உயிர் தழுவும் விழியே – 11 (1)

உயிர் – 11

           கோவிலில் ஊர்மக்கள் கூடியிருக்க சடயப்பனை கட்டி வைத்திருந்தார்கள் இன்னும்.

அவனின் சொந்தமான தங்கையையும், தங்கை கணவனையும் வரவழைத்திருந்தார்கள்.

பூமியின் வருகையை கண்டு அத்தனைபேரும் திரும்பி பார்க்க அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் கூத்தபிரான் அமர்ந்திருக்க அவரருகே ப்ரெசிடென்ட் என்ற முறையில் பூமிநாதனும் அமர்ந்திருந்தான்.

“மருமவனே, மவள வரச்சொல்லன்னுமோ?…” என பூமியின் மாமா ஒருவர் கேட்க,

“வேணா மாமா. அவ சார்புல நா இருக்கேன். நாம இருக்கோமில்ல. இது ஊரு பிரச்சனையுந்தேன். பேசிக்கிடுவோம். அவகள கூப்புட வேணா…” என்று சொல்லிவிட்டு கூத்தபிரானை பார்க்க,

“செரிதேம்ய்யா…” என்று சொல்லிவிட்டார் மகனிடம்.

அவர்களுக்கு பக்கவாட்டில் மரத்தாலான பெஞ்ச்கள் போடப்பட்டு அதில் ஊரின் பெரிய தலைகள் எனப்படுவோரும் அமர்ந்திருக்க, அருகேயே துளசியும், வீரபாண்டியும் நின்றுகொண்டு இருந்தார்கள்.

“பொறவென்னய்யா, பணத்த தூக்கிட்டு ஓடுனவனே அம்புட்டுக்கிட்டான். சட்டுபுட்டுன்னு என்னன்னு பேசி முடிச்சுவிடும்…” என்று பெரியவர் ஒருவர் பொதுவாக பேச அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தார் கூத்தபிரான்.

“முடிச்சுவிடும்ன்னா? என்ன சொல்லுதீக பெரியய்யா? வெளங்கலையே?…” என்றார் கூர்மையாக.

பேசியவரின் பேச்சின் உட்பொருளை அங்கிருந்தவர்கள் அனைவருமே கண்டுகொண்டார்கள் என்பது அவரவர் முகத்தின் அதிருப்தியில் தெரிந்து போனது.

“இல்ல, கொட சோலி தலமாட்டுல கெடக்குது. அத்த பாக்கனுமில்ல. ஆனதாகிபோன வெசயத்த இழுத்தடிக்கிதது அவசியமில்லன்னு பட்டுச்சு…”

“மூப்புக்கு என்னவா அவதி? அம்புட்டுக்கு தலயில தாங்க முடியாட்டி கெளம்பும். இருக்குதவக என்னன்னு வெசாரிக்கட்டும்…” என்றான் வீரபாண்டி.

அவன் பேசவும் ஆளாளுக்கு அந்த பெரியவரை பேச ஆரம்பிக்க அவருக்கு ஏன் தான் வாயை விட்டோமோ என்றானது.

“செத்த கம்மின்னு இருக்கீகளா? இங்கன என்னத்துக்கு வந்தோமோ அந்த சோலிய மட்டுந்தேன் பாக்கனும்…” என்றான் பூமிநாதன்.

“ஐயா, நீங்க கேளுங்க…” என்று கூத்தபிரானிடம் சொல்ல,

“என்ன சடயா? சொல்லு என்னத்துக்குலே காச வாங்கிட்டு ஓடுன? ஒன்னியால எம்புட்டு பெரிய கேதமாகி போச்சு. மனுஷனாலே நீயி…” என்றார் கூத்தபிரான்.

“ஐயா இவேன் இடும்புக்குன்னே வாய தெறக்கமாட்டிக்கிதியான். எங்கிட்ட விடும், நாலு மிதில பிதுக்கி எடுக்குதேன். பொறவு பொலபொலன்னு பல்லோட விசயமும் கொட்டும் பாருங்க…” துளசி சடயப்பனின் மௌனத்தில் வெகுண்டவனாக பேச,

“இருய்யா, என்னதேன் சொல்லுதியான்னு பாப்போம்…” என்று மூத்தமகனையும் அடக்கி வைத்தார்.

சடயப்பனுக்கு இனியும் வாயை திறக்கவில்லை என்றால் தன்னை நிச்சயம்  தனித்தனியாக பிரித்துவிடுவார்கள் என்று புரிந்துபோனது.

“தப்புத்தேனுங்க, மன்னிப்புவேணா கேட்டுக்குதேன்…” என்று மண்டியிட,

“என்னடே மன்னிப்ப கேட்டு தப்பிக்க பாக்குதியா?…” துளசி எட்டி உதைத்தான் அவனை.

“ப்ச், இருண்ணே…” என்று அவனின் கையை பிடித்த பூமிநாதன்,

“என்னத்துக்குலே ஒனக்கு இந்த காவாலித்தனோ? பணத்த என்ன பண்ணவே?…” என்றான் சடயனிடம்.

“செலவாகிருச்சுங்கைய்யா…” இது எல்லோரும் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஆத்திரமாக வந்தது.

“எட்டு மாசத்துல அஞ்சு லச்ச ரூவாய என்னன்னுலே எறச்ச?….” என்றார்  வேதனை பொங்க கூத்தபிரான்.

“ஒன்னியால இங்க அந்த மனுசென் அல்லாடி என்ன கெதில உசுர விட்டாரு தெரியுமாலே?…”

“ஐயா அஞ்சு லச்சத்துக்கா செத்தாரு அந்த மனுசென். அம்புட்டுக்கும் என்னிய கொற சொல்லாதீக. டவுனுக்கு போயி பெருசா தொழில செய்யனுமின்னுதேன் பத்தரத்த குடுத்து காச வாங்கிட்டு போனேன்…” என்று சொல்ல,

“எடுவட்ட நாயி எகத்தாளமாலே பேசுத? குடுத்தது ஒம்பத்தரமாலே?…” என்று வீரபாண்டி துளசி இருவரும் சேர்ந்து புரட்டி எடுத்துவிட்டனர் சடயனை.

பூமிநாதனின் மனதிற்குள் இப்போது விழி படும் கஷ்டங்கள் தான் வந்து போனது.

அந்த வலியின் முன் சடையனின் கதறல்கள் ஒன்றுமே இல்லை என்பதை போல பார்த்தான்.

“மன்னிச்சிக்கிடுங்க, ஐயோ வலிக்குது. வுடுங்கய்யா…” என்று அத்தனை கதற அவனின் பேச்சிற்கு இது தேவை தான் என்பதை போல அனைவருமே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

“ஐயா விட்டுடுங்கய்யா. அவென் பேசினது தப்புத்தேன். விடுங்கய்யா…” என சடயனின் மச்சினன் தான் கெஞ்ச வேண்டியதானது.

“செஞ்சது திருட்டுத்தனம், இதுல எம்புட்டு பேச்சுலே?…” என்றார் கூத்தபிரான்.

“மாமோய்…” என்றதும் வீரபாண்டி பூமிநாதனை பார்த்துவிட்டு பின்னால் நகர்ந்தான்.

“ஒன்னியெல்லா வண்டி பைதால கெட்டி தரதரன்னு இழுத்துட்டு போயி கம்மா கசத்துல எறக்குனா என்னாலே? இனி ஒத்த வார்த்த பேசு, வாய காதுவரைக்கி கிழிக்கிதேன்…” என்றான் துளசி.

“யேலே ஒதுங்குங்கறேன்ல. போலீசு வாரப்ப உசுரு மிஞ்சட்டும். இன்னிமே ஒருத்தனுக்கும் இந்த நெனப்பு வரக்கூடாது…” என்றார் அவர்.

பஞ்சாயத்து செய்து மிச்சம் மீதி இருக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஊரில் ஏதேனும் தண்டனை கொடுத்து விட்டு வைப்பார்கள் என்று பார்த்தால் போலீஸ் வரைக்கும் சென்றது சடயப்பனை இன்னுமே அதிர்ச்சியாக்கியது.

தொழிலுக்கு என்று ஊரில் ஏலச்சீட்டு நடத்தும் ராசப்பனிடம் பத்திரத்தை அதுவும் போலியான தன் வீட்டு பத்திரத்தை கொடுத்து பணத்தையும் வாங்கிக்கொண்டு ஓடிவிட இப்படி ஒரு சிக்கலில் வந்து நிற்கும் என அவனுமே நினைக்கவில்லை.

வெள்ளந்தியான மனிதர் ராசப்பன், சொத்துக்களுக்கும் பஞ்சமில்லை. தன்னுடைய இந்த ஐந்து லட்சமா அவரை கஷ்டத்தில் ஆழ்த்த போகிறது?

நான்கைந்து வருடங்கள் கழித்து மீண்டும் வந்தால் நான்கு வார்த்தைகள் திட்டிவிட்டு பணத்தை தரும்படி கேட்கும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்னும் தெனாவெட்டு தான் சடயப்பனை இத்தனை தூரம் செய்ய வைத்தது.

அவனே எதிர்பாராதது ராசப்பனின் மரணம். அதை தொடர்ந்த குடும்பத்தின் அவர்கள் சூழ்நிலை.  

அவரை ஏமாற்றியதன் விளைவாக தன் தொழிலில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம். பணம் எல்லாம் கரைந்து போய்விட கஷ்ட ஜீவனத்தில் தான் இப்போது மச்சினனிடம் பணம் கேட்டு வந்தது.

யாரும் அறியாமல் வந்து சென்றுவிடுவோம் என்று தான் இந்த நேரத்தில் ஊருக்கு வந்ததும் கூட.

வந்த இடத்தில் இப்படி மாட்டிக்கொள்வோம் என்றும், அதுவும் ராசப்பனின் வீட்டில் வைத்தே சிக்குவோம் எனவும் எதிர்பார்க்கவில்லை.

எத்தனை அழுது புரண்டும் சடயப்பனை அங்கிருந்தவர்கள் யாரும் காப்பாற்ற தயாராக இல்லை.

காவல்துறை வண்டி வந்ததும் அவனை ஏற்றிக்கொண்டு சென்றதும் தான் அடுத்த விஷயமே பேசப்பட்டது அங்கே.

பந்தல்கள் எல்லாம் மழையின் காற்றில் அடித்து வீசப்பட்டிருக்க மீண்டும் அதனை சரிசெய்யவேண்டிய கட்டாயம்.

அதனை பற்றி பேசி முடிவெடுத்துவிட்டு மற்றவர்கள் கலைந்து செல்ல பூமிநாதனும் அங்கிருந்தே தன்னுடைய பணிக்கு சென்றான்.

அங்கே சென்றதுமே உடனே அழைத்ததும் விழிக்கு தான். காலையில் காய்ச்சல் இல்லை என்று சொன்னதுடன் போனை வைத்திருந்தான்.

இப்போதும் மீண்டும் அழைத்து பேசி நடந்ததை எல்லாம் சொல்லவென அவளுக்கு அழைக்க இரண்டாவது முறை போடவும் தான் அழைப்பை எடுத்தாள்.

“இன்னும் கரண்டு வரல…” என்று அவள் சொல்ல,

“தைய்யக்காரி வேற ஒன்னும் ரோசனையே இல்லையாடி?…” என்றான் சிரிப்புடன்.

“என்ன ரோசன? இன்னிக்கு தெச்சாத்தேன் நாளைக்கி கஞ்சி…” என்றாள் சாதாரணமாக.

இதை குத்திக்காட்டவென என்று அவள் பேசவில்லை. இப்போதிருக்கும் சூழ்நிலை, அதை அவள் இலகுவாக சொல்ல கேட்டவனுக்கும் மனதிற்கு குத்தியது.

“சடயன போலீசுல புடிச்சு குடுத்தாச்சு விழி…” என அமைதியாக.

“அத்த தெரிஞ்சி நா என்னத்த ஆத்த போறேனாம்?…” என்றாள் விட்டேற்றியாக.

அவளின் அந்த குரலில் தென்பட்ட உணர்வில் இவன் தான் பேசமுடியாது மௌனமானான்.

“ஏமாத்தனுமின்னு ஒன்னுக்குமத்த போலி பத்தரத்த குடுத்து காச வாங்கிட்டு போயிட்டான். யே அய்யனுக்கு ஊர் மனுசென் தானே? பத்தரத்த கூட நெச பத்தரமான்னு பாக்காம இத்தன வருசம் பாத்து வளந்தவேன் தானேன்னு காச ரோசிக்காம தூக்கி குடுத்துட்டாரு….”

“ஆற சொல்லிய்யா நோவ? போனது போனதுதேன். போன உசுரு வராது. அந்த மனுசென ஏமாத்தினதுக்கு அவனுக்கு கூலின்னு எல்லாரும் பேசுதீக. ஆனா எவனா இருந்தாங்காட்டி வாயும் வவுறும் வேறதேன்னு யே அய்யனுக்கு புரியாமல்ல போச்சு…”  

“விழி, என்னடி, என்னன்னோ பேசுத….” என்றான் வருத்தம் மேலோங்க.

“அட போயா…” என்றவள் தொண்டையை செருமிக்கொண்டு,

“செரி, தெக்கனும், நா பொறவு பேசட்டா?…” என்றாள்.

“ம்ம்ம்…” என அவன் போனை வைக்கும்முன்,

“யோவ், உண்கிட்டியா?…” என அவசராம கேட்க அவனிதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.

“யோவ், காதுல விழுவுதா?…” மீண்டும் அதட்டி சத்தமாக பேச சத்தமின்றி இவன் சிரிக்க,

“போயா என்னவும் பண்ணு…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.

error: Content is protected !!