உயிர் தழுவும் விழியே – 1 (3)

“சரி நீ போய் செத்த ஒக்காரு. நா எடுத்து அடுக்கிக்கறேன்…” சிந்தாமணி அதனை தொட்டே,

“ம்மா, இரு இரு…” என்றவள் ஒரு பையின் முன்னால் அமர்ந்து,  

“ம்மா, இந்த கவருக்குள்ள லயனிங் துணிங்க இருக்கு. அப்படியே எடு. சீனி கட்டிருக்கற பொட்டலம் ஓட்டை விழுந்துருச்சு. நா கொட்டாம பிடிச்சுக்கறேன்….”

“ஏன்டி? பொட்டலத்த ரெண்டா கட்டளையா அவன்? அதுவும் சல்லடையா தாளு?…” என கடைக்காரனை திட்டிக்கொண்டே மகள் சொல்லிய கவரை உருவினார்.

“விடாம பிடிச்சுக்க, இதெல்லாம் எடுத்து வைச்சுட்டு கடைசியா சீனியை தூக்கிக்கிடுவோம்…” என ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தார்.

தாயும் மகளுமாய் வாங்கி வந்த சாமான்களை எல்லாம் அதன் அதன் டப்பாக்களில் போட்டு முடிக்க சிந்தா விலைப்பட்டியல் அடங்கிய தாளுடன் அமர்ந்துகொண்டார்.

“ம்மா, குளிச்சுட்டு வரேன். கசகசன்னு இருக்குது. என்னா வெயிலு…” என்றபடி மாற்றுடையை எடுத்துக்கொண்டு சென்றாள்.

மீண்டும் குளித்துக்கு முடித்து வர அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்து காத்திருந்தார் சிந்தா.

“நீ சாப்பிட்டியா?…” என கேட்டுக்கொண்டே சம்மணமிட்டு அமர்ந்து சாதத்தை வைத்து வெந்தைய  குழம்பை அதில் ஊற்றியவள்,

“ம்மா பொட்டியை பிரிச்சதும் அப்பளத்தை பொரிச்சிட்டியாக்கும்?…” என தாயை முறைத்துக்கொண்டே அப்பளத்தையும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டாள்.

“பின்ன வெறும் சோறும், குழம்புமா திம்ப? அதேன் பொரிச்சுட்டேன்…”

“ஹ்ம்ம், அதேன் விதமல்லி இருக்குல? ரெண்டு வத்தலை கில்லி போட்டு புளி வச்சு தொகையலா செய்ய வேண்டியது தான?…” என கேட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி வைத்துவிட்டு வந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள் தன் புடவை தலைப்பால் காற்று விசிறினாள்.

“எப்ப போச்சு இந்த கரண்டு. ஒரு நாளுக்கு எத்தனவாட்டி தான் கரண்ட புடுங்குவானுங்களோ? வேலையத்தவனை வேலைக்கு வச்சா இப்படித்தான்…” என்று எரிச்சலுடன் சொல்ல,

“வாயடக்கி பேசுடி…” என்ற சிந்தாவின் முறைப்பெல்லாம் சித்திரைவிழியிடம் எடுபடவில்லை.

“அதை விடு. ஆமா இன்னிக்கு சட்ட தைக்கலயா?…” என அவர் கேட்க,

“இல்லம்மா, கையெல்லாம் நோவு. நாளைக்கு தச்சுக்கனும்…”  என்றவள்,

“பட்டன் போடறதுக்கு அந்த சன்னலுக்கிட்ட எடுத்து வச்சிருக்கேன். கொண்டா. உக்கார்ந்தாப்புல இந்த வேலையை முடிச்சிருவோம்…”

ஏற்கனவே தைத்து வைத்திருந்த சட்டை துணிகளை எடுத்துக்கொண்டு வந்து தந்தார் சிந்தா.

“எனக்கும் குடு, நானும் தைக்கிறேனே?…”

“ஒன்னும் வேணா? பேசாம போய் படுத்து ஒறங்கு. உத்து உத்து பாக்கறேன்னு ஊசியால உன் விரல ஓட்டை போட்டதுதேன் மிச்சம்…” என கிண்டலுடன் சொல்லியவள் கைகள் பரபரவென வேலை பார்த்தது.

கரண்ட் வரவும் தையலுக்கு என வாங்கி வந்தவற்றை எல்லாம் எடுத்து முன் அறையில் இருந்த தையல் அறையில் கொண்டு போய் வைத்தாள்.

தனித்தனியாக அதற்குரிய டப்பாக்களில் போட்டு வைத்தவள் நேரத்தை பார்க்க இருட்டி போனது.

மழைக்கு வேறு, காற்று சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. நிச்சயம் மழை  வலுவாக இருக்கும் என அதிலேயே கண்டுகொண்டாள்.

“ம்மா, அந்த மெழுகுவர்த்தியை எடுத்து வை. தீப்பெட்டியையும் தேட முடியாது. இன்னிக்கு கரண்டு போவ போகுது பாரு…” என சொல்லிவிட்டு ஜன்னலை சாற்றியவள் அந்த அறையையும் மூடிவிட்டு வீட்டிற்குள் நுழைய மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம் மின்சாரமும் போய்விட அலுப்புடன் தானே தேடி எடுத்து விளக்குகளை ஏற்றி வைத்தாள்.

நடு வரவேற்பறைக்கு மட்டும் பெரிய மெழுகுவர்த்தியை மேஜையில் ஏற்றிவிட்டு தாயை தேட சத்தம் மாடியில் கேட்டது.

“ம்மா என்ன செய்யிற?…”

“இங்க விளக்கு பொருத்தறேன் அப்பா படத்துக்கு. செத்த நேரஞ்செண்டு வாரேன்…” எனவும் ஒரு பெருமூச்சுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

எட்டு மணி ஆகவிருக்க பசித்துவிட்டது. குழம்பை சூடு செய்து மதியம் வடித்த சாதத்தையும், பொட்டு ஊறுகாயையும் வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் விளக்கு வெளிச்சத்தில்.

உண்டு முடித்த நேரம் சிந்தாவும் இறங்கி வர முகமே வாடி இருந்தது. அழுது  என்ன செய்ய? கவனித்தும் கவனியாததை போல இருந்துகொண்டாள் சித்திரைவிழி.

“சாப்பிட்டியா?…” மகளை கேட்க,

“இப்பத்தேன். மிச்ச சோத்துல மாவை கரைச்சு உனக்கு கூழு காய்ச்சிட்டேன். கொண்டு வரட்டுமா?…”

“ம்ஹூம் நேரமாகட்டும்…” என சோர்வுடன் சொல்லி அமர்ந்துவிட்டார்.

அன்று டவுனிற்கு போய் வந்த கதைகளையும், வாங்கிய பொருட்களின் விலைவாசியையும் பற்றி பேசிக்கொண்டிருக்க யாரோ வெளி கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தாள் சித்திரைவிழி.

அந்த இருட்டில் நெடுநெடுவெனும் உயரத்துடன் வந்தவனின் கோபத்தை அவனின் வேகத்தில் உணர்ந்துகொண்டாள். அவள் பேசும் முன் சிந்தா,

“வாங்க வாங்க மா…” என அழைத்துவிட,

“ம்மா…” என அதட்டி திரும்பி பார்த்து முறைத்தாள்.

“இங்க இந்த நேரத்துல உங்களுக்கு என்ன சோலி?….” என அவனிடம் காட்டமாக கேட்க,

“என்னடி இது?…” என்றான் தனது சட்டைக்குள் இருந்து ஒரு தாளை எடுத்து அவள் முன் நீட்டியவனாக.

“பார்த்தா தெரியாதா? படிச்சிருக்கீரும்?…” அத்தனை எள்ளல் அவள் குரலில்.

“என்னாச்சு? என்னது?…” என சிந்தா பதட்டத்துடன் கேட்க,

“உங்க மவ என்னைய அத்துவிட சொல்லி எழுதி குடுத்திருக்கா எங்கம்மாட்ட…”  என்றவன் கோபம் இன்னும் மட்டுப்படவில்லை.

“யாத்தே?…” என நெஞ்சை பிடித்துவிட்டார் சிந்தா.

“சொல்லுடி…” என கர்ஜனை செய்தவனின் மீசை துடிக்க முகம் செந்தணலாய் தகித்தது.

“உங்கம்மா கேட்டாக, போனா போவுதுன்னு நானும் எழுதி குடுத்தேன். புள்ளகுட்டியோட வாழனுமாம்ல நீரு…” நக்கலாக அவள் சொல்லவும் இன்னுமே கொதித்து போனான் பூமிநாதன்.

சிந்தாவை பூமிநாதன் பார்த்த பார்வையில் அவர் அந்த இடத்தை விட்டு செல்ல மீண்டும் அவளை திரும்பி பார்த்தவன்,

“அவங்களை வச்சுக்கிட்டு பேசற பேச்சாடி இது?…”

“ஏன் பேசினா என்ன? உங்கம்மா பேசலையா ஒம்ம அண்ணியையும், அவங்க வளசலு ஆளுகளையும் வச்சுக்கிட்டு?…” என சொல்ல,

“அவங்க கேட்டா? உன் புத்தி புல்லு மேய போச்சோ?…” என்றவன் அந்த தாளை சுக்கு நூறாய் கிழித்து அவள் முகத்திலேயே விட்டெரிய அசைந்தாள் இல்லை.

“கொன்னுடுவேன் பார்த்துக்க…”

“அத பொறவால பாத்துக்கிடுதேன். எவ்வீட்ட குப்பையாக்கத்தான் இந்த மழையில வந்தீராக்கும்?…”

“அதான் நீயே சொல்லிட்டியே குப்பைன்னு. அள்ளி எங்க போடனுமோ போடுடி…”

“ப்ச், இந்த பேச்செதுக்கு, கெளம்புங்க…” என்றாள் முகத்தை சுளித்து வேறு திசை திரும்பி.

அதற்குள் கரண்ட் வந்துவிட வீடும் வெளிச்சத்தில் ஒளிர இருவருமே விளக்கை பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்வையால் தீண்டி நின்றனர்.

சற்றே அவளை நெருங்கி வந்தவன் பார்வை அவளின் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறை தொட்டு நின்று,

“தாலிக்கயிற மாத்த மாட்டியா? மஞ்சளை தடவிட்டே இருந்தாலும் துவண்டு போவும் தான? வேற கயித்த மாத்து…”

“எனக்கு தெரியும், மொத இந்த எடத்த காலி பண்ணும்…” என்றாள் அவனின் கையை தட்டிவிட்டு.

“எனக்கும் தெரியும்டி…” என்றவனின் பார்வை வஞ்சனையின்றி அவள் வனப்பில் மீண்டு, விழுந்து, எழுந்து, பரவி, தழுவ கடுகடுவென பார்த்தாள் அவனை.

“பார்த்து முடிச்சாச்சுல. கெளம்புதீரா?…” என்றவளின் இடையில் தூக்கி சொருகி  இருந்த புடவை தலைப்பில் அவன் கை செல்ல சட்டென அவனை தொட்டு பின்னால் தள்ளினாள்.

அவளின் கோபத்தில் மின்னி மறைந்த சிறுதுளி வெட்கத்தையும் விழிகளால் பருகியவன் முகம் புன்னகையில் விகசிக்க,

“நீ எழுதி குடுத்ததுக்கு அனுபவிப்படி…” என கிஞ்சித்தும் வருத்தமின்றி அவன் அவளிடம் விடைபெற்று செல்ல அவனையே பார்த்தபடி கல்லாய் நின்றிருந்தாள் சித்திரைவிழி.

error: Content is protected !!