கஜேந்திரன், “மஞ்சரி எப்படி இருக்கா?” என்று வினவ,
“பயப்பட ஒன்றும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டார்.. இப்போ வர நேரம் தான்” என்றவன்,
“இவன் அட்வோகேட் அசோக்.. அம்முவோட ஒரே நண்பன்” என்றும்,
“இவர் என்னோட அப்பா.. இவன் நரேன், அம்முவோட தம்பி” என்று மூவருக்கும் பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தான்.
கஜேந்திரன் மென்னகையுடன் தலை அசைக்க,
அசோக்கும் மென்னகையுடன் தலை அசைத்தான்.
நரேன் ருத்ரேஷ்வர் அறிமுகம் செய்த முறையில் சிறு அதிர்வுடன் நிற்க, அதைப் புரிந்தார் போல் அசோக், “ஹாய் நரேன்” என்ற படி கையை நீட்டினான்.
“ஹான்” என்றபடி சுதாரித்த நரேன், கை குலுக்கியபடி, “ஹாய்” என்றான்.
ருத்ரேஷ்வர், “அத்தையும் நித்தியும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.
கஜேந்திரன் ஒரு நொடி தயங்க,
அசோக், “நான் அங்கே இருக்கிறேன்” என்றபடி நகரப் போக,
அவனை தடுத்த ருத்ரேஷ்வர் தந்தையிடம், “அம்மு கூடவே பதினாறு வருஷம் இருக்கிறான்.. நம்மை விட அவளோட வலியும் வேதனையும் இவனுக்கு நல்லாவே தெரியும்.. இவனும் நம்ம குடும்பத்தில் ஒருத்தன் தான்” என்றான்.
அவனது கடைசி வாக்கியத்தில் அசோக் நெகிழ்ச்சியுடன் அவனது கையைப் பற்ற, ருத்ரேஷ்வர் மென்னகையுடன் அவனது கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
அதற்கு மேல் தயக்கமின்றி கஜேந்திரன், “ராது என்ன நினைக்கிறானு தெரியலை.. நித்தி முதல்ல அழுதா, அப்புறம் நரேன் கிருஷ்ணாவோட பொறுக்கித்தனத்தை எடுத்து சொல்லவும், அழுகையை நிறுத்திட்டா.” என்றார்.
“அந்த ஆளு?”
“முதல் பையன்.. வலி இல்லாம இருக்குமா! பார்மாலிட்டீஸ் முடிக்க போய் இருக்கான்.”
ருத்ரேஷ்வர் நரேனை பார்க்க,
அவன் இறுகிய முகத்துடன், “அவன் செத்ததில் துளி கூட எனக்கு வருத்தம் இல்லை.. வீட்டில் இருக்க முடியாம இங்கே வந்துட்டேன்.” என்றான்.
ஆம்.. இன்னும் கல்லூரி திறக்கப்படாத நிலையில் வெளி வேலை இல்லை என்றாலும் இப்போதெல்லாம் நரேன் வீட்டில் தங்குவதே இல்லை. அவனது தாய் மற்றும் தந்தையின் செயல்களை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தந்தையை முழுவதுமாக வெறுத்தவனால் தாயை அவ்வாறு வெறுத்து ஒதுக்கவும் முடிய வில்லை அவருடன் இயல்புடன் பேசவும் முடியவில்லை.
அதனால் அவர்களை தவிர்க்க விலக ஆரம்பித்தவன், வீடு தங்குவதை முற்றிலுமாகக் குறைத்து, தூங்கி எழுந்து குளித்து கிளம்ப மட்டுமே வருகிறான்.
ராதிகாவோ தனது இருப்பிடத்தை விருந்தினர் அறைக்கு மாற்றியவர், பெரும்பாலும் அறையினுள் முடங்கிக் கொண்டார். யாருடனும் பேசுவதும் இல்லை.
தனித்து விடுபட்ட நித்யாவும் அறையில் முடங்க ஆரம்பிக்க, கஜேந்திரன் தான் அவளை அவளது தோழிகளுடன் நேரம் செலவழிக்க வற்புறுத்தி வெளியே அனுப்பி, அவளை இயல்பிற்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்.
பெண்கள் விஷயத்தில் மோசமானவனான கிருஷ்ணா, நித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தான். அதானாலேயே அவனது இறப்பு செய்தியைக் கேட்டு அவள் அழுதது. ஆனால் நரேன் அவனது துரோகத்தையும், பெண்கள் விஷயத்தில் மோசமானவன் என்பதையும், கொலையே செய்து இருக்கிறான் என்பதை எல்லாம் எடுத்துக் கூறியதோடு, அவளது கண்ணீருக்கு அவன் தகுதி அற்றவன் என்று திட்டிய பிறகே அவளது கண்ணீர் நின்றது.
பாலாஜி முற்றிலும் நடைபிணமாக உருக் குலைந்து போனார். வெகு சில நேரங்களில் அவரை சந்திக்க நேரும் பொழுதுகளில் ராதிகாவின் வெறுமையான உயிரற்ற பார்வையும், உடல் மொழியில் ஏற்படும் விறைப்பும் விலகலும் அவரை கொல்லாமல் கொன்று கொண்டிருக்க,
நரேன் மற்றும் நித்யாவின் வெளிப்படையான வெறுப்பான பார்வையில் அவரது உயிர் துடித்தது.
அதுவும் அன்று, “நித்தியை பொண்ணா தான் பார்த்தீங்களா? இல்லை..” என்று நரேன் சந்தேகமாக இழுத்து நிறுத்திய நொடியில், உயிருடன் மறித்தார்.
அன்று தான் பாஸ்கரை சந்திக்காமலும், குடிக்காமலும் இருந்து இருக்கலாம் என்று கோடி முறை யோசித்தவர், ஒவ்வொரு நாளும் உயிருடன் மறித்துக் கொண்டு தான் இருக்கிறார். இதைத் தானே பைரவியும் விரும்பியது.
நரேனின் விலகலை கண்டும் காணமல் விட்ட ருத்ரேஷ்வரால், இன்று அப்படியே விட முடியாமல் தான் அவனை அறிமுகம் செய்த போது, பைரவியின் தம்பி என்ற அடைமொழியுடன் கூறினான்.
இப்பொழுது அவனிடம் நேரிடையாகவே, “அப்போ… நீ உன் அக்காவை பார்க்க வரலை!” என்றான்.
அவன் அதிர்ச்சியுடன் பார்க்க,
ருத்ரேஷ்வர் புருவம் உயர்த்தியபடி, “அவ உன் அக்கா தானே!” என்றான்.
“ஹ்.. ஆ.மா”
“எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? சின்ன வயசில் அவளை உனக்கு பிடிக்கும் தானே!”
“அது..” என்று திணறியவன், “அவங்களை பார்க்கணும் தான்.. ஆனா அவங்க விரும்புவாங்களானு தெரியலை” என்றான்.
“நித்தி விலகினா, அப்படியே போனு விட்டுடுவியா?”
அவன் மறுப்பாக தலையை ஆட்டவும், ருத்ரேஷ்வர் அழுத்தத்துடன் பார்த்தான்.
நரேன் மெல்லிய குரலில், “அவங்களை பார்த்தாலே கிட்ட போகவோ பேசவோ பயமா இருக்குது” என்றான்.
மெலிதாக மென்னகைத்த ருத்ரேஷ்வர், “அவ பலாப்பழம் மாதிரி” என்றான்.
அப்பொழுது அங்கே வந்த மருத்துவர், “நல்லா இருக்காங்க.. கொஞ்ச நேரத்தில் ரூமுக்கு மாத்திடுவோம்.. காயம் கொஞ்சம் ஆழம் தான்.. குறைந்தது ஒரு வாரத்துக்கு கையை அசைக்காம பார்த்துக்கோங்க..” என்றார்.
ருத்ரேஷ்வர், “கான்சியஸ் வந்துடுச்சா?” என்று வினவ,
“லோகல் அனெஸ்திஷ்யா தான் கொடுத்தோம்.. ஸோ முழிச்சு தான் இருக்காங்க” என்றார்.
“என்னைக்கு டிஸ்சார்ஜ்?”
“அவங்க இப்பவே கிளம்ப ரெடியா இருக்கிறாங்க. ஆனா ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்கட்டும்.. நாளைக்கு காலையில் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் செய்துடுறேன்.”
“ஓகே டாக்டர்.. தேங்க்யு”
அவர் சிறு மென்னகையுடன், “இட்ஸ் மை டியூடி” என்றுவிட்டு அகன்றார்.
சிறிது நேரத்தில் பைரவி அறைக்கு மாற்றப்பட்டு இருக்க, நால்வரும் உள்ளே சென்றனர்.
அவளை அழுத்தத்துடன் பார்த்தபடி உள்ளே சென்ற ருத்ரேஷ்வர், அவளிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனை அமைதியாகப் பார்த்தவள், பார்வையை திருப்பிக் கொண்டாள்.
இறுதியாக உள்ளே வந்த நரேனைப் பார்த்து லேசாக புருவம் சுருக்கினாளே தவிர, எதுவும் பேசவில்லை.
கஜேந்திரன், “எப்படி இருக்கிறமா?” என்று அக்கறையுடன் வினவ,
“நல்லா இருக்கிறேன்” என்று கூறியவளை ருத்ரேஷ்வர் முறைத்தான். அதை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.
அசோக் ருத்ரேஷ்வரிடம், “கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் லீவ் கிடைக்காதுனு டிராமா போட்டு இருக்கா.” என்று கூற,
அவன் இப்பொழுது அசோக்கை கடுமையாக முறைத்தான்.
அசோக் தனது அருகில் இருந்த நரேனின் காதில், “என்னடா இவன் இப்படி முறைக்கிறான்!” என்று முணுமுணுக்க,
நரேன், “அவன் பெயருக்கு ஏத்த மாதிரி ருத்ரன் தான்” என்று முணுமுணுத்தான்.
“ஆத்தி! ஆம்பளை பைரவினு தெரியாம சொரிஞ்சு விட்டுட்டேன் போலவே!” என்று அசோக் மீண்டும் முணுமுணுக்கவும்,
நரேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, பைரவி அவனை பார்க்கவும் சட்டென்று பயத்தில் அவனது சிரிப்பு நின்றது.
ருத்ரேஷ்வர் அசோக்கை பார்த்து, “இப்படி தான் இவளை ஏத்தி விட்டுட்டு இருக்கிறியா?” என்று முறைப்புடன் குரலை உயர்த்தாமல் கோபத்துடன் வினவ,
அசோக் திரு திருவென்று முழிக்க, பைரவி அதைக் கண்டு மென்னகைத்தாள்.
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த அசோக் பாவமான குரலில், “இதெல்லாம் நியாயமே இல்லை சொல்லிட்டேன்.” என்றான்.
பைரவி, “எனக்கு ஒன்னுமில்லை.. நான் தனியா மேனேஜ் செய்துப்பேன்.. நீங்க கிளம்புங்க.” என்று கூற, ருத்ரேஷ்வர் அதற்கும் முறைத்தான்.
“இப்படி முறைச்சிட்டே இருக்க தான் வந்தியா?” என்று அவள் அவனைப் பார்த்து வினவ,
அவனோ அவளுக்கு பதில் கூறாமல் பார்வையை திருப்பி தந்தையிடம், “முத்து கிட்ட எனக்கு ஒரு செட் ட்ரெஸ்ஸும், எங்களுக்கு மதிய சாப்பாடும் கொடுத்து விடுங்க.. நைட்டும் சாப்பாடு அனுப்பி விடுங்க.. அப்புறம், மேல என்னோட ரூம் பக்கத்தில் அம்முக்கு ரூம் ரெடி செய்துடுங்க” என்று வரிசையாகக் கூறினான்.
கஜேந்திரன், “சரிப்பா” என்று கூற,
பைரவி முறைப்புடன், “நான் என்னோட வீட்டுக்கு தான் போவேன்.” என்றாள்.
ருத்ரேஷ்வர், “அம்மு வருவாப்பா” என்று கூற,
அவள் அவனை முறைத்த படியே அழுத்தத்துடன், “நான் வர மாட்டேன்” என்று கூற,
அவனும் அவளை முறைத்தபடி அவளை விட அழுத்தமான குரலில், “வருவாப்பா.. நீங்க ரூமை ரெடி செய்துடுங்க.” என்றான்.
தழல் தகிக்கும்…