மனதினுள் அலறியபடி வெளியே, “என்னடி செல்லக் குட்டி” என்று அவளைக் கொஞ்சினான்.
அவளோ கடும் கோபத்துடன், “உனக்குன்னு கஷ்டப்பட்டு நெட்டில் பார்த்து சமைச்சா, நான் உன்னை கொல்ல பார்க்கிறேன்னா சொல்ற!”
‘டேய் நந்து உன் நிலைமை இப்படியா ஆகனும்! சிக்கனுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கி சின்னாபின்னமாகிட்டியே!’ என்று மனதினுள் புலம்பியவன், மனைவியை மலை இறக்கும் வேலையில் இறங்கினான்.
…………..
வீட்டினுள் நுழைந்த திவ்யா மகளை இறக்கிவிட்டு கண்ஜாடை காட்ட, குழந்தை தலையை ஆட்டிவிட்டு தந்தை அருகே சென்று, “அப்பா, வொய் கோபம் இருக்கா?” என்று கேட்டது.
சட்டென்று கோபம் குறைந்தவனாக மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவன், “கோபம்லாம் இல்லைடா ராஜாத்தி.” என்றான்.
“அப்போ, ஏன் இப்தி இருந்த?” என்று கேட்டு அவனைப் போல் முகத்தை வைக்கவும், ஹரீஷ் வாய்விட்டு சிரித்தபடி மகளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
இரண்டு நிமிடங்கள் மகளை கொஞ்சியவன், “ரியா பேபி சமத்தா டாய்ஸ் வச்சு விளையாடுங்க… அப்பா அம்மா கூட கொஞ்சம் பேசிட்டு வரேன்.” என்றான்.
ரியா அன்னையைப் பார்க்க,
திவ்யா சரி என்று தலையை அசைக்கவும் தான் சென்றாள்.
ஹரீஷ் திவ்யாவை முறைக்க, அவளோ ஏதும் அறியாதவளை போல் முகத்தை வைத்துக்கொண்டு, “என்ன பேசணும், ரிஷி கண்ணா?” என்றாள்.
அவன் முறைப்புடன், “எல்லார் வீட்டிலும் அப்பா கிட்ட திட்டு வாங்காம இருக்க, அம்மாவோட உதவியை பிள்ளைகள் நாடும்… இங்கே!”
“எல்லோரையும் போல் நடந்தால் அது உன் தியா இல்லையே!” என்று தலை சரித்து கண்சிமிட்டவும், தாளம் தப்ப தயாரான மனதை அடக்கி அவளை முறைத்தான்.
“இப்போ எதுக்கு முறைக்கிற?”
“உனக்கு தெரியாதா?”
“தெரியாததால் தானே கேட்கிறேன்”
“தெரியாமல் தான் நந்துவை அனுப்பினியா? ரியா பேபியை அனுப்பினியா?”
“நான் எதுவும் செய்யல”
அவன் தீர்க்கமாகப் பார்க்கவும்,
“நிஜமாவே நான் எதுவும் செய்யலை… நம்ம குமாரு தான்….”
“அவன் செய்தா என்ன! நீ செய்தா என்ன? நீ சொல்லாமையா அவன் செய்து இருப்பான்?” என்று அவன் சிறு கோபத்துடன் பேசினான்.
அவள் அமைதியாக இருக்கவும்,
“நீ ஏன்டி இப்படி செய்ற? ஒவ்வொரு வாரக் கடைசியிலும் ஒவ்வொரு பிரச்சனை.”
“நீ தானே ‘நீ நீயா இரு’ னு சொன்ன!”
“அதுக்காக இப்படியா!”
“நான் என்ன தினமுமா விளையாடுறேன்! வாரத்துக்கு ஒரு நாள் தானே!”
“அந்த நினைப்பு வேறயா! ஒரு நாளே தாங்கல…”
“இப்போ என்ன சொல்ற?”
“பிரச்சனை தான் செய்வனா, இனி விளையாடாதே!”
அவள் அவனை முறைக்க….
அவனோ கோபத்துடன், “கண்ட கண்ட பரதேசி எல்லாம் உன்னை திட்டுறதை கேட்க என்னால் முடியாது… நான் உனக்கு சுதந்திரம் கொடுத்தால், அதை சரியா பயன்படுத்து… உன் மகிழ்ச்சிக்கு நான் என்னைக்கும் தடையா இருக்க மாட்டேன். ஆனா, சிலது இப்படி தான் செய்யனும்னு சொன்னா, கேட்டு நடந்துக்கோ…!
நீ கெட்டது பத்தாதுனு ரியா பேபியையும் கெடுக்கிற…! உன்னைப் பார்த்து இந்த வயசுலேயே சொட்டை… டக்லஸ்… அது இதுனு பட்டப் பெயரில் கூப்பிடுறா.” என்று இன்னும் சில பல திட்டுகளை வழங்கினான்.
அப்பொழுது அங்கே வந்த அவர்களின் பெண்ணரசி, “அப்பா அம்மா திட்டாத… அம்மா எப்பவும் கரெக்ட்” என்று முறைப்புடன் கூறினாள்.
ஹரீஷ் திவ்யாவை முறைக்க, அவளோ மகளை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்றாள்.
அன்று இரவு மகளை தூங்க வைத்த பிறகு, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த திவ்யாவை ஹரீஷ் நெருங்க, திரும்பாமல் அவனை தள்ளிவிட்டாள்.
அவன் அதைக் கண்டு கொள்ளாமல் கையை அவள் இடையில் போடவும்,
அவன் கையை எடுக்க முயற்சித்தபடி, “அப்போ திட்டிட்டு இப்போ என்ன கொஞ்சல்? போடா!”
அவனோ அவள் பின்னங்கழுத்தில் இதழ் பதித்தபடி, “திட்டினா தான், அதிகமா கொஞ்சனும்.”
“கோபம் போயிடுச்சா?”
“எனக்கு எப்போ கோபம் வந்துச்சு?”
“ஓ! ஆனா, நான் கோபமா இருக்கிறேன்.” என்றவள் தள்ளிப் படுக்க முயற்சிக்க, அவன் பிடி மேலும் இறுகியது.
அவளது காது மடலை இதழால் தீண்டியபடி, “அதை என் முகத்தை பார்த்து சொல்லுடி, என் செல்ல ரௌடி பேபி” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினான்.
“ச்ச்… தள்ளிப் போடா… எனக்கு பிடிக்கலை.” என்றதும், அவன் சட்டென்று எழுந்துவிட,
‘ரொம்ப செஞ்சிட்டோமோ!’ என்று மனதினுள் யோசித்தவள், அடுத்து ‘ஆனாலும் அவன் என்னை சமாதானம் செய்யணும் தானே!’ என்று சிறு வருத்தத்துடன் நினைத்த நொடி, சிறு அதிர்ச்சியுடன்,
“ஏய்! என்னடா செய்ற!” என்று அலறினாள்.
ஏனெனில், அவளை ஆட்டுக்குட்டி போல்… அவளது ரிஷி கண்ணா தூக்கி இருந்தான்.
அவள் கண்களைப் பார்த்து நெற்றியில் மென்மையாக முட்டி, “நிஜமா கோபமா?” என்று வினவினான்.
கஷ்டப்பட்டு மனதை அடக்கி, கெத்தாக, “ஆமா” என்றாள்.
அடுத்த நொடி அவள் தன் மேல் இருக்கும் படி படுத்துக் கொண்டவன், அவள் இடையை இறுக்கமாக அணைத்து கன்னத்தில் இதழால் தீண்டியபடி, “நிஜமா கோபமா?” என்றான்.
“ஹும்ம்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அவன் புன்னகையுடன் அவள் இதழை மென்மையாக தீண்டினான். அவள் அவளாக இல்லாமல் அவனுள் கரைய ஆரம்பிக்க, இதழை பிரித்தவன் அவளை சரித்து, “நீ… நீயா இருப்பது தான் பிடித்து இருக்குது… ஆனா, உன் பெயர் கெடாமல் இருப்பது எனக்கு ரொம்ப முக்கியம்டி.”
சட்டென்று மாயவலை அருந்திட, அவள் உண்மையான கோபத்துடன் அவனை முறைத்து, “எவன் எவனோ என்னமோ பேசுறான்னு, என்னால் மாற முடியாது.”
“என்னமோ பேசலை… உன்னை பற்றி தேவை இல்லாமல் தப்பா பேசுறான்.”
“நீயே தேவை இல்லாமல்னு சொல்லிட்ட! பேசுறவன் காரணமே இல்லாமல் பேசிட்டே தான் இருப்பான்… அதுக்காக…?”
“அவன் ஏதோ தப்பு செய்யப் போய் தான், நீ இப்படி செய்திருக்க….”
“தெரிந்தும், என்னை திட்டி இருக்க?”
“அது அவன் உன்னைப் பேசியதும், எனக்கு கோபம் வந்திருச்சு.”
“கோபம் இல்லன்னு சொன்ன?”
“கோபம் வந்தது அவன் மேல….”
“அப்போ, ஏன் என்னை திட்டின?”
“அவன் பேசுறது போல் நீ ஏன் நடந்த? இரு இரு… நான் முடிச்சிக்கிறேன்… செய்றதை ஆதாரம் இல்லாமல் செய்ய வேணாமா? அவனை நான் திட்டி தான் அனுப்பினேன்… அந்த ஆள் என்ன செஞ்சான்?”
“விக்கியும் அவன் பிரெண்ட் வானதியும் ஐஸ்-கிரீம் சாப்டுட்டு இருந்ததை பார்த்துட்டு, இங்கே அங்கிளிடம் வந்து தப்பு தப்பா பேசியிருக்கான்.”
“விக்கி அப்பா நம்பிட்டாரா?”
“உன்னை போல் தான், அந்த நாதாரி பேசுறது போல் ஏன் நடந்துக்கிறனு சொல்லி இருக்கார்… அவன் பேசினதுக்கு தான் இந்த தண்டனை… அக்சுவலி விக்கி அவன் மண்டையை தான் உடைக்க நினைத்தான், நான் தான்…”
ஹரீஷ் புன்னகையுடன், “அப்போ அடுத்த வாரம் அவன் மண்டை காலி.”
“அதில் என்ன சந்தேகம்!”
அவள் நெற்றியை முட்டியவன், “சரியான ரௌடி பேபிடி” என்று மென்னகையுடன் கொஞ்சினான்.
“நீ என்ன பேசின?”
ஹரீஷ் தான் பேசியதை கூறி, “இனி என்னிடம் வந்து உன்னைப் பற்றி பேச மாட்டான்.” என்றான்.
“சூப்பர்டா ரிஷி கண்ணா.” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க,
“என்ன தான் யுனிவர்சிடி டாப்பரா இருந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் தேறவே மாட்டிக்கிறியே! பாராட்டு, இப்படியா சொல்லணும்!”
“அப்போ தான் நீ சூப்பர் சூப்பரா கத்துத் தருவ!” என்று கூறி, அவள் புன்னகையுடன் கண் சிமிட்ட,
அவன் கள் உண்ட வண்டாக, “கத்து கொடுத்துட்டா போச்சு.” என்றபடி அவளது செவ்விதழ்களை தன் இதழ் கொண்டு மூடினான்.
அதன் பிறகு அங்கே வார்த்தைகளுக்கு இடமில்லை. இருவரும் காதல் உலகினுள் நுழைய, யாருக்கு யார் ஆசான் என்பதறியாமல், இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல், தங்கள் காதலை நிரூபித்தனர்.
விட்டாலும் விலகாத காதலுக்கு
தொட்டாலும் அகலாத மோதலுக்கு
களம் அமைத்து கரம் பிடித்த
மங்கை அவள் காதல்…
தேடி தேடி கண்டெடுத்த
அன்பின் அற்புதமே!
விட்டாலும் விலகாத காதலுக்கு
தொட்டாலும் அகலாத மோதலுக்கு
வடம் பிடித்து வரம் அடித்த
மன்னன் அவன் காதல்…
கூடி கூடி முத்தெடுத்த
அன்பின் அற்புதமே!
(இந்த கவிதை, புத்துக பதிப்பின் போது, DTP வொர்க் பார்த்த அக்கா எழுதியது)
***இதே காதலுடன் இவர்கள் இனிதே வாழ, வாழ்த்தி விடைபெறுவோம்***