நரேன் அவர்கள் பக்கம் அடி எடுத்து வைக்கும் முன் துப்பாக்கியை அவன் பக்கம் நீட்டிய பைரவியோ ருத்ரேஷ்வரின் பிடியில் மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்த பாலாஜியை பார்த்த படி,
“இவன் பிட்டு படம் பார்க்கலை.. கேவலமான பிட்டி படத்தையே ஓட்டினான்.” என்றாள்.
“என்ன சொல்ற?” என்று ருத்ரேஷ்வர் அவளிடம் கேட்க,
“நீ கையை எடு” என்றாள்.
ருத்ரேஷ்வர் மறுப்பாக பேச வாய் திறக்கும் முன், “நான் சொல்றேன்ல” என்றாள் அழுத்தத்துடன்.
ருத்ரேஷ்வர் பாலாஜியை முறைத்தபடி கையை எடுக்க, அவர் இரும ஆரம்பித்தார்.
ராதிகா அவசரமாக சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, அவரை குடிக்க செய்து நெஞ்சை நீவி விட்டார்.
அவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த பைரவி ருத்ரேஷ்வரிடம், “இப்போ உண்மை வரும் பாரு.” என்றபடி ராதிகாவின் கையை பற்றி இழுத்து, அவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி, தலை சரித்து பாலாஜியைப் பார்த்தாள்.
கஜேந்திரன், “மஞ்சரி” என்று பதறினார்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வந்து தாக்க, நரேனும் நித்யாவும் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கலந்த பயத்துடன் அசையாமல் நின்றிருந்தனர்.
இப்பொழுதும் பாலாஜி உண்மையைச் சொல்லத் தயாராக இல்லை என்பதை அவரது பார்வையில் இருந்தே பைரவி உணர்ந்து கொண்டாள்.
“சுட மாட்டேன்னு நினைக்கிறியா! நீயும் கிருஷ்ணாவுடன் கூட்டு, உன்னை பிடிக்க வந்தப்ப நீ என்னை சுடப் பார்த்த, ஸோ உன்னை நான் சுடும் போது உன்னோட மனைவி நடுவில் வந்து செத்துட்டானு சிம்பிளா முடிச்சிடுவேன்.” என்றவள்,
“சாம்பிள் பார்க்கிறியா?” என்று கேட்டபடி மறு கையால் ராதிகாவின் இடது கையை பின்னால் கொண்டு சென்று முறுக்கினாள்.
ராதிகா வலியில் துடிக்க, பாலாஜி அவசரமாக, “அவளை ஒன்னும் செய்யாத” என்று பதறினார்.
பைரவி ருத்ரேஷ்வரிடம், “அவனோட சுவிட்ச் இங்க இருக்குது” என்று துணை ஆணையராகக் கூறினாள்.
பின் பாலாஜியைப் பார்த்து நக்கலாகச் சிரித்த படி, “என்ன பாலாஜி!” என்றாள்.
மனைவியின் முகத்தில் வலியைக் கண்ட பாலாஜி, “நான் உண்மையைச் சொல்லிடுறேன்” என்றார்.
பைரவியோ, “நீ சொல்லு. அப்புறம் இவ கையை விடுறேன்.” என்றபடி ராதிகாவின் கையை இன்னும் முறுக்கினாள்.
ராதிகா வலியில் கத்த, பாலாஜி அவரசமாக,
“நான்.. நான் தான் தப்பு செய்தேன்.. இவ எதுவும் செய்யலை.” என்று கத்தினார்.
“என்ன தப்புனும் சொல்லு” என்றபடி பிடியில் அழுத்தம் கொடுக்க, ராதிகா இம்முறை வலியில் அலறினார்.
பாலாஜி, “அது..” என்று தயங்க, ராதிகாவின் அலறல் கூடியது.
நித்யாவின் கண்களில் கண்ணீர் வடிய, நரேன் அன்னையைக் காப்பாற்ற முடியாமல் தவிப்பு கலந்த கோபத்துடன் நின்றிருக்க, கஜேந்திரன் தவிப்புடன் நின்றிருந்தார்.
“சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்” என்று பாலாஜி பதற,
பைரவியோ அலட்டிக் கொள்ளாமல், “சொல்லு” என்றாள்.
ராதிகாவோ அலறிக் கொண்டு தான் இருந்தார்.
ராதிகாவைப் பார்த்து கலங்கிய கண்களுடன், “என்னை மன்னிச்சுடு ராதி” என்றவர், “அன்னைக்கு நான் அவனை பார்த்தே இருக்க கூடாது.. குடிச்சும் இருக்கக் கூடாது.” என்றபடி மண்டியிட்டு அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
பைரவியோ, “விஷயத்தை சொல்லிட்டு ஓரமா உட்கார்ந்து அழு.. இல்லை உன்னோட அழுகை ஒப்பாரியா மாறிடும்.” என்றபடி துப்பாக்கியின் விசையில் சற்று அழுத்தம் கொடுப்பது போல் பாவனை செய்தாள்.
பாலாஜி மீண்டும் அவசரமாக, “சொல்லிடுறேன்” என்றார்.
பின் மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தார், “அன்னைக்கு.. என்னோட பழைய நண்பன் பாஸ்கரை பார்த்தேன்.. அவனுடன் சேர்ந்து குடிச்சதோடு அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றவர் ராதிகாவைப் பார்த்து,
“நாற்பது நாள் நீ விரதம் இருந்தில் உன்னை நெருங்க முடியாம தவிச்சிட்டு இருந்த நான், குடி போதையில் அதை அவன் கிட்ட சொல்லிப் புலம்பவும், அவன் ஒரு பொண்ணை ஏற்பாடு செய்றேன்னு சொன்னான்.” என்றார்.
ராதிகா கை வலியை மீறிய அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க, அவர் குற்ற உணர்ச்சி கலந்த வலி நிறைந்த குரலில், “தப்பு தான்.. என்னை மன்னிச்சுடு.. அதுக்கு தான், அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.. இங்கே வந்தும் எங்க பேச்சு எல்லை மீறியதா தான் இருந்தது.. அந்த சமயத்தில் அந்த பொண்ணு வரலைனு போன் போட்டு சொல்லிடுச்சு.. ஆனா என்னால் என் உணர்வுகளை அடக்கவே முடியலை.” என்றவர் நிறுத்தி பைரவியை கெஞ்சலாகப் பார்த்தார்.
மனைவியிடம் வாக்குமூலம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் பிள்ளைகள் முன் உண்மையைச் சொல்ல முடியாமல் கூனி குறுகி தான் போனார்.
பாலாஜி, “ப்ளீஸ்” என்று கண்ணீருடன் கெஞ்ச,
ரௌத்திர விழிகளுடன் பைரவி அவரைப் பார்த்தபடி இருக்க, ராதிகா வலியில் இன்னும் அலறினார்.
பாலாஜி பைரவி காலை பிடித்த படி, “ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.. நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு தான்.. ஆனா.. ஆனா இந்த தண்டனை வேண்டாம்.. ப்ளீஸ்.. நான் ராதி கிட்ட தனியா வேணா உண்மையைச் சொல்றேன்.. என் பிள்ளைகள்..” என்று இழுத்து நிறுத்தியவர் கதறலுடன் கெஞ்சினார்.
பைரவி அமைதியாக இறுகிய முகத்துடன் பிடியில் இன்னும் அழுத்தம் கொடுக்க, ராதிகாவோ வலியில் கத்தி கதறி அழவே ஆரம்பித்து விட்டார்.
என்ன தான் ருத்ரேஷ்வர் நியாயத்தின் பக்கம் என்றாலும் ராதிகாவின் அலறலைப் பார்க்க முடியாமல், “அம்முமா” என்று கெஞ்சும் குரலில் அழைத்தான்.
“அன்னைக்கு நான் இதை விட அதிகமா துடித்தேன், மாமா” என்று பைரவி கூற,
அவளது கூற்றும், கண்கள் மற்றும் குரலில் இருந்த வலியும் தவிப்பும் சேர்த்து ருத்ரேஷ்வரின் எண்ணத்தை சட்டென்று தறி கெட்டு ஓடச் செய்தது.
அவன் எண்ணம் செல்லும் திசையில் அதற்கு மேல் நினைத்துப் பார்க்க கூட பயந்தவனாக, “அம்மு.. நீ.. என்.ன..” என்று ஆரம்பித்தவன், முழுவதுமாக கேட்க முடியாமல் பதறிய நெஞ்சுடன் நிறுத்தினான்.
விரக்த்தியுடன் லேசாக உதட்டை பிதுக்கி சிரித்தவள், “இப்போ புரியுதா! நான் ஏன் பைரவியிடம் இருந்து அம்முவை மீட்டெடுக்க நீ ரொம்ப போராடனும்னு சொன்னேன்னு!” என்றாள்.
கஜேந்திரன் பெரும் அதிர்ச்சியுடன் மெத்திருக்கையில் பொத்தென்று அமர, கமலா நெஞ்சில் கை வைத்தபடி சத்தமின்றி அழுதார். மஞ்சரி பற்றி அறியாத வேலையாட்கள் கண்கள் கூட லேசாகக் கலங்கியது.
நரேன் மற்றும் நித்யா பெரிதும் அதிர, நித்யாவின் கண்ணில் இருந்து கண்ணீர் கூட அதிர்ச்சியில் நின்று இருந்தது.
சில நொடிகள் அசைவற்று வலி நிறைந்த கண்களுடன் தன்னவளைப் பார்த்த ருத்ரேஷ்வர், பின் ருத்ரமூர்த்தியாக மாறி பாலாஜியை அடிக்க ஆரம்பிக்க, பைரவி ராதிகாவின் கையை விடுவித்தாள்.
ராதிகாவிற்கோ கை வலியை விட, மனம் அதிகமாக வலித்தது.
பாலாஜி அடிகளின் நடுவே, “இவ கிட்ட தப்பா நடக்க முயற்சித்தேன் தான். ஆனா, பெருசா தப்பு எதுவும் நடக்கலை ருத்ரா.. அவ கிட்ட வேணா கேளு.. நிஜமாவே பெருசா தப்பு நடக்கலை.. குடி போதையில் தெரியாம செய்துட்டேன்.. என்னை மன்னிச்சிடு” என்று கத்தினார்.
“உன்னை மன்னிக்கிறதா! அப்போ அவ பதினொரு வயசு குழந்தைடா.. அதுவும் பொண்ணு முறையில் இருக்கிற குழந்தை.யை!” என்றபடி அடி வெளுக்க ஆரம்பித்தான்.
அவனை தடுக்க யாருக்குமே மனம் வரவில்லை.
ஒரு கட்டத்தில் பைரவி தான், “விடு ஈஸ்வர்” என்றாள்.
ருத்ரேஷ்வரோ சற்றும் தணியாத கோபத்துடன் அடித்துக் கொண்டே இருக்க,
“விடு மாமா” என்று அழுத்தத்துடன் கூறியபடி, அவனது கையை பிடித்து தடுத்தாள்.
அவனோ அப்பொழுதும் அடங்கா கோபத்துடன், “இவன்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது அம்மு.” என்றான்.
மறுப்பாக தலை அசைத்தவள், “இவன் உயிருடன் இருப்பது தான் இவனுக்கும், இவன் மனைவிக்கும் தண்டனை.” என்றாள்.
பாலாஜி ஈன சுவரத்தில், “ராதி” என்று அழைக்க,
உணர்ச்சியற்ற பார்வையுடன் அவரைப் பார்த்த ராதிகா வலி நிறைந்த குரலில், “உண்மையைச் சொல்லாம என்னை இவ கையில் சாக விட்டு இருக்கலாம்.” என்றார்.
பைரவி அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க, ருத்ரேஷ்வரும் அதை ஆமோதித்தான்.
தழல் தகிக்கும்…