மஞ்சரியை தேடி சென்ற ருத்ரேஷ்வர் பின்னே கஜேந்திரனும் சென்று விட,
பாலாஜி ராதிகாவை கைபேசியில் அழைத்து கஜேந்திரனிடம் கூறிய கதையை இன்னும் ஏற்ற இறக்கத்துடன் கூறியதின் விளைவாக, தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, கிராமத்தில் இருந்து ராதிகா கிளம்பி இருந்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெரு தெருவாக அம்மு என்று கத்தியபடி சுற்றிய ருத்ரேஷ்வரை, கஷ்டப்பட்டு கஜேந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்.
வீட்டிற்கு வந்தவன் நேராக ராதிகாவின் அறைக்குச் சென்று பாலாஜியின் சட்டையை பிடித்து இருந்தான்.
“அம்முவை என்ன செய்த?” என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்திய போது,
“ருத்ரா” என்று குரலை உயர்த்தி கத்தியபடி ராதிகா உள்ளே நுழைந்தார்.
அதன் பின் சிறுவனான ருத்ரேஷ்வரின் பேச்சு எடுபடவே இல்லை. அவனது அம்முவிற்கு திருட்டுப் பட்டம் கட்டப் பட்டது. பாலாஜியை அவன் நம்ப மறுக்க, அவனை தவிர மற்றவர்கள் பாலாஜியை நம்பினார்கள்.
மஞ்சரி தவறான காட்சிகளை பார்த்ததாக கஜேந்திரன் மற்றும் ராதிகாவிடம் பாலாஜி புனைந்த கதை, இன்று வரை ருத்ரேஷ்வருக்குத் தெரியாது.
ஆனால் கஜேந்திரன் மனதினுள் குற்ற உணர்ச்சி எழுந்தது. அது கூட மனைவிக்குக் கொடுத்த சத்தியத்தை காப்பற்ற முடியவில்லையே என்ற தொடக்க புள்ளியில் ஆரம்பித்து, ‘தான் மஞ்சரியை கவனித்து இருக்க வேண்டும்.. தான் அவளை நன்றாக வளர்த்து இருந்தால், அவளுக்கு இந்த நிலை வந்து இருக்காது’ என்று நினைக்க ஆரம்பித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ருத்ரேஷ்வர் குடும்பத்தினரிடம் இருந்து சிறிது விலக ஆரம்பித்து இருந்தான். பள்ளி சென்று வரும் நேரங்களில் எல்லாம் அவனது விழிகள் அவனது அம்முவை தேடி ஏமாற்றத்தை தழுவியது.
நண்பன் மூலம் மஞ்சரியை காணவில்லை என்பதை அறிந்த பாலாஜி, முதலில் பயத்துடன் தான் நாட்களை கழித்தார். எங்கே மஞ்சரி திரும்பி வந்து தனது வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விடுவாளோ என்ற பயத்தில் இருந்தவர், நாளடைவில் பயம் நீங்கி கெத்தாக சுற்ற ஆரம்பித்தார்.
ஒரு சிறு பெண்ணிற்கு தான் எத்தகைய கொடுமையைச் செய்து ஆறா காயத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் ‘சனியன் ஒழிந்தது’ என்று மகிழ்ச்சியாக வலம் வர ஆரம்பித்தார்.
குற்ற உணர்ச்சியில் இருந்த கஜேந்திரன் ருத்ரேஷ்வரிடம் கூடக் கூறாமல் காவல்துறையில் இருக்கும் தனது நண்பர் மூலம் மஞ்சரியை தேட முயற்சித்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
சில மாதத்தில் அந்த நண்பரும் மாற்றலாகி வேறு ஊருக்குச் சென்றுவிட, தேடல் வேட்டை நின்று மறக்கப்பட்டது.
நாட்கள் மாதங்கள் ஆகி வருடங்களாக ஓட ஆரம்பித்தது. பாலாஜியின் பரிந்துரையில் நித்யா அவனை ருது மாமா என்று அழைக்க,
அவனோ ருத்ர தாண்டம் ஆடிவிட்டான். நித்யா பயத்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி விட, அவன் பார்த்த பார்வையில் அவர் சற்று ஆடித் தான் போனார்.
இருந்தும் சமாளித்துக் கொண்டு அவனை தேற்றவே அப்படி அழைக்கக் கூறியதாகக் கூறி இடத்தை விட்டு நழுவினார்.
அங்கே இல்லத்திலோ பைரவி என்ற மஞ்சரி நன்றாக வளர்ந்து வந்தாள். என்ன தான் அந்த சம்பவம் அவளது நினைவில் இல்லை என்றாலும், அவளையும் அறியாமல் ஆண்களை கண்டால் விலகத் தான் செய்தாள். இல்லத்திலோ பள்ளியிலோ பசங்களுடன் பேசக் கூட மாட்டாள்.
ஆனால் இல்லத்தில் அவளுடன் வளர்ந்த அசோக்கிற்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு அவன் பெண் வேடமிட்டு இருந்தான். அப்பொழுது அவனைப் பெண் என்று நினைத்த பைரவி, அவனுடன் சகஜமாகப் பேசவும், இரண்டு நாட்கள் பெண் வேடத்திலேயே இருந்து அவளது நட்பை பெற்றான்.
உண்மை அறிந்து அவள் கோபம் கொண்ட பொழுது, சிரமத்துடன் அவளைச் சமாதானம் செய்து நட்பை தொடர்ந்தான். தனக்காக அவன் பெண் வேடத்தில் இரண்டு நாட்கள் சுற்றியதால், அவனது நட்பை ஏற்றதாக அவள் கூறிக் கொண்டாலும் உண்மை என்னவோ, அந்த இரண்டு நாட்கள் அவன் காட்டிய அன்பு, அவளது ஆழ் மனதினுள் புதைந்து இருக்கும், ருத்ரேஷ்வரை நினைவு படுத்தியதாலேயே அவனுடன் நட்பை தொடர்ந்து இருந்தாள். அதை அவளே உணரவில்லை.
ஆனால் அதன் பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். அவளைக் காப்பாற்றிய நாயும், அவளது சிறந்த தோழன் தான்.
இப்படியே சென்ற நிலையில் பைரவிக்கு பதினாறு வயது இருக்கும் பொழுது திரைப்படம் ஒன்றில் கற்பழிப்பு காட்சி ஒன்றைப் பார்த்ததும் உடம்பெல்லாம் வேர்த்து மயங்கிச் சரிந்தாள். அந்த மயக்கத்தில் இருந்து தெளிந்தவளுக்கு, பழையவை அனைத்தும் நினைவிற்கு வந்து இருந்தது.
பழையவை நினைவிற்கு வந்ததும், ஆண்கள் மீது அப்படி ஒரு கோபமும் வெறியும் வந்தது. ஆண்களிடம் இருந்து வெறுப்புடன் விலகியவள் அசோக்கையும் தள்ளி தான் நிறுத்தினாள்.
அவன் எவ்வளவு முயற்சித்தும் அவளை நெருங்கவே முடியாமல் சண்முகவடிவிடம் போய் நின்றான். பைரவியின் பழைய வாழ்வை பற்றி முழுவதுமாக அறிந்து இருந்தாலும்,
அவரோ, “இப்போ உனக்கு பதினேழு வயசு.. அதுவும் சினிமா நிறையவே உங்களுக்கு கற்று தருது.. ஸோ நான் மேலோட்டமா சொன்னா நீ புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்.. பைரவியை நான் கண்ட போது, அவ உடம்பில் சில நக கீறல்களுடன் ஆடை கிழிந்த நிலையில் தான் இருந்தா” என்றார்.
அவன் பெரும் அதிர்வுடன், “என்னம்மா சொல்றீங்க!” என்று கூற,
பெருமூச்சை வெளியிட்டவர், “ஒரு வாரத்திற்கு முன்னாடி வரை அவளுக்கு அந்தச் சம்பவம் நினைவில் இல்லை..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“அந்த ரேப் ஸீன் பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்துடுச்சு.” என்றான்.
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியவர், “பெருசா தப்பு நடக்கலை என்றாலும், அந்த சம்பவத்தோட தாக்கம் அவளுக்கு நிச்சயம் இருக்கும்.. வாசுகி அவளுக்கு கௌன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்றேன்னு சொல்லி இருக்கா.. பார்க்கலாம்.” என்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் லேசாக அரும்பி இருந்த மீசையை நீங்கிவிட்டு பெண் வேடத்தில் பைரவி முன் நின்றவன், “இப்போ என் கிட்ட பேசுவியா?” என்று கேட்டான்.
பைரவியோ அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள். ஆனால் அவனோ விக்கிரமாதித்தனை பிடித்துக் கொண்ட வேதாளத்தைப் போல் பெண் வேடத்தில் அவளையே சுற்றி வந்தான். ஆசிரமத்தில் இருந்த மற்ற பசங்கள் அவனைக் கிண்டல் செய்ததை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை.
ஒரு கட்டத்தில் பைரவி கோபத்துடன், “ஏன்டா என்னைப் படுத்துற?” என்று கத்த,
அவனோ, “இந்த உலகில் மனித உருவில் வக்கிரம் கொண்ட பல மிருகங்கள் இருக்குது தான்.. ஆனா நான் அந்த மிருகங்களில் ஒருவன் இல்லை.. என் அன்பு உனக்கு புரியலையாடி?” என்று கேட்டான்.
பதில் கூறாமல் அவள் சென்றாலும், அதன் பிறகு அவனை முற்றிலும் ஒதுக்கவில்லை. அவனிடம் பேசவில்லை என்றாலும், அவன் பேசுவதை அமைதியாகக் கேட்க மட்டும் செய்தாள்.
அதே நேரத்தில் வாசுகியின் ஏற்பாட்டில் சிறந்த மனநல மருத்துவர் ஒருவர் பைரவிக்கு ஆலோசனை வழங்கினார். அவளுக்கு நேர்ந்ததை கெட்ட கனவாக நினைத்து மறக்க வேண்டும் என்றும், எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை என்றும், ஆண்களிடம் அவள் சகஜமாக பழகலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆண்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவளை தாயாக தாங்கிய ருத்ரேஷ்வர் பற்றியும், தற்போது நட்புடன் அன்பு செலுத்தும் அசோக் பற்றியும், சண்முக வடிவின் கணவரை பற்றியும், அவளை காப்பாற்றிய ஓட்டுநர் முருகன் பற்றியும் எடுத்துக் கூறினார்.
அதன் பின் மெல்ல அசோக்குடன் மீண்டும் நட்புடன் பழக ஆரம்பித்தவள், ஒரு கட்டத்தில் பழையபடி நெருங்கிய தோழி ஆனதுடன், தனது வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அவனிடம் பகிர்ந்தும் இருந்தாள்.
இயல்பிலேயே தைரியமும், மனதிடமும் கொண்ட பெண்ணான பைரவி, மருத்துவரின் ஆலோசனையின் உதவியுடன் விரைவிலேயே தேறி விட்டாள். அந்த சம்பவம் மறக்கவில்லை என்றாலும் அதைக் கடந்து வர பழகிக் கொண்டாள்.
பெண்களுக்கு நேரும் அநீதிகளை கேட்டும் பார்த்தும் வளர்ந்தவள், சிறந்த காவல்துறை அதிகாரி ஆகி கயவர்களை களை எடுக்க முடிவெடுத்து, அதை செயல் படுத்தியும் இருந்தாள்.
இதில் அசோக் அவளுக்கு இன்று வரை பக்க பலமாக இருக்கிறான்.
தழல் தகிக்கும்…