அவன் புன்னகையுடன், “தயக்கம் இல்லை.. ஒருவேளை நீ தூங்கிட்டு இருந்து, என்னோட வரவால் உன் தூக்கம் கலைஞ்சிடக் கூடாதேனு யோசித்தேன்.. ஆனா..” என்று அவன் இழுத்து நிறுத்த,
“நான் பழைய நினைவில் உழன்றபடி தவிச்சிட்டு இருக்கிறேனா, இல்லை தூங்குறேனானு தெரியாம உன்னால் நிம்மதியா தூங்க முடியலை” என்று அவள் முடித்து வைத்தாள்.
அவன் உதட்டோர மென்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான்.
“அந்த சம்பவம் நினைவில் வந்தது தான் ஆனா, அதிலேயே உழன்று தூக்கத்தை கெடுக்கிற அளவுக்கு பைரவி பலவீனமானவ இல்லை”
“கொஞ்ச நேரம் உன் கூட இருக்கட்டுமா?”
அவனை மீறி அவனது கண்ணில் தெரிந்த தவிப்பைக் கண்டு கொண்டவள், தெளிவான திடமான குரலில், “நான் நார்மல் தான் மாமா.” என்றாள்.
“ஓகே.. தேவைனா கூப்பிடு.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்று விட்டு அவன் தனது அறைக்குச் சென்றான்.
தனது அறைக்குச் சென்றவனால் பைரவியின் மனத் திண்மையை பிரம்மிக்காமல் இருக்க முடிய வில்லை. சற்று முன்பு அவளது வேதனையையும் ரௌத்திரத்தையும் கண்டவனால் இன்னமும் அந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாமல் இருக்க, அவளோ தன்னைத் தானே தேற்றிக் கொண்டு இயல்பாகி இருந்தாள்.
அதன் பிறகு அவனது மனம் சற்றே நிம்மதியடைந்து இயல்பிற்கு திரும்ப, இனி தன்னவள் வேதனையில் உழன்று தவிப்பளோ என்ற தவிப்பு இல்லாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
இன்று..
பைரவி அவனது தோளில் சாய்ந்தபடி தலையை நிமிர்த்தி, “அதான் கல்யாணத்துக்கு அப்புறம் நாம வேற வீட்டுக்கு போகலாமா இல்லை உன்னோட அத்தை குடும்பத்தை வேற வீட்டுக்கு போக சொல்லலாமானு கேட்டியா?” என்று கேட்டாள்.
அவன் அவளை அமைதியாக பார்க்க, “என்ன?” என்றாள்.
சிறு பெருமூச்சை வெளியிட்டு, “இதை நீ எப்படி எடுத்துப்பனு தெரியலை” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவன்,
“அன்னைக்கு உன்னோட கண்ணில் தெரிந்த வெறுமை, வலி, கோபம் எல்லாத்தையும் பார்த்தப்ப எனக்கு அப்படி வலிச்சுது.. உன்னை விட்டுட்டு ஊருக்கு போய் இருக்கக் கூடாதுனு என் மேலேயே அவ்ளோ கோபம் வந்தது..
அன்னைக்கு உன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் நீ ஓகேனு புரிந்தாலும், அந்த இடத்தை பார்க்கிறப்பலாம் உனக்கு அந்த ஞாபகம் வரும் தானேனு தோனுச்சு.. உன்னை காயப்படுத்தாம அதை பற்றி உன் கிட்ட எப்படி பேசனு யோசனை.. கூடவே நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட எந்த ஒரு செயலும் உன்னை காயப்படுத்திடக் கூடாதே என்ற தவிப்பும் இருந்தது..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“இருந்ததா இருக்குதா?” என்று கேட்டாள்.
மென்னகையுடன் அவளை நோக்கியவன், “உண்மையை சொல்லணும்னா இருக்குது தான்” என்றான்.
அவள் அவனை முறைக்க,
அவன், “ஏன்! உனக்கு அதே தவிப்பு இல்லையா?” என்றதும் முறைப்பதை நிறுத்தியவள்,
“சரி.. இதில் நான் தப்பா நினைக்க என்ன இருக்குது? எதுக்கு எப்படி எடுத்துபேனோனு தெரியலைனு சொன்ன?”
“நான் இன்னும் சொல்லியே முடிக்கலையே” என்றவன், “எனக்கு தெரிந்த சைக்காட்ரிஸ்ட் கிட்ட பேசினேன்” என்று நிறுத்தி அவளைப் பார்த்தான்.
அவளோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “இதில் என்ன? நான் கூட தான் என்னோட சைகாட்ரிஸ்ட் கிட்ட பேசினேன்” என்று இலகுவாக கூறினாள்.
அவளின் புரிதலிலும், பக்குவமடைந்த பேச்சிலும் அவனது பிரம்மிப்பு இரட்டிப்பானதோடு அவள் மீது காதல் பெருகியது.
“எப்போ பேசின?” என்று கேட்டான்.
“கல்யாணத்துக்கு ஓகே சொன்னதும் பேசினேன்.. என்னால் இயல்பான கல்யாண வாழ்க்கையை வாழ முடியுமானு கேட்டேன்” என்றவள், “அது என்ன ‘என்னோட சைகாட்ரிஸ்ட்’னு கேட்கலை, ‘எந்த டாக்டர்’னும் கேட்கலை.. எப்போ கேட்டேன்னு மட்டும் கேட்கிறே!” என்றபடி சந்தேகமாகப் பார்க்க,
அவன் சிறு தயக்கத்துடன், “அசோக் கிட்ட பேசினேன்” என்றான்.
நொடியும் தாமதிக்காமல், “எனக்காக தானே பேசி இருக்க” என்று அதனையும் இலகுவாகவே எடுத்துக் கொண்டாள்.
அவளை இறுக்கி அணைத்து முத்தமிட துடித்த காதல் மனதை அடக்கியபடி அமைதியான குரலில், “டாகடர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.
“நீ சொன்னதைத் தான் சொன்னாங்க.. என்னோட ஆழ் மனதில் உன் மேல் காதல் இல்லாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன்னு சொன்னாங்க..
எனக்கே அந்த சந்தேகம் இருந்தது தான்..
அவங்களுக்கு தான் உன்னையும், நமக்குள் இருக்கும் பான்டேஜ்யும் முன்னாடியே தெரியுமே.. நீ என்னை விரும்பி கல்யாணத்துக்கு கேட்டதை சொன்னேன்.. கொஞ்சம் டைம் எடுத்தாலும் உன்னோட மட்டும் தான் என்னால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்னு சொன்னாங்க” என்றாள் விரிந்த புன்னகையுடன்.
“அப்புறம் ஏன் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு கல்யாணத்தை கேன்செல் செய்யச் சொன்ன?” என்று அவன் முறைப்புடன் வினவ,
“அது.. நீ வீட்டுக்கு கூப்பிட்டதும் சட்டுன்னு அந்த நொடி நேர ஒரு ஆசிலேஷன்” என்றவள், “அப்படி எல்லாம் நீ என்னை விட்டுட மாட்டனு தெரியும்” என்று கூறி புன்னகையுடன் கண்சிமிட்டினாள்.
அவளது கூற்று மற்றும் கண்சிம்மிடலில் சட்டென்று இயல்பானவனின் பார்வை சற்றே மாற, புன்னகையுடன் அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
பின் அவளது விழிகளை பார்த்தபடி கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். கண்களை லேசாக விரித்தாளே தவிர, அதிரவோ அவனை விட்டு விலகவோ இல்லை.
அதில் தைரியம் பெற்றவனின் இதழ்கள் மீண்டும் அவளது கன்னத்தை தீண்டியது ஆனால் இந்த முறை முத்தமிடாமல் மயில் இறகால் வருடுவது போல் பட்டும்படாமல் கோலம் வரைந்தது.
தன்னுள் கிளம்பிய உணர்வலைகளில் தத்தளித்தவள் கண்களை மூடியபடி அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
அவளது பாவனையில் சிறகில்லாமல் பறந்தவன் மெல்ல உணர்வுகளின் பிடியினுள் சென்றான். அவளது மூடிய விழிகளின் மீது மென்மையாக முத்தமிட்டு, மீண்டும் கன்னத்தில் கோலம் வரைந்தவனின் இதழ்கள், அவளது இதழை மென்மையாக தீண்டிய நொடி, அவனது கைகள் அவளது இடையை சற்றே அழுத்தமாகத் தீண்டி விட, அவள் தன்னையும் அறியாமல் அவனது நெஞ்சின் மீது கை வைத்து அவனை வேகமாக தள்ளி விட்டு இருந்தாள்.
சட்டென்று சுதாரித்தவன் மானசீகமாக தன்னையே அடித்துக் கொண்டான்.