தாயின் முகத்தை வைத்தே அவருக்கு மனது சரி இல்லை என்று தான் மாடிக்கு சென்றவள் மீண்டும் கீழே வந்துவிட்டு இத்தனை நேரம் ஒன்றும் பேசாமல் இருந்ததும்.
எத்தனை நேரம் தான் அப்படியே இருப்பது என அழைத்தும்விட்டாள். எத்தனை வேண்டி மன்றாடி என்ன? நடப்பது தான் நடக்கும்.
“ம்மோவ், காப்பி போட்டு வெச்சிட்டேன். எடுத்து குடி…” என சொல்லி தனக்கு எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“இந்த கரண்டு என்னன்னு வருமோத்தா?…” சிந்தா மகளிடம் கேட்க,
“அவக சரி பாத்துதேன் போடுவாக. பாப்பம். அதுக்குத்தேன் துணியெல்லா வெட்டி வெச்சிட்டேன். வெளிச்சமாவட்டும் தெக்க வேண்டிதேன். இந்த கரண்டுக்கு பாத்துக்கிட்டு நின்னா வேலையானமாரித்தேன்…”
காபியை குடித்து முடித்தவள் அதை கழுவி வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள். அப்போதுதான் சிந்தா அடுக்களையில் கசாயம் போடப்பட்டிருந்த பாத்திரத்தையே பார்த்தார்.
“யே சிட்டு, ஆருக்குடி கசாயத்த காச்சிருக்க?…” என அங்கிருந்தே கேட்க,
“எல்லா ஒ மருமவனுக்குத்தேன் காலேல காச்சினேன்….” என்றவளின் பதிலில் உள்ளிருந்து குடுகுடுவென ஓடி வந்தார்.
“நெசமாவா?…” வந்தவரின் முகம் பளிச்சிட அவரை முறைத்தாள்.
“என்னிய பாத்தா என்னன்னு தெரியுது? போம்த்தா…” என்று சொல்ல அதற்கு மேல் என்ன கேட்க இருக்கிறது என்று நிம்மதியுடன் உள்ளே வந்து உற்சாகமாய் வேலையை பார்த்தார்.
பின்வாசலில் கறிவேப்பிலை பறிக்க வந்தவர் பூமிநாதனின் உடைகள் காய்ந்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
வேண்டுமென்றே மகள் தன்னிடம் விளையாடியிருப்பதை கண்டு மனதிற்குள் புன்னகை கூட.
விழி லேசாய் வெளிச்சம் தரித்த ஆதவனின் வருகையை தலையுயர்த்தி பார்த்தவள் கணவனுக்கு அழைப்போமா வேண்டாமா என யோசித்துக்கொண்டு இருந்தாள்.
இங்கே வரும்பொழுது வண்டியில் வரவில்லை அவன். நிச்சயம் நடந்துதான் சென்றிருக்க வேண்டும்.
இப்போது உடல் நிலை எப்படி உள்ளதோ என்னவோ என்று கவலையும் கூடியது.
அவனின் எண்ணிற்கும் அழைத்துவிட மழையில் நனைந்திருந்த போன் சுத்தமாக போகவில்லை.
இரண்டுமுறை அழைத்துவிட்டு யோசித்துக்கொண்டே செல்விக்கு கூப்பிட்டுவிட்டாள்.
“யாத்தே மேக்கால காத்த இந்த மழ வடக்கால கொண்டாந்திருச்சு போல? சில்லுன்னு இருக்குத்தா….” என்றாள் செல்வி எடுத்ததுமே விழியை பேச விடாது.
“இந்தா என்ன நக்கலாக்கும்?…”
“செரி செரி கோமிக்காத புள்ள, ஏதும் சோலியா? வீட்டுக்கு வரனுமாத்தா?…” என்றாள் அக்கறையுடன்.
“மதினி…”
“சொல்லுத்தா. என்னவா?…” ஆர்வத்துடன் செல்வி கேட்க அவளின் சந்தோஷம் அந்த குரலிலேயே தெரிந்தது.
அதை உள்வாங்கியபடி நடந்ததை சுருக்கமாக சொல்லிய விழி பூமிக்கு உடல்நிலையும் சரியில்லை என்பதை சொல்லி போய் பார்க்குமாறு கூறினாள்.
“இம்பிட்டுக்கு போதும்த்தா. யே நெனப்ப அந்த ஆத்தா பாத்துக்கிட்டான்னு எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சு….”
“மதினி…”
“இவ எவடி ஒத்த சொல்லு சொல்ல வுடமாட்டேனுக்கிட்டு. செரி நா போயி பாத்துட்டு ஒனக்கு போன போடுதேன்…” என சொல்லி அப்போதே கிளம்பிவிட்டாள் செல்வி.
தன் மாமியாரிடமும் சொல்லி கிளம்பி தாயின் வீட்டிற்கு வர மயிலு மகன் இறங்கி வரட்டும் என காத்திருந்தார் முற்றத்திலேயே.
அவனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்றிருக்க செல்வியை அந்த நேரத்தில் பார்த்துவிட்டு யோசனையுடன் எழுந்து நின்றார்.
“இந்நேரமேட்டுக்கு என்னடி இங்கிட்டு? வீட்டுல சோலி இல்லாங்காட்டி தெரியுது?…” என்றார்.
அவள் இருந்தால் நிச்சயம் பேச முடியாது என்று மகளை அனுப்ப நினைத்து கேட்க,
“யே ஏவ்வீட்டு சோலிய பாக்க வாரியா நீயி?…” என்றாள் செல்வி.
“யே வீட்டுலயே கொள்ளயா குமிஞ்சி கெடக்கு. அத்த பாக்கவே யே ஆவி தவிக்கி. இதுல ஒவ்வீட்டு சோலிக்குத்தேன் தவங்கெடக்கேன்?…”
“அதான, இங்கின ஒம்மருமவ வவுசுக்கு நீதேன் கெடந்து மாரடிக்கனும்….” என நக்கலாக சொல்லிய செல்வி தம்பியை தேடி மாடிக்கே செல்ல போக பூமிநாதன் வந்துவிட்டான்.
“வாத்தா, என்ன காலேலையே. தம்பிய பாக்கன்னு வந்திட்டியோ?…” என கேட்டுக்கொண்டே இறங்கி வந்தான்.
“ம்க்கும், யே தம்பிக என்னிய தேடினா ஆவாதாக்கும்? நா வேற தனியா பாக்கன்னு தேடி வர. நெனச்சா முன்னால வந்து நிக்கமாட்ட?…” என்றாள் பெருமிதமாக.
“அத்த சொல்லு…” என்று முகமெல்லாம் மலர்ச்சியுடன் இருந்தவனை அன்பு பொங்க பார்த்தாள்.
“யே என்னத்தா?…” என்று கேட்ட பூமிக்கு சிரிப்பு வந்தது தன் அக்காவின் பார்வையில்.
“ஆங், ஒன்னுமில்லய்யா, ஒனக்கு சொவமில்லன்னு ஒம்பொஞ்சாதிதேன் போன போட்டா…” என்று செல்வி சொல்லவும் மயிலுக்கு கோபத்துடன் அவர்களை முறைக்க ஓரக்கண்ணால் தாயை பார்த்தவனுக்கு இன்னுமே சிரிப்பு அக்காவின் அழிச்சாட்டியத்தில்.
“நா பேசிக்கிடுதேன். மழையில போனு நனைஞ்சி போச்சு. மாத்தனும்…”
“பொறவு மாத்திக்க. என்னிதுல பேசு. இந்தா நீ என்னன்னு இருக்கன்னு பாத்துட்டு கூப்புட வேற சொன்னா…” என்ற செல்வி,
“ஆனாங்காட்டி ஒன்னிய பாத்தா மேலுக்கு ஆவாதமாதிரி தெரிலையே?…” என கேட்க,
“மாத்தர போட்டுட்டேன்த்தா. அதேன் நல்லாருக்கு. வேறொன்னுமில்ல…” என்றான் பூமி.
“இந்தா நில்லு…” என்ற மயிலை கண்டுகொள்ளாமல் விழிக்கு போனை போட்டு பூமியிடம் தந்து,
“நீ இன்னிக்கு இந்த போன வெச்சிக்க. ஒம்போனு வாரவரைக்கி. அத்தே போனுல எனக்கு பேசு…” என்று சொல்லி தம்பியை விரட்டியே விட்டாள் செல்வி.
“அய்யா பூமி…” என்ற மயிலிடம்,
“ம்மோவ், இருத்தா, வெளில சோலின்னு கெளம்புதவேன். கோவில்ல என்னவோ பஞ்சாயத்து கூடுது. பிரேசிட்டன்டு போவனுமில்ல. ஐயாவும், துளசியும் போயாச்சு…” என்று தாயை மறித்து,
“யேலே என்ன வாய பாத்துக்கிட்டு நிக்கித? கெளம்புங்கேன்ல…” என்று சொல்ல சிரித்தபடி கிளம்பிவிட்டான் பூமிநாதன்.
“இப்ப சொல்லுத்தா…” என்று மயிலை விட்டு தள்ளி அமர்ந்து முந்தானையில் முகத்தை துடைத்தபடி சாவகாசமாக கேக்க, மகளை தீயாய் முறைத்தார் மயில்.
“இருந்திருந்து இன்னிக்கின்னு எந்தம்பி மொவமெல்லா சிரிப்பா கெளம்புதியான். பாத்தேல பூவா கெடக்கு அவென் மொவம். அதேன் ஒன்னிய பேச விடல. இப்ப எங்கிட்ட கேளு…” என்றாள் அவள்.
“என்னைய பாத்தா ஆக்கங்கெட்ட கூவயாட்டம் அம்புடுதோ. இந்தா வாரேன்…” என்ற மயில் தனது போனை எடுத்து சித்திரைவிழிக்கு அழைத்துவிட்டார்.
அந்த நேரத்தில் மாமியாரிடம் இருந்து போன் வரவும் சலிப்புடன் எடுத்தவள் வாயை திறக்கும்முன்,
“ஒ கெரகத்துக்குத்தேன் ஒன்னிய அத்துவிட பாக்குதேன். மறுக்கா மறுக்கா ஏன்டி எம்மவேன் கால சுத்திக்கிட்டே கெடக்குத?…” என்று எடுத்த எடுப்பில் அத்தனை பேசி விழியிடம் பதிலில்லை.
“ஒன்னிய பக்கத்துல வச்சிக்கிட்டு எம்மவேனுக்கு ஒரு நல்லத பண்ணிப்புட முடியுதா? எம்புட்டு ஏசுனாலும் உதுத்துட்டு வந்து நிக்கிதியேடி, நீ என்ன சென்மோ? சோத்துல உப்பத்தான போட்டு திங்கித?…” என்று மூச்சுவாங்க பேச அதற்கு மேலும் பொறுமை காக்காத விழி,
“இப்ப என்னவா? ஒமக்கு நா சொத்துல உப்ப போடுதேனா இல்லையான்னு தெரியனும்? அம்புட்டுத்தான?…”
“யேட்டி நா என்னத்த பேசுதேன்? நீ என்னத்த கேக்குத? கோட்டியாடி?…” என்று உட்சகட்ட எரிச்சலில் மயில் பேச,
“நீ கேக்குததுக்குதேன் பதிலு. இனிமேங்காட்டி ஒம்மவனுக்கும் சேத்து ஒலைய வச்சு வடிக்கிதேன். அவகட்ட நித்தமும் போன போட்டு கேட்டுக்க. உப்பு போடுதேனா இல்லையான்னுட்டு…” என்று அழுத்தமாக சொல்ல மயில் வாயடைத்து போனார்.
“என்ன அயித்த, வெளங்குச்சா?…”
“ஏட்டி…”
“இந்தா இந்த கொரல ஒசத்துன பாத்துக்கிடு. நா கம்மின்னு போனா ஆவமாட்டாம போறேன்னு நெனக்கிதியோ? நா என்னத்துக்கு எம்புருசென் கால சுத்தனும். கூடவே இரும்ய்யான்னு ஒத்த பார்வை பாத்தேனா அந்த மனுசனுக்கு போதுமாட்டுமிருக்கு…” என்று சொல்ல பேச்சே இல்லை மயிலிடம்.
“காதுல விழுவுதா? சும்மா என்னிய சொறிஞ்சிக்கிட்டே கெடந்த பொறவு நா கிறுக்காகிப்பிடுவேன் பார்த்திக்கிடு. கம்மின்னு இருக்காங்காட்டி ஒனக்கு நல்லதுத்தே. அம்பிட்டுத்தேன்…”
“இந்தாடி…”
“இந்த தனிக்குடித்தனத்துக்கெல்லாம் சோலியே இல்ல. எங்குடித்தனத்துலையே எம்புருசனை குடியேத்திபுடுவேன், ஆமா…” என்று சொல்லி வைத்துவிட்டாள் விழி.
இங்கே மயிலின் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்த செல்விக்கு சிரிப்பு தான் வந்தது.
தம்பி மனைவி வகையாக கொடுத்திருப்பது தாயின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்திருக்க,
“அம்மை, என்னத்தா விட்டத்த வெறிக்கித?…” என்று செல்வி கேட்க இன்னுமே மயில் மருமகளின் பேச்சில் இருந்து வெளிவரவில்லை.
எங்கே இன்னும் பேசினால் சொன்னபடி மகனை அவளுடன் இருக்கவைத்துவிடுவாளோ என்று பயந்துதான் போனார்.
அடுத்தடுத்த சம்பவங்களும் அவரின் பயத்தை ஊர்ஜிதப்படுத்தியது.