“வாழ்க்கையையே பகிர்ந்துக்கப் போறோம்!” என்றவள் ‘இதில் என்ன!’ என்பது போல் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
புன்னைகையுடன், “நான் எதுவும் கேட்கலையே!” என்றபடி அவள் அருகே இருந்த ஒருவர் அமரும் மெத்திருக்கையில் அமர்ந்தவன் சின்ன கரண்டி கொண்டு அவளுக்கு ஒரு வாய் ஊட்டி, அடுத்த வாய் உணவை தான் உண்டான்.
உணவை வாங்கியவள் அதை மென்று விழுங்கிய பிறகு, “உன்னோட கண்ணு கேட்டுச்சு” என்றாள்.
“என்னோட கண்ணு வேற என்ன கேட்குது?”
“கையால் ஊட்டட்டுமானு கேட்குது.”
இப்பொழுது கண்களை சிறிது விரிப்பது அவனது முறையாகிற்று. அவன் விரிந்த புன்னகையுடன் அவளது ஆசைப்படி கையால் ஊட்ட ஆரம்பிக்க, அவளும் மென்னகையுடன் உண்டாள்.
இரண்டு வாய் வாங்கியவள், “நர்ஸ் உதவி தேவை படுவதை வைத்து, இனி கையில் சுட்டுக்க கூடாதுனு இங்கே வந்த முதல் நாள் நினைத்தேன்.. ஆனா, இப்போ சுட்டுக்கலாமோனு தோனுது” என்றாள்.
“கையில் காயம் இல்லனா கூட ஊட்டி விடுவேன்.” என்றவன் கோப குரலில்,
“இனி கண்ட கழிசடைகளைக் கொல்ல, உன்னை காயப்படுத்திக்கிட்ட!” என்று மிரட்ட,
அவளோ அலட்டி கொள்ளாமல், “என்ன செய்வ?” என்று கேட்டாள்.
அவன் ஊட்டுவதை நிறுத்தி அவளை முறைத்தான்.
“என்னை கவனிச்சுக்க மாட்டியா?” என்று அவள் கேட்க,
“கவனிச்சுப்பேன்.. ஆனா பேசமாட்டேன்.” என்றான் தீவிர குரலில்.
அவனது அன்பில் மனம் குளிர்ந்தவள், “சரி ஊட்டு” என்றாள்.
அவன் அழுத்தத்துடன் பார்க்க,
“வாக்கெல்லாம் கொடுக்க முடியாது.. ஆனா நீ சொன்னதை நினைவில் வச்சுக்கிறேன்.” என்றாள்.
அவன் அப்பொழுதும் அழுத்தத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்க,
அவனை இயல்பாக்கும் பொருட்டு, “ருது மாமா அம்முவை முறைக்கவே மாட்டான்.” என்றாள்.
அவளது முயற்சி புரிந்து, முறைப்பதை நிறுத்தி உணவை ஊட்டியபடி, “பைரவியை முறைப்பான்” என்றான்.
அவள் உதட்டை இருபுறமும் லேசாக சுழட்ட, அவனுக்கு சிறு வயது மஞ்சரி நினைவிற்கு வரவும்,
அவனது இதழ்கள் இயல்பான மென்னகையில் லேசாக விரிந்தது.
அவன், “ஆனா ஒன்னு” என்று இழுத்து நிறுத்த, ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“இனி கையில் அடி பட்டா.. அதாவது நீ திட்டமிடாம தெரியாம கையில் அடி பட்டா.. நர்ஸ் தேவைப்பட மாட்டாங்க.” என்று விஷம புன்னகையுடன் முடித்தான்.
முதலில் ‘ஏன்?’ என்று கேட்க வந்தவள், அவனது விஷம புன்னகையைக் கண்டு, மீண்டும் ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
உணவை முடிக்கும் தருவாயில் புன்னகையுடன், “நாலே நாளில் என்னை எப்படி மாத்தி வச்சிருக்க!” என்று அவள் கூற,
விரிந்த புன்னகையுடன், “எப்படி மாத்தி வச்சிருக்கிறேன்?” என்று கேட்டான்.
“உனக்குத் தெரியாதா?”
“நீ சொல்லி கேட்கும் போது தனி சுகம்.” என்றபடி கண் சிமிட்டினான்.
“பைரவியை நானே தேட வேண்டி வருமோ!”
“என்னுடன் இருக்கும் போது நீயே தேடினாலும் பைரவி கிடைக்க மாட்டா” என்றபடி கையை உண்டு முடித்த தட்டில் கழுவியவன்,
ஈர கையைக் கொண்டு அவளது உதட்டை துடைக்க, சட்டென்று அவளுள் ஒரு சிலிர்ப்பு பரவியது.
கடந்த நான்கு நாட்களாக கரண்டி கொண்டு ஊட்டியவன், இப்படி செய்தது இல்லை. கையால் ஊட்டியதால் உதட்டோரம் உணவு துகள்கள் ஒட்டி இருக்கவும், இயல்பு போல் சாதாரணமாக தான் அவன் அவளது வாயைத் துடைத்தான். ஆனால் அவனது தொடுகை அவளுக்கு தான் என்னவோ செய்தது.
இப்படிப்பட்ட முதல் அனுபவத்தில் அவள் அமைதியாகி விட,
உணவு பாத்திரங்களை அந்த பெரிய தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தவன், அவளது மௌனத்தில் அவளை பார்த்து, “என்ன!” என்று வினவியபடி வேலையாளை அழைக்கும் மணியின் சொடுக்கியை(switch) அழுத்தினான்.
ஒரு நொடி அமைதியாக இருந்தவள், பின் எந்த பாவனையையும் வெளி காட்டாத குரலில், “நீ தொட்டா என்னவோ செய்யுது” என்றாள்.
உணவு பாத்திரங்களை வெளியே வைக்க நகர்ந்தவனின் கால்கள் சட்டென்று நின்று விட, அவளை திரும்பிப் பார்த்தான். முதல் முறையாக சிறு வெட்கத்துடன் அவள் பார்வையை திருப்பி கொள்ள, அவன் புன்னகையுடன் அதை ரசித்தான்.
இரண்டு நொடிகள் கழித்து மெல்ல அவனை ஓரப்பார்வை பார்த்தவள், அவனது ரசனையுடன் கூடிய காதல் பார்வையில் மீண்டும் தனது பார்வையை திருப்பிக் கொண்டாள்.
விரிந்த புன்னகையுடன் அவளது செயலை அணுஅணுவாக ரசித்தவன் கதவை திறந்து உணவுப் பாத்திரங்களை வெளியே இருந்த வேலையாளிடம் கொடுத்துவிட்டு கதவை மூடினான்.
அவனும் உணர்வுகளை வெளிக்காட்டாத குரலில், “என்ன செய்யுது?” என்று கேட்டபடி அவளை நோக்கி வர,
“ஹான்” என்றபடி அவனைப் பார்த்தவள் சட்டென்று உணர்வுகளின் பிடியில் இருந்து தன்னை மீட்டபடி மிடுக்கான பார்வையுடன், “சொல்ல முடியாது” என்றாள்.
வசீகர புன்னகையுடன், “சொல்ல முடியாதா! இல்லை.. சொல்லத் தெரியலையா?” என்று கேட்டான்.
முதல் முறையாக அவனது வசீகரத்தை உள் வாங்கியவள் தன்னை மீறி, “இப்படி சிரிக்கும் போது நீ அழகா இருக்க.” என்றிருந்தாள்.
“ஏய்!” என்றவனின் வசீகர சிரிப்புடன் சிறு வெட்கம் கலந்து கொள்ள, அது அழகுக்கு அழகு சேர்த்தது.
இப்பொழுது அதை ரசித்தபடி அவள் விரிந்த புன்னகையுடன், “என்ன!” என்று புருவம் உயர்த்தினாள்.
இருவருமே தங்களை மறந்த ஏகாந்த நிலையில் தங்கள் உணர்வுகளை கண்ணிலும் குரலிலும் வெளிபடுத்த ஆரம்பித்து இருந்தனர்.
பல வருடங்கள் கழித்து மனதார சிரித்துக் கொண்டிருந்தவளை ரசித்தபடி நெருங்கியவன், “இப்படி சிரிக்கும் போது நீ ரொம்பவே அழகா இருக்க.. அதுவும் இந்த கன்னத்து குழி!” என்றபடி அவள் விழிகளை நோக்கியபடி காதலும் சிறு மோகமும் கலந்த மெல்லிய குரலில்,
“சின்ன வயசில் இருந்தே இந்த கன்னத்துக் குழியை தொட்டுப் பார்க்கப் பிடிக்கும்.. தொட்டும் இருக்கிறேன் தான்.. இப்பவும் தொடும் ஆசை இருக்குது.. ஆனா கையால் இல்லை.,” என்று கூறியவன் தன்னை மறந்த மோகன நிலையில் அந்த கன்னக் குழியின் மீது இதழ் பதித்து இருந்தான்.
முத்தமிட்ட பிறகே தனது செயலை உணர்ந்தவன் பதறியபடி விலகி, “சாரி அம்மு.. சாரி.. அது.. நான்.. ப்ச்..” என்று திணற,
அதிர்ச்சியில் அவனைத் தள்ளிவிட கையை உயர்த்தி இருந்தவள், அவனது தவிப்பை பார்க்க முடியாமல் வரவழைத்த உதட்டோர புன்னகையுடன், “காமம் வேற காதல் வேறனு நீ சொன்னது லைட்டா புரிற மாதிரி இருக்குது.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
ஒரு நொடி அதிர்ந்து விழித்தவன், பின் அவளது முயற்சி புரிந்ததாலும், தனக்காக பேசுபவளை அமைதியாகத் தான் பார்த்தான்.