உயிர் – 10
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் புரண்டு படுக்க உடலெல்லாம் லேசாய் வலித்தது. மேலெல்லாம் கதகதவென்று இருந்தது பூமிநாதனுக்கு.
மெல்ல கண்ணை திறந்து பார்த்தவன் எழுந்து அமர்ந்தான். இப்போது தூறலும் நின்றிருக்க குளிர் மட்டும் வாட்டி எடுத்தது.
கையை நன்றாக ஒன்றோடு ஒன்று தேய்த்துக்கொண்டு எப்போது உறங்கினோம் என யோசித்தபடி திரும்பினான்.
அங்கே தையல் அறையில் இரண்டு விளக்கை நன்றாக திரியை தூண்டி எரியவிட்டுக்கொண்டு துணிகளை அளவெடுத்து வெட்டிக்கொண்டு இருந்தாள் விழி.
நேரத்தை பார்க்க அந்த அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரம் தெளிவில்லாமல் தெரிந்தது கண்களுக்கு.
கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்க்க இன்னுமே கண் எரிந்தது. அலுப்புடன் பக்கத்தில் வைத்திருந்த சட்டையை எடுத்து போட்டவன் போர்வையை விலக்கினான்.
அந்த அரவத்தில் விழியும் அவன் பக்கம் திரும்பியவள் கத்தரிக்கோலை வைத்துவிட்டு அவன் பக்கம் வந்தாள்.
“இப்ப பரவாயில்லாங்காட்டி இருக்காய்யா?…” என்று கேட்டு அவனின் நெற்றியில், கழுத்தில் கை வைத்து பார்த்தாள்.
“என்னடி?…” என்று அவளின் கையை பிடிக்க சில்லென்று இருந்தது.
“சாமத்துல ஒனக்கு கூதலு கூடியிருச்சு. அதேன் நாலு போர்வைய சேத்து போத்திவிட்டு பாத்தேன். இப்ப காச்சலு இருக்கான்னுதேன்…”
“ப்ச், அதெல்லா இல்ல. அலுப்புதேன்…” என்றவன் எழுந்துகொள்ள போக,
“இருய்யா வாரேன்…” என உள்ளே ஓடினாள்.
அவள் வருவதற்குள் கதவை திறந்து குடிக்க வைத்திருந்த தண்ணீரை வைத்து முகத்தை கழுவிவிட்டு வாயையும் சுத்தப்படுத்தி வந்து அமர்ந்தான்.
“இந்தா கசாயத்த வெச்சேன். கொதிக்க கொதிக்க இருக்கு. குடிமியா. செத்த ஆத்தமாட்டாம இருக்கும்…” என்று அவனுக்கு நீட்டியவள் தானும் குடித்தாள்.
“மணி என்னடி?…” அவளிடம் வாங்கிக்கொண்டவன் கேட்க,
“நாலுதேன்…”
“அதுக்காங்காட்டி இந்நேரம்மே எந்திச்சு அங்கன என்னத்த வெட்டி உருட்டுதியாம்?…” அவளிடம் வம்பு பேசியபடி கசாயத்தை ஊதி ஊதி குடித்தான்.
“பாத்தா என்னங்காட்டி அம்புடுதாம் ஒனக்கு? ஏத்தம்ய்யா…” என்று முறைத்தவள்,
“பொங்க துணிய வெட்டி வெக்கிதேன். எந்நேரத்துக்கு போஸ்ட்டுமரத்த பக்குவம் பாப்பீகளோ ராசாங்கத்தாளு. அதேன் அதுக்குங்காட்டி இருக்க நேரத்துல இந்த சோலிய முடிப்போமின்னுட்டுதேன்…”
“சரித்தேன், நீ பாக்குதத ஆரு என்ன சொல்ல போறா? என்னத்துக்கு இந்த இருட்டுக்குள்ள தடவுதங்கேன்?…”
“யோவ், கசாயத்த குடிச்சேனா கம்மின்னு மொடக்குய்யா. சும்மா கனச்சிக்கிட்டு…” என்று எழுந்து சென்றவள் மீண்டும் விட்ட வேலையை ஆரம்பித்தாள்.
சிந்தா இன்னும் எழுந்துகொள்ளவில்லை. பூமிக்கு அதற்குமேலும் உறங்கமுடியும் என்று தோன்றவில்லை.
தானும் எழுந்து நின்றவன் வாசலை வெறித்தான். இன்னும் ஊர் விழிக்கவில்லை. மழை என்பதால் வழக்கமாக காட்டிற்கு செல்லும் ஆட்கள் கூட இந்த நேரத்தில் தென்படவில்லை.
கசாயம் குடித்ததே புத்துணர்ச்சியை தர, உடலின் அலுப்பு கூட குறைந்ததை போல ஒரு மாயை.
அங்கிருந்து கிளம்பவேண்டும். வேலைகள் தலைக்கு மேல் இருக்க செல்லவும் மனதில்லை.
அவன் நின்றுகொண்டிருப்பதை பார்த்தும் பார்க்காமல் வேலையில் இருந்த விழிக்கு மனது ஒருநிலையில் இல்லை.
அவன் செல்லவும், இருக்கவும் வேண்டாம். ஆனாலும் ஏன் இங்கே இருக்கவேண்டும் என்றும் தோன்றியது.
நிச்சயம் இதனை கொண்டும் தனது மாமியார் பூமியிடம் பிரச்சனை செய்வார் என்பதிலும் திண்ணம் தான்.
அதை அவன் சமாளிப்பான் என்பது வேறு, ஆனால் அது இன்னும் கஷ்டத்தை கொடுக்கத்தானே செய்யும்.
அதுவரை வெளியே வெறித்தபடி நின்றிருந்தவன் அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று திரும்ப தன்னை பார்த்தபடி இருப்பவளை கண்டு மனம் கனிந்தது.
“என்னடி?…” என்றான் அருகே சென்று.
“என்ன? கெளம்பத்தான? திரும்ப என்னத்துக்கு இங்கின?…” என்றாள் உடனே முகத்தை மாற்றிக்கொண்டு வேலை செய்வதை போல தலையை திருப்பிக்கொண்டாள்.
“வீம்புக்காரிடி நீயி. என்னவோ பண்ணி தொல. நா கெளம்புதேன்…” என்று வேஷ்டியை மடித்துக்கொண்டவன்,
“இது புது உடுப்புத்தான விழி?…” என்றான் அவளிடத்தில்.
“என்ன?…”
“நடிக்காதடி, இந்த உடுப்பு புதுசுங்கேன்…” என்றான் மென்னகையுடன்.
“அதுக்கிப்ப என்னங்கற? போம். மொத கெளம்பும். கொள்ள சோலி கெடக்குது…” என்று பேச்சை மாற்றினாள்.
அதை அவனுக்கென்று அவள் எடுத்து வைத்திருந்த உடை தான். அதிலும் தீபாவளிக்கே எடுத்து வைத்திருந்தாள்.
அப்போது அவனிடம் கொடுக்கும் சூழ்நிலையில் தான் இல்லை. இப்போது நேரம் கிடைத்ததும் எடுத்து நீட்டிவிட்டாள்.
அதையுமே மடிப்பை களைத்து சுருட்டி ஒருவிதமாய் அவன் கண்டுபிடிக்க வேண்டாம் என்பதை போல தந்திருக்க முதல்நாள் இரவில் அவன் ஒன்றும் கேட்காததே பெரும் நிம்மதியாக இருந்தது.
“சரியான களவாணிடி நீயி. என்னியவே ஏமாத்த பாக்குத?…” என்று ஒரு கையை இடுப்பில் வைத்து இன்னொன்றை மேஜையில் ஊற்றியபடி கேட்க,
“ம்க்கும், காச்சலு கண்ணுக்கு தாவி தலைக்கி ஏறிருச்சு. கெளம்பும். கனா கண்டுட்டு. இங்க முன்னவே இருந்த ஒ உடுப்புதேன்…” என்று சாதித்தாள் அவனிடத்தில்.
“ஒத்துக்க ஆவதில்லையோ? அம்புட்டு இடும்பாடி கோட்டிக்கழுத. இங்க என்ன உடுப்பு என்னிது இருக்குன்னு கூடவா தெரியாமக்கெடக்கேன்?…” என்றான் பூமியும் விடாமல்.
“அய்ய, இப்ப என்னய்யா ஒமக்கு? கெளம்பு….” என்றாள் அவனை விரட்டவே.
“வெரட்டுததுலையே இருடி. மனுசன சோதிக்கன்னே?…” என்றவன் அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
செல்லும் அவனையே இருளில் நின்று பார்த்துக்கொண்டிந்தவள் மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தாள்.
இன்னும் மணி ஐந்து கூட ஆகவில்லை. உறக்கமும் வராமல் வெறுமனே விழித்திருக்க முடியாமல் முடிந்தவற்றை முன்னேற்பாடாக செய்து முடித்தாள்.
எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் வரட்டும் என்று அளவு பார்த்து வெட்டி அதனதனை தனியே எடுத்து வைத்தாள்.
ஐந்தரை போல சிந்தா எழுந்துவிட அவரை கவனிக்க என்று வேகமாய் தாயிடம் சென்றாள் மகள்.
“இப்ப பரவால்லயாம்மோவ்…” என்றாள் தாயை.
“எங்கடி அவுக?…”
“எவுக ம்மோவ்?…” தெரிந்தே வேண்டுமென்று தாயிடம் கேட்க,
“அவருதேன் ஒ புருசென்…”
“அவர ராவுக்கே அனுப்பிட்டேனேத்தா?…”
“என்ன?…” என்று எழுந்துவிட்டார் வேகமாக.
“சரித்தேன், செலாத்தலாட்டம் தெரியுது…” என்று தாயை சொல்லிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தாள்.
“இந்நேரத்துக்கே குளிச்சியாக்கும்?…” என்று மகளை கேட்டவர்,
“நெசமாத்தேன் கெளம்பிட்டாகளா?…” என்றார் பாவமாக.
அந்தநேரத்தில் மகள் தான் அனுப்பி வைத்தாலும் எப்படி அவர் விட்டு சென்றிருப்பார் என்று நினைக்கையில் கழிவிரக்கத்தில் மனது வலித்தது.
ஒன்றும் சொல்லாமல் மகளின் பதிலையும் எதிர்பாராமல் உள்ளே சென்றுவிட்டார் அவர்.
அதன்பின்னர் எதையும் கேட்கவில்லை மகளிடம். மனதெல்லாம் ஏதேதோ நினைவுகள்.
நிஜத்திற்கே இப்படி ஒரு சூழ்நிலையில் தனக்கு முடியவில்லை என்றால் தன் பிள்ளைகள் நிலை?
தனக்கேதிரேயே கொஞ்சமும் யோசிக்காது வார்த்தைகளை அள்ளி வீசும் இந்த ஊரின் மத்தியில் அவளின் நிம்மதி என நினைக்கையில் இப்போது தான் நெஞ்சு வலிப்பதை போல இருந்தது.
அடுக்களைக்குள் செல்ல மகள் வெந்நீரை தணலில் போட்டு வைத்திருந்தாள் அங்கேயே.
அதை தூக்கி கொண்டு குளியலறையில் ஊற்றி குளித்து வந்தவர் நேராக நின்றது வந்து கணவரின் படத்தில் தான்.
முதல்நாள் நடந்த கலவரத்தில் மாடியில் இருந்த சாமான்கள் எல்லாம் உருண்டிருந்தது.
மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து இருட்டோடு அவற்றை எல்லாம் எடுத்து ஒழுங்குபடுத்துவிட்டு ராசப்பன் படத்தின் முன் வந்து நின்று கை கூப்பினார்.
மனமுருக வேண்டுதல். கடவுளிடம் கூட இத்தனை வேண்டுதல் வைத்திருக்கமாட்டார். அன்று அத்தனைமுறை வேண்டிக்கொண்டு நின்றார்.
தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்லது நடக்கும் வரை தன்னுயிராவது மிஞ்சட்டும் என்றும், ஆயுள்பலத்தை தரவேண்டும் என்றும் கடவுளாகிவிட்ட கணவரிடம் இறைஞ்சிக்கொண்டு கண்ணீர் மல்க நின்றிருந்தார் சிந்தா.
“ம்மோவ்…” என சித்திரைவிழி அழைக்கும் வரை அங்கேயே தான் இருந்தார்.
மகளின் அழைப்பில் கண்ணீரை துடைத்துவிட்டு கீழே இறங்கி வந்த பின்பு தான் பாலும் வந்துவிட்டது தெரிந்தது.
“பொறவு வெளிச்சமாவவும் மாடில எடுத்துவெப்போமின்னு இருந்தேம்த்தா. நீயே செஞ்சியாக்கும்?…” என்றாள்.