
தழல் ~ 19
ருத்ரேஷ்வரின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. ருத்ரேஷ்வர் பைரவி திருமணத்திற்காக மிக நெருங்கிய உற்றாரும் உறவினர்களும் வந்து இருந்தனர். கஜேந்திரன் மற்றும் நரேன் பம்பரமாக சுழன்று அனைவரையும் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றுக் கொண்டு இருந்தனர்.
பைரவியின் கூற்றுப் படி கஜேந்திரனின் கட்டளையில் ராதிகா, பாலாஜி மற்றும் நித்யா முதல் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். பாலாஜி அருகே அமர விருப்பம் இல்லாமல், ராதிகாவும் நித்யாவும் இரு இருக்கைகள் இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தனர்.
பாலாஜியின் பார்வை முழுவதும் ராதிகா மேல் இருக்க, அதை உணர்ந்தாலும் ராதிகாவோ அவர் பக்கம் திரும்பவே இல்லை.
ராதிகா சற்று மகிழ்வுடன் தான் அமர்ந்து இருந்தார். ஆம் ருத்ரேஷ்வர் மீது உண்மையான பாசம் கொண்ட அவரது மனம், அவனது மகிழ்ச்சியில் மகிழ்ச்சி கொண்டது தான்.
கடந்த சில நாட்களில் பலவிதமாக யோசித்தவர், பைரவியை மஞ்சரியாக இல்லாமல் ருத்ரேஷ்வரின் மனைவியாக மட்டுமே பார்க்கும் முடிவெடுத்து இருந்தார். வலிக்க வலிக்க அடி விழுந்ததில் தனது தவறை உணர ஆரம்பித்து இருந்தாலும், பைரவியை தனது மகளாக ஏற்றுக் கொள்ள இன்னமும் அவரால் முடியவில்லை.
என்ன தான் ருத்ரேஷ்வரை நினைத்து மகிழ்வாக இருந்தாலும், நித்யா பற்றிய கவலை நெருஞ்சி முள்ளாக அவரது நெஞ்சினை குத்திக் கொண்டு தான் இருந்தது. கூடவே பாலாஜியின் செயலில், அவரது மனம் ரணமாக வலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
நித்யாவோ தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வித கோபத்தில் அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுது ராதிகா அருகே அமர்ந்த உறவினர் ஒருவர், “கல்யாணப் பொண்ணு, உன்னோட மூத்த பொண்ணு மஞ்சரி தானாமே!” என்றார்.
அவரது குணம் அறிந்திருந்த ராதிகா அவரது நோக்கம் புரிந்து மிடுக்கான பார்வையுடன், “பத்திரிக்கை பார்த்துட்டு தானே வந்தீங்க!” என்றார்.
‘இன்னும் இவ திமிர் அடங்குதா!’ என்று மனதினுள் பொருமிய அந்தப் பெண்மணி, “பார்த்தேன்.. பார்த்தேன்.. மஞ்சரினு போட்டு இருந்தாலும் அப்பா அம்மானு வேற பெயர் தானே போட்டு இருந்தது.. அதான் சந்தேகம் கேட்டேன்.” என்றார்.
ஆம், கஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பெயரை மணமகன் ருத்ரேஷ்வரின் பெற்றோராக குறிப்பிட்டு, கஜேந்திரன் அழைப்பது போல் அடித்திருந்த திருமண பத்திரிக்கையில் மணப் பெண்ணின் பெற்றோர் பெயராக சண்முகவடிவு மற்றும் அவரது கணவர் பெயரை குறிப்பிட்டு இருக்க, மணப்பெண்ணின் பெயராக மஞ்சரி @ பைரவி என்று தான் அடித்து இருந்தனர்.
இன்றும் சண்முகவடிவு மற்றும் அவரது கணவரும் தான் பைரவியின் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அனைத்து சடங்குகளையும் செய்தனர். கஜேந்திரனுக்கு அண்ணன் முறையில் இருக்கும் உறவினர் தனது மனைவியுடன் ருத்ரேஷ்வரின் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து சடங்குகளை செய்தனர்.
பிரவீன் மற்றும் அசோக் ருத்ரேஷ்வருக்கு துணையாக அவனுடனே இருந்தனர். பைரவியின் விருப்பப்படி அசோக் தான் மாப்பிள்ளை தோழன். உறவில் ருத்ரேஷ்வருக்கு தங்கை முறையில் இருக்கும் ஒரு பெண் பைரவிக்கு மணப்பெண் தோழியாக இருக்கிறாள். அப்பெண் வேறு யாருமில்ல, அன்று மஞ்சரிக்கு ஆதரவாக பேசி அவளை ‘ருது மாமா’ என்று அழைக்கக் கூறியவரின் மகள் தான்.
அந்தப் பெண்மணி கூறியதிற்கு, “அவங்க அவளை வளர்த்தவங்க” என்று அப்பொழுதும் அசராமல் மிடுக்குடனே ராதிகா பதில் கொடுத்தாலும், உள்ளுக்குள் பைரவி மீது கோபம் எழுந்தது தான்.
“அது சரி.. யாரு.. தாயாக இருந்து வளர்த்தாங்களோ அவங்க பெயரைத் தானே போடுவாங்க.” என்று அந்தப் பெண்மணி விடாமல் கூற,
பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்த ராதிகா ‘எல்லாம் அவளால’ என்று பைரவியை மனதினுள் திட்டிக் கொண்டார்.
அதற்கும், “என்ன அமைதியாகிட்ட?” என்று சீண்டினார்.
அப்பொழுது, “பின்ன! ஆடிய ஆட்டத்துக்கு இப்போ அடங்கி ஒடுங்கி தானே இருக்கணும்!” என்றார் இவர்களது சம்பாஷனையை கேட்டபடி பின்னால் அமர்ந்து இருந்த மணப்பெண் தோழியின் அன்னை.
முதலில் பேசிய பெண்மணி ராதிகா மீது இருந்த பொறாமையிலும் காழ்புணர்ச்சியிலும் பேசி இருக்க, இவரோ ராதிகா மீது கொண்ட கோபத்தில் பேசினார்.
மணப்பெண் தோழியின் அன்னை தொடர்ந்தார், “ஏன்னா இப்போ இருக்கிறது வாயில்லா அப்பாவி சின்னப் பொண்ணு மஞ்சரி இல்லையே! ரௌடிகளையே நடுங்கச் செய்யும் பெண் சிங்கம்” என்றார்.
முதலில் பேசியவர் குதூகலத்துடன், “அது மட்டுமா! இப்போ கஜா அண்ணாவும் இவ பக்கம் இல்லையாமே!” என்றார்.
மணப்பெண் தோழியின் அன்னை சற்றே கோபத்துடன், “அவன் வெவரமானவன்.. கடைசி காலத்தில் கஞ்சி ஊத்த ஆள் வேணுமே.. அதான்” என்றார்.
மஞ்சரிக்கு ஆதரவு அளிக்காத கஜேந்திரன் மீது அவருக்கு என்றுமே கோபம் உண்டு.
“அது சரி அண்ணி.. இவ ஏன் இவ புருஷன் பக்கத்தில் உட்காரலை?” என்று மேடை ரகசியம் பேசினார்.
“பெத்த பொண்ணை விட்டுட்டு பெறாத ஒரு தறுதலையை பெத்த மகனா வளர்த்தாளே! அவன் விஷயத்தில் மனஸ்தாபம் வந்து இருக்கும்”
அதற்கு மேல் அங்கே அமர முடியாமல் ராதிகா எழுந்து சென்றாலும் கூடத்தில் தான் இருந்தார். அவருக்கு ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. பாலாஜியும் அப்படி தான் உணர்ந்தார், அதுவும் ராதிகாவை பேசியவர்களை தட்டிக் கேட்க முடியாத தன் நிலையை வெறுத்தவருக்கு மனம் அதிகம் வலித்தது.
மணமகன் மற்றும் மணப்பெண்ணிற்கான தனி தனி சடங்குகள் முடிந்து பைரவி முகூர்த்த புடவை அணிந்து வர சென்றிருக்க, ருத்ரேஷ்வர் தன்னவளின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான்.
அதுவும் தன்னவளை முதல் முறையாக புடவையில் காணப் போகிற ஆர்வமும், ஒரு வித பரவச நிலையிலும் இருந்தான்.
“வா காத்திருக்க நேரம் இல்லை ஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓஓஓ” என்று ராகம் இழுத்து அசோக் ருத்ரேஷ்வரைப் பார்த்து கிண்டலாகப் பாட,
சட்டென்று தன்னிலைக்கு வந்த ருத்ரேஷ்வர், “டேய்! என்ன பாட்டை பாடுறடா!” என்றான் சிறிது அலறலாக.
நண்பனின் அலறலில் பிரவீன் சிரிக்க, ருத்ரேஷ்வர் அவனை முறைத்தான்.
பிரவீன் புன்னகையுடன், “உண்மையை சொல்லு மச்சி.. உள்ளுக்குள் இவன் பாடினதை ரசிக்கிற தானே!” என்று வார,
“அதே தான்” என்ற அசோக் ருத்ரேஷ்வரைப் பார்த்து,
“நான் முதல் ரெண்டு வரி மட்டும் தானே பாடினேன்! நீ வேணா முழு பாட்டையும் ராத்திரி உன் அம்மு கிட்ட பாடு” என்று கூறி கண் சிமிட்டினான்.
இருவரையும் முறைத்தபடி, “அடங்குங்கடா” என்று ருத்ரேஷ்வர் கூற,
“எங்க! என்னை அடக்க தான் இன்னும் ஆள் வரலையே! ஆனா உன்னை..” என்று நிறுத்திய அசோக் விஷமத்துடன், “ஹன்..ஹன்ன்ன்ன்..” என்று கிண்டல் செய்தான்.
“ரொம்ப படுத்துறடா” என்று கூறிய ருத்ரேஷ்வர் அதற்கு மேல் போலியாக முறைக்க முடியாமல் சிரித்து விட,
அந்தச் சிரிப்பில் சிறு வெட்கம் கலந்த இருந்தது.
அசோக், “வாவ்.. செம.. வெட்கம் அள்ளுது” என்றபடி கையில் இருந்த எண்ம படமியில்(digital camera) புகைப்படம் எடுத்தான்.
“டேய்!” என்ற ருத்ரேஷ்வர் முகத்தில் வெட்கத்தின் அளவு சற்றே கூட, அதனையும் அசோக் புகைப்படம் எடுத்தான்.
பின் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கபிலன் பக்கம் திரும்பிய அசோக், “என்ன பாஸ்! அதிசய பிறவியை பார்க்கிற மாதிரி இப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.
கபிலன், “ஹான்” என்றபடி அவனைப் பார்க்க,
அசோக் புன்னகையுடன், “இவன் எப்படி மேடமுக்கு பிரெண்ட்டா இருக்கிறான்னு தானே நினைக்கிறீங்க!” என்றான்.
சிறு அதிர்வுடன் கபிலன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,
“உங்க மேடம் என்னை விட செமையா கலாய்ப்பா” என்றான். கபிலன் நம்பாமல் பார்க்கவும், “அட, சத்தியமா பாஸ்! சிரிக்காம கலாய்க்கிறதில் அவளை மிஞ்ச ஆளே கிடையாது” என்றான்.