“ஓகே.. உடனே மாற்றம் வராது தான்.. ஆனா மாற நினைக்கிறேன்.. முயற்சியும் செய்றேன்.. இப்படி ரியாக்ட் செய்யாத.” என்று அவள் கூற,
“அப்போ முழுசா புரியவைக்கும் முயற்சியில் நான் இறங்கலாம்!” என்றவனின் முகத்தில் முடித்த போது இயல்பான குறும்பு புன்னகை குடியேறி இருந்தது.
“யூ நாட்டி” என்று அவளும் இயல்பான புன்னகையுடன் கூற, அவன் வாய்விட்டு சிரித்தபடி அமர்ந்தான்.
“ஆனா ஒன்னு.. நீ ஊட்டினா, பத்து நாள் கழித்து புது யூனிபார்மில் தான் ஸ்டேஷன் போகணும்.” என்றாள்.
அவன் அதற்கும் வாய் விட்டுச் சிரிக்க, செல்லமாக முறைத்தவள், அறையினுள் நடை பயில ஆரம்பித்தாள்.
மெத்திருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி அவளையே அணுஅணுவாக அவன் ரசிக்க,
இரண்டே நிமிடங்களில் நடையை நிறுத்தி, “இப்படி பார்க்காத” என்றாள்.
தனது பார்வையை சிறிதும் மாற்றாமல் மென்னகையுடன், “ஏன்?” என்றான்.
“என்னவோ செய்யுது”
“அந்த என்னவோ உனக்கு பிடிக்கலையா?”
“அப்படி இல்லை.. ஆனா புதுசா.. ஒரு மாதிரி இருக்குது”
“அந்த உணர்வை ரசிக்கப் பழகிக்கோ”
அமைதியாக தனது நடையை தொடர்ந்த அவளின் பார்வை, அவன் பக்கம் திரும்பவே இல்லை.
நொடிகள் சில நிமிடங்கள் ஆக, “அம்மு” என்று அழைத்தான்.
அவள் அவனைப் பார்க்கவும், “ஐ லவ் யூ” என்ற படி உதட்டைக் குவித்து சிறு முத்தம் கொடுத்தான்.
முதல் முறையாக அவளது அடிவயிற்றில் இருந்து இனம் புரியாத உணர்வலை கிளம்ப, அதை கையாள முடியாமல் திணறியவள், அவனைப் பார்த்தது பார்த்தபடி நிற்க, அவன் அவளது உணர்வுகளை உள்வாங்கியபடி அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவர்களின் மோன நிலையை கலைப்பது போல் அவனது கைபேசி அலறியது.
கைபேசியின் சத்தத்தில் சுதாரித்தவள் பார்வையை திருப்பியபடி நடையை தொடர்ந்தாள்.
அவளை பார்த்தபடியே அழைப்பை எடுத்து பிரவீனிடம் தொழில் சம்பந்தமாக பேசிவிட்டு வைத்தவன் மீண்டும், “அம்மு” என்று அழைத்தான்.
“ஹ்ம்ம்” என்றபடி நடையை தொடர்ந்தவள் அவனைப் பார்க்கவில்லை.
மென்னகையுடன் அவன் தனது தொழில் பற்றி பேச, இயல்பாக அவனை கவனிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் மெத்தையில் அமர்ந்தவள், “இங்கே வந்து உட்காரு” என்றாள்.
தான் அமர்ந்திருந்த மெத்திருக்கையை கட்டில் அருகே போட்டு அவன் அமர்ந்ததும்,
“புதுசா என்ன தயக்கம்?” என்று கேட்டாள்.
அவன் அவளை கேள்வியாய் பார்க்க,
“என்னவோ என்னிடம் கேட்கணும்னு உன் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்குது.. ஆனா தயங்குற” என்றாள்.
அவள் தன்னை கண்டு கொண்டதில் மென்னகையுடன், “நகை கடையை நித்தியை பார்த்துக்கச் சொல்லலாமா? நகை கடையில் எனக்கு பெருசா விருப்பம் இல்லை.. நேரமும் இல்லாம டைட்டாப் போகுது.. நித்தி டிஸ்டர்ப்டா, ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிற மாதிரி இருக்குது.. ஸோ.. அவளையும் திசை திருப்பின மாதிரி இருக்கும்..
அண்ட் அங்கே வேலை செய்றது மெஜாரிட்டி பொண்ணுங்க தான்.. கிருஷ்ணா விஷயத்துக்கு அப்புறம் அவங்களுக்குள் ஒரு வித பயமோ சஞ்சலமோ இருக்கலாம்.. ஒரு பொண்ணு முதலாளியா இருந்தா, அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும்.” என்றான்.
“எதுக்கு இவ்ளோ விளக்கம்? உன்னோட தொழில்.. ஸோ நீ நினைக்கிறதை செய்.. அண்ட் உன்னோட அத்தை குடும்பத்துடன் என்னை இணைச்சிக்கிறதில் தான் விருப்பம் இல்லையே தவிர, நீ உறவாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”
புன்னகையுடன், “உன்னை தெரியும்டா.. இதெல்லாம் நம்மோட தொழில்.. என்னென்ன நடக்கிறதுனு உனக்கும் தெரியனும்.. அதுமட்டும் இல்லாம உனக்கு ஏதேனும் யோசனையோ, அபிப்பிராயமோ இருந்தா, சொல்லுவியேனும் தான் உன்னிடம் கேட்டேன்..” என்றான்.
“சரி.. இனி எவனெவன் என்னென்ன குற்றங்கள் செய்றான்னு உனக்கு சொல்றேன்.”
சத்தமாகச் சிரித்தவன், “விளக்கமா இல்லைனாலும் லைட்டா நம்ம தொழில் பற்றி நீ தெரிந்துக்கிறது தப்பில்லை.” என்றான்.
“அதாவது, நானும் மேலோட்டமா நான் பார்க்கிற வழக்குகளைப் பற்றி உன் கிட்ட சொல்லனும்னு சொல்ற”
“முன் ஜாக்கிரதையா இருப்பது தப்பில்லையே!”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. எப்பவுமே எச்சரிக்கையுடன் இருந்துக்கோ!”
அவன் விரிந்த புன்னகையுடன் பார்க்க, “என்ன?” என்றாள்.
“நீ சொல்ல வேணாம். ஆனா நான் சொல்லுவேன்” என்றான்.
அவள் முறைக்க, அவனோ கண்சிமிட்டினான்.
பின், “கிளாஸ் ஸ்டார்ட் செய்யலாமா?” என்று கேட்டான்.
அவள் புருவம் சுருக்க,
“காமம் வேற காதல் வேறனு முழுசா புரிய வைக்கிற கிளாஸ்” என்றான்.
“நானா கத்துக்கிறேன்”
“இந்த கிளாஸ் உனக்காக இல்லை, எனக்காக” என்றவன், “நான் கத்துத் தந்தா சீக்கீரம் கத்துக்குவியே!” என்றபடி மீண்டும் கண் சிமிட்டினான்.
அவள் உதட்டோர மென்னகையுடன் புருவத்தை ஏற்றி இறக்கியபடி, “ஹ்ம்.. ஹும்” என்று கூற,
“ஹ்ம்ம்” என்றவன், “முதல் பாடம்.. எப்பவும் உன்னோட உணர்வுகளை என்னிடம் மறைக்கக் கூடாது.” என்றான்.
“உன்னிடம் எதையும் நான் மறைப்பது இல்லை”
“அப்படி சொல்லலை.. இப்படி எல்லாம் பேசுறப்ப, நீ எப்படி உணருறனு ஒளிவு மறைவின்றி.. அதாவது உன்னை நீயே கட்டுபடுத்தாம அப்படியே வெளிபடுத்துனு சொல்றேன்.. முக்கியமா என்னோட பேச்சோ செய்கையோ உனக்கு சின்ன அசௌகரியம், இல்லை விருப்பமின்மையை கொடுத்தாலும், அதை தயங்காம வெளிப்படுத்தனும்.. என்னைக் காயப்படுத்திடுமோனு உன்னை நீயே கட்டுப்படுத்தாதனு சொல்றேன்”
“ஹ்ம்ம்.. சரி”
ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் தனக்காக பார்த்துப் பார்த்து செயல்படும் தன்னவனின் செய்கையில் மனம் குளிர்ந்து நெகிழத் தொடங்கினாள்.
தன் மீதான அவளது காதலை மட்டுமின்றி, கோபம் எனும் உணர்வை மட்டுமே வெளிபடுத்திக் கொண்டு இருந்தவளின் மற்ற உணர்வுகளையுமே தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக பைரவி ருத்ரனின் அம்முவாக மாறிக் கொண்டு இருந்தாள்.
சில நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தவள், “உன் நெஞ்சில் சாஞ்சுக்கட்டுமா மாமா?” என்று கேட்டாள்.
அவள் உணர்ச்சி வசப்படும் நேரங்களில் மட்டுமே ‘மாமா’ என்று அழைப்பதை உணர்ந்திருந்த அவன், விரிந்த புன்னகையுடன் எழுந்து சென்று அவளது இடது பக்கம் அமர்ந்தான்.
அவள் இரு கரங்கள் கொண்டு அவனை அணைத்தபடி, அவனது நெஞ்சினில் தலை சாய்த்துக் கொள்ள,
“ஏய்! கை பார்த்து.” என்று பதறினான்.
அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே முகத்தை மட்டும் லேசாக நிமிர்த்திய அவள், “நான் நல்லாகிட்டேன்.. அந்த டாக்டர் பேச்சை கேட்டு என்னை நோயாளியா பார்க்காத.” என்றாள்.
சட்டென்று இலகுவானவன் மென்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
தழல் தகிக்கும்…