அப்பொழுது, ருத்ரேஷ்வரின் சிறு வெட்கம் கலந்த வசீகர சிரிப்பை ரசித்தபடி தனக்கென்று பிரதேயேகமாக நெய்யப்பட்ட முழுவதுமாக தங்க நிற ஜரிகையில் ஜொலித்த அழகிய ஆலிவ் பச்சை நிற பட்டுப் புடவையில் பைரவி வந்து கொண்டு இருந்தாள்.
கூட்டத்தில் யாரோ, “இதோ பொண்ணு வந்தாச்சே!” என்றதும்,
ருத்ரேஷ்வர் சட்டென்று திரும்பிப் பார்க்க, பைரவி சட்டென்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
பைரவி மேடை அருகே வரவும்,
அசோக், “பொண்ணை மாத்திட்டாங்களா!” என்று பிரவீனிடம் மேடை ரகசியம் பேச,
பிரவீன், ‘என்ன!’ என்பது போல் பார்த்தான்.
அசோக், “பொண்ணு தலை குனிஞ்சு வரவும், சின்ன டவுட்” என்று கிண்டல் செய்தான்.
அப்பொழுதும் நிமிராத பைரவி மேடையில் ஏறும் முன், அசோக் காலை நன்றாக மிதித்து விட்டு செல்ல,
“ஆ!” என்று அலறியபடி காலை உதறியவன், “பொண்ணு மாறலை மச்சி” என்றான்.
பிரவீன் புன்னகையுடன், “தேவையா உனக்கு!” என்று கூற, அசோக்கோ புன்னகையுடன் கண்ணடித்தான்.
பைரவி மேடையில் ருத்ரேஷ்வர் அருகே அமர, ருத்ரேஷ்வரின் பார்வை மொத்தமும் பைரவி மேல் தான்.
பிரவீன், “ருத்ரா எங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்” என்று கிண்டல் செய்ய,
அப்பொழுது அங்கே வந்த நரேன் புன்னகையுடன், “நாமெல்லாம் இப்போ அவுட் ஆஃப் ஃபோகஸ்” என்றான்.
ருத்ரேஷ்வரோ இவர்களை கண்டு கொள்ளவே இல்லை. பைரவி மென்னகையுடன் தலை குனிந்தபடி தான் அமர்ந்து இருந்தாள்.
ருத்ரேஷ்வர் யோசனையுடன் தன்னவளின் ஒற்றை பார்வைக்காக தவமிருக்க,
அய்யர் தாலியை கையில் எடுத்த படி, “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்றார்.
பொன்தாலியை கையில் வாங்கிய ருத்ரேஷ்வர் காதலுடன், “அம்மு” என்று அழைத்தான்.
அந்த நொடிக்காகவே காத்திருந்தது போல் அவனை நிமிர்ந்து பார்த்த பைரவி, காதல் நிறைந்த பார்வையுடன்,
“லவ் யூ ஸோ மச் ருது மாமா” என்றாள்.
“வாவ்.. இவ்வளவு நேரமும் நீ தரையில் புதையலை தேடியதுக்கு இதானா காரணம்!” என்று தோழியிடம் கூறிய அசோக், ருத்ரேஷ்வர் இருந்த நிலையைப் பார்த்து,
“மச்சான்.. சாச்சுப்புட்டா மச்சான்!” என்று ‘மாயி’ திரைப்பட வடிவேல் போல் கூறினான்.
ஆம், ருத்ரேஷ்வர் ஸ்தம்பித்த நிலையில் தான் இருந்தான்.
மொத்த காதலையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்திய, தனக்கு மிகவும் பிடித்த அந்த ஆலிவ் பச்சை நிற விழிகளை கண்டு பேச்சற்றுப் போனான். ஆம்! முகூர்த்த புடவையை அணிந்து வரும் பொழுது பைரவி விழியொட்டு வில்லையை அகற்றி இருந்தாள்.
அவளது விழியின் நிறத்தை மனதில் கொண்டே ருத்ரேஷ்வர் அவளது முகூர்த்த புடவையை அந்த நிறத்தில் தேர்ந்தெடுத்து இருந்தான். அவனுக்கு அவளது அந்த விழிகளை பார்க்க கொள்ளை ஆசை இருந்தும், அவளிடம் அதை வெளிபடுத்தியது இல்லை.
ஆனால் தன்னவனின் ஆசையை நிறைவேற்றும் நொடி சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த பைரவி அந் நொடியை மிக சிறப்பானதாக மாற்றி இருந்தாள்.
பைரவியின் கண்களை அதிர்ச்சியுடன் கபிலன் பார்க்க,
அசோக், “லென்ஸ் இல்லை.. இதான் ஒரிஜினல்” என்றான்.
பைரவி விரிந்த புன்னகையுடன் ருத்ரேஷ்வரைப் பார்த்து, “ஓய் மாமா!” என்று அழைக்க,
தன்னிலை அடைந்த ருத்ரேஷ்வருக்கு அப்பொழுதும் பேச்சு வரவில்லை.
அய்யர், “தாலிய கட்டிண்டு கனவுல டூயட் பாடு அம்பி” என்று கூற,
பைரவி அவனைப் பார்த்து விரிந்த புன்னகையுடன் புருவம் உயர்த்தி கண்ணடித்தாள்.
அவளை அணைத்து முத்தமிட துடித்த மனதை அடக்கியபடி விரிந்த புன்னகையுடன், “மீ டூ லவ் யூ ஸோ மச் அம்மு” என்றவன் பிறர் அறியாமல் முத்தமிடுவது போல் லேசாக இதழ் குவிக்க, லேசாக கண்களை விரித்தவள் தானும் அவ்வாறே செய்தாள்.
அவளது செய்கையில் இன்னும் விரிந்த புன்னகையுடன் பொன்தாலியை அவள் கழுத்தில் அணிவித்தவன், அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றில் மூன்று முடுச்சுகளையும் அவனே போட்டான்.
விரிந்த புன்னகையுடன் அவனிடம் கை நீட்டியவள், அவனுடன் கை குலுக்கியபடி, “கங்ராட்ஸ் மிஸ்டர் பைரவி” என்று கூறி கண்சிமிட்ட,
அவனும், “கங்ராட்ஸ் மிஸ்ஸஸ் ஈஸ்வர்” என்றபடி விரிந்த புன்னகையுடன் கண்சிமிட்டினான்.
இருவரின் அகமும் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தது. இவர்களின் மகிழ்ச்சியில் இவர்கள் மேல் உண்மையான நேசம் கொண்டவர்களின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது.
திருமணம் முடிந்ததும் கஜேந்திரன் மற்றும் சண்முகவடிவு தம்பதியரிடம் ஆசிர்வாதம் வாங்கினர். ஆனந்த கண்ணீருடன் நிறைவான புன்னகையுடன் பைரவியை அணைத்த சண்முகவடிவு,
“இதே சந்தோஷத்துடன் என்றும் இருடா” என்று வாழ்த்தி விடுவித்தார்.
அதன் பிறகு ஒவ்வொருவராக வந்து வாழ்த்து கூறி பரிசுகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
இதன் நடுவே பைரவி, “டாக்டர் வரலையே!” என்று வினவ,
“காலையில் போன் செய்து, ரிசெப்ஷன் வரேன்னு சொன்னார்.” என்றான்.
ராதிகா எதிலும் கலந்து கொள்ளாததால் கஜேந்திரன் மணப்பெண் தோழியின் அன்னையிடம் கேட்டு கேட்டு தான், அனைத்து சடங்குகளையும் செய்தார்.
அசோக்கின் கலாட்டாக்களுக்கு நடுவில் அடுத்தடுத்து சடங்குகள் முடிந்து, மதிய உணவிற்கு பிறகு பெரும்பாலான உறவுகள் கிளம்பி இருக்க, இருவருக்கும் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது.
கஜேந்திரன், “பியூட்டிசியன் எப்போ வருவாங்க?” என்று பைரவியிடம் வினவ,
அவளோ ருத்ரேஷ்வரிடம், “நாலு மணிக்கு வருவாங்க.” என்றாள்.
அவளது விலகலை கண்டு கொள்ளாத கஜேந்திரன் இயல்பு குரலிலேயே, “இன்னும் அரை மணி நேரம் இருக்குது.. ரெண்டு பெரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ருத்ரா” என்றார்.
பைரவி படிகளில் ஏற, தேங்கி நின்ற ருத்ரேஷ்வர்,
“அப்பா அம்முவை என்னோட ரூமுக்கு கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்டான்.
கஜேந்திரன் புன்னகையுடன், “ஹ்ம்ம்” என்றார்.
“அம்மு” என்று அழைத்து படிகளில் ஏறி கொண்டிருந்தவளை நிறுத்தியவன்,
“பிரவீன்” என்று அழைத்து, “பார்த்துக்கோ.. ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரோம்” என்றான்.
“சரி டா” என்று பிரவீன் கூற,
கஜேந்திரன் அருகே இருந்த அசோக் ருத்ரேஷ்வரிடம், “நானும் வரட்டா மச்சி!” என்று கேட்டு கண்ணடிக்க,
ருத்ரேஷ்வர் சத்தமின்றி வாய் அசைத்து கூறிய பதிலில் அசோக் வாயின் மீது கை வைக்க,
அவனோ புன்னகையுடன், “வரியா?” என்று கேட்டான்.
கையை தலைக்கு மேல் கொண்டு சென்று கும்பிட்டவன் ‘நீ போ’ என்பது போல் செய்கை செய்தான்.
‘அது!’ என்பது போல் பார்த்துவிட்டு அவன் செல்ல,
பிரவீன் அசோக்கை பார்த்து சிரிக்க, அவனோ, “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்றான்.
கஜேந்திரனுக்கு மகனின் சம்பாஷனை புரியவில்லை என்றாலும், அவனது மகிழ்ச்சியில் மனம் நிறைத்த மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றார்.
ருத்ரேஷ்வர் வந்ததும் அவனுடன் சேர்ந்து படிகளில் ஏறிய பைரவி, “என்ன சொன்ன?” என்று கேட்டாள்.
“என்ன சொல்லி இருப்பேன்னு நினைக்கிற?”
“அவன் என்ன கேட்டான்?”
“அப்பா கிட்ட உன்னை நம்ம ரூமுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.. நானும் வரட்டானு கேட்டான்”
சட்டென்று சத்தமாக சிரித்தவள் திரும்பி அசோக்கை பார்க்க,
அவளது சிரிப்பு சத்தத்தில் மேலே பார்த்த அசோக் இருவரின் முக பாவத்தை கண்டு பைரவியிடம், “நோ.. நோ.. மீ யுவர் பெஸ்ட் பிரெண்ட்” என்றான்.
“பை டா நாராயணசாமி.” என்று விட்டு ருத்ரேஷ்வரோடு சென்றாள்.
சில நொடிகள் அவள் கூறியது புரியாமல் யோசித்தவன் பின், “அடிப் பாவி!” என்று வாய்விட்டே கூறினான்.
பிரவீன் அப்பொழுதும் புரியாமல், “மஞ்சு என்ன சொல்லிட்டு போறா?” என்று கேட்டான்.
“ருத்ரன் சொன்னதை தான் சொல்லிட்டு போறா”
“எனக்கு புரியலையே”
“ரொம்ப முக்கியம்.. போய் வேலையை பாரு”
“சரி விடு.. ருத்ரா கிட்ட கேட்டுக்கிறேன்”
“நீ ஆணியே புடுங்க வேணாம்.. நானே சொல்றேன்” என்ற அசோக், “தூள் படம் பார்த்து இருக்கிறியா?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்”
“அதுல விவேக் பேரு நாராயணசாமி..”
“அதுல அவன் பேரு நரேன் தானே..! ஓ! அதைச் சுருக்கி தான் நரேன்னு வச்சுப்பான்.. சரி விடு.. எதுக்கு அந்தப் பெயரை சொல்லிட்டு போறா?”
“ரீமாசென் விக்ரம்க்கு ஏபிசிடி சொல்லி தரப்ப, விவேக் மயில்சாமி கிட்ட என்ன சொல்லுவான்?”
சட்டென்று வாய்விட்டு சிரித்த பிரவீன், “அப்போ இனி உன்னோட பேரு நாராயணசாமினு சொல்லு.”
“வேணாம்!!” “நாராயணசாமி!” என்று சிரிப்புடன் பிரவீன் அழைக்க, அசோக் அவனை அடிக்க வர, அவனிடம் சிக்காமல் பிரவீன் ஓட, இவன் அவனை துரத்திக் கொண்டு ஓடினான்.