
தோழமைகளே!!! தீபாவளி எப்படி போச்சு?
நேரம் மதியம் மூன்றை நெருங்கிக் கொண்டிருக்க, “கமலாமா” என்றபடி தான் ருத்ரேஷ்வர் வீட்டினுள் நுழைந்தான்.
அவரும், “இதோ தம்பி” என்றபடி உணவு பதார்த்தங்கள் அடங்கிய பெரிய தட்டுடன்(tray) சமையலறையினுள் இருந்து வந்தார்.
வீட்டிற்கு வரும் வழியிலேயே அவரை தொடர்பு கொண்டு உணவை தயாராக வைத்திருக்கச் சொல்லி இருந்தான்.
உணவை வாங்கியவன், வேகமாக படிகளில் ஏறி பைரவி இருக்கும் அறை நோக்கிச் சென்றான்.
ஆம்! இரண்டு வாரங்கள் மருத்துவ விடுமுறையில் இருக்கும் பைரவி, ருத்ரேஷ்வர் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்து இருந்தது.
காலையில் ஒரு செவிலி அரை மணி நேரம் அவளது உதவிக்காக வந்து செல்கிறார். கையை அசைக்கக் கூடாது என்றும், காயத்தில் தண்ணீர் படக் கூடாது என்றும் மருத்துவர் கூறியதால், அவள் தன்னை சுத்தம் செய்து கிளம்ப உதவியாக இருக்க, ருத்ரேஷ்வர் தான் செவிலியை ஏற்பாடு செய்து இருந்தான்.
அரை மணி நேரம் இருந்தாலும், அவருக்கோ ஒரு நிமிட வேலை மட்டும் தான். செவிலியின் உதவியை மறுத்து வலது கையை அசைக்காமல் தானே முகம் கழுவி, உடம்பை ஈர துணி கொண்டு சுத்தம் செய்து கொள்பவள், சட்டை அணிய மட்டுமே வேறு வழி இல்லாமல் அவரது உதவியை நாடினாள்.
இதற்கே அவளிற்கு அவ்வளவு சங்கோஜமாக இருக்க, இனி கையில் சுட்டுக் கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுத்துக் கொண்டாள்.
ருத்ரேஷ்வர் அவளை அப்படி தாங்கினான். சிறிதும் அயர்ச்சி இன்றி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தான்.
அவன் அவளை இவ்வாறு தாங்குவதையும், அவனிடம் மட்டுமே அமைதியை கடை பிடிக்கும் அவளது குணத்தையும் கண்டு ஆச்சரியம் கொண்ட வீட்டு வேலையாட்கள் அனைவருக்கும், அவள் மீது பயம் கலந்த மரியாதை பிறந்தது.
அதிலும், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை மெய்பிக்கும் வகையில் தன்னவளின் வருகையினால் எப்பொழுதும் ஒளிர்வுடன் இருக்கும் ருத்ரேஷ்வரின் முகத்தில் இருந்தே அவனது அம்முவை எந்தளவிற்கு அவன் காதலிக்கிறான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
கடந்த நான்கு நாட்களாக வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த ருத்ரேஷ்வர், இன்று அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவும் தான், கிளம்பிச் சென்று இருந்தான்.
நரேன் நகை கடையினுள் நுழையக் கூட மறுத்து விட, அதனையும் ருத்ரேஷ்வர் தான் பார்த்துக் கொள்கிறான்.
தான் முன்பு செய்த தவறை சரி செய்வது போல் பைரவி வந்த அன்று கமலாமாவை ஆரத்தி எடுக்கச் சொன்ன கஜேந்திரன், அவள் உள்ளே வந்ததும், வேலையாட்கள் அனைவரையும் அழைத்து, “இவங்களை உங்களுக்குத் தெரியும்.. இருந்தாலும் அறிமுகம் செய்கிறேன்.. இவங்க, இந்த வீட்டோட மகாலட்சுமி.. உங்களோட எஜமானி.” என்றார்.
ராதிகா உட்பட அவரது குடும்பத்தினர் கஜேந்திரனின் கட்டளையில் அங்கே தான் இருந்தனர்.
‘காலம் கடந்த அங்கீகாரம்’ என்பது போல் கஜேந்திரனை அலட்சியமாகப் பார்த்த பைரவி எதுவும் பேசவுமில்லை, ருத்ரேஷ்வர் தவிர கஜேந்திரன் உட்பட வேறு யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை.
கஜேந்திரன் பைரவியுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள மட்டுமின்றி, இனியாவது அவளுக்கு நல்ல தாய் மாமாவாக இருக்க வேண்டும் என்று பெரும் ஆவலும் ஆசையும் கொண்டாலும், அவளது உணர்வை மதித்து விலகித் தான் இருக்கிறார். விலகி இருந்தாலும் அவளது நலனில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இவற்றை உணர்ந்தாலும் அவள் அவரது உறவை ஏற்க தயாராக இல்லை.
பைரவி இங்கே வந்ததில் இருந்து பாலாஜியும் தனது அறையினுள் முடங்க ஆரம்பித்து இருந்தார். ராதிகா வெளியே வருவதே இல்லை.
நித்யாவினால் பைரவியை தனது சகோதரியாகவோ, அன்னையின் மூத்த மகளாகவோ சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலை ஆட்கள் பாலாஜியின் செயலை வைத்து தன்னை கீழாகக் காண்கிறார்களோ! தன்னை பைரவிக்கு கீழாகப் பார்க்கிறார்களோ! என்றெல்லாம் மனதினுள் நினைத்து வருந்தி குழம்பியதில், இத்தனை நாட்கள் தான் சுதந்திரமாக வலம் வந்த வீடே இன்று அன்னியமாகத் தோன்ற, மூச்சு முட்டுவது போல் உணர்ந்தாள்.
கல்லூரி செயல்பட ஆரம்பித்து இருக்க, தனது கவனத்தை அதில் முழுவதுமாக திருப்பிக் கொண்ட நரேன், பைரவியுடன் பழக முயற்சித்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறான்.
முதல் இரண்டு நாட்கள் பயத்தில் அவள் அருகே செல்லத் தயங்கியவன், அடுத்த இரண்டு நாட்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேச முயற்சித்தாலும், அவனது எண்ணம் புரிந்தார் போல் அவன் தன்னை நெருங்கும் முன்பே, கைபேசியில் பேச ஆரம்பிக்கும் பைரவி அவன் அவ்விடத்தை விட்டு அகலும் வரை அழைப்பை துண்டிக்க மாட்டாள்.
நரேன் ருத்ரேஷ்வரிடம் உதவி கேட்க, அவனோ, “நான் சொன்னா கேட்டுப்பாங்கிறதுக்காக, அம்முக்கு விருப்பம் இல்லாத ஒன்றை அவளை செய்யச் சொல்லி என்றுமே நான் சொல்ல மாட்டேன்.” என்று கூறிவிட்டான்.
(மூன்று வார தாற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் கபிலன் தனது தங்கையின் திருமண வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறான்.)
ருத்ரேஷ்வர், “சாரி டா.. ரெண்டரைக்கு வந்திடலாம்னு நினைத்தேன்.. ஆனா கூட கொஞ்ச நேரம் ஆகிடுச்சு.. பசிக்குதா?” என்றபடி அறையினுள்ளே நுழைய,
இருவர் அமரும் மெத்திருக்கையில் அமர்ந்திருந்த பைரவி, தான் பார்த்துக் கொண்டிருந்த கைபேசியை அணைத்து அருகில் இருந்த மேசை மீது வைத்தபடி, “அதான் கிளம்பும் போதே தாமதமாக வாய்ப்பு இருக்குதுனு சொல்லிட்டியே.. பசி இல்லை.. போர் தான் அடிக்குது.” என்றாள்.
“அதை சும்மாவா விட்ட? திருப்பி அடிக்கலை?” என்று அவன் சிரியாமல் வினவ,
“இங்கே வா” என்றாள்.
அவன் அருகில் வந்ததும் அவனது புஜத்தில் அடித்தாள்.
செல்லமாக முறைத்தபடி, “நான் உனக்கு போரா?” என்று வினவ,
அலட்டிக்கொள்ளாமல், “ஆமா” என்றாள்.
“அப்போ எப்படி பேசினா போர் அடிக்காது! நான் பார்க்கலைனு நினைத்து என்னை ரசிக்கும் உன்னோட ரகசியப் பார்வையைப் பற்றி பேசவா? இல்லை..” என்று இழுத்து நிறுத்தியவன் குறும்பு பார்வையுடன்,
“நான் உன்னை புடவையில் கற்பனை செய்ததை பற்றியோ, லிப்ஸ்டிக் போடாமலேயே ஷைனிங்கா இருக்கும் இந்த செவ்விதழ்களைப் பற்றியோ பேசவா..” என்று கேட்டு கண் சிமிட்ட,
லேசாக கண்களை விரித்தவள் உதட்டோர சின்ன கீற்றுடன் ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
சிரித்தபடி உணவை தட்டில் பரிமாறினான்.
அவன் இரண்டாவது தட்டில் பரிமாறும் முன்,
“ஒரு தட்டு போதும்” என்றவளை உதட்டோர மென்னகையுடன் அவன் குறுகுறுவென்று பார்க்க,