பெருமூச்சை வெளியிட்ட ருத்ரேஷ்வர் பேச வாய் திறக்கும் முன்,
பைரவி கோபக் குரலில், “ஆமா இப்போ எதுக்கு உன் அப்பா கூட அவன் வந்தான்? என்ன உன் அத்தை குடும்பத்தை என்னோட பேட்ச்-அப் செய்ய நினைக்கிறியா?” என்று வினவ,
ருத்ரேஷ்வர் அவளை அழுத்தமாகப் பார்த்தானே தவி,ர பதில் கூறவில்லை.
அதற்கும், “இப்படி பார்த்தா? பதில் சொல்லு!” என்று எகிறினாள்.
நிதானமான குரலில், “என்ன சொல்லணும்?” என்று கேட்டான்.
அவள் முறைக்க, அவன் அமைதியாகப் பார்த்தான்.
மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய, ருத்ரேஷ்வர் ஆழ்ந்த குரலில், “நான் உன் மேல ஆணாதிக்கத்தை செலுத்துறேனா?” என்று கேட்டான்.
“பின்ன நீ செய்றது என்ன?”
“அன்பு.. காதல்.. அக்கறை”
“கடந்த பதினாறு வருஷமும் நீயா என்னை பார்த்துகிட்ட?”
“இனி பார்த்துக்கிறேன்னு தான் சொல்றேன்”
“என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்”
“நீ பார்த்துகிட்ட லட்சணம் தான் தெரியுதே!” என்றபடி அவளது காயத்தை சுட்டி காட்ட,
அவளோ உதட்டை வளைத்து, “ஏசிபி வாழ்வில் இதெல்லாம் சகஜம்.. முடிஞ்சா என்னோட குப்பை கொட்டத் தயாராகு.. இல்லை கல்யாணத்தை கேன்சல் செய்!” என்றாள்.
ருத்ரேஷ்வர் தீர்க்கமாக அவளைப் பார்க்க, அவளோ அவனை மேலும் சீண்டுவது போல் அலட்சியமாக பார்த்து புருவம் உயர்த்தியபடி, “என்ன!” என்றாள்.
கைகளை கட்டியபடி சில நொடிகள் அவளை ஆழ்ந்து பார்த்த ருத்ரேஷ்வர், “எனர்ஜி வேஸ்ட் செய்யாதே!” என்றான்.
“என்ன?”
“உன் திட்டம் எனக்குப் புரிஞ்சுடுச்சுனு சொல்றேன்”
“என்ன திட்டம்?”
“நீ என்ன தான் முயற்சி செய்தாலும், ஒரு வாரத்தில் நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும்.”
அவன் தன்னைக் கண்டு கொண்டதில் அவள் அமைதியாக இருக்க,
“நீ மறுக்கிற இரண்டு உண்மைகளை சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
அவள் ‘என்ன’ என்பது போல் பார்க்க, அவன் நிதானமான குரலில், “உனக்கு பயம்” என்றான்.
அவள் சத்தமாகச் சிரிக்க,
அதைக் கண்டு கொள்ளாமல், “இன்னொன்னு.. நீ என்னைக் காதலிக்கிற” என்றான்.
தனது அதிர்வை தன்னுள் மறைத்தவள், வரவழைத்த அலட்சியத்துடன் உதட்டை வளைத்து சிறு அலட்சிய புன்னகையை உதிர்த்தாள்.
அவனோ, “எங்கே என்னை காயப் படுத்திடுவியோனு நீ பயப்படுற.. இந்த பயம் என் மீது நீ கொண்டுள்ள காதலை தெளிவாச் சொல்லுது” என்றான்.
“உளறல்”
“நான் சொல்றது உண்மைன்னு உனக்கும் தெரியும்.. இப்போ கல்யாணத்தை நிறுத்தச் சொன்னது கூட எனக்காகத் தான்” என்றவன் அவளை அழுத்தமாகப் பார்த்தபடி, “சரியா?” என்றான்.
அவள் அமைதியாக இருக்கவும்,
“என் யூகம் சரினா.. ஏதோ ஒரு.. ஏதோ என்ன! உன் ஆழ் மனசில் இருக்கும் காதல் தந்த ஊந்துதலில் கல்யாணத்துக்கு சரி சொன்ன உன் மனசு, அன்னைக்கு பழையதை பேசியதும் கல்யாணம் வேணுமா வேண்டாமானு மதில் மேல் இருக்கும் பூனை போல தடுமாற ஆரம்பிச்சிடுச்சு..
இன்னைக்கு நம்ம வீட்டுக்கு உன்னை கூப்பிட்டதும், உன்னால் அங்கே வந்து இயல்பா இருக்க முடியுமா? கல்யாணம் தேவை தானா? என்றெல்லாம் யோசித்து வேணாம்னு யோசிக்க ஆரம்பித்து இருக்குது” என்றான்.
அவன் தன் மனதை துல்லியமாகக் கண்டு கொண்டதில் ஆச்சரியத்தோடு அவளது மனதினுள் ஒரு இதம் பரவியது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே தான் இருந்தாள்.
ருத்ரேஷ்வர் தொடர்ந்து பேசினான்.
“உன்னால் என்னோட இயல்பான வாழ்க்கை வாழ முடியாதுனு அஞ்சுற.. என்னை உடலளவில் ஏற்றுக் கொள்ள முடியாதுனும், நான் உன்னை நெருங்கும் வேளையில் என்னைக் காயப் படுத்திடுவியோனும் பயப்படுற.. உன்னோட பயத்தை தப்புனு நான் சொல்ல மாட்டேன்.. ஆனா.. உனக்கு ஒரு விஷயம் புரியலை..” என்று நிறுத்தியவன், எழுந்து வந்து கட்டிலில் அமர்ந்து, அவளது இடது கையை தனது கைக்குள் வைத்து மென்மையாக வருடியபடி கனிவான குரலில்,
“காமம் வேறு தாம்பத்தியம் வேறு அம்மு.. முன்னாடி நீ அனுபவிச்சது காமம்.. ஆனா… என்னோட அனுபவிக்கப் போறது தாம்பத்தியம்.. கல்யாணம்னா தாம்பத்தியம் மட்டும் இல்லை..
காதலும் அன்பும் நிறைந்தது தான் கல்யாண வாழ்க்கை.. சின்ன சின்ன செல்ல சண்டைகள், நிஜ சண்டைகள் கூட இருக்கும் தான்.. அண்ட் கண்டிப்பா ஒரு நாள் நமக்குள் தாம்பத்தியமும் நடக்கும், ஆனா மனசார நீ அதை விரும்பும் போது தான் நடக்கும்.” என்றான்.
பின், “இந்த காலத்தில் ரேப் விக்டிம்ஸ்சே கல்யாணம் செய்து காதலோட குழந்தை பெத்துக்கிறாங்க! உன்னால் முடியாதா! நீ நினைச்சால் கண்டிப்பா முடியும்” என்றவன் அவளை சற்று நெருங்கி அமர்ந்து, அவளது கன்னத்தில் கை வைத்தபடி,
“என்னைப் பொறுத்தவரை காதலோட உச்சம் தான் தாம்பத்தியம்.. காதலோட என்னோட நீ இணையும் போது உன்னால் என்னை காயப்படுத்த முடியாதுடா.. உன்னுள் புதைந்து இருக்கும் காதலை வெளிக் கொண்டுவர சக்தி, என்னோட காதலுக்கு இருக்குதுனு நான் நம்புறேன்.” என்று கூறி அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.
தனக்கு எதிராக அமர்ந்தவனின் கையை இழுத்து தனது அருகே அமர வைத்தவள், அமைதியாக அவனுடன் கை கோர்த்தபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
ருத்ரேஷ்வர் மென்னகையுடன் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, தனது கன்னத்தை பதித்துக் கொண்டான்.
தழல் தகிக்கும்…