இப்போ சொல்லப் போறதுக்கு என்னை மன்னிச்சிடுமா.. அந்த பொறுக்கியோட குழந்தை, தன் வயித்தில் வளருவதை தடுக்க முடியாத நிலையில் இருந்த ராதி, தன்னோட உயிரை விடத் துணிஞ்சா.. அவளை பாலாஜி தான் காப்பாற்றினான்.. ராதி உயிரை விடப் போன விஷயம் எனக்குத் தெரிய வந்த நொடியில் என்னையும் அறியாம என்னோட மனசில் என் தங்கையின் உயிருக்கு அவ கருவில் இருக்க குழந்தை எமனா இருப்பதா தோணிடுச்சு..
எந்தத் தவறும் செய்யாத அந்த சிசு மேல பழி போடுறது தப்பு தான்.. ஆனா மனசு பலவீனமா இருந்த அந்த நேரத்தில் அப்படித் தான் என் மனசும் புத்தியும் போச்சு.. ஆனா என்னோட மனைவி உன்னை நேசிச்சா..
நீ பிறந்ததும் ராதி உன்னை ஆசிரமத்தில் விடச் சொன்னப்ப, என் மனைவி மறுப்பு சொல்லி உன்னை சொந்தப் பொண்ணு மாதிரி பார்த்துக்க ஆரம்பிச்சா.. இறக்கும் தருவாயில் கூட உன்னை வெளியே அனுப்பக் கூடாதுனு சத்தியம் வாங்கினா..
என்னால் உன்னை வெறுக்கவும் முடியலை, முழு மனசுடன் ஏற்கவும் முடியலை, அதான் உன்னை நான் கண்டுக்காம இருந்ததுக்குக் காரணம்.
திரும்பவும் சொல்றேன்.. என்னை நான் நியாயப்படுத்தலை.. இது தன்னிலை விளக்கம் மட்டும் தான்.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடுமா” என்று கை கூப்பியபடி கலங்கிய கண்களுடன் முடித்தார்.
தந்தையை அந்த நிலையில் பார்க்க ருத்ரேஷ்வருக்கு கஷ்டமாக இருந்தாலும் ‘உப்பை தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆகணும்.’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டு, தனது உணர்வுகளை அடக்கியபடி அமைதியாக இருந்தான்.
கஜேந்திரனின் நீண்ட விளக்கத்தை கேட்டு அசோக்கிற்கு சற்று மனம் இளகியது. ஆனால் பைரவியிடம் அதே இறுக்கம் தான்.
கஜேந்திரனை தீர்க்கமாகப் பார்த்தவள், “பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடும் நான் மறுமணத்தை தவறுனு சொல்லவே மாட்டேன்.. அதுவும் நீங்க சொன்னது போல் இருபத்தியெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பது பெரிய விஷயம் தான்..
சமுதாயத்தை பொருட்படுத்தாமல் திடமா இருந்து உங்க தங்கைக்கு மறுமணம் செய்த உங்களை, அந்த விஷயத்திற்கு மனதாரப் பாராட்ட நான் தயார். ஆனா பாவம் செய்த உங்க தங்கையை விட்டுட்டு ஒரு பாவமும் அறியாத என்னை தண்டித்ததை என்னால் மறக்கவும் முடியலை, மன்னிக்கவும் முடியாது..
நீங்க என்னை எந்த விதத்திலும் தண்டிக்கலையேனு நீங்க சொல்லலாம்.. என்னைப் பொறுத்தவரை கண்ணுக்கு முன் நடந்த தவறை தடுக்காமல் மௌனமா கடந்து சென்ற உங்களோட செயல் தவறு தான்..!
நீங்க நினைத்து இருந்தால் அதை எல்லாம் தடுத்து, எனக்கான அங்கீகாரத்தை கொடுத்து இருக்கலாம்.
எந்த அன்னையும் தவறு செய்த குழந்தையை விலக்குறதோ, கைவிடுறதோ இல்லைனு சொன்னீங்க.. ஆனா, தவறே செய்யாத என்னை உங்க தங்கை..” என்று நிறுத்தியவள்,
“அன்னையா இருக்க தகுதியே இல்லாத உங்க தங்கையை நீங்க அன்னையாய் தாங்குறீங்க.. ஆனா ஒன்னு.. உங்க தங்கை சொன்னது போல் நான் பிறந்ததும் என்னை ஆசிரமத்தில் விட்டு இருந்தாக் கூட, நான் நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்து இருப்பேன்.. ஆனா.. நீங்களோ உங்க காதலை நிரூபிக்க என்னை கொடுமைகளை அனுபவிக்க விட்டுட்டீங்க.. இதுல உங்க காதல் எனக்கு தெரியலை, உங்க சுயநலமா தான் எனக்குத் தெரியுது” என்றாள்.
பின், “நம்பிக்கை முற்றிலும் விட்டுப்போன நேரத்தில் தங்கைக்கு வாழ்க்கை கொடுத்தவன் மேல் நம்பிக்கை வைப்பது மனித இயல்பு தான். உங்க தங்கைக்கு வாழ்க்கை கொடுத்த நாதாரியை நீங்க தலைக்கு மேல் வைத்து கொண்டாடியதை நான் தப்பு சொல்லலை. ஆனா அவனை கண்மூடித் தனமா நம்பியதைத் தான் தவறுனு சொல்றேன்..
அவன் என் மேல திருட்டுப் பழி போட்டு இருந்தாக் கூட பரவாயில்லை.. தப்பான படங்களை பார்த்ததா சொல்லி இருக்கிறான்.. அதையும் நீங்க நம்பி இருக்கிறீங்க! ஒரு பதினோரு வயசு குழந்தைக்கு அது என்னனு தான் தெரியுமா? இதைக் கொஞ்சம் கூட நீங்க யோசிக்கலையே! இப்போ இருக்கிற தலைமுறையில் வேணா நூற்றுக்கு ஒரு சதவிதம் இதை நம்பலாம். ஆனா பதினாறு வருஷத்துக்கு முன்னாடி! உங்களோட இந்த கண்மூடித் தனமான நம்பிக்கையை, என்னனு சொல்ல!” என்று முடித்தாள்.
கத்தவில்லை, கோபம் கொள்ளவில்லை ஆனால் அவளது ஒவ்வொரு வாக்கியமும் சாட்டை அடியாக கஜேந்திரனை தாக்கியது.
கஜேந்திரன் வலி நிறைந்த பார்வையுடன், “நீ சொன்ன எல்லாமே சரி தான்.. எனக்கு மன்னிப்பு கேட்கிற தகுதி கூட இல்லைனு புரியுது..
ஆனா ஒன்னு.. நீ நம்பினாலும் நம்பலைனாலும் உன் மேல் அவன் போட்ட பழியை நான் நம்பலைங்கிறது தான் உண்மை..
என்ன நடந்ததுனு தெரியலை.. ஆனா அவன் பொய் சொல்றான்னு எனக்குப் புரிந்தது.. நீ தப்பான படம் பார்த்ததா சொன்னதை நான் பெருசாவே எடுக்கலை.. ஏன்னா, உன் மேல உள்ள வெறுப்பில் உன்னைப் பத்தி தப்பா சொல்றான்னு தான் நினைச்சேன்..
என்னவோ நீ செய்து, அவன் உன்னை அடித்ததில் நீ வெளியே போய் இருக்க வாய்ப்பு இருக்குதுனு நினைத்தேன் தான். ஆனா இப்படி ஒன்னை நான் நினைச்சுக் கூட பார்க்கலை..
உன்னை கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்து உனக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்னு உண்மையாவே நினைச்சேன்.. நீ காணாமப் போனதும் யாருக்கும் தெரியாம என்னோட போலீஸ் நண்பன் மூலம் உன்னைத் தேடினேன். ஆனா உன்னைப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்கவே இல்லை.. ஆறு மாசம் தேடி இருப்போம், அப்புறம் அவனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வேற ஊருக்கு போயிட்டான்.. போறதுக்கு முன்னாடி இப்படி சின்ன க்ளு கூட கிடைக்கலைனா, நீ இறந்து இருக்கக் கூட வாய்ப்பு இருக்கலாம்னு சொல்லிட்டுப் போனான்..
அப்போ இருந்து நீ தான் மஞ்சரினு தெரிறதுக்கு முன்னாடி வரை, உனக்காக துடிச்சுட்டு தான் இருந்தேன்.. சில இரவுகள் என் மனைவி கிட்ட ‘நான் பெரிய தப்பு செய்துட்டேன்.. என்னால் ஒரு சின்ன உயிர் போய்டுச்சு’னு சொல்லி அழக் கூட செய்து இருக்கிறேன்..
ருத்ரா உன்னைத் தேட ஆரம்பிச்சதில் இருந்து இன்னும் அதிகமா வலிச்சுது, உன்னை நினைத்தும், இல்லாத உன்னைத் தேடும் என் மகனோட காதல் மனதை நினைத்தும்.. நீ இல்லைன்னு நினைத்து தான் என் மகனோட வாழ்வை யோசித்து, நித்யாவை கல்யாணம் செய்துக்க கட்டாயப் படுத்தினேன்..
நீ தான் மஞ்சரினு தெரிந்த பிறகு, நான் அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் எனக்கு மட்டும் தான் தெரியும்..!
எனக்கு மன்னிப்பு கேட்க தகுதி இல்லை தான், ஆனா… என்னால் அதைத் தவிர இப்போ வேறு என்ன செய்ய முடியும்!” என்றவர் மீண்டும் கை கூப்பி,
“முடிஞ்சா என்னை மன்னிச்சிடுமா” என்றார்.
பின் அவள் அருகே சென்று அவளது தலையை மெதுவாக கோதியபடி, “ருத்ரா கூட சந்தோஷமா இருடா” என்றவர் எடுக்க வந்த கைபேசியை மறந்து வெளியேறினார்.
சில நொடிகள் கனத்த மௌனத்தில் கழிய, அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து அசோக் கிளம்பி விட்டான்.
அவன் கிளம்பியதும் மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.