முதல் முறையாக இந்த சூழ்நிலையை சந்திக்கும் ஏட்டு, தனது படபடப்பை மறைக்க முயற்சித்தபடி பைரவி வந்ததும், “மேடம்” என்று அழைத்தார்.
அவள் திரும்பி பார்க்கவும், “இவனை என்ன செய்ய?” என்று கேட்டார்.
பைரவி அந்தக் கைதியைப் பார்க்க,
“நான் எங்கேயும் தப்பி ஓட மாட்டேன் மேடம்.. என்னைக் கொன்னுடாதீங்க ப்ளீஸ் மேடம்” என்று கண்ணீருடன் கெஞ்சினான்.
“ஓட மாட்டான்.. ஓடினா பார்த்துக்கலாம்.” என்று ஏட்டிடம் கூறியவள் கபிலனைப் பார்த்து,
“ஒரே ஷாட்.. பொட்டுன்னு போய்டணும்” என்றாள்.
கபிலன் அதிர்வுடன் அவளைப் பார்க்க,
அவளோ, “எப்போ தான் என்கவுண்டர் செய்யப் பழகுவீங்க?” என்றாள்.
கபிலன் சிறு நடுக்கத்துடன், தனது துப்பாக்கியை எடுக்க,
“என்னை ரோல் மாடல்னு சொன்னா மட்டும் போதாது.. என்னை போல் செயல் படனும்.” என்று அழுத்தத்துடன் கூறினாள்.
அதில் தைரியம் பெற்ற கபிலன், கிருஷ்ணாவை நோக்கிச் சுடத் தயாரானாலும், முதல் முறை என்பதால் அவனிடம் சிறு பதற்றம் இருந்தது.
சட்டென்று அவன் அருகே சென்று, அவனது முழங்கையை பற்றி நேராக திடமாகப் பிடித்த பைரவி, “ஹ்ம்” என்று கூறிய மறு நொடி, கிருஷ்ணாவின் இதயத்தை சரியாகச் சுட்டிருந்தான். கிருஷ்ணாவும் அந்த நொடியிலேயே மரணத்தை தழுவி இருந்தான்.
அந்தக் கைதி பயத்தில் சிறுநீர் கழித்து விட, காத்தவராயன் கண்ணில் மரணபீதி அப்பட்டமாகத் தெரிந்தது.
கையுறையை அணிந்து, தனது துப்பாக்கியை எடுத்து தனது வலது கை புஜத்தை சுட்டுக் கொண்டவள்,
“மேடம்!” என்று கபிலன் மற்றும் ஏட்டு அதிர்வுடன் கத்தியதை பொருட் படுத்தாமல் நகர்ந்து சென்று கிருஷ்ணாவின் கையில் இருந்த விலங்கை கழட்டி எடுத்து, தனது கால்சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டாள்.
விலங்கில் இருந்து கை விடு பட்டதும் இறந்தவன் கீழே விழ, தனது துப்பாக்கியை அவனது வலது கையில் வைத்து, அவனது கையை நன்றாக அழுத்தி மூடினாள்.
பின் வையம் அருகே வந்து, இடது கையை கபிலனிடம் நீட்டினாள்.
அவன் தனது துப்பாக்கியை அவளிடம் தரவும், அந்த கைதியும் காத்தவராயனும் மரணபீதியுடன் அவளை நோக்கினர்.
காத்தவராயனிடம், “திரும்பு” என்று கூற, அவன் பயத்துடன் மறுப்பாக தலை அசைத்தான்.
அமைதியாக அவன் பின்னே சென்றவள், அவனது வலது கெண்டைக்காலில் சுட்டாள்.
அவன் வலியில் கத்த, அந்த கைதி, “ப்ளீஸ் மேடம் என்னை சுட்டுடாதீங்க.. இனி திருட நினைக்கக் கூட மாட்டேன்.” என்று கெஞ்சினான்.
“இங்கே என்ன நடந்ததுனு சரியா சொல்லிட்டா, உன்னைச் சுடாம விடுறேன்.” என்று அவள் கூறவும்,
அவன் அவசரமாக, “வேன் டயர் பஞ்சர் ஆகி நின்னதும் ஸ்டெப்னி மாட்டிட்டு இருந்த கேப்ல(gap) இவனுங்க உங்களை சுட்டுட்டு தப்பி ஓட பார்த்தப்ப, எஸ்.ஐ சார் இவனுங்களை சுட்டார் மேடம்.” என்றான்.
அவளோ, “ஆனா அவனை நெஞ்சில் சுட்டு இருக்காரே! முட்டுக்கு கீழ தானே சுடனும்?” என்று வினவ,
அவன் அவசரமாக யோசித்து, “உங்களை கொல்ல அவன் முயற்சி செய்தான்.. முதல் முறை தப்பா கையில் சுட்டுட்டான்.. ரெண்டாவது முறை உங்க நெஞ்சை பார்த்து குறி வச்சான்.. உங்களை காப்பாத்த வேறு வழி இல்லாம எஸ்.ஐ சார் அவனை சுட்டு கொன்னுட்டார்.. அப்போ… இவன் தப்பி ஓட பார்த்தப்ப முட்டு கீழ சுட்டுட்டார்” என்றான்.
“ஹ்ம்ம்” என்றபடி காத்தவராயனைப் பார்க்க,
அவனும் அவசரமாக, “நானும் இதையே சொல்றேன் மேடம்” என்று கூறினான்.
அந்த கைதியைப் பார்த்து, “இனி திருடின..” என்று ஆரம்பிக்க,
அவன் கையெடுத்து கும்பிட்டபடி, “குலசாமி சத்தியமா இனி திருட மாட்டேன் மேடம்” என்றான்.
ஏட்டைப் பார்த்து, “ஆம்புலென்ஸ் கூப்பிடுங்க” என்றாள்.
ஏட்டு முதலுதவி வண்டிக்கு அழைக்கவும், வேலையை நிறுத்தி இருந்த ஓட்டுநரைப் பார்த்து,
“நீங்க உங்க வேலையைச் செய்யுங்க.” என்றாள்.
அடுத்த அரை மணி நேரத்தில், கிருஷ்ணாவின் மரணச் செய்தி பரபரப்பான தலைப்புச் செய்தியாக மாறி இருக்க,
பைரவி மற்றும் காத்தவராயனுக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்க, ஆணையர் அலுவலகத்தில் கபிலன், ஏட்டு மற்றும் ஓட்டுநர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
அந்த கைத்திருட்டு கைதி கூறிய கதையே செய்தியாளர்களிடம் சொல்லப்பட்டது. அனைவருக்கும் என்ன நடந்து இருக்கும் என்ற உண்மை தெரிந்தாலும், அந்தக் கதையையே உண்மை போல் தங்கள் தொலைக்காட்சி அலை வரிசையில் நேரிலையாக கூறிக் கொண்டு இருந்தனர்.
கலைச்செல்விக்காக போராடிய அனைவரும் கிருஷ்ணாவின் இறப்பை கேட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அஜய் பைரவிக்கு அழைக்க, அழைப்பை எடுத்த ருத்ரேஷ்வர், “ருத்ரேஷ்வர் ஹியர்” என்றான்.
“மேடம் எப்படி இருக்காங்க சார்? அந்த எச்சை மேடமை சுட்டுட்டதா நியூஸ்ஸில் சொன்னாங்க” என்றான்.
“நான் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறேன்.. ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்குது.. பயப்பட ஒன்றும் இல்லைனு டாக்டர் சொன்னார்”
“மேடமுக்கு எப்போதும் எதுவும் ஆகாது சார்.. மேடம் வந்ததும் நாங்க நன்றி சொன்னோம்னு சொல்லுங்க.. நாளைக்கு வந்து பார்க்கிறோம் சார்”
“கண்டிப்பா சொல்றேன்.. தேங்க்ஸ்”
“என்ன சார் தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு!”
“உங்க அன்பிற்கும் அக்கறைக்கும்”
“சரி சார்.. நான் வைக்கிறேன்”
“ஹ்ம்ம்” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தான்.
அப்பொழுது வேகமாக வந்த அசோக், “பைரவி எப்படி இருக்கா?” என்று கேட்டான்.
“பயப்பட தேவை இல்லைனு டாக்டர் சொன்னார்.. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்குது” என்றவன் அருகில் இருந்த தண்ணீர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தான்.
மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்று கூறியபடி வாங்கி அருந்தினான்.
“இல்லத்தில், அம்முவோட வாழ்க்கை பற்றி எனக்கு முழுசா தெரியாது.. ஆனா அம்முக்கு நெருக்கமான ஒரே ஆள் நீங்க தான்னு தெரியும்.. இத்தனை வருஷம் அம்முக்கு பக்கபலமா இருக்கிறதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. தேங்க்ஸ் அ லாட்”
“தேங்க்ஸ் சொல்லி தள்ளி வைக்காதீங்க.. அவளோட நட்பு கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கிறேன்” என்றவன், “என்னை பற்றி எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
“சில வருஷமாவே டிடெக்டிவ் மூலம் அம்முவை தேடிட்டு தான் இருந்தேன்.. அம்மு எங்க வீட்டுக்கு முதல் முறை வந்தப்பவே, அவளை கண்டு பிடிச்சுட்டேன்.. அப்புறம் அவளை பற்றி விசாரிக்க கஷ்டம் இல்லையே!”
“எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“அன்னைக்கு காலையில் பேப்பரில் அவளோட போட்டோ பார்த்தப்பவே பார்த்த முகமா தோனுச்சு.. அவ எங்க வீட்டுக்குள் நுழைந்தப்ப என்னக்குள்..” என்று நிறுத்தியவன்,
“எப்படிச் சொல்ல! அது ஒரு தனி பீல்.. அப்புறம் அவ கண்ணுக்குள்ள இருக்கிற ஸ்பாட் வச்சு கண்டுபிச்சேன்.” என்றான்.
“ஓ!” என்றவன், “ஒரு முக்கியமான விஷயம்” என்றான்.
“என்ன?”
“பன்மையில் பேசி என் வயசை கூட்டாம ஒருமையில் பேசுங்க பாஸ்”
அவன் ஏற்ற இறக்கத்துடன் கூறிய விதத்தில் லேசாக மென்னகைத்த ருத்ரேஷ்வர், “ஒரு கண்டிஷன்.” என்றான்.
“நானும் ஒருமையில் பேசணுமா?”
ருத்ரேஷ்வர் புன்னகையுடன், “அம்முவோட பிரெண்ட்னு நிரூபிச்சுட்டீங்க.” என்றான்.
அசோக் விரிந்த புன்னகையுடன் கட்டை விரலைக் காட்டி, “டன்” என்றான்.
பின், “உன்னோட மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்.. என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றபடி கையை நீட்ட,
ஒரு நொடி புருவம் சுருக்கி யோசித்தவன், பின் மென்னகையுடன் கை குலுக்கியபடி, “இரு.. அம்மு கிட்ட சொல்றேன்” என்று மிரட்டினான்.
அசோக்கோ, “எனக்கென்ன பயம்! அவ முன்னாடியே சொல்லுவேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற,
ருத்ரேஷ்வர், “அவ ஒரு பொக்கிஷம்.. என்னோட தேவதை” என்று உணர்வுப் பூர்வமாகக் கூறினான்.
இரு கைகளையும் நீட்டியபடி அசோக், “புல்லரிக்குது” என்றான்.
ருத்ரேஷ்வர் மென்னகையுடன் அவனது தோளில் தட்ட, அவனும் சிரித்தான்.
பின் விளையாட்டை கைவிட்டு, “அவ பொக்கிஷம் தான்.. உனக்கு சொல்ல தேவை இல்லை தான்.. இருந்தாலும் சொல்றேன்.. அவளை நல்லா பார்த்துக்கோ” என்ற அசோக்,
“அவளோட காயத்தை உன்னால், உன்னோட காதலால் மட்டுமே சரி செய்ய முடியும்.. ஆனா அதுக்கு காதலோட சேர்த்து பொறுமையும் தேவை.” என்று தீவிர குரலில் கூறினான்.
ருத்ரேஷ்வர், “ஹ்ம்ம்.. புரியுது.. நான் பார்த்துக்கிறேன்” என்ற போது,
அங்கே கஜேந்திரனும் நரேனும் வந்தனர்.