“என்ன ஒரே சடவாக்கும்?…” பூமிநாதன் சிரிக்க,
“நல்ல நேரத்துல பொறந்தடா நீ? உன்னைய போட்டு பந்தாடுதாக. எம்பொண்டாட்டி இருக்காளே?…” என்று துளசிமணி சலித்துக்கொண்டான்.
“சரி அத்த விடு. அக்காவுக்கு ஆரு சொன்னா? அது வீட்டுல இருந்து வந்திருக்கு?…” பூமி கேட்க,
“கோழி அடிச்சு கொழம்பு வச்சுச்சாம். அத கொண்டாந்து குடுக்க வந்தப்பதான் அம்மாவோட போன்ல அப்பா வாய்க்கா தாகராறு. நீ என்னத்துக்கு வயக்காட்டுக்கு நேரா வந்தன்னு கேட்டு?…”
“ஓஹ்…” பூமிநாதனுக்கு சிரிப்பு வந்தது.
“அம்மா பேசினத கேட்டு அக்காவுக்கு சுருக்குன்னுருச்சு. கோழி கொழம்பு கொண்டுவந்த தூக்குவாளிய அங்க குடுக்காம திருப்பி கொண்டுபோய்ட்டு எனக்கு போன போட்டு வீட்டுக்கு வர சொல்லுச்சு. போறதுக்குள்ள நம்ம மூணு பேத்துக்கும் சோறை வடிச்சு தூக்குல போட்டு அனுப்பிருச்சு…”
“ஹ்ம்ம், கமகமன்னு இருக்கு வாசன…” என கூடையின் மூடியை எடுத்து வைக்க பாத்திரங்களின் பக்கவாட்டில் தினசரி நாளிதழ்களும் அதற்குள் அடுப்பெரித்த கரிதுண்டங்களும் கிடந்தது.
“தூக்கி ஓரமா வச்சுட்டு தட்டை கொண்டா…” என பூமிநாதன் சொல்லவும்,
“நீங்க எடுத்து வைங்க. தட்டை நான் அலசிட்டு வரேன்…” என தட்டுக்களை எடுத்தார் கூத்தபிரான்.
“பேசாம பம்புசெட்டு ரூமுக்குள்ள போயிருவோமா?…” துளசிமணி கேட்க,
“அதெல்லாம் வேணா. உள்ள போனா ஓட்டு வெக்கைக்கும் அதுக்கும் பேனை போட்டாலும் புழுக்கமா இருக்கும்…” என கட்டிலை விட்டு இறங்கி அதை மடக்கி ஓரமாக போட்டவன் கீழே தார்ப்பாயை விரித்துவிட்டான்.
அதன் மேல் ஒரு போர்வையை விரித்து தினசரி பேப்பரின் மேல் உணவு பத்திரங்களை எடுத்து வைக்க குடிக்க தண்ணீருடன் தட்டுக்களையும் அலசி கொண்டுவந்துவிட்டார் கூத்தபிரான்.
“என்ன மாமோய், கோழி குழம்பா? இங்க வரைக்கு வந்து பசிய கிளப்பி வவுத்த கிள்ளுது…” என கூத்தபிரானுக்கு கேலி முறை பெண்மணி பேச,
“ஆமாமா, ரெண்டுவா வேணா உருட்டி போடுக்க. இல்லன்னா எங்களுக்கு வவுத்த கிள்ளும்…” கூத்தபிரானும் சரிக்கு சரி பேசினார்.
“ம்க்கும், ஒம்ம குசும்புக்கு. நீரு கில்லாடித்தான்…” என்றவர்,
“செல்வி குடுத்துவிட்டுச்சாக்கும்?…”
“பாருடா, வாசனையை வச்சே கண்டுபிடிச்சுட்ட…”
“பின்ன கோழி கொழம்ப வச்சுட்டு கட்ட கடைசியில கறிவேப்பில, சீரகத்த நல்லெண்ணையில தாளிச்சு கொட்டறது ஊருக்கே தெரியுமே? என்னவோ அந்த ருசி எங்களுக்கு மாட்டுறதில்ல…” என பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றார்.
“ஒங்கக்கா கொழம்பு ஊருக்கே தெரிஞ்சிருக்கு…” என பேசிக்கொண்டே தட்டில் கொதிக்க கொதிக்க இருந்த வெள்ளை சாதத்தை போட்டவர் குழம்பை ஊற்ற,
“ஐயா, கரண்டி முட்ட போட்டு அனுப்பிருக்கு. இந்தாங்க…” என துளசி தந்தைக்கு எடுத்து வைத்தான்.
“இதென்னடா சின்ன போனில என்னவோ இருக்கு?…” என மூடி இருந்த வெண்கல போனியை காண்பித்து கேட்க,
“மோருதேன். தொறக்கவா?…”
“அதெல்லாம் குடிக்க வச்சிக்கிடுவோம். இருக்கட்டும்…” என்று திருப்தியாக உண்டு முடித்து ரசத்தையும் ஊற்றி சாப்பிட்டு முடிக்க பூமிநாதன் தட்டுக்களை எடுத்துக்கொண்டு செல்ல, மோர் பாத்திரம் தவிர்த்து அத்தனையும் காலி ஆகியிருந்தது.
“ஐயா, வச்சுட்டு கட்டில நிமித்தி செத்த ஒக்காருங்க…” என சொல்லி கழுவி முடித்து கூடையில் அடுக்கினான் பூமிநாதன்.
“மோர் தொறந்து தரவா ய்யா?…” துளசி கேட்க,
“நேரஞ்செண்டு குடிக்கிறேம்…” என சொல்லி அக்கடாவென சாய்ந்து அமர்ந்தார்.
“எங்கடா ரச போனிய?…”
“எடுத்து மூடி வெச்சிருக்கேன்….”
“என்னத்துக்கு?…”
“அம்மாவுக்கு செல்வியக்கா ரசம்ன்னா உசுரு. கொண்டுபோய் குடுப்போம்…”
“தூக்கி கீழே வீசுவாங்க…” பூமிநாதன் சொல்ல துளசிக்கு என்னவோ போல் இருந்தது.
“ஹ்ம்ம், சரித்தேன்…” என்று அமர்ந்துகொண்டான் அவனும்.
தந்தையும், மகன்களுமாக பேசிக்கொண்டிருக்க இவர்களுக்கு மூத்தவள் செல்வி போன் செய்துவிட்டாள்.
“அக்காதான். எடுத்து பேசு…” என்று பூமிநாதன் சொல்லவும் துளசி போனை எடுத்து கொண்டு போய் கூத்தபிரானிடம் தந்துவிட்டான்.
“அக்கா பேசுது. பேசுங்க. நான் ஒரு நட போய் பார்த்துட்டு வரேன்…” என்று நாத்து நடும் இடத்தை நோக்கி சென்றான்.
“சொல்லுத்தா…” என தந்தை எடுத்து பேசவுமே,
“அய்யா, சோறு குடுத்தனுப்ச்சேனே? ஆச்சா?…”
“இப்பத்தேன் சட்டிய கழுவி கவித்துட்டு அக்கடான்னு கட்டய சாச்சேன்…”
“அதுசெரி, நடவய பாக்காம அங்க காத்தாட்டமாக்கும்?…” என சிரித்த செல்வி,
“தம்பிங்க சாப்பிட்டானுங்களா?…”
“அதெல்லாம் நெறக்க முழுங்கியாச்சு…” என சிரித்தவர்,
“சரி கண்ண கட்டுது. பெரியவன் நடவ பாக்க போயிருக்கான். வாரதுக்குள்ள நான் கண்ணசந்து முழிக்கிதேன். போன வைக்கத்தான?…” என்றதும்,
“அதானே பாத்தேன். ஒறங்கும்…” என சொல்லி போனை வைத்துவிட்டாள்.
“பேசியாச்சா?…” பூமிநாதன் வரவும் அவனிடம் போனை நீட்டியவர்,
“செத்த ஒறங்குதேன்னேன்…”
“போன வச்சிருச்சாக்கும்?…” என்று சிரித்தவன்,
“சரிங்க ய்யா, நான் ஆபீசுக்கு போயிட்டு வேலையை முடிச்சுடு டவுனுக்கு போறேன். வர ராவாகும். வீட்டுல சொல்லிருங்க…” என்று சொல்லவிட்டு கிளம்பிவிட்டான்.
தூரத்தில் நின்ற துளசியை கைதட்டி அழைத்தவன் சத்தமாய் கிளம்புவதாக சொல்லி கை அசைத்துவிட்டு வண்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவன் மீண்டும் செல்லும் வழியில் ஒரு வீட்டின் முன்னே ஒரு பெண்ணுடன் இன்னும் நின்று பேசிக்கொண்டிருந்தாள் சித்திரைவிழி.
“இன்னும் வீட்டுக்கு போகாம ஊரெல்லாம் வாயடிச்சிட்டு நிக்கிறா பாரு…” என்ற முணுமுணுப்புடன் கடந்து சென்றவனை பார்த்தவள் தன்னுடன் பேசிய பெண்ணிடம் விடைபெற்று கிளம்பினாள்.
“நாளைக்கு வீட்டுக்கு கொண்டு வந்து சட்டைய குடு. பிரிச்சு அடிச்சு தரேன். இன்னிக்கு சோலியே இன்னும் முடியல. அதனால நாளைக்கு வா. அதுக்குன்னு விடியவும் வந்து நிக்காத…” என்று சொல்லிவிட்டு தனது வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றாள்.
அதற்குள் ஏகத்திற்கும் களைத்து, வியர்த்து போயிருந்தாள் சித்திரைவிழி. கேட்டை திறந்து வண்டியை உள்ளே ஏற்றி நிறுத்தினாள்.
கொண்டுவந்திருந்த பையை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு விறுவிறுவென படியில் ஏறினாள்.
சற்றே மேடாக இருக்கும் வீடு. முன்னால் ஒரு பைக் நுழைக்கும் அளவிற்கான இரும்பு கம்பி கேட்.
பக்கவாட்டில் அதை நிறுத்தவென ஒரு இடம். நேராக நடுவே வாசற்படிகள் ஐந்து இருக்க இருபுறமும் அமர்வதற்கு கற்திண்ணைகள்.
உள்ளே நுழையும் பொழுதே அவளை பார்த்துவிட்டார் அவளின் தாய் சிந்தாமணி.
“இம்புட்டு நேரமாத்தா?…” என மகளை பார்த்துக்கொண்டே அவளின் கையில் இருந்ததை வாங்க போக,
“ம்மா, நவரு அங்கிட்டு. கனத்து கெடக்குது …” என மூச்சை தம்க்கட்டி இழுத்து பிடித்து உள்ளே தூக்கி சென்றாள்.
அடுக்களைக்குள் நுழைந்ததும் அதனை இறக்கி வைத்தவள் தனது கைகளை பார்க்கவும் ரத்தமாய் சிவந்திருந்தது.
“இன்னும் நாலு நாள் சமாளிச்சிருந்தா உன் தம்பியோட போய் வாங்கிட்டு வந்திருக்கலாம். ஒனக்கும் ஒத்தாசையா வந்திருப்பான்…:
“ம்க்கும், இதுக்குன்னு நாலு நாளா சும்மா கிடக்கனும்? அதான் வாங்கியாந்துட்டேன்ல. நீ வேற ஏம்த்தா?…” என்று நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டாள்.