தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 18.1

திருமணத்திற்கு முந்திய நாள் காலை வேளையில் வீட்டில் செய்யப்படும் அலங்காரங்களைப் பார்த்த பைரவி, ருத்ரேஷ்வரை தேடி கண்களால் துளாவினாள். அவனைக் காணவில்லை என்றதும், அவனது அறையில் இருப்பான் என்று யூகித்து அவனை கைபேசியில் அழைத்தாள்.

அவன் அழைப்பை எடுத்ததும், எங்க இருக்க?” என்று கேட்டாள்.

இப்போ தான் ரூமுக்கு வந்தேன்.”

என் ரூமுக்கு வா”

நீ நம்ம ரூமுக்கு வரலாமே!”

நம்ம ரூம் ஆனதுக்கு அப்புறம் வரேன்”

புன்னகையுடன், சரி வரேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன், அவளது அறைக்கு சென்றான்.

அறையுனுள் சென்றவன், அவள் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல், என்ன அம்மு?” என்று கேட்டான்.

அவள் கைகளை கட்டிக் கொண்டு அழுத்தத்துடன் பார்க்கவும்,

புன்னகையுடன், உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு நினைத்தேன்.” என்றான்.

எதுக்கு பிளான் சேஞ்ச்?”

மணமேடை போட்ட பிறகு உனக்கே புரியும்..”

நீயே சொல்லு.”

உட்காரு” என்றபடி அவளை இருவர் அமரும் மெத்திருக்கையில் அமர வைத்தவன் தானும் அதிலேயே அவள் அருகே அமர்ந்து அவளது கையை பற்றிய படி,

இனி அந்த இடத்தைப் பார்த்தால் உனக்கு நம்ம கல்யாணம் தான் ஞாபகம் வரும்” என்றான்.

அவள் அதிர்வுடன், மாமா” என்று அழைக்க,

அவன் வருத்தமான புன்னகையுடன், இங்கே வந்த அன்னைக்கு, நடு  ராத்திரியில் நீ அந்த  இடத்தை வெறித்துப் பார்த்துட்டு இருந்ததை பார்த்தேன்டா” என்றான்.

(மிக நெருங்கிய உற்றார் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணத்தை குலதெய்வக் கோவிலில் முடித்து கொண்டு, வரவேற்பை பெரிதாக செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதை மாற்றி திருமணத்தை வீட்டில் செய்ய ருத்ரேஷ்வர் ஏற்பாடு செய்து இருந்தான்.)

சில நொடிகள் பேச்சற்று அவனைப் பார்த்தவள் அவனது புஜத்தை பற்றியபடி அவன் தோளில் சாய்ந்தாள்.

அவளது பிடியின் இறுக்கத்தில் இருந்தே அவளது மனநிலையை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

பைரவி இங்கே வந்த அன்று நள்ளிரவில் உறக்கம் களைந்து அறையை விட்டு வெளியே வந்த போது அவளது பார்வையில் கூடம் விழவும், அவளது கண் முன் அன்றைய சம்பவம் படமாக ஓடியது.

மேலே இருந்தபடி படியின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றி இருந்தவளின் பிடி இறுகிக் கொண்டே போக, முதலில் வெறுமையாக இருந்த பார்வை வலியை பிரதிபலித்து பின் கோபத்தில் தகித்தது.

பைரவி பழைய நினைவுகளில் உழன்றபடி உறக்கமின்றி இருப்பாளோ என்ற சந்தேகத்தில் அவளது அறைக்கு சென்று பார்க்கும் எண்ணத்தில் வெளியே வந்த ருத்ரேஷ்வர், தன்னவளின் நிலையை கண்டு பெரிதும் வருந்தியதோடு, பாலாஜி மீது கொலைவெறி கொண்டான்.

அவன் அவளை அழைக்க நினைக்கையில் அவள் அறையினுள் சென்று விட்டாள். 

ருத்ரேஷ்வர் நள்ளிரவு என்றும் பாராமல் பாலாஜி அறைக்குச் சென்று விட்டான். ராதிகா மனம் மாறி வருவாரோ என்ற நப்பாசையில் பாலாஜி கதவைத் தாழிடாமல் இருந்தது அவனுக்கு வசதியாகப் போனது.

கடும் கோபத்துடன் கதவை திறந்து உள்ளே சென்றவன் தூங்கிக் கொண்டு இருந்த பாலாஜியை ஓங்கி மிதித்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ந்து தூக்கம் களைந்தவர் சுதாரித்து எழும் முன் மிதிகள் இடியாக விழுந்தது. அதிலும் அவரது உயிர் நாடியிலேயே அவன் மிதிக்க, கத்த கூட சக்தியற்று வலியில் துடித்தார்.

ஐந்து நிமிடங்கள் அவரை புரட்டியவன், இனி எந்த பொண்ணு மேலயாவது பார்வை தப்பா போச்சு!” என்று விட்டு வெளியேறி இருந்தான்.

அவனது அடியில் துவண்டவர் இன்றளவிலும் இயல்பிற்குத் திரும்பவில்லை. அதனாலேயே அறையில் முடங்கிக் கொண்டார். தரையில் இருந்து எழக் கூட முடியாமல் அப்படியே கிடந்தவர், மெல்ல எழவே அரை நாள் ஆனது. சிரமத்துடன் எழுந்து சென்று வேலையாளை அழைக்கும் சொடுக்கியை அடித்தவர், தட்டு தடுமாறி சென்று கதவை திறந்து, வந்த வேலையாளிடம் உணவை கேட்டு வாங்கி உண்டார்.

அவர் இருக்காரா இல்லையா! உண்டாரா இல்லையா! என்றெல்லாம் கண்டுகொள்வார் யாருமில்லாமல் முற்றிலுமாக நொடிந்தவரின் மனம் முழுவதும் வலி, வலி மட்டுமே. உடலும் மனமும் ரணமாக இருக்க, ஏன்டா உயிருடன் இருக்கிறோம்! மரணம் வந்து தனக்கு விடுதலை கொடுக்கக் கூடாதா!’ என்று நினைக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார், ஆனால் அதற்கு துணிவில்லை என்றதோடு, ராதிகா தன்னை மன்னித்து ஏற்று கொள்ள மாட்டாரா என்ற நப்பாசையும் இருக்க, தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டார். 

பாலாஜியை அடித்துவிட்டு மேலே சென்ற ருத்ரேஷ்வர், தன்னவளை நினைத்து பெரிதும் தவித்தான். அவளது அறையினுள் செல்வதா வேண்டாமா என்று சில நிமிடங்கள் அவளது அறை முன் நடை பயின்றபடி யோசித்தவன், மனதின் தவிப்பை அடக்க முடியாமல் அவளது அறைக் கதவில் கையை வைத்த நொடி, கையில் துப்பாக்கியுடன் பைரவி கதவைத் திறந்திருந்தாள்.

சில வருடங்கள் கழித்து இப்படி நள்ளிரவில் தூக்கம் களைந்து பழைய நினைவுகளில் உழன்றவள், ஓருவாறு தன்னைத் தானே தேற்றி, அதனை கடந்து நிதானத்திற்கு வந்த போது, அவளது காவல்துறை மூளை விழித்துக் கொண்டு அவளது காதும் கண்களும் கூர்மை பெற்றன. தனது அறை வாயிலில் ஒருவர் நடக்கும் அரவம் தெரியவும், பாலாஜியோ என்று நினைத்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்திருந்தாள்.

ஒரு நொடி அதிர்ந்த ருத்ரேஷ்வர் பின் இயல்பாகி, நீ தூங்கிட்டு தான் இருக்கிறியானு பார்க்கலாம்னு வந்தேன்.” என்றான்.

அவள் நின்ற தோற்றத்தில் இருந்தே அவள் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்து விட்டாள் என்பதை உணர்ந்தவனின் மனம் சற்றே நிம்மதி அடைந்தது.

என் ரூமுக்குள்ள வர என்ன தயக்கம்?” என்றவளது கேள்வியில் அவன் புருவம் சுருக்கி பார்க்க,

கொஞ்ச நேரம் கதவு முன்னாடி நடந்துட்டு இருந்ததை சொல்றேன்.” என்றாள்.

அவன் சிறு ஆச்சரியத்துடன் பார்க்க, உதட்டோரக் கீற்றுடன், நான் ஒரு போலீஸ்னு அப்பப்ப மறந்துடுற போல” என்றாள்.

error: Content is protected !!