அவன் தூக்கி போட்ட புதரான இடத்தில் சிமின்ட் குப்பைத்தொட்டி ஒன்று இருக்க, அதில் பலமாக மோதியதில் மஞ்சரி தலையில் இருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் அந்த வழியே வந்த மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நாற்பது வயது பெண்மணி, “இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவோம்ங்க” என்றபடி கைபேசி அழைப்பைத் துண்டித்து சிறு புன்னகையுடன் ஓட்டுநரிடம்,
“உங்க ஐயா நாம போய் சேருறதுக்குள்ள இன்னும் பத்து முறை கூப்பிட்டுடுவார்” என்றார்.
ஓட்டுநர் விசுவாசமும், மரியாதையும், பணிவும் நிறைந்த குரலில், “அய்யா பத்தி தெரிந்தது தானுங்க.. இன்னைக்கு என்னால தான் இப்படி ஆகி போச்சுங்க.. மன்னிச்சிடுங்க.” என்றான்.
“எத்தனை முறை தான் மன்னிப்பு கேட்ப! வண்டி ரிப்பேர் ஆனா, நீ என்ன செய்வ?”
“நான் தானுங்க கவனிச்சு இருக்கணும்!”
“சரி தான்.. ஆனா எல்லாமே ஏதாவது ஒரு காரணத்துக்காக தான நடக்கும்.. வண்டி ரிப்பேர் ஆனதால் தானே, அது சரி ஆகுறவரை உன்னோட வீட்டில் இருந்தேன்.. அதனால தானே உன்னோட அன்பான குடும்பத்தோட அறிமுகம் கிடைச்சது.” என்ற போது ஒரு நாய் அவர்கள் வண்டியின் குறுக்கே வந்தது.
சட்டென்று சுதாரித்த ஓட்டுநர், ஒரு குலுக்கலுடன் வண்டியை நிறுத்த, அந்தப் பெண்மணி, “என்னாச்சு?” என்று கேட்டார்.
“ஒரு நாய் மா.. திடீர்னு உள்ள புகுந்துடுச்சு” என்றபடி வண்டியை கிளப்ப, அந்த நாயோ லேசாக குரைத்தபடி அவன் வண்டியை முன்னே செலுத்த முடியாதபடி இடமும் வலமுமாக ஆட்டம் காட்டியது.
அவன் அதிர்ச்சியுடன், “என்னமா இது!” என்று கூற,
அவரோ, “அது எதோ சொல்ல நினைக்குதோ என்னவோ! இரு நான் போய் பார்க்கிறேன்.” என்றபடி இறங்கப் போக,
அவன் அவசரமாக, “இந்த நேரத்தில் கீழே இறங்காதீங்க மா.. எவனும் காவாலியோட நாயா கூட இருக்கலாம்.” என்றான்.
“சரி.. நீ போய் பாரு”
“என்ன ஆனாலும் வண்டியை விட்டு இறந்காதீங்கமா.. அய்யாக்கு போனை போட்டு லைனில் இருங்கமா”
“சரி” என்றபடி கணவரை அழைத்தவர், அவர் அழைப்பை எடுத்ததும் விஷயத்தைக் கூற ஆரம்பித்தார்.
ஓட்டுநர் கீழே இறங்கியதும், அந்த நாய் அவனது கால்சட்டையின் நுனியை கவ்விக் கொண்டு அவனை மஞ்சரி கிடந்த புதரின் அருகே அழைத்து சென்று இரு முறை குரைத்தது.
இருட்டிற்குள் அவன் புதரினுள் பார்வையை செல்லுத்தி ஆராய, அவன் காலில் மஞ்சரி தட்டுப்பட்டாள். குனிந்து பார்த்தவனுக்கு இருளில் தெளிவாக எதுவும் தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒரு சிறு உருவம் தெரியவும், நாய் காப்பாற்ற கூறுகிறதை புரிந்துக் கொண்டு, அவளை தூக்கிக் கொண்டு மகிழுந்தை நெருங்கினான்.
சில முறை தனக்கு அன்னமிட்ட மஞ்சரியின் உயிரை அந்த நாய் காப்பாற்றி இருந்தது.
இந்த பூமியில் மிருக உருவில் உலாவும் மனிதர்களிடம் இல்லாத மனிதம், அந்த வாயில்லா மிருகத்திடம் இருந்தது.
மஞ்சரியை வண்டியினுள் கிடத்தி விளக்கை போட்டவன், அதிர்ந்து போய் சட்டென்று பார்வையைத் திருப்பிய படி,
“சின்ன புள்ளயைப் போய் என்ன செய்து இருக்கான்க!” என்று ஆரம்பித்து கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான்.
தூக்கி ஏறிய பட்டபோது தாவணி விலகி கீழ விழுந்து இருக்க, கிழிந்த மேல் சட்டையுடன் இருந்த மஞ்சரியைத் தான் ஓட்டுநர் தூக்கி வந்தான். அவளது முகம் மற்றும் நெஞ்சில் நக கீறல்கள் இருக்க, அவளது அந்த நிலையை கண்டு இருவரும் அதிர்ந்தனர்.
அந்த பெண்மணி சட்டென்று தான் போர்த்தி இருந்த சால்வையை கொண்டு மஞ்சரியை மூடியபடி, “தலையில் அடி பட்டு இரத்தம் வந்துட்டு இருக்குது.. சீக்கிரம் வண்டியை எடு முருகா.. நம்ம வாசுகி கிளினிக்கு வண்டியை விடு.. இந்த நாயையும் வண்டியில் ஏத்து.” என்றார்.
அந்த நாயை வண்டியினுள் ஏற்றியவன், அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் வண்டியை கிளப்ப, அவனது கையில் வண்டி பறந்தது. கணவரிடம் விஷயத்தை கூறிவிட்டு அடுத்து தனது தோழிக்கும் அழைத்து விஷயத்தை கூறி இருந்தார், அந்தப் பெண்மணி.
அவர் சண்முகவடிவு, சேரன்மகாதேவி அருகே ‘தெய்வ குழந்தைகள்’ என்ற அனாதை இல்லத்தை கணவரின் துணையுடன் நடத்திக் கொண்டிருப்பவர்.
செல்லும் வழியில் மஞ்சரியின் தலையை வருடியபடி, “இவளை காப்பாற்ற தான் வண்டி ரிப்பேர் ஆச்சு போல” என்று அவர் கூற, ஓட்டுநரும் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
சரியான நேரத்திற்கு மருத்துவம் பார்த்ததால் மட்டுமே மஞ்சரி உயிர் பிழைத்து இருந்தாள்.
அவளுக்கு சிகிச்சை கொடுத்து முடித்து வெளியே வந்த மருத்துவர் வாசுகி, “அபாய கட்டத்தை தாண்டிட்டா வடிவு.. இனி பிரச்சனை இல்லை” என்றார்.
அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்ட சண்முகவடிவு, “அவளுக்கு” என்று தயங்கி நிறுத்த,
பெருமூச்சை வெளியிட்ட வாசுகி, “சைல்டு அபியூஸ் தான்.. ஆனா பெருசா எதுவும் நடக்கலை.. ஆரம்ப கட்டத்துலேயே நிறுத்தபட்டு காப்பாற்றப் பட்டு இருக்கிறா.. ஆனா எப்படி அந்த புதருக்குள்! மே பி.. அவ தப்பிக்க போராடினப்ப தலையில் அடிபட்டு இரத்தம் வரவும், அந்த மிருகம் பயத்தில் விட்டுட்டு ஓடி போய் இருக்கலாம்.. இவ மயங்கி இருக்கலாம்.. என்ன நடந்ததுனு அவ கண் முழிச்சு சொன்னா தான் தெரியும்.” என்றார்.
“இதை பத்தி கேட்டா… அவ மனநிலை!”
“ஹ்ம்ம்.. இதோட தாக்கம் கண்டிப்பா அவளோட வாழ் நாள் முழுவதும் இருக்கும்.. இன்னும் மலராத மொட்டு”
“என்ன சொல்ற!”
“ஹ்ம்ம்.. சின்ன பொண்ணு தான்.. பெரிய மனுஷி ஆகலை.. பன்னிரெண்டு பதிமூனு வயசு தான் இருக்கும்.”
நெஞ்சில் கை வைத்த சண்முகவடிவு கலங்கிய கண்களுடன், “குழந்தை கிட்ட போய்!” என்றார்.
அவரால் இதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் மருத்துவரான வாசுகிக்கு இது புதிதல்லவே! வாசுகி தான் தோழியை தேற்றினார். சண்முகவடிவின் கணவரும் அங்கே வந்து விட மஞ்சரி கண்விழிக்கும் முன் அவர் ஒருவாறு திடம் பெற்று இருந்தார்.
சில மணி நேரம் கழித்து கண் விழித்த மஞ்சரியோ ‘தான் யார்? தனது பெயர் என்ன?’ என்பதை மறந்த நிலையில் இருந்தாள். ஆம் கெட்டதில் நல்லதாக தலையில் அடிபட்டதில், தனக்கு நேர்ந்த கொடுமையுடன் சேர்த்து அனைத்தையும் மறந்து இருந்தாள்.
பைரவரின் அம்சமான நாயின் உதவில் மறுஜனனம் எடுத்த மஞ்சரிக்கு, சண்முகவடிவு தான் பைரவி என்று பெயர் சூட்டினார். குழந்தை இல்லாத அந்தத் தம்பதியினர் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு தாய் தந்தையாகத் திகழ்ந்தனர்.
அதே நேரத்தில் கஜேந்திரன் வீட்டில் கோபமும் கண்ணீருமாக அமர்ந்து இருந்த ருத்ரேஷ்வர் அருகே, யாராலும் செல்ல முடியவில்லை.