அவன் மன்னிப்பு கேட்கும் முன்,
“சாரி மாமா.. நான்..” என்று தவிப்புடன் பேசியவளின் வாயை கரம் கொண்டு மூடியவன்,
“நான் தான்டா அவசர பட்டுட்டேன்.. சாரிடா.. சாரி” என்றான்.
அவள் மறுப்பாக தலை அசைக்க,
“உன் நிலை எனக்கு புரியுதுடா.. இதில் நீ வருத்தப்பட ஒன்னுமே இல்லை” என்றான்.
அவளது முகம் தெளியாததை கண்டவனுக்கு அவள் தன்னுள் உழன்று கொண்டு இருப்பது புரிந்தது.
அவளது இரு கன்னங்களையும் பற்றியபடி, “அம்முமா.. இங்க பாரு.. மாமா சொல்றதை கவனி.. நிஜமாவே ஒன்னுமில்லைடா” என்றான்.
அவள் அவனை கவனிப்பதை உணர்ந்தவன் கைகளை விலக்கியபடி, “நீயே யோசித்து பாரு.. முதல்ல நான் முத்தம் கொடுத்தப்ப நீ அதை ரசிக்கத் தான் செய்த.. என்னோட கை உன்னை தீண்டவும், அதுவும் கொஞ்சம் அழுத்தமா தீண்டவும் தான், தன்னிச்சையா என்னை தள்ளி விட்டுட்ட..
நல்லா யோசித்து பாரு.. தள்ளிவிட்டப்ப நீ அருவெறுப்பாவோ பயமாவோ பீல் செய்து இருக்க மாட்ட.. அப்படி ஒரு உணர்வை உன்னோட முகத்தில் நான் பார்க்கலை.. அதான் சொல்றேன்.. ஸோ நாம இதை கடந்து வந்திடலாம்டா..
ஜஸ்ட் தன்னிச்சையா தள்ளி விட்டுட்ட.. அவ்ளோ தான்.. என்னோட தொடுகைக்கு பழகியதும் போக போக எல்லாம் சரியாகிடும்” என்றான்.
சில நொடிகள் அமைதியாக, அவன் சொன்னதை உள்வாங்கி அவள் யோசிக்க, அவளுக்கு அவகாசம் கொடுத்து அமைதியாக இருந்தான்.
சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவள் சிறு தயக்கத்துடன் அவனை ஏறிடவும், “என்னடா?” என்று கனிவுடன் கேட்டான்.
“நீ.. இனி என்னை நெருங்க.. ஐ மீன் இயல்பா தொட்டு பேசக் கூட யோசிப்ப தானே!”
புன்னகையுடன் அவளை நோக்கியவன், “அப்புறம் எப்படி என்னோட தொடுகையை நீ பழகுறது? நாம குடும்பம் நடத்துறது?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
அவனது பதிலில் தெளிந்தவளின் முகத்தில் சிறு நாணத்துடன் கூடிய மென்னகை குடிகொள்ள,
அதை ரசித்தபடி, “ஓகே இன்னைக்கே, இப்பவே ஆரம்பிப்போம்.. முதல் கிளாஸ்.. என்னோட இந்த தொடுகைக்கு பழகு” என்றபடி தனது வலது கையை அவளை சுற்றி கொண்டு சென்று அவளது இடபக்க இடையை பற்றினான்.
அவனது கை மட்டுமே அவளது உடலை உரசிக் கொண்டு இருக்க, இருவரது உடலும் நூழிலை இடை வெளியில் இருந்தது.
ஒரு நொடி மெலிதாக அதிர்ந்தவள் சங்கோஜமாக உணர்ந்தாலும் தன்னவனுக்காக அமைதியாக தான் இருந்தாள். ஆனாலும் அவளையும் மீறி அவளது உடல் லேசாக இறுகியது தான்.
அவளது நிலை அவனுக்கு புரிந்தாலும் தனது கையை விலக்கிக் கொள்ளவில்லை. தான் வெளியே சென்ற பிறகு, இதை நினைத்து அவள் தவித்து குழம்பாமல் இருக்க வேண்டுமென்றால் அவள் இப்பொழுதே இதற்குப் பழகி தெளிய வேண்டும் என்று நினைத்தான்.
“அம்முமா” என்று மென்மையாக அழைத்தவன் அவள் அவனை நோக்கவும்,
“ஜஸ்ட் ரிலாக்ஸ்.. உன்னோட ருது மாமாடா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றவளின் இறுக்கம் சில நொடிகளில் தளரவும்,
“இந்த தொடுகை அருவெறுப்பா இருக்கா?” என்று கேட்டான்.
அவள் மறுப்பாக தலை அசைக்க,
“அப்போ எப்படி இருக்குது?” என்று கேட்டான்.
“அது.. கொஞ்சம் ஒரு மாதிரி அன்ஈஸியா இருக்குது”
உடல் உரச நெருங்கி அமர்ந்தபடி, “இப்போ?” என்று கேட்டான்.
தன்னுள் எழுந்த படபடப்பை மறைத்தபடி அவள் அமைதியாக இருக்க,
“மறைக்காம சொல்லணும்னு சொல்லி இருக்கிறேன்.” என்றான்.
“எனக்கு சரியா சொல்லத் தெரியலை.. ஒரு மாதிரி கொஞ்சம் படபடப்பா இருக்குது”
“ஜஸ்ட் ரிலாக்ஸ்டா அம்முமா.. நான் எதுவும் செய்யப் போறது இல்லை”
“ஹ்ம்ம்” என்றவளின் படபடப்பு குறைய வில்லை.
அதை உணர்ந்தவன் அவளது காதருகே குனிந்து மெல்லிய குரலில், “கண்ணை மூடு அம்மு” என்றான்.
அவனது குரலுக்கு கட்டுப்பட்டு அவள் கண்களை மூடிக்கொள்ள,
காதலும் கிறக்கமும் நிறைந்த கிசுகிசுப்பான குரலில், “ஜஸ்ட் என்னோட இந்த குரலையும் தொடுகையையும் உள்வாங்கப் போற.. வேற எதுவுமே இல்லை” என்றான்.
இரண்டே நிமிடங்களில் படபடப்பு நீங்கி கண்களை மூடிய நிலையிலேயே அவனது தோளில் தலை சாய்த்தவளின் மனம் ஒருவித மோன நிலையில் இருந்தது.
மெல்லிய புன்னகையுடன் அவளது உச்சந் தலையின் மீது கன்னம் பதித்தவன், ஒரு நிமிடம் கழித்து கையை விலக்கிய படி, “அம்மு” என்று அழைத்தான்.
கண்களை திறந்தபடி நிமிர்ந்து அமர்ந்தவள் புன்னகையுடன், “தேங்க் யூ மாமா” என்றாள்.
அவனோ குறும்பு புன்னகையுடன், “எனக்கு தானே இதில் லாபம்” என்று கூறி கண்சிமிட்டினான்.
“ஏன் எனக்கு லாபம் இல்லையா?” என்றபடி அவள் புருவம் உயர்த்த,
லேசாக கண்களை விரித்தவன் அவளது இயல்பு நிலையை உணர்ந்து காதல் பார்வையுடன், “என்ன லாபமோ?” என்றான்.
“உனக்கு என்ன லாபமோ அதே தான்”
“அப்போ எனக்கு அதிக லாபம்னு சொல்லி இருக்கணுமோ?”
“லாபம் சமமாக கூட இருக்கலாமே”
“இருக்கலாமே!” என்றபடி அவளது இடையை பற்றியபடி அவளது நெற்றியில் முட்டினான்.
இம்முறை அவளது உடல் இறுகவுமில்லை, மனம் சஞ்சலத்தை உணரவுமில்லை.
சிறு நாணத்துடன் அவனது நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கியவள், “டாபிக் எங்கெங்கோ போய்டுச்சு” என்றாள்.
சற்றே விலகி அமர்ந்தாலும் காதல் பார்வையுடனேயே, “எங்கே போச்சு?” என்று விஷமக் குரலில் வினவினான்.
கண்களை உருட்டி மிரட்டியவள், “நீ டாக்டர் கிட்ட பேசியதைப் பற்றி சொல்லு” என்றாள்.
பார்வையை இயல்பாக்கியவன், “சென்னையில் இருக்கிற பேமஸ் சைகாட்ரிஸ்ட் ஆனந்தன் கிட்ட பேசினேன்.. அவருக்கு எண்பத்தைந்து வயசு இருக்கும்.. ஆனா பார்க்க அப்படி தெரியாது.. அவரோட பேத்தியை கல்யாணம் செய்திருக்கிற மதிவர்மன் கூட எனக்கு பிஸ்னெஸ் டை-அப் இருக்குது.. அவர் மூலமா தான் டாக்டரை எனக்கு தெரியும்.. தெரியும்னா பெருசா பழக்கம்லாம் கிடையாது.. இதான் முதல் முறையா பேசினேன்..
கிருஷ்ணாவை நீ அரெஸ்ட் செய்த அன்னைக்கு இங்கே நீ பேசியதை சொல்லி தான் டாக்டர் கிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி நடந்துக்கணும்னு கேட்டேன்..
அவர் உனக்கு என்ன நடந்ததுனு முழுமையா தெரிந்த பிறகு தான் சொல்ல முடியும்னு சொன்னார்..
உன்னை வருத்த எனக்கு மனமில்லை.. சண்முகவடிவு அம்மா கிட்ட கேட்கலாமானு தான் முதல்ல நினைத்தேன்.. அப்புறம் ஒரு யோசனை.. அசோக் கிட்ட கேட்டு, அவனுக்கு தெரியலைனா அவங்க கிட்ட கேட்டுக்கலாம்னு யோசிச்சு அவன் கிட்ட தான் கேட்டேன்.. உனக்கு நடந்ததை பற்றி மட்டுமில்லாம நீ அங்கே போனதில் இருந்து எல்லாமே கேட்டேன்.
டாக்டர் கிட்ட எல்லாமே சொன்னேன்.. அவர் உன்னை ரொம்ப பாராட்டினார்.. ‘நீ ரொம்ப ஸ்ட்ரோங் பெர்சன்னு சொன்னார்.. என்ன தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுறதுக்கு முன்னாடியே உன்னை காப்பாற்றி இருந்தாலும் அந்த சம்பவத்தோட தாக்கம் நிச்சயம் இருக்கும்னும், நீ இந்தளவு மீண்டு வந்ததோடு இப்படி கயவர்களுக்கு சிம்ம சொப்பனமா இருக்கிறது ரொம்ப பெரிய விஷயம்’னும் சொன்னார்.. நான் ‘என்னோட அம்மு ஒரு தழல் பட்சி’னு சொன்னேன்” என்றவனை அவள் காதலுடன் நோக்க,
அவளது பார்வையில் சிக்குண்டவன் அவளை பார்த்தபடியே இருந்தான்.