”

“ஆமாங்கேன், இவேன போன போட உடாம நா பாத்துக்கிடுதேம்லே. நீ கொண்டாடு. இந்தவாட்டம் ஒனக்குதேம்ல நெசத்துக்கு கொட…” என வீரபாண்டி சொல்லவும் சிரிப்புடன் போனை வைத்தான் துளசி.

“பாத்தியா அவென் கொரலுல எம்புட்டு சந்தோசமின்னு…” என சொல்லிக்கொண்டிருக்க மயில் வந்துவிட்டார் யோகுவுடன்.

“செரி, பாத்து போங்க. நா கெளம்புதேன்…” என்று சொல்லி பூமிநாதன் கிளம்பிவிட வீரபாண்டியும் செல்வியும், பெற்றோரும் அங்கே வரவிருப்பதாக சொல்லி அனுப்பி வைத்தான்.

பூமிநாதன் நேராக பஞ்சாயத்துபோர்டுக்கு சென்றவன் மீண்டும் விழிக்கு அழைத்தான்.

“என்னதேன்ய்யா வேணும் ஒனக்கு? இன்னிக்கு ஓயாம போடுதா?…” என அவள் சலிப்புடன் பேச,

“எந்நேரம்டி, அண்ணங்காரனும் வைய்யுதியான். நீயும் வாயில போட்டு மெல்லுத? என்னிய பாத்தா என்னன்னுடி இருக்கு?…” என்றான்.

“செரி சொல்லும், கேப்பம்…” என்றாள் அவனின் பேச்சின் மாறுபாட்டில்.

உண்மையில் பூமியின் மனதிற்கு சந்தோஷத்தை தாண்டி நிம்மதியில்லா ஒரு பரிதவிப்பு ஆட்கொண்டு படுத்தியது அவனை.

“யோவ், மாமா…” என்றாள் அவனின் சத்தமற்ற தன்மையில்.

“விழி…”

“சொல்லுய்யா, நாந்தேன்…”

“மதினி முழுவாம இருக்குடி…” என்றதும்,

“இதுக்காய்யா செருமுத. நா என்னன்னொன்னு பயந்தே போயிட்டேன்ய்யா. சந்தோசந்தான. என்ன இதுக்கு போயி…” என மனமார்ந்த மகிழ்ச்சியுடன் அவள் சொல்லிய போதும் எதிர்பக்கத்தில் இருந்தவனுக்கு சிறிதும் அதில் உவகை இல்லை.

“விழி…” பூமியின் குரல் தழுதழுக்க இப்போது அவனின் உணர்வுகள் சற்றும் பிசறாமல் அவளை வந்தடைந்தது அந்த அலைகற்றையின் வழியாக.

இருவரும் நினைவுகளும் ஒருங்கே சென்று சேர்ந்தது என்னவோ அவர்களின் அந்த நாட்குறிப்பில் தான்.

“இன்னுங்காட்டி பத்துநா செல்லட்டும் மாமா. உறுதியாட்டம் தெரிஞ்சதும் சொல்லுவோம். இருக்கற நெலமையில இப்ப சொன்னா. வேணாம்ய்யா…”

அன்றைய பொழுதில் அவனிடத்தில் தோள் சாய்ந்து கொஞ்சிய குரலில் சரிவிகுதியாய் இருந்ததென்னவோ சந்தோஷமும், பதற்றமும் மட்டுமே.

“ஒனக்கு நெசமா தெரியுதா விழி?…” பூமியின் அணைப்பில் இருந்தவள் தலையசைத்து,

“சத்தியங்காட்டி…” என்று அவனின் அணைப்பை வயிற்றோடு பதித்து அவள் சொல்லிய அந்த நாள் இன்றளவும் மறக்கமுடியாததே இருவருக்கும்.

இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நடுங்கத்தான் செய்தது இருவருக்கும்.

உறுதியாகும் முன்னே உருக்குலைந்த உயிரும், கூடவே உயிர்ப்பற்று போனது உணர்வுகளுமே.  

“விழி…”

“போன வெக்கிதேம்…” என்றவளின் குரலில் பழைய வீம்பும், பிடிவாதமும் தலைத்தோங்கியது.

error: Content is protected !!