தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 16.1

கஜேந்திரனும் நரேனும் கிளம்பி இருக்க,

பைரவியும் ருத்ரேஷ்வரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

அவள் அசோக்கிடம், முறைச்சுட்டே யாரும் இங்கே இருக்க வேணாம்.. கிளம்பச் சொல்லு” என்று கூற,

ருத்ரேஷ்வர், மேடம் மட்டும் கொஞ்சிட்டா இருக்காங்க” என்றான்.

அசோக் மனதினுள், ‘ஏது! கொஞ்சிட்டா! வாயை திறந்துடாதடா அசோக்கு!’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அமைதியாக பார்த்தான்.

பைரவி முறைப்புடன் நேரிடையாகவே அவனிடம், என் மேகிங்கே இப்படித் தான்.” என்று கூற,

அவனும் நேரிடையாக, என்னோட அம்முக்கு அவளோட ருது மாமாவை கொஞ்ச மட்டும் தான் தெரியும்.” என்றான்.

இங்கே இருப்பது பைரவி மட்டும் தான்.”

அம்முவை எப்படி வெளியே கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்.”

அதற்கு பதில் சொல்லாதவள் முறைப்புடனே உறுதியான குரலில், நான் அங்கே வர மாட்டேன்” என்று பேச்சை மாற்றினாள்.

தோளை குலுக்கிய ருத்ரேஷ்வர், சரி.. அப்போ நான் உன் வீட்டுக்கு வரேன்.” என்றான்.

என்ன!”

உனக்கு ரெண்டே ஆப்ஷன்ஸ் தான்.. ஒன்னு நீ நம்ம வீட்டுக்கு வர, இல்லை நான் உன்னோட வீட்டுக்கு வருவேன்”

எல்லாம் உன் இஷ்டம் தானா? கல்யாணம் செய்ய ஒத்துகிட்டா உனக்கு அடங்கிப் போகனுமா? இப்பவே இப்படினா, கல்யாணத்துக்கு அப்புறம்!”

ருத்ரேஷ்வரோ அலட்டிக் கொள்ளாத குரலில், நான் அப்படி சொல்லலை.. உனக்கு அப்படி தோனினா நான் எதுவும் செய்ய முடியாது” என்றான்.

திமிர்.. ஆணாதிக்கம்!” என்று அவள் கோபக் குரலில் கூற,

அதிர்வுடன் அவளைப் பார்த்த அசோக், எங்கே இருவருக்கும் இடையே சண்டை வந்து விடுமோ என்று கவலை கொண்டு சமாதானம் செய்யும் பொருட்டு,

இப்போ எதுக்கு இப்படி பிரச்சனை செய்ற? இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்துக்கு அப்புறம் அங்கே தானே போகப் போற! அதை இப்பவே போனா தான் என்ன! இப்பவும் நீ உரிமையா போய் இருக்கலாம்.. அது உன்னோட வருங்கால வீடு மட்டுமில்லையே, உன் தாய் மாமா வீடும் தானே!” என்றான்.

அவளோ கோபத்துடன், தாயே இல்லை, இதில் தாய்  மாமா  எங்கிருந்து வந்தார்எனக்கு  தாய்  மாமாவும் இல்லை நாய்..” என்று பேசிக் கொண்டு இருந்தவள் சட்டென்று நிறுத்தி ருத்ரேஷ்வரை பார்க்க,

அவனோ கோபமின்றி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆனால் அசோக் தான், இது சரி இல்லை பைரவி.” என்று சிறு கோபம் கலந்த கண்டனக் குரலில் கூறினான்.

தாய் என்ற வார்த்தைக்கு எதுகையாக நாய் என்று ஆரம்பித்தவள் ருத்ரேஷ்வருக்காக நிறுத்தி இருந்தாலும் மனதினுள்,

நாய் மாமானு சொல்லி நாயை கேவலப் படுத்தக் கூடாது’ என்று கூறிக் கொண்டாள்.,

அசோக்கை பார்த்து, அவர் என்னைக்குமே எனக்கு தாய் மாமா இல்லை.. ஈஸ்வரோட அப்பா மட்டும் தான்.” என்று அழுத்தத்துடன் கூறினாள்.

என்னை மன்னிச்சிருமா” என்ற கரகரத்த குரலில் மூவரும் திரும்பிப் பார்க்க, கஜேந்திரன் அறை வாசலில் நின்றிருந்தார். விட்டு சென்றிருந்த கைபேசியை எடுக்க வந்து இருந்தார்.

உள்ளே வந்தபடி, நான் செய்தது தப்பு தான்.. என்னோட தப்பை நான் நியாயப் படுத்த விரும்பலை..” என்றவரின் பேச்சை இடையிட்டு,

நியாயப் படுத்தவும் முடியாது” என்றாள்.

ஹ்ம்ம்.. முடியாது தான்.. ஆனா தன்னிலை விளக்கம் கொடுக்க முடியும்.. கொஞ்சம் என்னோட இடத்தில் இருந்து யோசிச்சுப் பார்க்க முயற்சி செய்மா ப்ளீஸ்..

என்னோட சின்ன வயசில் அம்மா இறந்துட்டாங்க, அப்பா ரொம்ப கண்டிப்பு.. அதனால் சின்ன சின்ன விஷயத்துக்கும் ராதி என் கிட்ட தான் வருவா.. ராதிக்கு அம்மாவா, அப்பாவா, அண்ணனா, தோழனா இருந்து தான் வளர்த்தேன்.. வீட்டோட மாப்பிள்ளை தான் பார்க்கணும்னு அப்பா கிட்ட கூட சொல்லி இருந்தேன்.. அந்த அளவுக்கு அவ மேல எனக்கு அதிக பாசம்..

அப்படிப்பட்ட தங்கச்சியோட வாழ்க்கை ஒரே வாரத்தில் முடிஞ்சு போச்சு.. அதுவும் ஒரு பொறுக்கியால..” என்றவரின் பேச்சை மீண்டும் இடையிட்டவள்,

அந்தப் பொறுக்கியை தான் நீங்க தண்டித்து இருக்கணும்.. என்னை இல்லை.” என்று சூடாகக் கூறினாள்.

ஆம்’ என்பது போல் தலை அசைத்தவர், அந்தப் பொறுக்கியை தண்டிக்கிறதை விட என் தங்கை தான் எனக்கு அப்போ முக்கியமா தெரிந்தா.. அப்புறம் காலம் கடந்து தேடி என்னனு விட்டுட்டேன்.. கூடவே அவனை நான் தேடி, ராதி திரும்ப சுருங்கிடக் கூடாதே என்ற எண்ணமும் இருந்தது..

திரும்பி வந்ததுக்கு அப்புறம், மொத்தமா உடைஞ்சு போய் ரூம்குள்ள அடைஞ்சு இருந்தவளை வெளியே கொண்டு வர அவ்ளோ கஷ்டப்பட்டோம்.. ருத்ரா கிட்ட பழகப் பழகத் தன்னோட கூட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்தா..

அவ மேல தான் தப்பு, இல்லைனு சொல்லலை.. எந்த அன்னையும் தப்பு செய்த குழந்தையை விலக்கவோ கைவிடுறதோ இல்லை.. தன்னோட தப்பை உணர்ந்து தன்னை தனிமைப்படுத்தி தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கிட்ட என்னோட தங்கையை நான் ஒரு தாயா இருந்து தாங்கினேன்..

ஒன்னு ரெண்டு வருஷம் கழித்து மெல்ல அவ மனசை மாற்றி ஒரு நல்லவனை அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து அவளுக்கு நல்ல வாழ்வை அமைத்து கொடுக்கணும்னு நான் நினைச்சுட்டு இருந்த நேரத்தில் தான் அவ கர்ப்பமா இருந்த செய்தி தெரிய வந்தது.. இப்போ வேணா ஒரு பொண்ணுக்கு ரெண்டாம் கல்யாணம் செய்றது சர்வ சாதாரணமா இருக்கலாம்..

ஆனா இருபத்தியெட்டு வருஷத்துக்கு முன்னாடி! அதுவும் வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து, தோல்வியை தழுவி, வயித்தில் குழந்தை வேற! அந்த சூழ்நிலையில் தான் பாலாஜி ராதியை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னான்.. அதுவும் என் கிட்ட இருந்த பணத்துக்காக இல்லாம அவளை அவளுக்காகவே ஏத்துக்கிட்டான்.

அவ உயிரை காப்பாற்றி, அவ கிட்ட போராடி அவளை காதலோட கல்யாணம் செய்து, அவளையும் பழசை மறக்க வைச்சு தன்னை காதலிக்க வைத்தான்..

error: Content is protected !!